ஆனந்த பவனத்தில் ஓர் ஆரண்யவாசம்
அ |
ப்பாவிடமிருந்து வந்த கடிதத்தைப் பிரித்தார் நேரு.
”உனக்குப் பெண் பார்த்து பேசி முடித்திருக்கிறோம். அழகான ஆரோக்கியமான சின்னப் பெண். பெயர் கமலா. 12 வயது ஆகிறது. நீ சம்மதம் சொன்னால் தேதி நிச்சயதார்த்தத்திற்குத் தேதி குறிக்கலாம்”
ஆனால் நேரு உடனே சம்மதம் சொல்லிவிடவில்லை. அப்பாவின் கடிதத்தைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் கோபமாக வந்தது.16 வயதில், 1905ல் அவர் இங்கிலாந்திற்குப் படிக்க அனுப்பப்பட்டிருந்தார். அங்கு ஏழாண்டுப் படிப்பு. படிப்பின் முடிய இருந்த நேரம் அப்பாவிடமிருந்து இந்தக் கடிதம்.
இங்கிலாந்தின் ஏழாண்டு வாசம் அவரை நிறைய மாற்றியிருந்தது. அங்கு ஆணும் பெண்ணும் பழகிக் காதலித்து மணந்து கொள்வது அவருக்குப் பிடித்திருந்தது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன் வயதொத்த நண்பர்களோடு பேசி அரட்டையடித்த விஷயங்களில் காதலும் செக்ஸும் ஒன்று. ஆனால் “அது எல்லாம் தியரிட்டிகல் அறிவுதான். அனுபவம் ஏதும் இல்லை” என சுயசரிதையில் எழுதுகிறார் நேரு.
மழுப்பலாக அப்பாவிற்கு பதில் எழுதினார் நேரு. “ முன்பின் பார்த்துப் பழகியிராத ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது என்ற எண்ணம் எனக்கு உவப்பாக இல்லை. ஆனால் அதே நேரம் நீங்கள் பார்த்து வைத்திருக்கிற பெண்ணை எனக்கு நிச்சயம் செய்வதுதான் உங்கள் விருப்பம் என்றால் எனக்கு ஆட்சேபம் இல்லை”
அப்பாவிற்கு அப்படி எழுதினாரே தவிர அம்மாவிடம் பொரிந்து தள்ளிவிட்டார். ”எப்படிம்மா முன்னப் பின்னத் தெரியாத பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது? நீஙக பார்த்து வைத்திருக்கும் பெண் நல்ல பெண்ணாகவே இருக்கலாம். ஆனால் எனக்கு என்னவோ பயமா இருக்கு. அது எப்படி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப் பேசி பழகி மனதைப் புரிந்து கொள்ளாம? இது ரொமப அநியாயம் அம்மா. கல்யாணம் பண்ணி வெறுமனே பிள்ளை குட்டி பெறுவதான் வாழ்க்கையா?”
அம்மா ஸ்வரூப்ராணி அப்பா மோதிலாலிடம் என்ன சொன்னாரோ தெரியவில்லை. நேரு இந்தியா திரும்பிய உடனே திருமணம் நடக்கவில்லை. கமலாவிற்கும் சின்ன வயது என்பதால் பெண் வீட்டிலும் சில காலம் காத்திருக்க இசைந்தார்கள். நேரு இந்தியா திரும்பி நான்காண்டுகள் கழித்து, 1916ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி தில்லியில் கன கிராண்டாக நடந்தது.
அலகாபாத்திலிருந்து தனியாக ஒரு ஸ்பெஷல் ரயிலுக்கு ஏற்பாடு செய்து 300 பேரை அழைத்துக் கொண்டு தில்லி போனார் மோதிலால். பெரிய துணிப்பந்தல் போட்டு, பூவை அள்ளிச் சொரிந்து (தில்லியில் அப்போது வசந்த காலம்) அமர்க்களம் பண்ணிவிட்டார்கள் பெண் வீட்டுக்காரர்கள்.
க |
ல்யாணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வந்ததும் ஏதோ வேறு கிரகத்திற்கு வந்துவிட்டது போல் இருந்தது கமலாவிற்கு. கமலாவின் அப்பா ஒரு வியாபாரி. ஆனால் மோதிலால் அளவிற்கு பணக்காரர்கள் இல்லை வீடு சம்பிரதாயமான இந்துக் குடும்ப வீடு. பூஜை புனஸ்காரம் என வளர்ந்தவர் கமலா. அதுவும் வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் கட்டுப்பெட்டியாக வளர்த்திருந்தார்கள்.
