உயிரே… உயிரே…
“ காப்பாத்துங்க ! ஐயோ என்னைக் காப்பாத்துங்க ! ”
காகிதத்தில் தீப்பிடித்த மாதிரி அந்தக் குரலில் ஒரு பதற்றம். அச்சத்திலும் அவநம்பிக்கையிலும் நனைந்திருந்த அந்தக் குரல், கையில் மண்வெட்டி பிடித்துக் களை கொத்திக் கொண்டிருந்த பூட்டா சிங்கின் காதுகளைச் சுட்டது.
குரல் வந்த திக்கைத் திரும்பிப் பார்த்தான் பூட்டா. அந்தப் பெண்ணுக்குப் பதினாறு பதினேழு வயதிருக்கும். சாயம் போன பட்டுப் புடவை மாதிரி இருந்தாள். களைப்பும் வனப்பும் நிறைந்த குழந்தை முகம். நெற்றியில் பொட்டில்லை. பேப்பரில் தீற்றிய பென்சில் கிறுக்கல்களைப் போல முக்காடிட்டிருந்த தலையையும் தாண்டி, குழல் கற்றைகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. உலகத்துச் சோகத்தை எல்லாம் மையாக மாற்றிக் கண்ணில் எழுதியிருந்தாள். அழுதழுது வீங்கிப் போன கண்களுக்கு அதுவும்கூட அழகாகத்தானிருந்தது.
பார்த்த உடனேயே பூட்டாவிற்குப் புரிந்து விட்டது. பஞ்சாப்பிலிருந்து பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்து போகும் எத்தனையோ இஸ்லாமியக் குடும்பப் பெண்களில் இவளும் ஒருத்தி. எறும்புகளைப் போலச் சாரி சாரியாகப் போகும் அந்தக் கூட்டத்தில் எப்படியோ இவள் மட்டும் வழி தப்பிவிட்டாள். ஆதரவற்ற பெண் என்பதால் அவளைத் துரத்திக் கொண்டு வருகிறது மிருகம். அவளைப் பார்த்த நிமிடமே அவளைக் காப்பாற்ற முடிவு செய்துவிட்டான் பூட்டா. ஆனால் அதற்காக அவன் சண்டையிடத் தயாராக இல்லை. பயத்தினால் அல்ல. உலகப் போரின் போது பர்மாவில் போர் புரிந்த ராணுவ வீரன் அவன். ஐம்பத்து ஐந்து வயதாகிவிட்டது, என்றாலும் இன்னமும் இரும்பைப் போல இருந்தன அவன் கைகள்.
அவன் சண்டைக்கு இறங்காததற்குக் காரணம் பயம் அல்ல. அது அவன் சுபாவம். இத்தனை வயதாகி விட்டாலும் அவன் அடி மனதில் இன்னமும் ஒரு கூச்சம். அடுத்தவரோடு பேச தயக்கம். அதனால்தான் ஐம்பத்தைந்து வயதுவரை கல்யாணம் செய்து கொள்ளவில்லை. அதனால்தான் ஊருக்கு வெளியே கொஞ்சம் நிலம் வாங்கிக் கொண்டு தனி ஆளாய் அதில் குடியேறியிருந்தான்.
“ எவ்வளவு ? ”
சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்திற்கு வந்து விட்டான் பூட்டா.
துரத்திக் கொண்டு வந்த சீக்கிய இளைஞன் சொன்னான் : “ ஆயிரத்து ஐநூறு . ”
பேரம் பேசவில்லை பூட்டா. குடிசைக்குள் போய் அவனிடமிருந்த அழுக்கு நோட்டுக்களைத் திரட்டிக் கொண்டுவந்து கொடுத்தான்.
அந்த அழுக்கு நோட்டுக்கள் வாங்கித் தந்த அந்தப் பெண்ணுக்கு வயது 17. அவனைவிட 38 வருடம் இளையவள். பெயர் ஜெனீப். ராஜஸ்தானில் விவசாயம் பிழைத்து வந்த குடும்பத்துப் பெண்.
ஒரு முனிவனைப் போலே. ஊரைவிட்டு ஒதுங்கி வயல்காட்டின் நடுவே வாழ்ந்து வந்த பூட்டாவின் வாழ்வில் ஒது ஒரு புதிய திருப்பம். வசந்தம் தப்பிப் பூத்த வாசல் மரம் போல காலம் தாழ்ந்து வாழ்க்கை இனித்தது.
ஒரு குழந்தையைப் போலானான் பூட்டா, சிரித்துக் சிரித்துச் செல்லம் கொஞ்சினான். சில்லறைக் குறும்புகள் செய்தான்.
