வரும் செப்டம்பர் 15க்கு:ள் விடுபட்ட ஊராட்சிகளின் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் ஆணையிட்டுள்ளது.. தமிழக ஊராட்சிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துக்களில் பாதி பெண்கள் தலைமையில் இயங்க வாய்ப்பளிக்கபட்டிருகிறது
பெண்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. அதைப் பலர் அவர்கள் தங்களது கணவன்மார்கள் மறைமுக ஆட்சி நடத்த இடம் கொடுத்து விடுகிறார்கள் என்று பரவலான குற்றச்சாட்டு உண்டு. அது உண்மையாகக் கூட இருக்கலாம். அப்படி இருந்தால் அந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஏன் என்று கேட்கிறீர்களா? இரண்டு காரணங்கள். ஒன்று பெண்கள் முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்களும் ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. அதை நான் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்
பஞ்சாயத்துக்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கரங்களை வலுப்படுத்தும் ‘ஹங்கர் பிராஜெக்ட்’ என்ற ஒரு சர்வதேசத் தன்னார்வ அமைப்பில் சிலகாலம் நான் முக்கியப் பொறுப்பில் இருந்திருக்கிறேன். அது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட அமைப்பு. அப்போது பணி நிமித்தமாக இந்தியா முழுக்கப் பல கிராமங்களுக்குச் சென்று பார்த்திருக்கிறேன்.
பெரும்பாலான ஆண் தலைவர்களின் ஆர்வம் சமூகக் கூடங்கள் கட்டுவது, (அதில் தங்கள் பெயரைப் பொறித்துக் கொள்ளலாம்!) அங்கு தொலைக்காட்சிகள் நிறுவுவது, சாலைகள் போடுவது, சந்தைகள் அமைப்பது என்றிருந்தன. பெண் தலைவர்கள் குடிநீர்ப் பிரசினையைத் தீர்ப்பது, மதுவை விரட்டுவது, பள்ளிக் குழந்தைகளுக்குச் சீருடை கொடுப்பது, அவர்களை அதிக எண்ணிக்கையில் பள்ளிக்கு அனுப்புவது என்பதில் கவனம் செலுத்தினார்கள்.
இரண்டாவது காரணம்: பெண்களின் சில பிரத்தியேகப் பிரசினைகளை, அவர்களது உளவியலைப் பெண்கள் புரிந்து கொள்கிற அளவிற்கு ஆண்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஓர் உண்மைச் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
அரசியும் ஜான்சியும் நெருங்கிய சினேகிதிகள். ஒரே வயது. ஒரே வருடத்தில் பிறந்தவர்கள் மட்டுமல்ல, ஒரே மாதத்தில் பிறந்தவர்களும் கூட. தேதிதான் வேறு வேறு.ஒரே பள்ளிக்கூடத்திற்குப் போனார்கள். அதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் அந்த கிராமத்தில் இருந்ததே ஒரே ஒரு பள்ளிதான். ஒரே வகுப்பில் படித்தார்கள். அதிலும் ஆச்சரியமில்லை. அந்தப் பள்ளியில் ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவுதான். ஏ செக் ஷன் பி செக் ஷன் என்றெல்லாம் கிடையாது. இருவரும் ஒருநாள் முன் பின்னாக வயதுக்கு வந்தார்கள். இருவருக்கும் ஓராண்டு வித்தியாசத்தில் திருமணம் நடந்தது. ஜான்சிதான் முதலில் கருவுற்றார்.
மருத்துவர்கள் குறித்திருந்த நாளுக்குச் சில நாள்கள் முன்னதாகவே ஜான்சிக்கு பிரசவ வலி எடுத்தது.இரட்டை மாட்டு வண்டியில் அவரை அருகிலிருந்த நகரிலுள்ள பிரசவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். அரசியும் தன் உயிர்த் தோழியுடன் வண்டியில் ஏறிக் கொண்டார். போகிற வழியில் ஜான்சிக்கு ஜன்னி கண்டது. அரசி பயந்து போனார். நாளை நாம் கருவுற்றால் நமக்கும் இப்படித்தானே நடக்கும் என்ற கவலை அவரைப் பற்றிக் கொண்டது. ஒரே ஊரில் பிறந்து, ஒரே பள்ளியில் படித்து ஒன்றாகவே வளர்ந்தவர்களுக்கு இப்படி ஒரு பயம் ஏற்படுவது இயற்கைதானே?
