உடைசல்கள்

maalan_tamil_writer

இவனா ? இவனையா சொன்னார் அப்பா !  ஜானு நம்ப முடியாமல் இன்னும் ஒரு தரம் மேலும் கீழும் பார்த்தாள். ஏற்ற இறக்கமாகக் கட்டின வேட்டி, பழுத்த நீர்க் காவிச்சட்டை, விந்தி விந்தி நடக்கிற கால். தன் பெயரைச் சொல்லக்கூடக் குழறுகிற வாய். குச்சி குச்சியாய் ஒட்டக் கத்தரித்த க்ராப். துலக்காத தாமிரப் பாத்திரம்போல் முகத்தில் அழுத்தமாய்ப் படர்ந்த பச்சை இருள்.

இவனையா ?  இந்த பாஷாண்டி  கையிலா வீணை கொஞ்சுகிறது ? இரண்டு மூன்று நாட்களாகத் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார் அப்பா. “ பின்னி எடுத்துட்டாம்மா. ஒரு சங்கராபரணம் வாசிச்சான்பாரு. ஆ ! என்ன கற்பனெ ! என்ன இழைப்பு ! படவா, மனசைன்னா மீட்டிப்பிட்டான்  என்று அரற்றிக் கொண்டிருந்தார். அப்பாவுக்கு காவிரிக்கரை.  அந்த  ஜலத்தோடு  சங்கீதத்தையும்  குடித்து  வளர்ந்தவர்.  ஊர் மண்ணைத் தட்டிக் கொண்டு வந்து இருபத்தைந்து வருஷமானாலும் உதறாமல் ஒட்டிக் கொண்டு  இருப்பது  இந்த  சங்கீதமும்  வெத்தலைச்  சீவலும்தான்.  பாட்டு  பாட்டு என்று அலைந்து கேட்டுவிட்டு வருகிற ஜாதி, வியாபாரத்தை, கைவேலையைக் கூடப் போட்டுவிட்டுக் கிளம்புகிற பிரியம்.

பாயை எடுத்துக் கொண்டு வந்து விரித்தாள் ஜானு. உட்காரச் சொல்லிவிட்டு உள்ளிருந்து  வீணையை  எடுத்து  வந்தாள்.  நல்ல  பாரியான தஞ்சாவூர் விணை ; தேர்ந்த ரசனையுடன் தந்தப்பூ  இழைத்த குடம்.  மினுமினுவென்று  தண்டு.  முன் வளைந்த  யாளியின்  முகத்தில்  சொட்டும்  ருத்ரம்.

வீணையைப் பார்க்கும் போதெல்லாம்  புல்லாரெட்டி  ஞாபகம் வரும்.  இந்த வீணை மாதிரி நெடுநெடுவென்று ஆறடி உயரம். மினுமினுவென்று உடம்பில் ஒரு கோதுமைப் பொன் நிறம். சிரிக்கிற சிரிப்பில் மோகனம். வெண் பட்டு வேஷ்டி, சில்க் ஜிப்பா, எங்கேதான் வாங்குவானோ ? எப்படித்தான் போட்டுக் கொள்வானோ ? அவன் நிலைப்படி ஏறும்போதே சென்ட் வாசனை உள்ளே வந்து கூப்பிடும். பூ வாசனையாக இல்லாமல், ஒரு பொய் வாசனையாக வீசும். சில நாளைக்கு வாசனை வாயிலிருந்து வரும். கண்கள் ஜிவுஜிவுவென்று கனன்று இருக்க, அவன் வீணையைப் பிடித்துத் தூக்குவதில் ஓர் அலட்சியம் தெரியும்.

பாட்டும்  அப்படித்தான்  இருந்தது. நளினம் தெரியாத மீட்டல் அவனுடையது. பிரியம் இல்லாத மீட்டல், வித்தையிடம் மரியாதையோ, பயமோ இல்லாத மீட்டல். அவனுடைய வீணையில் குதிரை ஓடிக்காட்டும். கோவில் மணி அடித்துக் கொண்டு அலையும். குயில் கூவிக் கூவிக் கரையும். தடதடவென்று மிலிட்டரி மார்ச் நடக்கும். ஆனால் சிணுங்காது. கலைக்க முடியாத சோகத்தைச் சொல்லி விம்மாது. ஆற்றுத் தண்ணீரில் அலம்பிப் போகிற பூவாய் மிதக்க வைக்காது.  அவன்  வீணையில்  வித்வான் இல்லை,  டெக்னீஷியன்.

