பலர் அறியாத சென்னையின் முகம், அது இந்திய அரசியலின் திசைகளைத் தீர்மானித்த நகரம் என்பது
அடையாற்றின் கரையில் அமைந்துள்ள பிரம்ம ஞான சங்கத்தின் தோட்டத்தில் அதிகாலையில் உலவப் போகிறவர்கள் அந்த ஆலமரத்தை அரட்டையடித்துக் கொண்டே கடந்திருப்பார்கள். ஆனால் அந்த மரத்தின் நிழலில்தான் இந்திய வரலாற்றைத் திசை திருப்பிய இயக்கங்களுக்கு விதையிடப்பட்டது என்பதை அவர்களில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
ஆலன் ஆக்டேவியன் ஹூயூம். இவர் ஆங்கிலேய அரசின் உயர் அதிகாரிகளில் ஒருவர். ஆனால் வரலாறு இவரை இந்திய தேசிய காங்கிரசின் நிறுவியவர் என்றுதான் பதிந்து கொண்டிருக்கிறது. மிஸ்டர். ஹுயூம் பிரம்ம ஞான சங்கத்தில் தீவீரப் பற்றுக் கொண்டவர். 1885ம் ஆண்டு அந்த ஆலமர நிழலில் அமர்ந்து மயிலாப்பூரிலிருந்து வந்திருந்த சில நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது உதயமான யோசனைதான் இந்திய தேசிய காங்கிரஸ்
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஆலமரம் இன்னொரு அரசியல் இயக்கத்தின் துவக்கத்தைக் கண்டது. அவர் வாழ்ந்த காலத்தில் அவரது அரசியல் எதிரிகளால் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளான டாக்டர் ஆனி பெசண்ட் ஹோம் ரூல் இயக்கத்தைத் தோற்றுவித்ததும் இங்குதான். தனி இறையாண்மை கொண்ட ஆனால் இங்கிலாந்து அரசிக்கு விசுவாசமான நாடாக இந்தியாவை ஆக்க விரும்பிய இயக்கம் ஹோம் ரூல்
சூரத் மாநாட்டையடுத்துத் தீவிரவாதிகள், மிதவாதிகள் எனப் பிரிந்து கிடந்த காங்கிரஸ் கட்சியினரைச் சமாதானப்படுத்தி ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியவர் ஆனி பெசண்ட் என்பது ராகுல் காந்தித் தலைமுறைக் காங்கிரஸ்காரர்களுக்குத் தெரிந்திருக்காது. ஆனால் வரலாறு அதைக் குறித்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒருங்கிணைப்பு மாநாடு நடந்தது சென்னையில்தான்.
ஒரு வகையில் ஆனி பெசண்ட் இன்னொரு அரசியல் இயக்கம் தோன்றவும் காரணமாக இருந்தார். அடையாற்றின் கரையில் அவர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளில் சிலதான் அடையாற்றின் மறுகரையில் நீதிக் கட்சித் தோன்ற மறைமுகக் காரணமாயிற்று. என்று எழுதுகிறார் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பலகலைக் கழகப் பேராசிரியர் யூஜின் இஷிக். இவர் தமிழ்நாட்டில் பிறந்தவர். தமிழ்நாட்டில்தான் அவரது ஆரம்பக் கல்வி
திருவல்லிக்கேணிவாசியான டாகடர் நடேச முதலியார் ஆரம்பித்த, மதறாஸ் திராவிட சங்கம்தான், எல்லா திராவிடக் கட்சிகளுக்கும் தாயான நீதிக் கட்சிக்கு விதை.
திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு அந்த நாள்களில் விடுதியொன்றை நடத்தியது திராவிட சங்கத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று. அது அன்றைய அவசியத் தேவை. ஏனெனில் அன்று வெளியூர்களில் இருந்து பல இளைஞர்கள் மேற்படிப்புக்காகச் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு ‘பிறாமணாள் கபே’க்கள் உணவு அளிக்க மறுத்துவந்தன. நடசனாரின் விடுதியில் தங்கிப் படித்தப் பலர் பின்னாளில் நீதிபதிகளாகவும், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாகவும் வாழ்வில் மலர்ந்தார்கள்.