சீண்டி விளையாடினான். சிநேகமாய் சண்டை போட்டான். வாரம் தவறாமல் பக்கத்து ஊர் சந்தைக்குப் போய் அவளுக்கு ஏதேனும் அன்புப் பரிசு – வளையலோ, புடவையோ, சோப்புக் கட்டியோ – வாங்கி வந்தான்.
தந்தையைப் போல பாசம். நண்பனைப் போல நேசம். கணவனைப் போலக் காதல். திக்குமுக்காடிப் போனாள் ஜெனீப். அடிபட்டு உதைபட்டு, பாலியல் பலாத்காரத்திற்குப் பலியாகி, நொந்து நூலாகி வந்தவளுக்கு, அந்த வயசான விவசாயியின் எளிய அன்பு எள்ளு புண்ணாக்கைப் போல இனித்தது. அடிமையைப் போல வாழப் போகிறோம் என்று எண்ணி வந்தவள், அன்பு வெள்ளத்தில் கரைந்து போனாள். கடவுளே நன்றி நன்றி என்று உள்ளுக்குள் உருகினாள்.
ஒரு நாள், ஷெனாய் வாத்தியம் சந்தோஷ ராகங்கள் சிந்திவர, சுற்றமும் நட்பும் சூழ்ந்து நடக்க, குதிரை மேல் ஏறி வந்தான் பூட்டா. புரோகிதர் மந்திரம் சொல்ல, புதுப் புடவையில் ஜெனீப் நாணிச் சிவக்க, புனித நூல் கிரந்த சாகிப்பை நான்கு முறை சுற்றிவந்து , சீக்கிய வழக்கப்படி ஜெனீப்பைக் கல்யாணம் செய்து கொண்டான் பூட்டா.
எல்லாக் கிராமத்துத் தம்பதிகளைப் போலவும் அவர்கள் பகலெல்லாம் உழைப்பில் மகிழ்ந்தார்கள். இரவெல்லாம் காதலில் களித்தார்கள். அவன் உழுது விதைத்தான் ; அவள் நாற்றுப் பறித்து நட்டாள். அவன் களை பறித்தான் ; அவள் கஞ்சி எடுத்து வந்தாள். அவன் அறுத்து எடுத்தான் ; அவள் அரைத்து ரொட்டி சுட்டாள். அவன் மாடு குளிப்பாட்டினான் ; அவள் பால் கறந்து கொடுத்தாள். வயலிலே கூடு கட்டிக் கொண்ட வானம்பாடிகளைப் போல அவர்கள் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.
இளம் பெண்ணைப்போல் ஈரக்காற்று தயங்கி தயங்கி நடந்து கொண்டிருந்த இரவு. நிலவு மட்டும் விழித்திருந்த நிசிப் பொழுதில் ஆசை கிளர்ந்தெழ இவளை இழுத்தணைத்தான் அவன். திமிறிய அவளைத் தழுவி இறுக்கி ஒரு முத்தம் வைத்தான்.
“ ச்சீ , ரொம்ப மோசம் நீங்க ” சிணுங்கினாள் அவள்.
“ ஏய் … ! ” என்று செல்லமாய் மிரட்டினான் அவன்.
“ இனிமே நீங்க இப்படியெல்லாம் மிரட்டக்கூடாது. ”
“ ஏன் ? ”
“ நமக்கு பாப்பா வரப் போவுது ”.
ஐம்பத்தைந்து வயது இளம் கிழவன் அந்த நிமிடம் ஒரு குழந்தையைப் போல் துள்ளிக் குதித்தான்.
ரோஜாப்பூப் பொட்டலத்தைப் போலிருந்த குழந்தையைப் பார்த்துப் பார்த்துப் பூரித்தான் பூட்டா. இந்த அழகிய பெண் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது ? சீக்கியர்கள் வழக்கப்படி கிரந்த சாகிப்பைத் திறந்து, வரும் பக்கத்தின் மூலையில் என்ன எழுத்திருக்கிறதோ அந்த எழுத்தில் துவங்கும் பெயரை வைப்பது என்று தீர்மானித்தான்.
கண்ணை மூடிக்கொண்டு, கடவுளை வேண்டிக் கொண்டு புத்தகத்தைத் திறந்தான். ஆவலோடு வலது மூலையைப் பார்த்தான். ‘ த ’.