அவனிடம்தான்  முதல் பாடம் கற்றுக் கொண்டது. இது – ஸ, இது – க, இது – ப என்று  ஒவ்வொரு  மெட்டாக  அடையாளம் காண்பித்து, ஆரம்பித்து வைத்தது அவன்தான். வர்ணம் வரைக்கும் கூட்டிக்கொண்டு வந்து நிறுத்தினவன் அவன்தான். அப்புறம்தான் தன்னடைய சேட்டையை ஆரம்பித்தான். வீணையில் எதை எப்படி நிமிண்டினால்  என்ன செய்யும் என்று தன் மேதாவித்தனத்தைக் காண்பிக்க ஆரம்பித்தான்.

அன்றைக்குப் பார்த்து அப்பா வீட்டில் இருந்தார். வெற்றிலைச் செல்லத்தைப் பக்கத்தில்  வைத்துக் கொண்டு பாக்கு வெட்டியில் பாக்கைக் கொடுத்து நிதானமாக அரக்கி அரக்கிச் சீவிக் கொண்டிருந்தார். சீவிக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்தார். அப்பாவின் மனசு தெரியாமல் புல்லாரெட்டி வாசித்துக் கொண்டிருந்தான்.

சட்டென்று , உள்ளங்கையில் குவித்த சீவல் வாய்க்குப் போகாமல் நின்றது.

‘“ நிறுத்துய்யா என்று இரைந்தார். துணியிலிருந்து வெளிப்பட்ட நரசிம்மர் மாதிரி நின்று கொண்டிருந்தார்.

வீணையிலிருந்து விரலை எடுக்காமலேயே  கண்ணில் கேள்வி தெரிய புல்லாரெட்டி  நிமிர்ந்து  பார்த்தான்.

“ என்னது இரு ?   பெரிய அரட்டலாகப் போட்டார்.

“ …

இல்ல ,  இது  என்ன  சங்கீதம்னு  வாசிக்கற.  யார்ட்ட  சொல்லிண்ட  நீ ?

பெரிய  பெயராக  ஒன்றைச்  சொன்னான்,  ரெட்டி.

“ அடப்பாவி , அவர் பெயரைச் சொல்றியேடா, அவர் சிட்சையா, இந்த லட்சணம். அவரா சொல்லிக் கொடுத்தார். ஆ ! இந்தக் கொணஷ்டையெல்லாம் அவரா சொல்லிக் கொடுத்தார்.

“ இல்ல சார், இது நானாக் கண்டுபிடிச்சது …

அடப்போய்யா, பெரிய சுயம்பு !  இந்த வீணைக்குள்ள இதத்தானா கண்டுக்க முடிஞ்சுது ;  கண்டுபிடிச்சானாம் ! பாக்கு வெட்டியிலே இந்தக் கொட்டைப் பாக்கு படற பாடுனா  பாடறது,  வீணை  உன் கையிலே. வெச்சுட்டு எழுந்து போய்யா. உன் சம்பத்து என் பொண்ணுக்கு  ஒட்டிக்கப்  போறது …

விருட்டென்று எழுந்தான் ரெட்டி. கோபமாய் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. சாபம் கொடுக்கவில்லை. கண்மட்டும் ருத்ரமாய் விழித்துப் பார்த்தது. முகம் யாளிச் சிரிப்பாய்  விகாரப்பட்டது,  போய்விட்டான்.

இன்றைக்கு  அந்த  இடத்திற்குச்  சப்பாணிக்காலும் திக்கு வாயுமாக வந்து நின்றான் இவன். அவன் போன இரண்டு வாரத்தில் இவனை அமர்த்திக் கொண்டு வந்து விட்டார் அப்பா. எங்கெங்கேயோ, யார் யாரிடமோ சொல்லி வைத்திருந்து, ஒன்றும் திகையாமல் குமைந்து  கொண்டிருந்தார் அப்பா.

