தனது 100வது இதழை வெளியிடும் உயிர்மை தனது இதழில் பிரசுரிக்க எனக்கு ஒரு கேள்வியை அனுப்பியிருந்தது. அதன் கேள்வியும் என் பதிலும்:
இந்திய அளவில் நமது ஊடகங்கள் ஊழல்மயமாகவிட்டது என்ற கருத்தை ஏற்கிறீர்களா? நமது ஊடகங்களை செயலிழக்கச் செய்யும் முக்கிய தீவினைகள் என்ன?
ஒரு தொலைக்காட்சிப் பேட்டி. வேதாளத்தின் வக்கீல் கரண் தாப்பர் முன் அமர்ந்திருக்கிறார் பத்திரிகைக் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேயே கட்ஜூ. ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும் போது பெரும்பாலான இன்றைய ஊடகவியலாளர்களின் அறிவுத் திறன் (Intellectual leval) குறைவாக இருக்கிறது என்று சொன்னார். அவ்வளவுதான்! ‘எல்லாப் பத்திரிகைக்காரர்களையும் கட்ஜூ படிக்காதவர் (uneducated) என்று சொல்லிவிட்டார் எனச் சொல்லி ஒரு ராத்திரி முழுதும் ஆங்கிலச் சானல்கள் கச்சேரி செய்தன! செய்திதாள்கள் கார்ட்டூன் போட்டுத் தாக்கின. இந்தியப் பத்திரிகை ஆசிரியர்களின் அமைப்பான எடிட்டர்ஸ் கில்ட் கட்ஜுவிற்குக் கண்டனம் தெரிவித்தது
இந்த அமளியில் அவர் சொன்ன ஒரு முக்கிய விஷயம் ‘மூழ்கி’ப் போய்ய்விட்டது. அது இதுதான்: ”கடுமையான வறுமை, மலைக்க வைக்கும் வேலையின்மை, விண்ணைத் தொடும் விலைவாசி, கைக்கெட்டாத கல்வி, மருத்துவ வசதி, கெளரவக் கொலை, வரதட்சிணை மரணங்கள், ஜாதிய அடக்குமுறை, மத வெறி எனப் பலசமூகக் கொடுமைகள், இவற்றால் 80% மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது இவற்றைப் பற்றிப் பேசாமல் தங்கள் செய்திகளில் 90 சதவீத இடத்தை சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை, ஃபேஷன் அணிவகுப்புகள்,பாப் இசை, டிஸ்கோ, கிரிக்கெட், ஜோசியம் போன்ற மூடநம்பிக்கைகள் போன்றவற்றிற்கு அளிக்கின்றன”
செய்தித் திரிப்பு என்பது மட்டுமல்ல, மெளனம், அதிகாரத் தரகு, ஒருநிலைச் சார்பு, பிரச்சாரம் எனப் பல நோய்களுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறது இந்திய இதழியல்.
காரணம்? வியாபார வெறி, பணத்தாசை, சந்தைப் போட்டி, புறச் சூழல் அவலங்களை, ‘ஒப்பாரி, bore’ என ஒதுக்கித் தள்ளும் கேளிக்கை மனம் கொண்ட வாசகர்கள், சமூக அக்கறை பற்றிய சிந்தனைகளை விதைக்காத கல்வி முறை, தனிமனிதனை முன்னிறுத்தும் இலக்கியம், நுகர்வுக் கலாசாரம் எல்லாம்தான் காரணம். சுருக்கமாக்ச் சொன்னால்-
தோழரே, இந்த அவலத்திற்கு, எல்லா அவலங்களைப் போலவும், நீங்களும் நானும்தான் காரணம். ஏனெனில் சமூகம் என்பது எங்கோ வெளியில் இல்லை