‘ த ’ என்று துவங்கும் எந்தப் பெயரை வைக்கலாம் ? தயாள் ? ம்ஹும். தலீம் ? வேண்டாம். தன்வீர் ? ஆம். தன்வீர் ! தன்வீர் என்ற பெயரை பூட்டா தேர்ந்தெடுத் -ததற்கு காரணம் இருந்தது. தன்வீர் என்ற சொல்லுக்கு அர்த்தம் : கடவுளின் அற்புதம்.
கிழவன் பூட்டா மண்டையைப் போட்டால் சொத்து நமக்கு வரும் என்று காத்துக் கொண்டிருந்த சொந்தக்காரர்களுக்கு இந்தக் காதல் அறபுதம் கண்ணை உறுத்தியது.
தேசப் பிரிவினையின்போது காணாமல் போன அகதிகளைக் கண்டுபிடித்து அவரவர் குடும்பத்துடன் சேர்க்கும் பொறுப்பை அரசாங்கம் எடுத்துக் கொண்டிருந்தது. அந்த டிபார்ட்மெண்டில் போய் பூட்டாவின் சொந்தக்காரர்களில் ஒருவன் வத்தி வைத்தான். இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன ஜெனீப் எங்கள் கிராமத்தில்தான் இருக்கிறாள் என்று சொல்லி வைத்தான். அடுத்த வாரமே அரசாங்கம் வந்து அழ அழ அவளை தில்லிக்கு அள்ளிக் கொண்டு போனது.
பதறியடித்துக் கொண்டு பூட்டா பின்னாலேயே ஓடி வந்தான். அவன் கையில் தன்வீர். அலுவலகம் அலுவலகமாக அலைந்தான். ஒவ்வொரு அதிகாரியாகப் பார்த்துக் கெஞ்சினான். ஒன்றும் நடக்கவில்லை. ஒரு நாளில்லை. இரு நாளில்லை. ஆறு மாதங்கள்.
அவனுக்கு ஒரு நாள் அந்தத் திடுக்கிடும் செய்தி கிடைத்தது. ஜெனீப்பின் குடும்பம் பாகிஸ்தானில் எந்தக் கிராமத்தில் குடியேறியிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்துவிட்டார்கள். அவளை அவர்களிடத்தில் ஒப்படைக்கப் போகிறார்கள் என்றது செய்தி.
“ நானும் பாகிஸ்தானுக்குப் போகிறேன் ” என்றான் பூட்டா.
“ நீயெல்லாம் அங்கே போக முடியாது ” என்று பதில் வந்தது.
“ ஏன் ? ”
“ நீ முஸ்லிமா ? ”
“ அவ்வளவுதானே ? ” விடுவிடுவென்று ஜும்மா மசூதிக்குப் போனான் பூட்டா. பிறந்ததிலிருந்து ஐம்பத்தெட்டு வருடமாகக் கத்தி படாமல் காப்பாற்றி வந்த தலை முடியை வெட்டியெறிந்தான். ஜமீல் அகமது என்று பெயர் சூட்டிக் கொண்டான். முஸ்லிமாக மாறிவிட்டான்.
அப்படியும் அவனுக்குப் பாகிஸ்தானுக்குப் போக அனுமதி கிடைக்கவில்லை. குடியுரிமை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. என் மனைவியைப் பார்த்து வர எனக்கு விசாவாவது கொடுங்கள் என்று கேட்டான். உறுதியாக பதில் வந்தது : ‘ நோ ! ’
பொறுமையிழந்தான் பூட்டா. குழந்தை தன்வீரையும் தூக்கிக் கொண்டு – இப்போது அந்தக் கடவுளின் அற்புதத்தின் பெயர், சுல்தானா – திருட்டுத்தனமாகப் பாகிஸ்தானுக்குள் நுழைந்தான்.
அலைந்து திரிந்து ஜெனீப்பின் கிராமத்தைத் தேடிக் கொண்டு போன பூட்டாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பாகிஸ்தானுக்கு கொண்டு வரப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் ஜெனீப்பிற்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கப்பட்டுவிட்டது.
“ என்னடைய மனைவியை என்னுடன் அனுப்பி வையுங்கள் ” என்று கெஞ்சிக் கேட்டான் பூட்டா. “ அவள் இப்போது இன்னொருவனுடைய மனைவி. கலாட்டா பண்ணாமல் திரும்பிப் போ ! ” என்று மிரட்டினார்கள். ஜெனீப்பின் சகோதரர்கள். பூட்டா அசைந்து கொடுக்கவில்லை. அவளுடன்தான் திரும்பிப் போவேன் என்று அடம்பிடித்தான். இல்லை, இல்லை, தவம் புரிந்தான். அடி விழுந்தது. ஜெனீப்பின் உறவினர்கள் சேர்ந்து கொண்டு மொத்தினார்கள். ஒரு காலத்தில் போர் வீரனாக பர்மாவில் பகையை ஜெயித்த பூட்டா, இப்போது உறவினர்களிடம் காயம்பட்டு நின்றான். விஷயம் போலீஸுக்குப் போயிற்று. விசா இல்லாமல் நுழைந்தவன் என்பதால் போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது.
