அந்த அரங்கில் ஆட்களை விடக் கொசுக்களே அதிகமிருந்தன. கவிதை போன்ற தமிழில் கடந்து போனக் காலத்தை கனத்த குரல் ஒன்று உரக்க ஒலித்துக் கொண்டிருந்தது.. எதிரே ஆட்கள் எவருமில்லாமல், வானொலி நாடகம் போல, நம் கற்பனைக்கு இடம் வைத்துக் காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன. ஒளிகள் ஆங்காங்கே ஒளிர்ந்தும் அணைந்தும் எதையோ உணர்த்த முயன்று கொண்டிருந்தன. மதுரைத் திருமலை நாயக்கரின் வரலாற்றை அவரது மாளிகையிலேயே அமர்ந்து பார்த்து, அல்ல அல்ல, கேட்டுக் கொண்டிருந்தோம். உச்சியில் பொலிந்த நிலவைத் தவிரச் சுற்றிலும் இருள்.
”அருமை!” என்றார் நான் அழைத்துப் போயிருந்த அயல்நாட்டு விருந்தாளி. “பகலில் வந்திருக்கலாம்” என்றார். ‘உண்மைதான், இந்த மாளிகையை இன்னும் நன்றாகப் பார்த்திருக்கலாம்’ என்றேன்.”இல்லை கொசுக்கள் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கும்” என்றார் புன்னகை மாறாமல்.
இரவு பகல் என்று கொசுக்கள் வேளை பார்ப்பதில்லை. அன்னியர் நம்மவர் என்றும் அவை பேதம் பார்ப்பதில்லை. நாங்கள் சென்ற இடமெல்லாம் அவை எங்களைத் தொடர்ந்து வந்தன. தமிழ் வளர்த்த நெல்லைக்கும் தவம் கனத்த குமரிக்கும் கூடவே வந்து எங்கள் காதுகளுக்கு இசை விருந்தளித்தன. அதற்குக் கட்டணமாக எங்கள் ரத்தத்தைக் கேட்டன.
குமரியில் முக்கடலும் மெளனம் காப்பது போல முதலில் தோன்றின,அருகில் போய் பார்த்தபோது அவை கரையோரக் கற்குவியலோடு சரசமாடிக் கொண்டிருந்தன. சீற்றம் அதிகமில்லை. படகேறி விவேகானந்தர் பாறைக்குப் போனோம். பகல் 12 மணிக்குப் பக்கமான பொழுது. எனினும் பாறைகள் சுடவில்லை. ஜில்லென்ற காற்று சிகையை சிலுப்பியது. இரவில் இன்னும் குளிராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டேன்.
இந்தக் காற்றிலும் குளிரிலும்தான் மூன்று நாள்கள் விவேகானந்தர் இந்தப் பாறையில் அமர்ந்து தியானம் செய்தார்.அன்று படகில்லை. நீந்தித்தான் வந்திருக்க வேண்டும். அது டிசம்பர் மாதம் வேறு (டிசம்பர் 25-27, 1892) நிச்சயம் குளிர் வாட்டியிருக்கும். ஆனால் அவர் இதயத்தில் இந்தியாவைப் பற்றிய எண்ணம் கதகதத்துக் கொண்டிருந்தது.தன் வாழ்வின் நோக்கம் என்ன என்பதை விவேகானந்தர் கண்டு கொண்ட மகத்தான தருணம், தமிழ்நாட்டில், இந்தப் பாறையில்தான் நிகழ்ந்தது என்பதை நினைத்த போது நெஞ்சம் விம்மித் தணீந்தது.
தமிழகம் ஞானபூமி என்பதை நிறுவதுவது போல் விவேகானந்தருக்கு அருகில், மிக அருகில், வள்ளுவர் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். ஆனால் அவரை நெருங்கிச் சென்று பார்க்கத்தான் முடியவில்லை. தாழ்வான அலை காரணமாகப் படகு அங்கு போகாது எனப் பலகையில் எழுதி வைத்திருந்தார்கள். தாழ்வான அலை என்றால் விவேகானந்தர் பாறை வரை வரமுடிந்ததே என்ற தர்க்க ரீதியான கேள்விக்கு விடை இல்லை.
நாங்கள் போயிருந்த நாளில் ஏராளமான மக்கள், பெரும்பாலும் நெற்றியில் நெடுங்கோடாகச் செந்தூரம் அணிந்த வட இந்தியர்கள் வந்திருந்தார்கள். வட இந்தியர்கள் வள்ளுவரை அறிந்து கொள்ளாமல் போகிறார்களே என்ற வருத்தம் எனக்குள் எழுந்தது. இரண்டு பாறைகளையும் இணைப்பது போல ஒரு பாலம் அமைத்தால் என்ன? இன்றைய தொழில்நுட்பத்திற்கு இது ஒன்றும் இயலாத காரியம் அல்ல. மானுடத்தின் மேன்மை பற்றிச் சிந்தித்த இரு பெரும் ஆளுமைகளை இணைத்தது போலவும் இருக்கும். இதற்கும் ஒரு தருண் விஜய் வரவேண்டுமா?
நம் தமிழகத்தில் ஆரவாரங்களுக்கு அப்பால் ஞானம் நெடிதுயர்ந்து நிற்கிறது. ஆனால் நாம் கொசுக்களின் சங்கீதத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. இரண்டுமே நமக்கு வேடிக்கைக் காட்சியாகி விட்டது!