என் ஜன்னலுக்கு வெளியே. . .
என் ஜன்னலுக்கு உள்ளே….
உள்ளே ஒரு கேள்வி
என் ஜன்னலுக்கு வெளியே வெறிச்சிட்டிருக்கிறது வீதி. உதிர்ந்த இலையொன்று ஒற்றைக் காலில் ஓடுபவன் போல் காற்றில் தத்தித் தத்தி உருண்டு கொண்டிருக்கிறது. வேறு சலனம் எதையும் வீதியில் காணவில்லை. எனவே பார்வையை ஜனன்லுக்கு வெளியே இருந்து , உள்நோக்கித் திருப்பினேன்.
என் மேசைக் கணினியில் ஜன்னல்கள் இருக்கின்றன. ‘விண்டோஸ்’ தான் என் கணினியின் இயங்குதளம். அதற்கு ஏன் விண்டோஸ் என்று பெயர்? அதை விளக்குவது கடினம். மிக எளிமையாகச் சொல்வதனால் ஒரே நேரத்தில்,பல கோப்புக்களை, தளங்களைத் திறக்க முடியும். ஒன்றைத் திரையில் காண மற்றொன்றை மூட வேண்டியதில்லை. அதாவது பல ஜன்னல்கள் கொண்ட ஒரு வீட்டில் ஒன்றைத் திறக்க இன்னொன்றை மூட வேண்டியது இல்லை அல்லவா? அது போலக் கணினியிலும்…..
இந்த இயங்குதளத்தை நமக்குக் கொடுத்தது மைக்ரோசாப்ட். பெயர் தொடங்கி அந்த நிறுவனம் பேசும் சரித்திரம் அதிசுவாரஸ்யமானது
பன்நெடுங்காலத்திற்கு முன்னால், கணினிகள் பிரம்மாண்டமாய் ஒரு அலமாரி அளவிற்கு இருந்தன. அவற்றொடு ஒப்பிட்டுகையில் மேசைக் கணினி தம்மாத்துண்டு. எனவே பார் அதி சின்னப்பயல் என்னும் விதமாக அவை ‘மைக்ரோ கம்ப்யூட்டர்’.என்று அன்று கருதப்பட்டன.
முதலில் மைக்ரோ கம்ப்யூட்டர் என்பதையும் அதற்கான சாப்ட்வேர் என்பதையும் குறிக்கும் வகையில் மைக்ரோ-சாஃப்ட் என்று இரண்டு வார்த்தைகளாகப் பிரித்து நடுவில் ஒரு சிறு கோடு (ஹைபன்) போட்டுத்தான் அந்த நிறுவனத்திற்குப் பெயர் சூட்ட எண்ணியிருந்தார்கள். ஆனால் இடைக் கோடு மறைந்து இரு சொற்களும் இணைந்து ஒரு சொல்லாய் ஆகி உருவானது மைக்ரோசாப்ட்..
விண்டோசில் ஒரு விசித்திரம் உண்டு. நாம் ஆவணங்கள் படங்கள், இசை, ஆகியவற்றைச் சேமித்துக் கொள்ள folderகளை உருவாக்கிக் கொண்டு அவற்றை அடையாளப்படுத்திக் கொள்ள பெயரும் சூட்டுகிறோம். ஆனால் நீங்கள் CON என்ற பெயரில் ஒரு ஃபோல்டரை விண்டோசில் உருவாக்க முடியாது (முயற்சித்துப் பாருங்கள்) காரணம் என்னவென்று விண்டோசை உருவாக்கிய பில் கேட்ஸுக்குமே கூடத் தெரியாது!) Con என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஏமாற்றுபவன் என்று ஒரு பொருள் உண்டு என்பது மட்டும் அவருக்கும் உங்களுக்கும் எனக்கும் தெரியும்,
மற்றொரு ‘மாஜிக்’. சந்தர்ப்பம் கிடைத்தால் செய்து பாருங்கள். மைக்ரோசாஃப்ட் வேர்ட் (word) ஐத் திறந்து =Rand (200,99) என்று தட்டச்சு செய்து பாருங்கள். இந்த சிறிய சொற்றொடரை டைப் செய்தால் உங்களுக்கு 543 பக்க ஆவணம் கிடைக்கும். ஆமாம், 543 பக்கங்கள்! ஆனால் 543 பக்கங்களிலும் ஒரே பத்தி மீண்டும் மீண்டும் பலமுறை தட்டச்சு செய்யப்பட்டிருக்கும்!
விசித்திரங்கள் மட்டுமல்ல, மைக்ரோசாஃப்ட்டின் வரலாற்றில் விழிகளை வியப்பால் விரியச் செய்யும் செய்திகளும் உண்டு. மைக்ரோசாஃப்ட்டின் முதலாண்டு வருமானம் வெறும் 16 ஆயிரம் டாலர். இன்று பில் கேட்ஸ் ஒரு பில்லியனர். (இன்று அவரது நிகரது மதிப்பு 107.1 பில்லியன் டாலர்கள்) மிக இளம் வயதில் (31) பில்லியனர் ஆனார். (ஒரு பில்லியன் என்பது 100 கோடி. ஒரு பில்லியன் டாலர் என்பது இன்றைய மதிப்பில் ரூ.7500 கோடி!) 1995 முதல் 2017 வரை உலகின் முதல் 22 ஆண்டுகள் பெரும் பணக்காரராக இருந்தவர் பில்கேட்ஸ். 2017 அக்டோபரில் அமேசான் நிறுவனர் இவரை விட அரை பில்லியன் அதிகம் சம்பாதித்தால் இவர் இரண்டாம் இடத்திற்குப் போனார்.
