ஏனென்று தெரியவில்லை, அதிகாலையிலேயே தூக்கம் கலைந்து விட்டது. அதற்கு என் ஜன்னலுக்கு வெளியேயிருந்து வந்த வயலின் ஒலியும் ஒரு காரணம். ஒலியா? இசை அல்லவா? இல்லை ஒலிதான். இன்னும் இசையாக அது கனியவில்லை. அதைக் கனிய வைக்கத்தான் அடுத்த வீட்டுச் சிறுமி முயன்று கொண்டிருக்கிறாள், அல்லது பயின்று கொண்டிருக்கிறாள்.
அந்த வயலின் என்னை மட்டுமல்ல என் சிந்தனைகளையும் எழுப்பிவிட்டது. என்றோ இணையத்தில் படித்த ஒரு கதை நெஞ்சில் புரண்டது.
” நான் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியை.கூடுதல் வருமானத்திற்காக ஓய்வு நேரங்களில் இசையும் சொல்லிக் கொடுத்து வந்தேன்.ஒரு நாள் ஜானி எனக்கு பியானோ கற்றுக் கொடுங்கள் என்று வந்தான். பியானோ வேண்டாம், வயலின் கற்றுக் கொள் என்று சொன்னேன்.”நான் பியானோ வாசிக்க வேண்டும் என்பது என் அம்மாவின் கனவு” என்று ஜானி பிடிவாதமாகச் சொன்னபோது என்னால் மறுக்க முடியவில்லை. ஜானிக்கு இசை கற்றுக் கொள்ளும் ஆசை இருந்த அளவிற்குத் திறமை இல்லை. நாதம், சந்தம், தொனி, இவற்றில் போதிய ஞானம் இல்லை. தினமும் சொதப்புவான். தினமும் வாங்கிக் கட்டிக் கொள்வான்.
ஒருநாள் திடீரென்று ஜானி வகுப்புக்கு வருவதை நிறுத்திவிட்டான்.நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அம்மாவின் நச்சரிப்புத் தாங்காமல் இசை கற்க வந்திருப்பான். இப்போது போரடித்துப் போய் வேண்டாமென்று ஒதுங்கியிருப்பான். தப்புத் தப்பாய் வாசித்து அவனும் எத்தனை நாளைக்குத்தான் என்னிடம் தினம் தினம் “பாட்டு”க் கேட்டுக் கொண்டிருப்பான்?
சில வாரங்களுக்குப் பின் நான் ஆண்டுதோறும் நடத்தும் மாணவர் இசை விழா வந்தது. அந்த மாலையில் என்னிடம் பயின்ற மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டதை சபையில் வாசித்துக் காட்டுவார்கள்.அது எனக்கும் என் இசைப்பள்ளிக்கும் ஒரு மறைமுகமான விளம்பரம். மாணவர் இசை விழா குறித்து சிறிய நோட்டீஸ் அடித்து ஊரெங்கும் விநியோகித்தேன்.
மறுநாள் ஜானியிடமிருந்து எனக்கு போன் வந்தது.தானும் அந்த மாணவர் இசைவிழாவில் கலந்து கொண்டு வாசிக்க விரும்புவதாகச் சொன்னான். எனக்கு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வந்தது. “இந்த விழா கற்றுக் கொண்டவர்களுக்காக, ஓடிப்போனவர்களுக்காக அல்ல” எனப் பொறிந்தேன். “ அம்மாவிற்குக் கொஞ்ச நாளாக உடம்பு முடியலை மிஸ்.அதனாலதான் வர முடியலை. நான் பியானோ வாசிக்க வேண்டும் என்பது என் அம்மாவின் ஆசை மிஸ். ப்ளீஸ், ப்ளீஸ்” என்று கெஞ்சினான். மனது இளகிய அந்த நிமிடத்தில் ”சரி, வா!” என்று சொல்லிவிட்டேன்.
அப்போது அப்படிச் சொல்லிவிட்டேனே தவிர, அவன் ஏதாவது தப்பும் தவறுமாய் அபஸ்வரம் வாசித்து, என் பெயரைக் கெடுத்துவிடக் கூடாதே என்று எனக்குக் கவலை ஏற்பட்டது. விழாவில் கடைசிக்கு முந்திய நிகழ்ச்சியாக அதை அமைத்தேன். அவன் ஏதாவது தப்பும் தவறுமாக வாசித்தால்கூட கடைசியில் ஒரு பிரமாதமான கிளைமாக்ஸை அமைத்து அதை மறக்கடிக்கச் செய்துவிடலாம் என்று திட்டம்.
இசைவிழா அன்று அவனது நிகழ்ச்சிக்கு வந்தான் ஜானி. கசங்கிய உடை; கலைந்த தலை. “ராஸ்கல்! வாசிப்பில்தான் சொதப்பப் போகிறான். சட்டையாவது ஒழுங்காகப் போட்டுக் கொண்டு வரக் கூடாது, மானத்தை வாங்குகிறானே!” என எனக்கு உள்ளூறக் கோபம் பொங்கியது.
ஜானி வாசிக்கத் துவங்கும் வரைதான் அந்த எரிச்சல். அவன் வாசிக்கத் துவங்கியதும் அது திகைப்பாக மாறிவிட்டது. சிக்கலான ஒரு அயிட்டத்தை எடுத்துக் கொண்டு வாசிக்க ஆரம்பித்தான். ”அடப்பாவி! இதைப் போய் எடுத்துக் கொண்டிருக்கிறானே!” என்று நினைத்துக் கொண்டிருந்த போது அதை அமர்க்களமாக வாசித்தான். இடையிடையே கற்பனை கலந்து அதை மெருகேற்றினான். சிக்கலான பகுதிகளை அதிசுலபமாக வாசித்தான். இனிமை தளும்பத் தளும்ப வாசித்தான். அவன் வாசித்து முடித்ததும் அவையோர் எழுந்து நின்று அரங்கம் அதிரும்படி கரவொலி எழுப்பினார்கள்.
