அலைகளுக்கு நடுவேயிருந்து எழும் அந்தக் அக்னிக் குஞ்சு இன்னும் வரக் காணோம். இருளின் சாம்பல் இன்னமும் விரவிக் கிடந்தது. ஆனால் அதற்குள் கால் வீசி நடப்பதற்குக் கடற்கரைச் சாலைக்கு ஆட்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள்.
எழுத்தாளர்களின் படைப்புக்களில் மட்டுமல்ல, இறைவனின் படைப்பிலும்தான் நடைகளில் எத்தனை வித்தியாசம்! கட்டைக்குக் கை கால் முளைத்ததைப் போல விறைப்பாக நடப்பவர்கள். பட்டாளாத்திற்கு ஆள் எடுக்கிறார்களாம், பழகிக் கொள்கிறோம் என்பதைப் போல இயந்திர கதியில் கை வீசி நடப்பவர்கள். இடை ஒசிய இளம் பெண்களைப் போல நடக்கும் நடுவயது ஆண்கள். இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க மெல்ல, மிக மெல்ல நடக்கும் எந்திரன்கள்.
நம்முடைய நடைக்கும் தன்னம்பிக்கைக்கும் சம்பந்தம் இருப்பதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்குப் ஆறு வழிகளைப் அவர்கள் பரிந்துரைக்கிறர்கள் நடையையும் அதில் ஒன்றாகச் சொல்கிறார்கள். என்ன அந்த ஆறு வழிகள்?
1.உடை சொல்லும் உள்ளம்:
ஆள் பாதி ஆடை பாதி என்பது துணிக்கடைக்காரர்கள் நெய்து வைத்த வாசகம் என்ற நினைப்பு எனக்கு. ஆனால் நம் உள்ளத்தின் நிமிர்வை உடுத்துகிற விதம் சொல்லிவிடுமாம். தன்னைத் தானே காதலிக்கும் சுய மோகன்களும், தன்பிரியாக்களும் தங்களை அழகு படுத்திப் பார்த்துக் கொள்ளவே ஆசைப்படுவார்களாம். நம் மீது நாம் கொள்ளும் காதல்தானே தன்னம்பிக்கையின் முதல் அடையாளம்.
அதற்காக ஆடித் தள்ளுபடியில் வாங்கி அலமாரி நிறைய அடுக்கி வைக்க வேண்டும் என்பது இல்லை. பருத்திப் புடவையும், பளிச்சென்ற வேட்டியும் கூடப் போதும். ஆனால் பொருத்தமான நிறத்தில் பொருத்தமான விதத்தில் உடுத்தினாலே கூடக் கம்பீரமாக இருக்கும். ஒரு நாள் சட்டையை ‘இன்’ செய்தும் மறுநாள் அதே சட்டையை வெளியே எடுத்துவிட்டும் அணிந்து பாருங்கள் உங்களுக்கே வித்தியாசம் தெரியும்
2.நடை போடும் நம்பிக்கை :
தன்னம்பிக்கை கொண்டவர்கள் விறு விறுவென நடை போடுவார்களாம். காலிரண்டும் பின்னப் பின்ன நடப்பது உள்ளத்தில் தயக்கமோ,பயமோ தங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது என்கிறார்கள் வல்லுநர்கள். அல்லது வலியோ வேதனையோ அவர்களை வருத்திக் கொண்டிருக்கலாம். தயக்கம், பயம் உடல்நலக் குறைவு எல்லாமே தன்னம்பிக்கையைத் தளரச் செய்யும் விஷயங்கள்.வழக்கமாக நடப்பதைவிட ஒரு 25 சதவீதம் விரைவாக நடந்து பழகுங்களேன்.
