3
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இரண்டு நாள் முன்பு, இங்கே கல்லூரியில் ஒரு ‘ குட்டி ’ கலாட்டா. விஷயம் இப்போதைக்குச் சின்னதுதான். ஆனால் விரைவிலேயே பெரிதாக வளரக் கூடியது. வேறொன்றுமில்லை. மலைப்பாம்புக் குட்டி ஒன்று கல்லூரிக்குள் நுழைந்துவிட்டது. நுழைந்தது மட்டுமல்ல, இப்போது கல்லூரிக்குள் எங்கேயோ பதுங்கிக்கொண்டு இருக்கிறது.
எங்கள் ஜர்னலிசம் கல்லூரியில், இரண்டு வானொலி நிலையங்களும் ஒரு டி.வி. நிலையமும் இருக்கின்றன. டி.வி. நிலையத்தில் பணிபுரிய வந்த மாணவி ஒருவர் கைப்பையை மேஜைமீது வைத்துவிட்டு, வேறு வேலையாக ஒரு நிமிடம் – அதிகம் இல்லை ஜென்டில்மேன், ஒரே ஒரு நிமிடம் – பக்கத்து அறைக்குப் போனார். அந்த ஒரு நிமிடத்தில் அவரது கைப்பையில் இருந்த எட்டுமாத மலைப்பாம்புக் குட்டி பையைவிட்டு வெளியேறித் தப்பிவிட்டது.
“ இப்போதைக்கு அது குட்டிதான் என்றாலும், அது சாதாரணமாக எட்டு அல்லது ஒன்பது அடி நீளம் வளரக்கூடியது ” என்கிறார் பயோடெக்னாலஜி புரொபசர் டிம் கிராஸ். “ குளிருக்குப் பயந்து எங்கேயாவது பதுங்கிக் கொண்டிருக்கும். வெயில் காலத்தில் தன்னைப்போல வெளியில் வந்துவிடும்” என்கிறார் அவர்.
என்றாலும் அதைப் பிடிக்க-நம்ம பக்கத்தில் மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது என்று சொல்வார்களே அதைப்போல மலையைக் கெல்லி மலைப் பாம்பைப் பிடிக்க என்னவெல்லாமோ செய்து பார்த்து விட்டார்கள். அதற்கு மிகவும் பிடித்த எலியைக் கூடப் பொறியில் வைத்துப் பார்த்தாயிற்று.
வான்கோ (Vougogh) அதுதான் அதன் பெயர் – வெளியே தலைகாட்ட மாட்டேன் என்கிறார் (மகுடி வாசித்ததாகத் தெரியவில்லை. மகுடிக்கு மயங்குமோ, மலைப்பாம்பு ? )
“ பாம்பைக் கண்டு ஒன்றும் பயமில்லை ” என்கிறார் ஜர்னலிஸம் புரபசர் எட்வெட்சன் (Edwetson), ஆனால் இதை ஒரு சாக்காக வைத்து மாணவர்கள் கிளாசைக் கட் அடிப்பார்கள். அப்போது அவர்களை ஒன்றும் சொல்ல முடியாது” என்கிறார் அவர். நியாயமான கவலைதான்.
“ பிடித்துவிடலாம், அது இங்கேதான் எங்கேயாவது இரண்டாவது மாடியில் உலாத்திக் கொண்டிருக்கும்” என்கிறார் கல்லூரி டீன் லோவென்ஸ்டீன் (Lowensten). நிஜமாகச் சொல்கிறாரா, இல்லை கிண்டலடிக்கிறாரா என்று தெரியவில்லை. ஏனெனில், இரண்டாவது மாடி என்பது எங்கள் முதுகலை வகுப்புகள் – கிராஜுவேட் டிவிஷன் – இருக்கும் இடம். வகுப்பு இல்லாத நேரத்தில் இங்கே நாங்கள்தான் தனித்தனியாகவோ, கோஷ்டியாகவோ உலாத்திக் கொண்டிருப்போம். பழுத்த அனுபவசாலிகளான பேராசிரியர்களின் அறைகளும் இங்கேதான் இருக்கின்றன. மலைப்பாம்பு – என்பதை ஒரு குறியீடாகப் பயன்படுத்தி, யார் தலையிலோ குட்டுவைக்கிறார் டீன் என்று நினைக்க இடம் இருக்கிறது.