பின் தற்செயலாய் இவனை ஒரு கல்யாணக் கச்சேரியில் கேட்டுவிட்டு, என்ன வாசிப்பு என்று இரண்டு நாள் தவித்துக் கொண்டிருந்தது, யார் யாரையோ விசாரித்து, திருவல்லிக்கேணியின் எந்தெந்த சந்துக்குள் எல்லாமோ அலைந்து பிடித்துக்கொண்டு வந்து விட்டார்.

அப்பா சொன்னது சரிதான். இவன்  மடியில் கொஞ்சியது வீணை. வந்த அன்றைக்கு இவளை வாசிக்கச் சொல்லிக் கேட்டான். சில இடங்களில் முள்மேல் நிற்பது மாதிரி

‘ ஸ்ஸு ஸ்ஸு  என்று  தவித்தான்.

       “ பழைய  வாத்தியார்  சொல்லிக் கொடுத்ததில் சிலதை மறந்திடணும் நீங்க … என்று  திக்கித் திணறிக் கொண்டு ஆரம்பித்தான். பழைய வாத்தியாரையே மறக்க முயன்று கொண்டிருந்தாள் இவள். வீணையைத் தொடும் போதெல்லாம் அந்தச் சிரிப்பும், சுரட்டைத்  தலைமயிரும்  கண்ணுக்குள்  வரும்.

 

       கொஞ்ச  நாளைக்கு  மறுபடி  ஆரம்பத்திற்குப்  போய்  கிடுகிடுவென்று ராகம் தாளம் பல்லவிக்கு வந்தான். ஒவ்வொரு ராகத்திற்கும் உள்ள அழகு, அழகின் மையம், அதன் சூட்சமம் என்று அவன் மீட்டிக் காட்டும்போது கேட்டுக் கொண்டே இருக்கத் தோணும். கும்பிடத் தோணும். திரும்பத் தன் மடிக்கு வீணை வந்தால் விரல் படியாது. மனசு விலகி ஓடும். விரல் படிகிற வித்தையைச் சொல்லிக் கொடுத்தான். கூடவே கொஞ்சம்  கொஞ்சமாய்  மனசைப்  படித்துக்  காட்டவும்  கற்றுக்  கொடுத்தான்.

 

       வீணை உடைந்து போயிற்று. திருட்டுப் பால் குடிக்க வந்த பூனை குப்புறத் தள்ள உடைந்து போயிற்று. குடத்தில் சாண் நீளத்திற்கு ஒரு விரிசல். இரண்டு விரலளவுக்குச் சில்லுப் பெயர்ந்த பொத்தல்.

 

வீணையோடு ஜானுவும் உடைந்தாள். பொங்கிப் அழுதாள். காலேஜைத் தாண்டி வந்த பிறகு அவளுக்கு மிஞ்சின தோழி இதுதான். தன் சிரிப்பைச் சுருட்டி எடுத்துக்கொண்டு புல்லாரெட்டி போனதற்கப்புறம், தன்னைக் கரைத்துக் கொள்ள மீந்தது இந்த வீணைதான். இப்போது இதுவும் போயிற்று.

 

“ கடவுளே, என்னுடைய எல்லா ஆசையும் ஏன் இப்படி விரிசலும் விள்ளலுமாகப் போகிறது  என்று உள்ளூர் வெதும்பி வெதும்பி அழுதாள்.

 

அழுகை நின்றுபோய், மிரண்டுபோய், இவள் அழுகையை, கசப்பைத் தேற்ற முடியாமல், கலைந்து போயிருந்தார் அப்பா. “ வீணை உடையக் கூடாதேம்மா, என்னவோ விபரீதம் வருது  என்று  துடிதுடித்தார்.

சாயங்காலம் வழக்கம்போல் இவன் வந்தான். சாய்ந்து சாய்ந்து காலை இழுத்துக்கொண்டு வந்தான். இருட்டிப் போன இவள் முகத்தையும் விரிபடாத ஜமுக்காளத்தையும் பார்த்துப் புரியாமல் நின்றான்.

