பலகோடி ரூபாய் முதல் போட்டு அந்தத் தொழிற்சாலையைத் தொடங்கியிருந்தார்கள்.அயல் நாட்டிலிருந்து ஒரு நவீன இயந்திரத்தைத் தருவித்திருந்தார்கள். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரம். இயந்திரத்தை இந்தியாவில் வந்து நிறுவி இயக்கிக் காட்ட வேண்டும் என்பது இயந்திரம் வாங்கும் போது போட்ட நிபந்தனை. அதன்படி இயந்திரம் வந்து சேர்ந்த சில நாட்களில் ஒரு சிறிய குழு இயந்திரத்தை நிறுவ வந்தது. குழுவிற்குத் தலைமையேற்றிருந்தவர் ஒரு இளைஞர். அப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்தவர் போலிருந்தார்.எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருந்தார். நம்மூர் என்ஜினீயர்களிடம் அதிகம் பேசவில்லை. அவர்கள் எதுவும் கேட்டாலும் கூட வாய்திறந்து பதில் சொல்லவில்லை. புன்னகையோடு தலையசைத்துக் கொண்டிருந்தார். அல்லது ஜாடை மொழியில் பேசினார்.
அந்த நிறுவனத்தின் தலைவருக்கு அவரைப் பார்த்ததுமே அதிர்ச்சி. “இவரா?” என்று நினைத்தார். அனுபவமே இருக்காது போலிருக்கிறதே என்று அவருக்கு கவலையாக இருந்தது. எப்படி இவர் இந்த இயந்திரத்தை இயக்கப் போகிறார் என்றும் யோசனையாக இருந்தது. ரிஸ்க் எடுக்க விரும்பாத அவர் இயந்திரம் சப்ளை செய்த கம்பெனியைத் தொடர்பு கொண்டு யாராவது மூத்த ஒருவரை அனுப்பி வையுங்கள் என்றார். வாடிக்கையாளர் விருப்பமே எங்கள் விருப்பம் என்ற அந்த நிறுவனம் ஐம்பது வயதைத் தாண்டிய ஒருவரை அனுப்பி வைத்தது. அவர் வந்ததிலிருந்து அந்த இளைஞரோடு அவ்வப்போது கலந்து பேசுவார். அதையும் நிறுவனத்தின் தலைவர் பார்த்தார். ஆனால் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுவும் தவிர மறுபடியும் இயந்திரம் சப்ளை செய்தவர்களைத் தொடர்பு கொள்ள அவருக்குத் தயக்கமாக இருந்தது. எப்படியோ வேலை நடந்தால் சரி என்றிருந்தது அவருக்கு
இயந்திரம் வெற்றிகரமாக நிறுவப்பட்டது. திருப்திகரமாக இயக்கிக் காட்டப்பட்டது. அன்றிரவு நடந்த விருந்தில் நிறுவனத்தின் தலைவர் பெரியவரை பாராட்டிவிட்டு ஒரு பெரிய நினைவுப் பரிசைக் கொடுக்க எழுந்தார். பெரியவர் சொன்னார்: “இந்தப் பரிசை சிரித்துக் கொண்டே இருக்கிறாரே அந்த இளைஞருக்குத்தான் கொடுக்க வேண்டும். அவர்தான் எங்கள் தலைமை என்ஜினீயர். நான் விற்பனைப் பிரிவில் வேலை செய்யும் சேல்ஸ்மேன். அவர் சொல்லித்தான் நான் இதை ஒவ்வொரு பகுதியாக ‘அசெம்பிள்’ செய்தேன்.டிசைன் முழுக்க அவருடையது. அவர் உங்களிடம் பேசவில்லை, உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்று உங்களுக்கு வருத்தம் இருந்திருக்கும். ஆனால் அவருக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனால் வேலையில் கெட்டிக்காரர்!” என்றார். நிறுவனத்தின் தலைவர் வியப்பில் ஆழ்ந்தார்.
தமிழ்நாட்டு மக்களும் ஒரு வகையில் ஆச்சரியப்பட்டுத்தான் போயிருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன் தமிழக முதல்வர் நாற்காலியில் எடப்பாடி திரு. பழனிசாமி அமர்ந்தபோது அவரைப் பற்றிய விவரங்கள் பலருக்கும் தெரியாது. அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களே அப்போதுதான் அவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்திருந்தார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர் நாற்காலியில் அமர்ந்த விதம் குறித்து மக்களிடையே முகச் சுளிப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அவர் சசிகலாவால் அந்தப் பத்வியில் அமர்த்தப்பட்டார் என்பது.எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் அடித்த கூத்தையெல்லாம் பார்த்து தமிழகம் சினத்திலும் சிரிப்பிலும் இருந்தது.
உட்கட்சியில் குழப்பம் மூண்டபோது ஊடகங்கள், ‘இதை நாங்கள் எதிர்பார்த்தோம்’ என்பது போல் விமர்சனங்கள் வரைந்தன. இன்னும் எத்தனை நாள் என்று கேள்வியை எழுப்பி இரவெல்லாம் விவாதித்தன. எதிர்க்கட்சிகள் இன்னும் ஒருபடி மேலே போய் இதோ கவிழ்ந்து விட்டது, இன்றைக்குக் கவிழ்கிறது, நாளைக்குக் கவிழ்ந்துவிடும் என்று நாள் குறித்தன.