சரி, தும்பைவிட்டு பாம்பை ஸாரி வாலைப் பிடிப்பானேன் ? அதாவது, அந்த மாணவி பாம்பை ஏன் கல்லூரிக்குக் கொண்டு வந்தார் ?
அது – அது – அவருடைய செல்லப்பிராணி ! ( Pet )
( பிராணி என்று எழுதினால் சண்டைபோடப் பலர் சட்டையை உருட்டி விட்டுக்கொண்டு தயாராக இருக்கிறார்கள். இனம், பால் இவற்றின் அடிப்படையில் அமைந்த வார்த்தைகளை வாரித் தூரக் கொட்டிவிட்டு, அவற்றின் இடத்தில் புதிய சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு இயக்கமே வேலைசெய்து கொண்டிருக்கிறது – உதாரணத்திற்குச் சொல்வதென்றால், போஸ்ட்மேன் என்று எழுதினால் தப்பு, பால் பேதம் பாராட்டுகிறவர், Sexist – என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதற்குச் சரியான சொல், மெயில் கேரியர்ஸ். அதைப்போல செல்லப் பிராணி ( Pet ) என்று எழுதுவதும் கூடச் சரியில்லை, மனிதத் துணை ( Human companions ) என்றுதான் எழுதவேண்டும் என்று வாதிடுகிறவர்களும் இருக்கிறார்கள். (வாழ்க்கைத் துணை என்று எழுதினால் நம்மூரில் உதைக்க வருவார்கள்!)
மூன்றாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில், ஆடு, மாடு, பசு, கோழி, நாய், பூனை, புறா, கிளி இவையெல்லாம் வீட்டு விலங்குகள் என்று படித்திருக்கிறோம். அந்தப் பட்டியல் இங்கே செல்லுபடியாகாது. இன்னதுதான் வீட்டு விலங்கு, செல்லப் பிராணி, மனிதத் துணை என்றில்லை. இங்கே என்னுடைய அபார்ட்மெண்ட் கட்டடத்தில் ஒருவர் ஓணான் வளர்க்கிறார். தனியாகக் கூண்டு அமைத்து ( “ நானே என் கையால் சொந்தமாகத் தயார் செய்தது ” ) தெருவோரத்தில் இருந்து கற்களைச் சூழல் அமைத்துக் கொடுத்து வளர்க்கிறார். அதற்கு அவர் வைத்திருக்கும் பெயர் ஷெல்லி ! (பாவம், அந்தக் கவிஞன் ! )
இன்னொரு வீட்டில், ரே ஆஷ்டன் (Ray Ashton) என்றொரு பெண்மணி ஆமை வளர்க்கிறார். அவரது வீட்டின் கொல்லைப்புறத்தில் இரண்டு ஆமைகள் ‘ஓடி’ ப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும். ஒன்றின் வயது ஏழு. இன்னொன்றின் வயது மூன்று. “ சின்னவன்தான் ரொம்பப் பொல்லாதவன் ” என்கிறார் ஆஷ்டன் சிரித்துக் கொண்டே “ பெரியவனைப் போய் சீண்டிக் கொண்டே இருக்கும். தேமேனு இருக்கும் பெரியவனைப் போய் காலால் தட்டி வம்புக்கு இழுக்கும். இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும், ஆனால் காயப்படுத்தாது ” என்கிறார் ஏதோ குழந்தைகளைப் பற்றிச் சொல்வதைப் போல.