“ வீணை உடைஞ்சு போச்சு  என்றாள்  ஜானு  மெதுவாக.

“ ஆங் !

“ இதை எதாவது சரிபண்ண முடியுமா ?  மெல்ல  வீணையை  எடுத்துக்  கொண்டு வந்தாள் ஜானு.

“ ம் … சரி பண்ண முடியாத உடைசல் ஏதாவது இருக்கா, என்ன?  வீணையையும், சுவரையும் மாறி மாறி வெறித்துப் பார்த்தான்.

“ வீணை உடைய உடைய நாதம் அற்புதமா கூடிண்டு வரும்னு சொல்லுவா. என்னோட  குருவோட  ஆத்துல நாலு வருஷமா ஒரு வீணை இருக்கு. எத்தனையோ விரல் பட்ட வீணை. எத்தனையோ விரிசல் கண்ட வீணை. இன்னிக்கும் ‘ கிண் என்று இருக்கும் நாதம். என்னோட குரு சொல்வார். ‘ வீணை மட்டுமில்லைடா, மனுஷாளும் அப்படித்தான்னு.  ஏன்  நானே இருக்கேனே, இந்தத் திக்கு வாயும், சப்பைக்காலும் எத்தனை அடி வாங்கியிருக்கு. எளப்பமான பார்வையில விழற அடி, நையாண்டி வார்த்தையிலே விழற அடி, எத்தனை அடி, எத்தனை கிழிசல், எத்தனை உடைசல். ஒவ்வொரு தரம் இந்த அடி விழறபோதும், இதில ஒரு துண்டு ஞானம் வர்றது, புடிச்சுக்கோடா  னு குரு சொல்வார். “ புத்தி இன்னும் ஒரு இஞ்சு விருத்தியாறதும்பார். இந்த உடைசலுக்குப் பின்னாலிருக்கிற நாதத்தை அவர்தான் கண்டுபிடிச்சார். பாட்டுச் சொலிக் கொடுக்கறேன் வாடான்னு இழுத்துண்டு போனல் திக்குவாயனுக்கு பாட்டா, பேஷ் பேஷ்னு ஊர் சிரிக்கத்தான் செஞ்சது முதல்ல. யாரும் நினைக்காததுதான் கிடைச்சது எனக்கு….

… நீங்க என்னமோ கேட்டேள், நான் என்னமோ சொல்லிண்டுருக்கேனே, இந்த உடைசல் சரி பண்ணிப்பிடலாம்.  இதுக்குன்னே  ராயப்பேட்டையில் ஒரு கடை இருக்கு ஒரு கடை இருக்கு.  அங்க போய் பார்க்கணும் நீங்க. வர்றது எல்லாம் உடைசலும், பொத்தலுமா வரும். போறதெல்லாம் மினு மினுன்னு பாலீஷ் போட்டுண்டு, புதுசா மெட்டுக் கட்டிண்டு போகும். அவனுக்கு சங்கீதம்னு ஒண்ணும் தெரியாது. இந்த உடைசல்களைச் சுண்டிப்பார்த்துப் பார்த்தே வித்துவான் ஆயிட்டான்.

இவன் பேசப் பேச ஜானு வியந்துபோய் பார்த்தாள்.  அது இத்தனை  நாள்  இல்லாத புதுப் பார்வையாக இருந்தது. அவளுடைய உடைசல்களையும் வாரிக்கொண்டு விந்தி விந்திப்  படியிறங்கிப்  போனான் இவன்.

( இதயம் பேசுகிறது )

               

      

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Posts

Maalan Books

Categories

Maalan Narayanan

Maalan Narayanan, born on September 16, 1950, is a well-known journalist and media personality who has also received recognition from the Literary Academy. He serves as the mentor of the magazine named “Puthiya Thalaimurai”. Previously, he has worked for prominent Tamil magazines such as India Today (Tamil), Dinamani, Kumudam, and Kungumam. He has also been actively involved in online journalism through platforms like Sun News and as a mentor for the direction of online journalism.