மாலையில் வெளியே போன கணவன் இருட்டியும் வீடு திரும்பவில்லை. மனைவியைக் கவலை அரிக்கத் தொடங்கியது. அக்கம் பக்கத்தில் விசாரிக்க ஆரம்பித்தாள். தெருவெல்லாம் தேடிக் கொண்டு போனாள். கடைசியாக அவன் ஏரிக்கரையில் அமர்ந்து நண்பர்களோடு மது அருந்திக் கொண்டிருந்ததாகத் தகவல் கிடைத்தது.. இரண்டொருவரை உதவிக்கு அழைத்துக் கொண்டு அங்கே ஓடினாள். கரையில் ஆளைக் காணவில்லை. தவறிப் போய்த் தண்ணீருக்குள் விழுந்திருப்பானோ என்று சந்தேகம் வந்த்து. இருட்டி விட்டிருந்ததால் ஏதும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஒரு ‘புத்திசாலி’ சொன்னர்: எனக்கு நீச்சல் தெரியும். ஒரு தீப்பந்த்த்தை கொளுத்திக் கொடுங்கள், அதை ஏந்திக் கொண்டு நான் நீரில் மூழ்கித் தேடிப்பார்க்கிறேன்”
இது வள்ளுவர் சொல்கிற கதை. எதற்காக இந்தக் கதை? . குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான் என்கிறார் அவர் ( திருக்குறள்:929)
அறிவுரையெல்லாம் சொல்லித் திருத்தும் நிலையில் தமிழ்நாடு இல்லை. மது விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டு போகிறது.கடந்த ஆண்டு டாஸ்மார்க் கடைகள் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானம் 18 ஆயிரம் கோடி ரூபாய். இந்த ஆண்டு 25 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
வரி வருவாய்க்கு நிகராக குடி வருவாய் உயர்ந்து கொண்டு போனாலும் அது ரத்தம் தோய்ந்த, கண்ணீரால் நனைந்த பணம். ஆம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதான் காரணமாக விபத்துக்கள் அதிகரிக்கின்றன. அந்த விபத்துக்களில் உயிரிழப்போர், ஊனமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாலை விபத்துக்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2008ல் 12,784. 2012ம் ஆண்டில் 15,422
இந்த அளவிற்கு மரணம் நேர்வதற்குக் காரணம், மதுப்பழக்கம் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை ஓரமாக அமைந்திருக்கும் மதுக்கடைகளில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதன் காரணமாக விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இதனை அடுத்து மதுக்கடைகளை நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் அமைக்குமாறு மாநில அரசுகளைக் கேட்டுக் அது.கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சினை குறித்து ஏற்கனவே அறிந்திருந்த தமிழக அரசு கடந்த ஆண்டு 200 நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை இடம் மாற்றியது. இப்போது மேலும் 300 கடைகளை இட மாற்றம் செய்ய முன்வந்திருக்கிறது. இந்த ஆண்டுக்குள் அனைத்துக்கடைகளும் மாற்றப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.
ஆனால் இடம் மாற்றம் மாத்திரம் போதாது என புதிய தலைமுறை கருதுகிறது. கடைகளை நிரந்திரமாக மூடுவதே சரியாக இருக்கும். நெடுஞ்சாலைக் கடைகளை மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை ஆண்டு தோறும் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட வேண்டும். மூன்றாண்டுகளுக்குள் முழுமையாக மூடப்பட வேண்டும் அதற்கான ஓர் திட்டத்தை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
சாலைவிபத்துக்கள் அதிகரிக்கக் காரணம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படாததும் ஆகும். குடியினால் விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டு போகின்றன. ஆனால் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதன் காரணமாக உரிம்ம் ரத்து செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பது விசித்திரமாக இருக்கிறது. 2008ம் ஆண்டு குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட உரிமங்கள் 1,356. ஆனால் 2011லிலோ அது வெறும் 275! குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் உயிரை மட்டுமல்ல, சாலையில் சென்று கொண்டிருக்கும் அப்பாவி மக்களது உயிரையும் ஆபத்திற்குள்ளாக்குகிறார்கள் என்பதை அரசு உணர வேண்டும்.
அறிவுரைகள் இனிப் பயன் தரா. கடுமையான நடவடிக்கைகள் தேவை