மோதிக் கொள்வதற்கென்றே, அதாவது போட்டி போடுவதற்கென்றே புறாக்களை வளர்ப்பவர்கள் பலபேர் இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் கடைசி சனிக்கிழமை அன்று பந்தயம் நடக்கும். 10 மைல் ரேஸ். அக்கம்பக்கத்தில் இருக்கும் பத்து ஊர்களில் இருந்து, புறாக்களின் சொந்தக்காரர்கள், புட்னம் என்ற இடத்தில் கூடுகிறார்கள். ஒவ்வொரு புறாவின் காலிலும் ஒரு எண். குஞ்சு பொரித்த உடனே இந்த எண் பதித்த வளையத்தைக் காலில் மாட்டிவிடுவார்கள். அது வளர்ந்து பெரிதான பிறகு அதைக் கழற்ற முடியாது. பந்தயத்தில் பறக்க விடும்முன், இன்னொரு காலில், சம எடையுள்ள இன்னொரு பட்டை எண் எதுவுமில்லாத நீலநிறப்பட்டை. இப்படி 2,400 புறாக்களை ஒரு வேனில் ஏற்றிக் (அடைத்து?) கொண்டு ஒரு திறந்தவெளிக்கு – அநேகமாக கல்லூரி மைதானத்திற்கு – வருவார்கள். சரியாக காலை எட்டு மணிக்கு, ஒரு விடுதலை விரும்பி, – யாராவது ஒரு உள்ளூர்ப் பிரமுகர் – கதவுகளைத் திறந்து விடுவார். 2,400 புறாக்களும் வானில் ஜிவ்வென்று எழுந்து பறப்பது, ஆகா ! கண் கொள்ளாத காட்சி !
இந்தப் பறவைகளே பறந்து தத்தம் வீட்டில் போய் இறங்கும். வீட்டில் இருக்கும் புறாவின் சொந்தக்காரர் வந்து இறங்கிய பறவையின் காலில் உள்ள எண் இடப்படாத நீல நிறப் பட்டையைப் பிரித்து எடுத்து இதற்கென்றே பிரத்யேக மாகத் தயாரிக்கப்பட்டுள்ள கடிகாரத்தின்கீழ் வைத்து, அதன் சாவியைத் திருகுவார். பட்டையில் நேரம் அச்சாகிவிடும் (எல்லாம் எல்க்ட்ரானிக் சமாசாரம்! )
எல்லாப் புறாச் சொந்தக்காரர்களும் ஓர் இடத்தில் கூடுவார்கள். நேரத்தை ஒப்பிடுவார்கள். முதலில் வந்த புறாவுக்குத்தான் பரிசு. பரிசு? ஒரு புறாவுக்கு இரண்டு டாலர் வீதம் புறாச் சொந்தக்காரர்கள் கொடுத்த 4,800 டாலர்கள் தான் பரிசு. அது தவிர புறாவிற்கு ஒரு சர்ட்டிபிகேட்டும் உண்டு.
பறக்கவிடப்படும் புறாக்கள் எல்லாம் பத்திரமாகத் திரும்பி வந்துவிடுமா? எனக்கும் அந்தச் சந்தேகம்தான். 20 வருஷங்களாக பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஜிம் ஸ்ப்ராட் (Jim Sprait) என்ற பெரியவரிடம் அதைக் கேட்டேன்.
“ வந்துவிடும் தம்பி ” என்றார்.
“ வராவிட்டால் என்ன செய்வீர்கள் ? ”
“ வந்துவிடும், வந்துவிடும். வராமல் எங்கே போகும் ? ” என்கிறார் நம்பிக்கையோடு.