ஆனால் அவர் புகுந்த வீடான ஆனந்த பவனம் 40 அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மாளிகை. அந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் இங்கிலாந்தில் வாழும் பிரபுக்களின் மாளிகை போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முன்புறம் ஒரு பூந்தோட்டம். ஒரு டென்னீஸ் கோர்ட் , பின்னால் பழத் தோட்டம், குதிரை ஓட்டிப் பழகுவதற்குத் தனியே ஒரு தடம். வாசலில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார். அதை ஓட்டுவதற்கு ஒரு வெள்ளைக்கார டிரைவர்.
முன்னறையில் ஒரு பியானோ. கன்றுக்குட்டியுன் தோலில் பைண்டிங் செய்யப்பட்ட தடி தடி புத்தகங்கள் கொண்ட ஒரு நூலகம். பள பளவென்று மெருகு ஏற்றப்பட்ட டைனிங் டேபிள். அதன் மீது இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீங்கான் தட்டுக்கள். கண்ணாடிப் பளிங்கில் –கிரிஸ்டல்- செய்யப்பட்ட குவளைகள். வெள்ளி முள் கரண்டிகள். வீட்டிற்குள்ளேயே ஒரு நீச்சல் குளமும் இருந்தது. அலகாபாத்திலேயே மின்சாரம் இருந்த ஒரே வீடு அதுதான்
ஆனந்த பவனத்தின் ஒவ்வொரு அங்குலமும் இங்கிலாந்தில் வாழும் பிரபுக்களின் மாளிகை போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது மட்டுமல்ல. அதில் வாழ்ந்தவரும் ஒரு பிரபு போல்தான் வாழ்ந்தார். அவர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூட்தான் அணிவார். ஸ்காட்ச் விஸ்கிதான் அருந்துவார். வெள்ளைக்காரர்களைப் போலத்தான் உணவு உண்பார். (மாமிசம் உட்பட) அதைச் சமைக்க வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சமையல்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். அவர் பிறப்பால் பிராமணர். ஆனால் பூஜை புனஸ்காரம் எதுவும் கிடையாது. அவர் சிந்தனை, பழக்கவழக்கம், சுபாவம், நம்பிக்கைகள் எல்லாம் ஆங்கிலேயர்களுடையதைப் போலவே இருந்தது
அவர் பெயர் மோதிலால் நேரு. ஜவஹர்லால் நேருவின் அப்பா. அவர் மட்டுமல்ல வீட்டில் இருந்த மற்ற எல்லோரையும் ‘வெள்ளைக்காரர்களாக’ மாற்றியிருந்தார். அவரது குழந்தைகள் எல்லோருக்கும் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க அயர்லாந்திலிருந்து ஆசிரியர் வரவழைக்கப்பட்டு ஆனந்த பவனத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார். பெண் குழந்தைகளை வளர்க்க ஆங்கிலேயப் பெண்ணொருவர் அமர்த்தப்பட்டிருந்தார். அந்தப் பெண்மணி குழந்தைகளின் பெயரை எல்லாம் ஆங்கிலப் பெயர்களைப் போல மாற்றி அழைத்தார். ஜவஹர்லால், ஜோ ஆனார். விஜயலட்சுமி நான் ஆனார். கிருஷ்ணா பெட்டி ஆனார். மோதிலால் அதை ஆட்சேபிக்கவில்லை. பெண் குழந்தைகள் மற்றப் பெண்களைப் போல சேலை உடுத்தாமல் ஸ்கர்ட் அணிந்தார்கள். அதிலும் அவருக்கு ஆட்சேபம் இல்லை. அவருக்கு சாப்பாட்டு மேசையில் தன்னோடு உட்கார்ந்து சாப்பிடும் போது குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும். அது முக்கியம்.
கமலாவிற்கு ளுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்கள் பேசிக் கொள்வதெல்லாம் இந்தியில்தான். “ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ இந்தியும் உருதும் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்” என்று ஆர்டர் போட்டுவிட்டார் மோதிலால் அதற்கு டியூஷனுக்கும் ஏற்பாடு செய்துவிட்டார்.
கமலாவிற்கு இன்னொரு டியூஷனுக்கும் ஏற்பாடாயிற்று. அது டேபிள் மானர்ஸ் எனப்படும் சாப்பாட்டு மேஜையில் எப்படி ‘நாகரீகமாக’ நடந்து கொள்வது என்ற பயிற்சி.