எனக்குப் பரவசம் தாங்க முடியவில்லை. மேடை ஓரத்திலிருந்து ஓடிச் சென்று அவனைக் கட்டி அணைத்துக் கொண்டேன். :கிரேட்! நீ இவ்வளவு பிரமாதமாக வாசிப்பாய் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ஜானி! எப்படிடா உன்னால் முடிந்தது?” என்றேன்
“அம்மாவிற்கு உடம்பு முடியலைனு சொன்னேனே, ஞாபகம் இருக்கா மிஸ்?. அவங்க இன்னிக்குக் காலையில இறந்துட்டாங்க. கான்சர். அவங்க ஒரு பிறவிச் செவிடு. இறந்து போய், மேலிருந்து இப்போதுதான் முதல் முறையா நான் வாசிக்கிறதைக் கேட்கப் போறாங்க. அவங்களுக்காக ஸ்பெஷலா வாசிச்சேன்” என்றான்.
மேடையிலிருந்த மைக் ஆஃப் செய்யப்படாமல் இருந்ததால், நாங்கள் பேசிக் கொண்டது அரங்கம் முழுக்கக் கேட்டது இமையோரத்தில் ஈரம் கசியாத விழிகளே அன்று அரங்கத்தில் இல்லை.
இணையத்தில் ஒரு ஜெர்மானியர் எழுதியிருந்த அனுபவம் இது. நம்பிக்கைகள், இவைதான் மனிதர்களை உருவாக்குகின்றன. அம்மா சொர்க்கத்திலிருந்து நம் இசையைக் கேட்பாள் என்று ஜானி நம்பினான். அந்த நம்பிக்கை உதவாக்கரை என்று கருதப்பட்ட அவனை ஒரு இசைக் கலைஞனாக்கியது
வாழ்க்கை பல நேரங்களில் நம் நம்பிகைகளை அசைத்துப் பார்க்கிறது. எனக்கு எதிலாவது சந்தேகம் ஏற்பட்டால் நான் அணுகிற நபர் பாரதியார். அவரை நினைத்த மாத்திரத்தில் என் அவநம்பிக்கைகள் ஈரச் சுவர் போல இற்றுக் கீழே விழும்.
” வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை, குழப்பம், குழப்பம், தீராத குழப்பம்!” என்ற வாழ்க்கைச் சூழல்தான் பாரதிக்கு வாய்த்தது. ஆனால் ”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! என்ற வியப்பு அவரை வழி நடத்தியது. இளம் வயதில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்று ஆறுவருடக் கடுங்காவலுக்குப் பிறகு பாரதியாரைப் பார்க்க பாண்டிச்சேரி வந்தார் ஆர்யா. அவர் அமெரிக்கா சென்று கல்வி கற்கப் பாதிரிகள் உதவுவதாக வாக்களித்திருந்தனர். ஆனால் அவரிடம் சென்னைக்குத் திரும்பக் கூடக் காசில்லை. மனைவி செல்லம்மாளின் கம்மல்களை அடகு வைத்து அவரை அனுப்பி வைத்தார் பாரதி.
“நீலகண்டன் அன்றிரவு பத்து மணிக்கு எங்கள் வீட்டுக்கு வந்தார். என் தந்தையிடம் ஏதாவது பணமிருந்தால் கொடுக்கும்படி கேட்டார். வழக்கம் போல் என் தந்தையிடம் பனம் கிடையாது. நீலகண்டன் கண்ணீரும் கம்பலையுமாக, “ சுவாமி இனிமேல் தாங்கமுடியாது. யாராவது பணக்காரர் வீட்டுக்குப் போய் பயமுறுத்தியோ, திருடியோதான் வயிறு வளர்க்க வேண்டும். வேறு வழியில்லை. நான் சாப்பிட்டு மூன்று நாளாயிற்று. இனிப் பொறுக்க முடியாது” என்று கதறிய போது, “தம்பி நீலகண்டா! கவலைப்படாதே! பராசக்தி உனைக் காப்பாற்றுவாள்!” என்று சொல்லி பக்கத்து வீட்டில் ஐந்து ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தனுப்பினார்” என்று எழுதுகிறார் பாரதியின் மகள் சகுந்தலா ( நன்றி : பாரதி என் தந்தை)
எத்தனை மோசமான சூழ்நிலையிலும் மனிதன் நம்பிக்கை இழக்காமல் இருக்க முடியும் என்பதை பாரதியார் மறுபடி மறுபடி நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார். வாழ்வின் மீது நம்பிக்கை, சக மனிதர்கள் மீது நம்பிக்கை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இவையெல்லாம் இருந்தால் இறைவன் மீதும் நம்பிக்கை பிறக்கும் என்பது அவர் காட்டும் அனுபவம்
எதன் மீதும் நம்பிக்கை அற்றுப் போவது ஒன்றுதான் ஊனம். மற்றவையெல்லாம் குறைபாடுகளே அல்ல. உறுப்பை இழந்தாலும் உள்ளம் தளராது சாதித்துக் காட்டி நம்பிக்கை வெளிச்சத்தை மற்றவர் மனதில் ஏற்றி வைக்கும் மாற்றுத் திறனாளிக்களுக்கு வார்த்தைகளைத் தாண்டிய வணக்கங்கள்.
One thought on “அவநம்பிக்கை- அது ஒன்றே ஊனம்”
திரு. மாலன் அவர்களுக்கு
வணக்கங்கள்.
சிந்தனையைத் தூண்டும் சிறந்த பதிவு.