வெள்ளம் பற்றிய செய்திகள் வடியத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் அது தந்த வடுக்கள் ஆற நெடுங்காலமாகும். அவற்றில் கண்ணால் பார்க்காமல், தொட்டுத் தடவாமல், நினைக்கும் போதே வலிக்கும் வடு ஒன்று உண்டு. அது ஈரத்தில் நனைந்ததால் நாம் இழந்த புத்தகங்கள்.
புத்தகங்கள் குழந்தைகளைப் போல. சிரிக்க வைக்கும். நெகிழ வைக்கும். சில நேரம் சினமும் தரும். எடுத்துக் கொள்ளும் போதெல்லாம் ஏதோ இன்பம் வரும். மார் மீது கவிழ்ந்து மெளனமாய்க் கிடந்தாலும் மனதுக்குள் மகிழ்ச்சி சுரக்கும். சுமைதான் என்றாலும் சுகம்தான்.
பிடித்த புத்தகம் பிடித்த பெண்ணைப் போல. மறுபடி மறுபடி அழைக்கும். விடுமுறைப் பிற்பகலில், நள்ளிரவில் புரட்டக் கூப்பிடும். புரட்டிக் களைத்த பின்னும் கூடவே படுத்துறங்கும்
வீட்டில் ஒழுங்கின்றிக் கிடக்கும் நூல் அடுக்கில் புத்தகம் தேடுவது வாழ்க்கையை நினைவூட்டும். கவிதை தேடப் போனவன் கையில் தத்துவம் சிக்கும். வரலாற்றை வாசிக்கப் புகுந்தால் அரசியல் அகப்படும். மரபுக் கவிதைக்கு நடுவில் நாட்டுப் பாடல் மாட்டிக் கொண்டிருக்கும். பெண்ணியத்திற்குப் பின்னால் பின்நவீனத்துவம் ஒளிந்திருக்கும். படித்து மறந்த புத்தகங்களும், பிடித்து மறக்கமுடியாத புத்தகங்களும் பக்கத்தில் அமர்ந்து ஒன்றோடு ஒன்று உரையாடிக் கொண்டிருக்கும்..
பிள்ளை போல் பாதுகாத்த புத்தகங்களை வெள்ளம் கொண்டு போய்விட்டச் செய்திகளை வாசிக்கும் போது இடிவிழுந்தது போல் இதயம் துடிக்கிறது
காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகளைத் தந்த சீனி.விசுவநாதன் வசம் இருந்த பாரதி ஆவணங்கள் நீரில் போய்விட்டன என்ற செய்தியை வாசித்த போது என் இதயம் இறந்து மீண்டது.
வெள்ளத்தால் போகாமல், வெந்தழலில் வேகாமல் புத்தகங்களைக் காக்க இனி ஒருவழிதான் உண்டு. அது அவற்றை மின் வடிவாக்கல்.
மின்னூல்கள் என்பது காலத்தின் கட்டாயம். காகிதங்கள் தரும் மரங்களைக் காப்பாற்றுகிறோம் என்பது மட்டுமல்ல, வாசகனைக் கெளரவப்படுத்தும் முயற்சியும் மின்னூல்கள்தான். வலையேற்றம் பெற்ற நூலை எங்கிருந்தும் எப்போதும் எத்தனை பேர் வேண்டுமானாலும் வாசிக்கலாம். பாஸ்டனில் இருக்கும் பாலாஜியும் பரங்கிப் பேட்டையில் இருக்கும் பாமாவும் ஒரே நேரத்தில் ஒரே நூலை, ஒருவர் அறியாமல் ஒருவர் ஒரே தளத்திலிருந்து வாசித்துக் கொண்டிருப்பார்கள். இன்றைய முதலாளித்துவ உலகிலும் தனியுடமை என்பது தகர்க்கப்பட்டு பொதுவுடமை சாத்தியம் என்பதன் சாட்சியம் மின்நூல்கள்
அச்சு நூல்களைத் தயாரிக்க, விநியோகிக்க ஆகும் செலவில் பத்து சதவீதம் கூட மின்னூல்களைத் தயாரிக்க ஆகாது என்பதால் அவற்றைக் குறைந்த விலைக்குக் கொடுக்கலாம். என்னைக் கேட்டால் மின்னூல்களை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்றே சொல்லுவேன். எழுத்தை வருவாய்க்கான வாய்ப்பாகக் கருதாமல் அறிவு, அனுபவம் இவற்றின் பகிர்தலாகக் கருதுகிறவர்கள் இதற்கு இணங்குவார்கள்.
இன்று இணைய இணைப்பிருந்தால் செய்தி இலவசம். சினிமா இலவசம். இசை இலவசம்.அஞ்சல் இலவசம். புத்தகத்திற்கு மாத்திரம் ஏன் காசு பணம்?
27 டிசம்பர் 2015