ஒன்று எங்கள் ஜாதியே, ஒன்று எங்கள் நீதியே என்று என் ஜன்னலுக்கு வெளியே உரக்க முழங்கிக் கொண்டிருக்கிறது ஒலிபெருக்கி.ஏதோ கொண்டாட்டம். பண்டிகைக்குப் பட்டுச் சட்டை அணிவதைப் போல, விழாக்காலங்களில் ஒலிக்கும் பாடல்களில் மட்டும் சமத்துவமும் சமசரமும் நர்த்தனமாடுகின்றன. நிஜ வாழக்கையைச் சொல்லும் செய்தித்தாள்களைத் திறந்தால் நேர் எதிராக இருக்கிறது.
குண்டு வெடிப்பு, அமில வீச்சு. ஜாதி மோதல், வன்புணர்வு, ஊழல் என விரிகிற செய்திகளின் வார்த்தைகளுக்கிடையே கசிகிற ரத்தமோ, கண்ணீரோ என்னைச் சில நிமிடங்களாவது செயலற்றுப் போகச் செய்கின்றன.
இந்த 21ம் தேதியும் அப்படித்தான் முடிந்தது. ஹைதராபாத்தில் கையேந்தி பவன்கள் அருகில், திரையரங்கிற்கெதிரில். பேருந்து நிலையத்திற்குப் பக்கத்தில் வெடித்த குண்டுகள் 17 பேரை பலி கொண்டன, படுகாயமுற்றவர்கள் 119 பேர் என அந்த இரவு முழுவதும் என்னைச் செய்திகள் நனைத்துக் கொண்டிருந்தன. என்றாலும் உள்ளம் உலர்ந்து போய் உட்கார்ந்திருந்தேன். தகவல்கள் என்னைத் தாக்கவில்லை. ஆனால் மனிதர்கள் மனதில் வந்து போய்க் கொண்டிருந்தார்கள் கேள்விகள் என்னை மொய்த்துக் கொண்டிருந்தன.
குண்டு வைத்தவர்கள் யார் எனத் தொலைக்காட்சிகள் ஊகங்களை முன் வைத்து வாதங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. ஆனால் என் மனமோ இறந்தவர்கள் யாராக இருக்கக் கூடும் என எண்ணிக் கொண்டிருந்தது.
கையேந்தி பவன்களில் உண்ணுகிற எளியவர்கள் அரசின் முடிவுகளுக்குக் காரணமான அமைச்சர்களாகவோ அரசியல்வாதிகளாகவோ அதிகாரிகளாகவோ இருக்க வாய்ப்பில்லை. மதிய உணவை மடியில் கட்டிக்கொண்டு போய் உண்டு உழைத்து மறுபடியும் அந்திப் பசிக்கு ஆளாகி, அதைத் தணித்துக் கொள்ள வந்த மத்திய தர வர்க்கமாக இருந்திருக்கக் கூடும். ஊர் விட்டு ஊர் வந்து உழைத்து முடித்து இரவு உணவை முடித்துவிட்டு அறைக்குள் சென்று அடைகிற இளைஞர்களாக இருக்கக்கூடும். வேலையை முடித்து வீட்டுக்கு பஸ் ஏறக் காத்திருந்தவர்களாக இருக்கும்.சந்தையைப் போன்ற அந்தப் பகுதியில் அடுத்த நாளுக்கு காய் வாங்க இல்லத்தரசிகளாக இருக்கக்கூடும். நேரத்தைப் போக்க வழி தெரியாமல் திரை அரங்கைத் தேடி வந்தவர்களாக இருக்கும்.
எப்படி இருந்தாலும் இறந்து போன மனிதர்கள் இந்தத் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வல்லமை வாய்க்கப் பெற்றவர்கள் அல்ல. உங்களையும் என்னையும் போன்ற எளிய மனிதர்கள். ஓட்டுப் போடுவதைத் தவிர ஒரு அரசியலும் தெரியாத அப்பாவிகள்.
இவர்கள் மீது ஏன் இத்தனை வன்மம்? இந்த வெறித் தாக்குதல்? அரசாங்க இலச்சினையில் கர்ஜிக்கிற சிங்கங்களை விட்டுவிட்டு அப்பாவி பிள்ளைப் பூச்சிகளுக்கு வெடி குண்டு வைக்கக் காரணம் என்ன?