திறந்து விடப்படும் புறாக்கள் திரும்பி வந்துவிடுகின்றன. பைக்குள் அடைத்து வைக்கப்பட்ட பாம்புக் குட்டி காணாமல் போய் விடுகிறது. போன மாதம் காணாமல் போனது மாணவியின் மலைப் பாம்புக் குட்டி என்றால், அதற்கு இரண்டு மாதத்திற்கு முன்பு, கெயின்ஸ்வில் சன் என்ற உள்ளூர் தினசரியில், ஒரு வரி விளம்பரம். இந்த முறை காணாமல் போனது. ஓநாய் ! “கறுப்பு இழையோடிய பழுப்பு நிறக் குட்டி ; பின்னங்காலில் விரல் ஒன்று அதிகம்” என்று அந்த ஓநாயைப் பற்றி, அந்த இத்துனூண்டு வரி விளம்பரத்தில் கவிதையே பாடியிருந்தார் அதன் சொந்தக்காரர்.
சரி, எல்லோராலும் கவிதை பாட முடியுமா ? கவலையே வேண்டாம். ஏழு டாலரை வீசி எறிந்தால், உங்கள் நாய் மீது கவிதை பாடி, அதை அச்சிட்டு தங்க பிரேம் போட்டுக் கொடுக்க கம்பெனிகள் காத்திருக்கின்றன (எல்லா ஊரிலும் கவிதை மலிவுதான் ! )
எங்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர் யூனியன் ( ஏதோ கொடி பிடிக்கும் யூனியன் என்று நினைத்துவிட வேண்டாம். அதற்கென்று மூன்று மாடிக் கட்டடம் உண்டு ) ஓய்வு நேரத்தில் கற்றுக் கொள்ள சில வகுப்புகள் நடத்துகிறது. அதில் ஒன்று “ நாயைப் பழக்குவது எப்படி ? ” பல்கலைக்கழக விதிகளின்படி வகுப்புகளுக்கு நாய்களைக் கூட்டிக் கொண்டு வரக்கூடாது. ஆனால் இந்த வகுப்புகளுக்குக் கண்டிப்பாக நாய்களோடுதான் ஆஜராக வேண்டும்.
“ நாயினும் இழிந்த பிறவி ” “ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” இந்தப் புலம்பல்களுக்கும். சாபங்களுக்கும் இங்கே அர்த்தமில்லை. “நாய் இல்லாத இல்லம் வெறும் வீடு” (குடும்பமா அது? என்ற தொனியில் படிக்கவும்) என்று முழங்கி உங்களை ஒரு நாயைத் தத்தெடுத்துக்கொள்ள அழைக்கும் விளம்பரங்கள் வாராவாரம் பத்திரிகையில் வெளிவருகின்றன.
மரத்தில் ஒரு பொந்து செய்து, அதை நாய் வீடு என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், கலிபோர்னியாவில் லார்கஸ்பர் (Larkspur) என்று ஊரில் ஒருவர் பத்தாயிரம் டாலர் செலவில், நாலு ரூம் கொண்ட ஒரு தனி வீடே கட்டியிருக்கிறார். ஒன்று டி.வி அறை. ஒன்று தொட்டியமைந்த குளியல் அறை. இன்னொன்று உடம்பு சரியில்லாமல் போனால், ‘இளைப்பாறும்’ அறை. இன்னொன்று ஆர்ட் காலரி. ‘ நாயகர் – ’ களின் விலை உயர்ந்த ஓவியங்கள் சுவரை அலங்கரிக்கின்றன. தரைக் கம்பளங்கள் இஸ்தான்புல்லில் இருந்து ஸ்பெஷலாகத் தருவிக்கப்பட்டவை.
நாய்க்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வராதா? புளோரிடாவில் ஃபோர்ட் லாடர்டேல் (Fort laderldale) என்று ஒரு கடற்கரைச் சிற்றூர் இருக்கிறது. அங்கே ஒரு தம்பதி, தங்களது பூனைக்குட்டிக்கு ஒன்றல்ல, இரண்டு குட்டி ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். எதற்கு இரண்டு? தம்பதிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் இருக்கிறது. சிவப்பு, வெள்ளைக்கு மாட்ச்சாக இருக்குமே என்றுதான் !