3.கதை சொல்லும் உடல்மொழி:
நடையையும் உடையையும் போல உங்கள் உடல் மொழி- அதாங்க பாடி லாங்குவேஜ்- அதுவும் கூட ஆளைக் காட்டிக் கொடுத்துவிடும். ஒன்றை நினைத்ததும் பரபரவென்று செயலில் இறங்குகிறவர்களுக்கும் அடுத்தவர் எடுத்துச் சொல்லியும் ஆடி அசைந்து வேலையை அணுகுகிறவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன? தன்னம்பிக்கைதான். நம்மால் முடியும் என்ற நம்பிக்கை துளிர்த்துவிட்டால் அந்த வேலையைச் செய்து முடிக்காமல் தூங்க முடியாது. இது நம்மால் ஆகுமா என்ற எண்ணம் வந்துவிட்டால் ஆர்வமின்மையோ, அலட்சியமோ உடலில் வந்து புகுந்து கொள்ளும்
4.ஆசைப்படு:
உங்களுக்குள் இரண்டு மனங்கள் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒன்றை மனம் விரும்புகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், உடனே மறுமனம் அது வேண்டாம் என்பதற்கு ஆயிரம் நியாயங்களைச் சொல்லும். புத்தகம் வாங்கலாமா? அடப்பாவி என்ன இந்த விலை வைச்சிருக்கான்! நண்பர்களைப் போய் பார்த்து வரலாமா? ஐயோ அவனுக பண்ற கிண்டல் தாங்கமுடியாது. சினிமா? மூணு மணி நேரம் வேஸ்ட். கிரிக்கெட்? ஆமாம்,சச்சின் ரிட்டையர் ஆனதும் நம்மைத்தான் ஆடக் கூப்பிடப் போறாங்க. எதற்கெடுத்தாலும் தடை போடும் மனசை முதலில் வெல்லப்பழக வேண்டும். எப்படி வெல்வது? ஒன்றைச் செய்ய முற்படும் போது அதில் உள்ள சிரமங்களையும் செலவையும் பார்க்காமல் பலன்களை எண்ணிப் பாருங்கள். கடந்த காலங்களில் நாம் கண்ட வெற்றிக்கு அவை எப்படிக் கை கொடுத்தன என்பதை நினைத்துப் பாருங்கள். நம்முடைய தனித் தன்மைகளைப் பட்டியலிட்டுப் பாருங்கள். நமக்கு நன்மை தரும் என்றால் எந்த விஷயத்தையும் எத்தனை சிரமமானாலும் செய்து விடுவோம். எப்படி அது சாத்தியமானது? நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கைதான் நம்மை உந்தித் தள்ளும் சக்தி
5.கொடுங்கள், பெறுவீர்கள்:
முந்தைய பத்தியைப் படித்த போது ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றல்லவா சொல்லியிருக்கிறார்கள் என்ற கேள்வி உங்கள் மன விளிம்பில் வந்து எட்டிப் பார்த்தது எனக்குத் தெரியும். ஆசைப்படுவது மட்டும் துன்பத்திற்குக் காரணம் அல்ல. ஆசை மட்டுமே படுவதுதான் துன்பத்திற்குக் காரணம். ஆசைப்பட்டால் அதை அடைவதற்கானத் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். திட்டம் என்றால் எனக்கு என்னென்ன வேண்டும் என்ற டைரிக் குறிப்பல்ல. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். ஆம் தன்னை மட்டுமே முன்னிறுத்தி எண்ணுவது ஆசை. தன்னையும் தாண்டிச் சூழலையும், துணைகளையும், மற்றவர்களையும் கருத்தில் கொண்டு எண்ணுவதுதான் திட்டம். தன் மீது நம்பிக்கை இருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளுவதில் நம்பிக்கை வைப்பார்கள். “ஐயோ அது அடுத்தவனுக்குத் தெரிந்தால் நம்மைக் கவுத்துருவான்” என்று நினைப்பவர்கள் ஆசை மட்டும்பட்டு அதன் விலையாக துன்பமும் படுவார்கள்
6.நேர்படப் பேசு:
தன்னம்பிக்கையின்மையின் இன்னும் சில அடையாளங்கள்தான் ஏளனம், எகத்தாளம், கிசுகிசு.தன் மீதான நம்பிக்கையை இழந்து எதிர்மறையான சிந்தனைகளை உள்ளத்தில் ஏற்றிக் கொண்டவர்களின் ஒரு வெளிப்பாடு புறம் பேசுதல், கோள் மூட்டுதல், எதற்கெடுத்தாலும் அடுத்தவர் மீது பழி போடுதல். தன்னம்பிக்கை கொண்டவர்கள் எதையும் நேருக்கு நேர் கேட்பார்கள். அதன் விளைவுகளைச் சந்திக்கும் துணிவும் கொண்டிருப்பார்கள். மாட்சியில் பெரியோர் எனில் வியத்தலும் இலமே, சிறியோர் எனில் இகழ்தல் அதனினும் இலமே என்பவை வெறும் இலக்கிய வரிகள் அல்ல. வாழ்வின் சூத்திரம்.
வெற்றியினுடைய விலாசத்தின் முதல் வரிதான் தன்னம்பிக்கை எனப் பலர் சொல்கிறார்கள். ஓரளவு உண்மையும்தான். ஆனால் வெற்றி என்பது சூழலையும் நேரத்தையும் பொறுத்து மாறக்கூடியது. தன்னம்பிக்கையோ என்றென்றும் நெஞ்சில் நின்று நிலைத்த அக்னிக் குஞ்சு.அதன் மூலம் வெற்றி என்ற விளக்கையும் ஏற்றலாம். தோல்வியைத் தடுக்கும் கேடயமும் தயாரிக்கலாம்.
மனம் எனும் வனத்தில் ஒளிரட்டும் அந்த அந்த அக்னிக் குஞ்சு. ஏனெனில் அது மட்டும் அணைந்து விட்டால் அதன் பின் நாம் வெறும் சாம்பல்.