ஆனால் பில்கேட்ஸின் சிறப்பு அவர் இளம் வயதில் பில்லியனர் ஆனார் என்பதல்ல. 12 ஆயிரம் கோடீஸ்வரர்களை உருவாக்கியவர். என்னக் கேட்டால் இது கூட இவரது சிறப்பல்ல. தான் சம்பாதிப்பதில் பாதியை அறப்பணிகளுக்காகச் செலவிடுகிறார் கேட்ஸ். அப்படிச் செய்வதன் மூலம் இன்னும் பல கோடிஸ்வரர்களைக் கொடையை நோக்கித் திருப்பியிருக்கிறார். செல்வத்துப் பயனே ஈதல் என்ற இலக்கிய வரியை அனுபவத்தால் அறிந்த மனம் அது.
கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? “நான் அதிர்ஷ்டக்காரன், உலகில் உள்ள சமத்துவமின்மையைக் குறைக்க முயற்சிக்கிறேன். அது ஒரு வகையான மத நம்பிக்கை. அதாவது தார்மீக நம்பிக்கை என்கிறார் பில் கேட்ஸ்
யார் இந்த பில்கேட்ஸ்?
பிறவிப் பணக்காரர் அல்ல. ஏழையும் அல்ல. அப்பா ஒரு வக்கீல். அம்மா வழிப் பாட்டனார் ஒரு வங்கியில் இயக்குநராக இருந்ததால் அவருக்குப் பின் அவரது அம்மாவும் வங்கி இயக்குநராக இருந்தார்.. அம்மாவுடைய லேடீஸ் கிளப் நன்கொடை திரட்டி அவர் படித்த ஸ்கூலுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தது. கணக்கு கிளாசைக் கட் அடித்துவிட்டு கேட்ஸ் அந்தக் கம்ப்யூட்டர் முன்னால் போய் உட்கார்ந்தார். 13 வயதில் முதல் சாஃப்ட் வேர் புரோகிராம் எழுதினார். அது ஒரு கம்ப்யூட்டர் விளையாட்டு.
அப்படித்தான் ஆரம்பித்தது. எல்லாம். சிறுவயதில் நண்பர்களோடு விளையாடியதோ, வெளியே சுற்றியதோ இல்லை. தனியாக உட்கார்ந்திருப்பார். “பில் என்னடா செய்யறே?” என்று அம்மா குரல் கொடுத்தால் “யோசிச்சிட்டு இருக்கேன்” என்று பதில் வரும்
பின் நாளில், பள்ளியிலிருந்து ஒன்றாகப் படித்த நண்பரோடு சேர்ந்துதான் மைக்ரோசாஃப்டை ஆரம்பித்தார். அது பெரிய உச்சத்தை அடைந்து உலகத் தொழில் நிறுவனங்களில் முதலாவது இடத்தைப் பிடித்த (இன்று உலகில் ஏழு பேருக்கு ஒருவர் விண்டோஸ் பயன்படுத்துகிறார்கள்) சில ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகி அதை ஆற்றல் மிகுந்தவர்களின் கையில் ஒப்படைத்துவிட்டு ஆலோசகர் என்ற நிலையை எடுத்துக் கொண்டார். (இன்று அதன் தலைமைச் செயல் அதிகாரி ஓர் இந்தியர்!) ஆச்சரியங்கள் பல சேர்ந்து உருவாக்க்கிய ஓர் அதிசயம் பில் கேட்ஸ்.
அந்த வியப்புக்கு அப்பால் எனக்கு ஒரு வினாவும் உண்டு. அது அவரது கூற்று ஒன்றிலிருந்து கொக்கி போல் முளைத்து முன் நிற்கிறது. அது எதிர்காலம் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம். அது என்னை முதலில் திகைக்க வைத்தது. என்றாலும் எப்போதும் யோசிக்க வைக்கிறது. எதிர்காலத்தில், “,முதலில் இயந்திரங்கள் நமக்காக நிறைய வேலைகள் செய்யும். நாம் அவற்றை சரியாக நிர்வகிக்கும் வரை ஆக்கபூர்வமாகத்தானிருக்கும். நாளடைவில் நாம் நம்புத்திசாலித்தனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவோம் அதுதான் கவலைக்குரியது.” என்கிறார் பில்கேட்ஸ். .
உண்மைதானா? விவாதிக்கவும் விமர்சிக்கவும் வேண்டிய விஷயம் இது. இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள். கேட்ஸ் நம்முடைய திறன் (skill) குறைந்து விடும் என்று சொல்லவில்லை. ஆனால் அறிவாற்றல் – intelligence- மழுங்கி விடலாம் என்கிறார்.
யோசிக்க யோசிக்க இல்லை என்று என் மனம் சொன்னது. இயந்திரங்கள் ஒரு போதும் மனிதர்களை ஜெயிக்க முடியாது. காரணம் மனிதர்களை உந்தும் ஒரு விஷயம் கற்பனை. குகைக்குள் இருந்தவனை நிலவுக்கு எடுத்துச் சென்றதன் விதை அவனுடைய கற்பனைதான். மனிதனைச் செலுத்தும் மற்றொரு விசை அவனது உயிராசை, அல்லது மரணபயம். அறுவை சிகிச்சையிலிருந்து ஆன்டி பயாடிக் வரை அவனது கண்டுபிடிப்புகளின் அடிநாதம் இதுதான்.
இவை இரண்டும் இயந்திரங்களுக்கு இல்லை. என்றாலும் எதிர்க் கேள்வி ஒன்று எழுந்து நிற்கிறது. கற்பனையும் மரணபயமும் மனித குலத்தின் திறனைக் கூர் தீட்டின. ஆனால் அறிவாற்றலை மேம்படுத்தினவா? இல்லை என்கிறதே கொரோனா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
குமுதம் 15.4.20
.