பேசக் கற்கும் போது தப்புத் தப்பாக இங்லீஷ் பேசுவதையும், எந்தக் கையில் எந்தக் கரண்டி எந்தக் கையில் கத்தி (பொதுவாக மேசையில் 9 வகையான ஸ்பூன்களும், கத்திகளும் இருக்கும். சூப் சாப்பிடுவது சற்றே அகலமான ஸ்பூனில், சாப்பாட்டின் இறுதியில் சாப்பிடும் இனிப்பிற்கான ஸ்பூன் சின்னதாக இருக்கும், தேநீர் கலக்க வேறொன்று இப்படி) என்று தெரியாமல் முழிக்கும் போது நேருவின் சகோதரிகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். கிண்டலடிப்பார்கள். “ சுத்தப் பட்டிக்காடு!” என முதுகுக்குப் பின் கேலி பேசுவார்கள்.
நேருவிற்குக் கூட ஏமாற்றம்தான். அவர் கற்பனை செய்து வைத்திருந்த மனைவி இப்படி இருக்கவில்லை. தன் மனைவி தனக்கு சமமாக விவாதிக்கிறவளாக, உலகம் அறிந்தவளாக, ஆண் பெண் சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற கனவு அவருக்கு. ஆனால் கமலாவோ ‘அவர் படிப்பென்ன, அனுபவம் என்ன, அவருக்குத் தெரியாததா நமக்குத் தெரிந்துவிடப் போகிறது’ என்று நினைக்கும் டிபிகல் இந்திய மனைவி. கணவனை எதிர்த்துப் பேசுவது மரியாதைக் குறைவு என்று சிறிய வயதிலிருந்து சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட பெண்
கல்யாணமாகி இருவரும் தேனிலவிற்கு காஷ்மீர் போனார்கள். இருவருக்குமே காஷ்மீர்தான் பூர்வீக பூமி. அதனால் கமலாவிற்கு ரொம்ப சந்தோஷம். ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்றார். நேரு ஒரு உறவினரைக் கூட அனுப்பி வைத்தார். அவர் போகவில்லை ஓட்டல் அறையிலேயே தங்கிவிட்டார். அந்த அளவிற்கு விரிசல்.
மோதிலாலுக்கு ஆங்கிலம் தெரியாத தன் மருமகள் ஒரு பூஜ்யம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. கடைசி வரைக்கும் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. மாமனாரின் அலட்சியம், , மாமியாரின் சந்தேகம், கணவரின் புறக்கணிப்பு, நாத்தனார்களின் கேலி என எல்லாத் திசைகளிலும் இணக்கமற்ற சூழ்நிலை.
16 வயது கமலா இடிந்து போனார். அந்த பிரம்மாண்டமான மாளிகையில் அறைக் கதவைத் சாத்திக் கொண்டு நேரம் தனிமையிலேயே கழிக்கலானார். மன அழுத்தம், உடல் நலத்தில் காட்டிய அலட்சியம் எல்லாம் அவரைச் சீக்கிரமே படுக்கையில் தள்ளின.
க |
மலாவைக் கல்யாணம் செய்து கொண்ட போது நேரு அரசியலில் தீவிரமாக இறங்கியிருக்கவில்லை. ஆனால் அரசியல் ஆர்வம் இருந்தது.1916ம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு, இந்திரா பிறப்பதற்கு சற்று முன்னால், லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காந்தியைச் சந்திக்கிறார். அந்த முதல் சந்திப்பிலேயே காந்தி அவரைப் பெரிதும் கவர்ந்துவிட்டார்.
மோதிலாலுக்கு வெளிநாட்டில் போய் படித்துவிட்டு வந்து வெற்றிகரமாக வக்கீல் தொழில் செய்ய வேண்டிய தன் மகன் இப்படி அரசியல் பக்கம் ஈர்க்கப்படுகிறானே என்ற கவலை எழுந்தது. காந்தியை ஆனந்த பவனத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 1919ல் அங்கு வந்த அந்த “அரை நிர்வாணப் பக்கிரி”யை வீட்டிலிருந்த பெண்கள் யாருக்கும் பிடிக்கவில்லை, கமலாவைத் தவிர. காந்தி அந்த வீட்டில் “வேலைக்காரர்களைப் போல” தரையில் உட்கார்ந்து கையால் சைவச் சாப்பாடுதான் சாப்பிடுவேன் என அடம் பிடித்ததை அவர்களால் சகிக்க முடியவில்லை. ஆனால் என்ன செய்ய? விருந்தினர். அவரோடு சேர்ந்து சாப்பிடுமாறு கமலா கேட்டுக் கொண்டார். கமலாவிற்குத் காந்தி மீது தன் தந்தை மாதிரி ஓர் வாஞ்சை ஏற்பட்டுவிட்டது.