அன்று அரசி முடிவு செய்தார். தன் கிராமத்திற்கு எப்படியாவது ஒரு மருத்துவமனை கொண்டு வரவேண்டுமென்று. அடுத்து வந்த பஞ்சாயத்துத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்று அதை நிறைவேற்றவும் செய்தார். ஆனால் அதை நிறைவேற்ற அவர் எதிர்கொண்ட சிரமங்கள் ஏராளம். சவால்கள் அனந்தம். அதற்கான அலைக்கழிப்புக்கள் அதிகம். ஆனாலும் சளைக்காமல் போராடி வென்றார். அவரை அழைத்து வாழ்த்துச் சொன்னேன். அப்போது அவர் சொன்னார்: இதை நான் செய்திருக்காவிட்டால் அப்படியே கிடந்திருக்கும், சார். பிரசவம் பற்றிய பெண்களின் பயம், பதற்றம், வலி அதன் பின் கிடைக்கும் மகிழ்ச்சி இதையெல்லாம் ஆண்களால் புரிந்து கொள்ளவே முடியாது சார்.” என்று சொல்லி சிரித்தார்.
வந்திருக்கும் வாய்ப்பைப் பெண்கள்-குறிப்பாக இளம் பெண்கள்- நழுவ விட்டுவிடக் கூடாது. ஊருக்கு முன் தங்களை நிருபித்துக் காட்டவும், ஏன் தங்களைத் தங்களுக்கே நிரூபித்துக் கொள்ளவும் இது ஒரு நல்ல தருணம்.
**
எதிரே வந்த அதிர்ச்சி!
தி.ஜானகிராமன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, இசையில் பயிற்சியும் ஞானமும் கொண்டவர்.இளம் வயதில் தியாக பிரம்மத்தின் சீடர் பரம்பரையில் வந்தவரிடம் இசை பயின்றவர். வேலை நிமித்தம் சென்னைக்குக் குடி பெயர்ந்த பின்னரும் பத்தமடை சுந்தரமய்யரிடம் பாட்டுக் கற்றுக் கொண்டிருந்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை ஜானகிராமனின் மகள் உமாசங்கரி அவரது “மெச்சியுனை” என்ற நூலில் விவரிக்கிறார்: ”வாரத்தில் ஒன்றிரண்டு முறை அவர் (பத்தமடை சுந்தரம்) வீட்டிற்கு வந்து கற்றுக் கொடுப்பார். அவர் ஒருவாரமாக வரவில்லையே என்று அவரை வீட்டிற்குப் போய் பார்த்து விட்டு வரலாம் என்று நினைத்து சைக்கிளில் போன போது வழியில் அவருடைய இறந்த உடலை சுடுகாட்டுக்குத் தூக்கிக் கொண்டு போகும் காட்சியைப் பார்க்க நேர்ந்தது.அப்பா திடுக்கிட்டுப் போய் இறங்கி விசாரித்ததில் அவர் உடல் நிலை சரியில்லாமல் ஒரு வாரமாக இருந்தார்;அன்று காலை இறந்து விட்டார் என்று தெரியவந்தது.அப்பா அப்படியே ஆடிப் போய்விட்டார். அவர் மகனை எனக்குச் செய்தி சொல்லாமல் இருந்து விட்டீர்களே, நான் நல்ல டாக்டரிடம் அழைத்துப் போய் வைத்தியம் செய்திருப்பேனே என்று சத்தம் போட்டுக் கடிந்து கொண்டு அப்படியே வீட்டிற்குத் திரும்பி வந்து ஆடிப்போய் உட்கார்ந்து விட்டார். அந்தக் காட்சி எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.இனிமேல் நான் பாடவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவ்வாறே அதன் பிறகு தம்பூராவை எடுத்துக் வைத்துக் கொண்டு கிரமமாக உட்கார்ந்து பாடுவதை நிறுத்தி விட்டார்”
*
இறப்பதும் இருப்பதும்
கொரானா காரணமாக என் இளைய நண்பர்கள் சிலரை இழந்தேன். அப்போது ஜெயகாந்தனின் கவிதை வரி ஒன்று மனதில் ஓடிக் கடந்தது. அது:
சாவு விபத்து என்பார்-நாம்
சாகமல் இருப்பதுவும் ஓர் விபத்தன்றோ!
*