கொழுப்புத்தான் என்கிறாயா? கொழுத்த பன்றிகளை வளர்க்கக்கூட இங்கே ஃப்ரிட்ஜ் வசதி கொண்ட இடங்கள் இருக்கின்றன. “அவற்றின் கண் எதிரே ஃப்ரிட்ஜை திறந்து சாப்பாட்டை எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தோமானால் அப்புறம் ஃப்ரிட்ஜை பூட்டித்தான் வைக்க வேண்டும். இல்லை என்றால் நாம் இல்லாதபோது அவை அவற்றைத் திருடித் தின்றுவிடும்” என்கிறார் பன்றி வளர்ப்பு நிலையத்தில் உள்ள டேல் ரைபிள்.
சமையல் குறிப்புப் புத்தகத்தில் இருந்து அக்யூபங்சர் வரைக்கும், மனிதருக்குண்டான சகலமும். இந்த ‘மனிதத் துணை’ களுக்கும் உண்டு. சமாதி உள்பட. 450 டாலர கொடுத்தால் பாதிரி வந்து பைபிள் ஓதி, நல்லடக்கம் செய்து வைப்பார்.
“பெத்த அப்பா அம்மாவிற்குச் செய்வதைவிட இந்தப் பிராணிகளுக்கு அதிகம் செலவழித்து, நல்லபடியாகச் செய்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள்” என்கிறார் ஜுலி ஹர்லி (Julie Hurley). இவர் செல்லப் பிராணிகளுக்கான கல்லறைகளை நிர்வகித்து வருபவர். “வாரந்தோறும் வந்து கல்லறைகளுக்குப் பூப்போடுகிறார்கள். கிறிஸ்துமஸ் வந்தால் மரம் நட்டு விளக்கு அலங்காரம் செயகிறார்கள்” என்கிறார்.
“இப்படிச் செய்பவர்கள் எல்லோரும் பணக்கார்கள் அல்ல. மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலர் உண்டு. அவர்களுக்கு இது சிரமம்தான். இருந்தாலும் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பிராணிகள்மீது அப்படி ஒரு அன்பு” என்கிறார்.
உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்று பாரதியார் சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை மெய்ப்பிப்பவர்கள் அமெரிக்கர்கள்தான். ஆனால் அவர்கள் மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இங்கு உண்டோ? மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ என்பதைத்தான் மறந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.
–
அது வேறு கதை. அது அப்புறம்.
பி.கு காணாமல் போன மலைப்பாம்புக் குட்டி – வான்கோ – 19 நாட்களுக்குப் பிறகு கிடைத்துவிட்டது. வானொலி நிலையைத்தில் டிரான்ஸ்மீட்டருக்கு மேலே இருந்த ஒரு பொந்தில் சோம்பேறித்தனமாக உறங்கிக் கொண்டிருந்தது. வேலையெல்லாம் முடிந்து, விளக்குகளை அணைக்கப் போன நேரத்தில் “இது என்னமோ ஒரு கேபிள் புதுசா இருக்கே” என்று ஒரு மாணவன் உற்றுப்பார்க்க அது அந்த மலைப்பாம்புக் குட்டி ! அதைத் தொலைத்த அந்த மாணவியும் அன்று அங்கு வேலைக்கு வந்திருந்தாள். அவள் பாய்ந்து சென்று, அதைத் தூக்கி எடுத்து, தன்னோடு அணைத்துக் கொண்டாள். அவள் அதைத் தூக்கிய நேரத்தில் பாம்பு பயங்கரமாகச் சீறியது. அவள் பயப்படவில்லை. மாறாக அவள் சொன்னது! : “பத்து நாளா சரியான சாப்பாடு இல்லையா, என் செல்லம், கொஞ்சம் கோபமா இருக்கு.”