வழக்கு விசாரணைக்கு வந்தது. “ ஜெனீப் என்னுடைய மனைவி. என்னுடன் திருப்பி அனுப்புங்கள் ” என்று மன்றாடினான் பூட்டா. “ அவளையே வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். அவள் என்னுடனும், குழந்தையுடனும் இந்தியாவிற்கு வருகிறேன் என்றுதான் சொல்வாள்.”
அவனுடைய சோகக் கதையை கேட்கக் கேட்க நீதிபதிக்கு மனம் இரங்கியது. ஒரு வாரம் கழித்து ஜெனீப் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
கோபம் கொந்தளிக்கும் உறவினர்கள் புடைசூழ உள்ளூர நடுங்கியபடி வந்தாள் ஜெனீப். அவசரமாக பூட்டாவின் கண்களைச் சந்தித்துவிட்டு அச்சத்தோடு கவிழ்ந்து கொண்டன அவளது கண்கள்.
“ இவரைத் தெரியுமா, உனக்கு ? ” பூட்டாவைக் காட்டிக் கேட்டார் நீதிபதி.
குனிந்த தலை நிமிராமல் குரல் நடுங்க பதில் சொன்னாள் ஜெனீப் : “ தெரியும். அவர் என் முதல் கணவர். ”
“ இது ? ”
குழந்தையைக் காண்பித்தார் நீதிபதி.
“ எங்கள் குழந்தை . ”
“ நீ இவர்களோடு இந்தியாவிற்குத் திரும்பிப் போக விரும்புகிறாயா ? ” நீதிபதி கேட்டார்.
என்ன சொல்லப் போகிறாள் ஜெனீப்? எல்லோர் கவனமும் அவள் பக்கம் திரும்பின. ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கின வாழ்க்கையின் வசந்தமே என்ன சொல்லப் போகிறாய் நீ என்று கண்களால் கேட்டான் பூட்டா. எங்கள் விருப்பத்திற்கு மாறாக ஏதாவது சொன்னால் உன்னை மட்டுமல்ல, அவனையும் வெட்டிப் புதைத்துவிட்டுத்தான் திரும்புவோம் என்று கண்களாலேயே அச்சுறுத்தினார்கள் சொந்தக்காரர்கள். நீதிமன்றத்தில் பயங்கர அமைதி. ஆவலோடும் நம்பிக்கையோடும் அவள் உதடு அசையப் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் பூட்டா.
யோசித்தாள் ஜெனீப். இனி தனக்கு விடுதலை இல்லை. நீதிபதி அனுமதித்தாலும் உறவினர்கள் உயிரோடு திரும்ப அனுமதிக்க மாட்டார்கள். அவராவது பத்திரமாய்த் திரும்பிப் போகட்டும்.
“ இல்லை ” மெல்ல முணுமுணுத்தாள் ஜெனீப்.
இடி விழுந்தது போல் திகைத்துப் போனான். இல்லை, என்றா சொன்னாள்? என்னுடன் வர விருப்பம் இல்லை என்றா சொன்னாள்? இருக்காது. என் ஜெனீப் அப்படிச் சொல்லியிருக்கமாட்டாள். சொன்னாளே, உன் கண் எதிரே, காது கேட்கச் சொன்னாளே, செவியில் விழவில்லையா உனக்கு. மறந்து போச்சா ஜெனீப்? மகிழ்ச்சியான அந்த நாட்கள் உனக்கு மறந்து போயிற்றா ? சிட்டுக் குருவியை போலச் சுற்றித் திரிந்து முயல் குட்டிகளைப் போலக் காதல் புரிந்த காலங்கள் மறந்து போச்சா ? அடிமையைப் போல் வந்து அரசியைப் போல் வாழ்ந்த அந்த நாட்கள் மறந்து போச்சா?
கண்ணீரை அடக்கிக் கொண்டு கையிலிருந்த குழந்தையை நீட்டினான் பூட்டா.