அஜ்மல் கசாப்பையும் அப்சல் குருவையும் கயிற்றில் தொங்கவிட்டது காரணமாக இருக்கும் என ஊடகங்கள் ஊகித்துப் பேசுகின்றன. அந்த முடிவுகளுக்கும் இவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கு அது ஒரு செய்தி. ஒரு நாள் உணவு இடைவேளை உரையாடல். அதற்காக இவர்கள் பழி வாங்கப்பட்டார்கள் என்றால் அதைவிடப் பெரிய அபத்தம் ஏதுமில்லை
மதவாத அமைப்பொன்றின் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. எந்த மதத்தினரையும் தனியாகப் பிரித்துக் கொல்வதற்கான குண்டுகள் இன்னும் இங்கே தயாரிக்கப்படவில்லை. இது இந்துக்களை மட்டும் கொல்லும், இது இஸ்லாமியரை மட்டும் கொல்லும் என வகைப்படுத்தி வன்மம் தீர்த்துக் கொள்கிற வெடிகுண்டுகள் இன்னும் உருவாகவில்லை. சேர்ந்தாரைக் கொல்லும் சினம் போல தங்கள் மதத்தவரையும் மரணத்தில் தள்ளும் குண்டுகளை வைத்தவர்கள் மதத்தை நேசிப்பவர்களாக இருக்க முடியாது. மரணத்தை நேசிக்கிற கொலைகாரர்களாகவே இருக்க முடியும்.
குண்டு வைக்கிற மதவாதிகள் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். அவர்களது வன்முறைச் செயல்கள் அவர்களை மற்ற மதத்தினரிடமிருந்து மட்டுமல்ல, அவர்களது சொந்த மதத்தினரிடமிருந்தும் அன்னியப்படுத்திவிடும். இந்தப் பழிவாங்கல்களால் அப்பாவி இஸ்லாமியருக்கோ, அல்லது இந்துக்களுக்கோ என்ன பலன் கிடைத்திருக்கிறது? என்ன நன்மை நிகழ்ந்திருக்கிறது? யோசித்துப் பாருங்கள் . அதிக அளவில் மதம் சார்ந்த வன்முறைகள் அரங்கேறத் துவங்கியது 1992ல் பாப்ரிமஸ்ஜித் தகர்க்கப்பட்ட பிறகுதான். அந்த வன்முறைகளால் இங்கு எந்த ஏழையின் வாழ்க்கை விடிந்து விட்டது?.
வெறி கொண்டு தாக்கும் இந்தக் குண்டர்களின் குறியெல்லாம் இந்துக்கள் அல்ல, இஸ்லாமியர்கள் அல்ல. அவர்களின் இலக்கு எல்லாம் இந்தியர்கள் என்ற ஒன்றுதான். இந்தியர்கள் சாக வேண்டும், இந்தியர்கள் அஞ்ச வேண்டும், இந்தியர்கள் அவ நம்பிக்கை கொள்ள வேண்டும், இந்தியர்கள் விரக்தியில் விழ வேண்டும், இந்தியர்களின் ஒற்றுமை குலைய வேண்டும், இந்தியர்களின் மத நல்லிணக்கம் சிதைய வேண்டும், இந்தியர்களின் வளர்ச்சி முடங்க வேண்டும்.
எதிரிகளின் இந்த எண்ணத்தை ஈடேற்றப் போகிறோமா? அவர்கள் ஆசைப்படுவதைப் போல அடித்துக் கொண்டு சாகப்போகிறோமா? நம் விரலைக் கொண்டே நம் கண்களைக் குத்திக் கொண்டு குருடாகப் போகிறோமா?
வேண்டாம். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துவோம் முட்டையா கோழியா முதலில் வந்தது எது என்ற முடிவில்லாத வாதத்திற்கு முற்றுப் புள்ளி வைப்போம். மூர்க்கத்தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஆக்கபூர்வமாக யோசிப்போம். கடந்த காலத்தைத் தூக்கிக் கடாசிவிட்டு எதிர்காலத்தை நோக்கி எழுவோம். கல்லறையிலிருந்து வெளிவந்து பசும் புல்தரைகளை நோக்கி நடப்போம். காயங்களைக் கிளறிச் சீழ்பிடிக்கச் செய்யாமல் தழும்புகளாகத் தாங்கிக் கொண்டு நகர்வோம். நம்மை வீழ்த்த நினைப்பவர்கள் நாணுவதைப் போல நாம் எப்போதும் ஒரு காரியம் செய்வோம். அது-
இறுதி வரை இந்தியாராகவே இருப்போம். இறந்தாலும் இந்தியராகவே இறப்போம்
புதிய தலைமுறை மார்ச் 07 2013