கமலா உடல்நலம் குன்றியபோதெல்லாம் காந்தி அவ்வப்போது கடிதம் மூலம் மருத்துவ ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார். வைத்தியம் பத்தியம் எல்லாம் சொல்லிக் கடிதம் வரும். ஸ்வருப்ராணிக்கு பயங்கர எரிச்சல். என்ன இந்த ஆள் அரசியல் குடும்பம் எல்லாவற்றிலும் யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறானே என்று. ஆனால் காந்தி ஆனந்தபவனத்தைத் தலைகீழாக மாற்றிவிட்டார். ஆனந்தபவனத்தின் பெயர் சுயராஜ்ய பவனம் என மாறியது. மாறியது பெயர் மட்டுமல்ல, மோதிலாலும்தான் .வெளிநாட்டு சூட்களை உதறிவிட்டு மோதிலால் கதர் அணிய ஆரம்பித்து விட்டார்.
சோ |
ர்ந்து கிடந்த கமலாவைத் துள்ளி எழச் செய்தது காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் அதைத் தொடர்ந்து வந்த ஒத்துழையாமை இயக்கமும்தான். பெண்கள் அரசியல் நடவடிக்கைகளில் பெருமளவில் இறங்கியது அந்த நேரத்தில்தான். அதற்கு முன் அனிபெசண்ட், சரோஜினி நாயுடுவெல்லாம் அரசியலில் இருந்தார்கள்தான். ஆனால் அடுக்களையில் இருந்த பெண்களை அரசியலுக்கு இழுத்து வந்தது அந்த 1930ல்தான். “ஒரு பேரலையைப் போல் பெண்கள் அரசியலில் குதித்தார்கள். ஆங்கிலேய அரசு மட்டுமல்ல, அந்தப் பெண்களின் கணவர்கள் கூட ஆச்சரியப்பட்டுப் போனார்கள்” என்று எழுதுகிறார் நேரு.
அப்படி ஆச்சரியப்பட்டவர்களில் ஒருவர் நேரு. கமலா தன் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் அன்னியத் துணிகள் விற்கும் கடைகள், சாராயக் கடைகள் முன் மறியலில் இறங்கினார். அப்படி மறியலில் ஈடுபட்டபோது ஒரு முறை மயக்கம் போட்டும் விழுந்தார்.
நேருவிற்கு பரம சந்தோஷம். “ கணவனின் நிழலில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணாக இல்லாமல், அவனது சட்டையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் ஒருத்தியாக இல்லாமல், தானே சுயமாக நாட்டு விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற தாகம் அவளுக்குள் இருந்திருக்கிறது. அது இப்போதுதான் எனக்குப் புரிந்தது என்று எழுதுகிறார் நேரு.
திருமணம் ஆகி பதினான்கு ஆண்டுகளுக்குப் பின் அவர்களிடையே நேசமும் புரிந்து கொள்ளலும் தோன்றியது
1974. இந்திராவின் அரசுக்கெதிராகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார் ஜெயபிரகாஷ் நாராயணன். அது இந்திராவிற்குப் பெரிய தலைவலியாக இருந்தது. இரண்டு பேரும் சந்தித்துப் பேசினால் சரியாகிவிடும் என்று நினைத்த சிலர் அதற்கு ஏற்பாடு செய்தார்கள். அவர்கள் அப்படி நினைத்ததில் ஆச்சரியமில்லை. இந்திராவின் அம்மா கமலாவும், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் மனைவி பிரபாதேவியும் நெருங்கிய தோழிகள். காந்தியின் ஆசிரமத்தில் வளர்ந்தவர் பிரபா.
இந்திராவை சந்தித்த ஜேபி ஒரு பிளாஸ்டிக் போல்டரை எடுத்து நீட்டினார். உள்ளே பழுப்பாக பல காகிதங்கள் இருந்தன. மெல்ல அவற்றை வெளியே எடுத்துப் பார்த்தார் இந்திரா. அவை 53 ஆண்டுகளுக்கு முன் கமலா பிரபாவிற்கு எழுதிய கடிதங்கள் அவற்றைப் படிக்கப் படிக்க கண்ணோரத்தில் நீர் தளும்பியது. காரணம்: அவற்றில்-
ஆனந்தபவனத்தில் தான் சந்தித்த அவமானங்களைத் தன் தோழியிடம் விவரித்திருந்தார் கமலா