“ என்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, நீ இவளையாவது ஏற்றுக் கொள்வாயா ? ”
கடந்த காலத்தை எண்ணி அவன் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தபோது குழந்தையின் எதிர்காலத்தை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெனீப். என் நிலை என் குழந்தைக்கு வரவேண்டாம். அந்தப் பெண் குழந்தை அவரைப் போன்ற அருமையான, அன்பான மனிதனிடம் தான் வளர வேண்டும்.
“ சொல்லுங்கம்மா, குழந்தையை ஏற்றுக் கொள்கிறீர்களா ? ”
“ மாட்டேன் ” என்று தலையை அசைத்தாள் ஜெனீப்.
அவளிடம் இருந்த வெடித்த விம்மல் அறையை நிரப்பியது.
மனம் உடைந்த மனிதனாகக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கோர்ட்டிலிருந்து வெளியேறினான் பூட்டா. அன்றிரவு அருகிலிருந்த மசூதியில் படுத்து உறங்கினான். விடிந்ததும் ஊரில் இருந்த பஜாருக்குப் போனான். கையிலிருந்த காசுக்குக் குழந்தைக்கு ஒரு புதுச் சட்டை வாங்கி மாட்டினான். அருகிலிருந்த ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனான். “ பாப்பா. நீ இனிமே உன் அம்மாவைப் பார்க்கவே முடியாது ” என்று சொல்லிக் சொல்லி அதை இறுகக் கட்டிக் கொண்டான்.
தூரத்தில் ரயில் வரும் சப்தம் கேட்டது. எழுந்து குழந்தையை தூக்கிக் கொண்டு பிளாட்பாரத்து முனையை நோக்கி நடந்தான். அதன் முகத்தை ஒரு முறை திரும்பிப் பார்த்தான். முத்தமிட்டான். அடுத்த கணம் அம்பைப் போல ரயிலுக்கு முன் பாய்ந்தான்.
கடவுளின் அற்புதம். குழந்தை பிழைத்துக் கொண்டது. ஆனால் பூட்டா செத்துப் போனான். ரத்தம் தோய்ந்த அவனது சட்டைப் பையில் ஒரு கடிதம்.
ஜெனீப் : நீ குழப்பத்தின் குரலுக்கு செவி சாயத்து விட்டாய். அந்தக் குரலில் கொஞ்சமும் நியாயம் இல்லை. இனியாவது எனக்கு நியாயம் கிடைக்கட்டும். நான் இப்போது கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உனது கிராமத்தில் எனது உடல் புதைக்கப்படட்டும். வருடத்தில் ஒரு நாள் நீ என் கல்லறைக்காவது வந்து போ. செத்துப் போன எனக்காக அல்ல. ஜீவித்திருக்கும் நம் காதலுக்காக.
பூட்டாவின் பரிதாபமான மரணத்தையும் வாழ்க்கையையும் பற்றிப் பத்திரிகைகள் எழுதின. பஞ்சாப் பொங்கி எழுந்தது. ஆயிரம் பேர் உடன வர, அடக்கம் செய்வதற்காக பூட்டா சிங்கின் உடல் ஜெனீப்பின் கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
உடலையும் ஊர்வலத்தையும் கிராமத்திற்குள் விட மாட்டோம் என்று ஜெனீப்பின் சொந்தக்காரர்கள் மறுத்தார்கள். கலவரம் வேண்டாம் என்று எண்ணிய அரசாங்கம், உடலை லாகூருக்குக் கொண்டு வாருங்கள் இடம் தருகிறோம் என்று சொன்னது. ஆம், வாழும்போது விசா கூட கொடுக்க மாட்டோம் என்று சொன்ன அதே அரசாங்கம்தான், இப்போது அடக்கம் செய்ய இடம் தருவதாக அறிவித்தது.
மலையாக மலர் குவிய, பூட்டாவின் உடல் புதைக்கப்பட்டது. இவனுக்கென்ன இத்தனை மரியாதை என்று கொதித்து போன ஜெனீப்பின் சொந்தக்காரர்கள், இரவோடு இரவாக அந்தக் கல்லறையை உடைத்தெறிந்து உடலைத் தூக்கி எறிந்து விட்டுப் போனார்கள்.
இன்னொரு இடத்தில், மீண்டும் மழையாக மலர் பொழிய, மறுபடியும் பூட்டாவின் உடல் புதைக்கப்பட்டது. இந்த முறை அதை யாரும் அப்புறப்படுத்தி விடாமல் இரவு தோறும் இளைஞர்கள் – இஸ்லாமிய இளைஞர்கள் – காவல் இருந்தார்கள்.
மனிதர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்.
( நன்றி : கதைக்குப் பொறி தந்த டொமினிக் லாப்பியருக்கு )
( குமுதம் )