காங்கிரசும் திராவிட இயக்கங்களும் தமிழர்கள் சிந்தனையிலும் வாழ்விலும் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து நிறையவே எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதிகம் எழுதப்படாத விஷயம், திராவிட இயக்கங்கள் நாட்டின் தலைவிதியைத் தீர்மானிப்பதில் வகித்த முக்கியப் பங்களிப்பு. ஆங்கிலப் பத்திரிகைகளால், ‘மாநிலக் கட்சிகள்’ என்று சற்று ஏளனமாகவே பார்க்கப்படும் திராவிடக் கட்சிகள், பல ஆண்டுகளுக்கு முன்னரே, இந்தியாவின் மற்ற பல கட்சிகளுக்கு முன்பாகவே, நாட்டின் அரசியல் எந்தத் திசையில் நடக்கும் என்பதைச் சரியாகவே கணித்தன. “மோதல் அரசியல்” முடிவுக்கு வந்து விட்டது என்பதையும் கூட்டணி அரசியல் யுகம் துவங்கி விட்டது என்பதையும் 1970களின் இறுதியிலேயே அவை உணர்ந்திருந்தன.
மத்திய அமைச்சரவையில் முதன் முதலில் இடம் பெற்ற திராவிடக் கட்சி அதிமுகதான்.1979லேயே அதிமுகவைச் சேர்ந்த சத்தியவாணி முத்துவும், பாலா பழனூரும் சரண்சிங் அமைச்சரவையில் அமைச்சர்களாக இடம் பெற்றிருந்தார்கள்.தமிழகத்தில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் திமுகவும் 1980ல் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி கண்டன.
காங்கிரஸ், பாஜக இரண்டிற்கும் மாற்றாக மூன்றாவது அணியைக் கட்டுவதற்கான முதல் முயற்சியும் சென்னையில்தான் வடிவம் பெற்றது.ஜனதா தளம், திமுக, தெலுங்கு தேசம், அசாம் கண பரிஷத் ஆகியவை ஒருங்கிணைந்து தேசிய முன்னணியைத் துவக்கின. இந்தக் கூட்டணி 1989-90களில் இந்தியாவை வி.பி. சிங் தலைமையில் ஆண்டது. பாரதிய ஜனதா, இடதுசாரிகள் இரண்டு தரப்பினரது ஆதரவையும் ஒரே நேரத்தில் பெற்ற அரசு, இந்திய வரலாற்றிலேயே இது ஒன்றுதான்.
தனது இடைவிடாத பரிசோதனைகள் மூலம் இந்திய அரசியலின் திசையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றி வந்திருக்கிறது. இன்னொருபுறம் தென்சென்னை, மத்திய சென்னைத் தொகுதிகளிலிருந்து நாடாளுமன்றத்த்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.டி. கிருஷ்ணமாச்சாரி (நிதி), ஆர்.வெங்கட்கட்ராமன்,( நிதி, பாதுகாப்பு உள்துறை) முரசொலி மாறன் (தொழில், வர்த்தகம்) டி.ஆர்.பாலு (தரைவழிப் போக்குவரத்து, வனம், சுற்றுச் சூழல்) தயாநிதி மாறன் (தொலைத் தொடர்பு, ஜவுளி) ஆகியோர் இந்திய அரசில் முக்கியப் பொறுப்புக்களை ஏற்று இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் பங்களித்தார்கள்.
எனது வட இந்திய நண்பர்கள் சென்னையை இந்தியாவின் கலாச்சாரத் தலைநகர் என வர்ணிப்பதுண்டு. ஆனால் நான் அடித்துச் சொல்வேன், பல அரசியல் இயக்கங்களுக்கு வித்திட்ட சென்னை இந்திய அரசியலின் சோதனைச் சாலை.