கட்சியிலிருந்து பிரிந்த தினகரன், எடப்பாடி தலைமையிலான அதிமுகவிற்குள் தனது ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள், அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்பட்டு அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என அவ்வப்போது மறைமுகமாக மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த உரிய நேரம் வரவில்லை. மாறாக தினகரனுடன் சென்றவர்கள் ஒவ்வொருவராக அவரிடமிருந்து பிரிந்து அவரைவிட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறார்கள். அவரது ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை இழந்து அதிகாரமற்று இருக்கிறார்கள்.
நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை முறியடித்து, மூன்று பட்ஜெட்களை நிறைவேற்றிச் சட்டமன்றத்தில் தன் பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இப்போது எதிர்கட்சிகளோ ஊடகங்களோ அரசு கவிழ்வதுபற்றி பேசுவதில்லை. இடைப்பட்ட காலத்தில் அமைச்சர் ஒருவரின் பதவியைப் பறித்த போதும் கட்சியில் கலகம், ஏன் முணுமுணுப்புக் கூட, எழவில்லை என்பதைப் பார்க்கும் போது கட்சியை முழுக்கத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டார் எனத் தெரிகிறது
ஒருபுறம் அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டு, மறுபுறம் ஆட்சிப்படகையும் பெரிய குறைகள் இல்லாமல் செலுத்திச் செல்கிறார். அதிலும் அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது.அவரது அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட, நீட் தேர்வு போன்றவற்றை பிரச்சினைகளாகக் கிளப்பி அவரை “செயலற்ற முதல்வர்”, “பாஜகவின் அடிமை” என்றெல்லாம் விமர்சித்தன. ஊசியைத் தூணாக ஆக்குவதில் ஆர்வம் கொண்ட ஊடகங்களுக்கு இது மெல்லக் கிடைத்த அவலாக இருந்தது.
இந்த மூன்றாண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி. அயல்நாடுகளுக்கு முதலீடுகளைத் திரட்ட மேற்கொண்ட பயணம் குறிப்பிடத் தக்கது, (தமிழக முதல்வராக இருந்தவர்கள் முதலீடுகளைத் திரட்ட அயல்நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டது என் நினைவுக்கு எட்டியவரை வேறு யாரும் இல்லை)இந்தப் பயணங்களின் விளைவாக ரூ 8835 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக அரசு கூறுகிறது. அவற்றில் எத்தனை நடைமுறைக்கு வரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முயற்சிகள் எதிர்பாராத பலனைத் தரலாம். தராமல் போகலாம்.ஆனால் அதற்காக முயற்சி செய்வதையே குறைகாண்பது என்பது ஆரோக்கியமானது அல்ல. காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை விட, யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது என்கிறார் வள்ளுவர்.
எடப்பாடி பழனிச்சாமியின் பலவீனமாக எது கருதப்படுகிறதோ, அதுதான் அவரது பலம். அவர் எவருடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதில்லை. அதைத்தான் எதிர்க்கட்சிகள் அவரது பலவீனமாகச் சித்தரிக்கின்றன.உண்மையில் அதுதான் அவரது பலம். தனக்கு எதிராக தர்மயுத்தம் அறிவித்துப் பிரிந்த ஓ.பன்னீர்செல்வத்தைத் தன் பக்கம் கொண்டு வந்து தனக்கு ஆதரவாக நிறுத்திக் கொண்டது அரசியலில் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. அதே போல நீட் விஷயத்தில் போராட இயலாது என்ற நிலையில் மத்திய அரசுடன் இணக்கமாகப் போய், ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைப் பெற்று வந்தது ஆட்சியில் இதற்கொரு எடுத்துக்காட்டு.
சிஏஏக்கு எதிராக இஸ்லாமியர்களும் இடதுசாரிகளும் பெருந்திரளான மக்களைத் திரட்டி அழுத்தம் கொடுத்த போதிலும், பதறிப்போயோ, மிரண்டோ, தனது நிலையை மாற்றிக் கொள்ளாமல், அதே நேரத்தில் அவர்களோடு மோதல் போக்கை மேற்கொண்டு பிரச்சினையை தீவிரப்படுத்திவிடாமலும் நடந்து கொண்டது இன்னுமொரு உதாரணம்
மூன்றாண்டுகளை நிறைவு செய்யும் முதல்வர் பழனிசாமி கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. சில அவரது ஆற்றலுக்கு சவால் விடக் கூடியவை. அவற்றில் முக்கியமானது லஞ்சம். அண்மையில் அடுத்தடுத்து வெளியாகி வரும் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் நடைபெற்றுள்ள ஊழல்கள், குறுக்குவழியில் அமைப்பை (system) புதுப்புது வழிகளில் செயலற்றுப் போகத் தொழில்முறையில் (Professional) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைக் காட்டுகின்றன. மற்றொன்று கல்வித்துறை மாற்றி மாற்றி வெளியிட்டு வரும் முரண்பாடான அறிவிப்புகள். அவை அந்தத் துறையில் ஓர் ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
எடப்பாடி பழனிசாமி மீது வியப்பு, விமர்சனம் இவற்றுக்கப்பால் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய யதார்த்தம் இருக்கிறது. பிரச்சாரத்தின் மூலமும் ஊடகங்களின் துணையோடும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் தனக்கு உள்ளதாக திமுக ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து வருகிறது. அதை முறியடிக்கக் கூடிய வல்லமை இன்றைய நிலையில் அதிமுகவிடம்தான் இருக்கிறது என்பதுதான் அது.
4.3.2020