புத்தரின் உரையைக் கேட்பதற்காக மக்கள் கூடியிருந்தனர். புத்தர் வந்தார். மேடையில் அமர்ந்து கொண்டார். அங்கே இருந்த ஒரு தாமரைப் பூவைக் கையில் எடுத்துப் பார்த்தார். பக்கத்தில் இருந்த சீடர் காசியபனைப் பார்த்துச் புன்னகைத்தார். கூட்டத்தைப் பார்த்து முறுவலித்தார். பூவைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்து போய்விட்டார். அவ்வளவுதான் உரை முடிந்துவிட்டது.
ஒருவார்த்தைகூடப் பேசாமல் எப்படி உரை நிகழ்த்தப்பட்டதாகச் சொல்ல முடியும்? வார்த்தைகள் தத்துவங்களைச் சொல்லலாம். ஆனால், உண்மைகளை விளக்காது. புத்தகங்கள், பாராயணங்கள், உபதேசங்கள் இவற்றின் மூலம் உண்மையைப் புரிந்து கொள்ள முடியாது. உண்மை என்பது மழையைப் போல எளிமையானது. மழையைப் பார்க்கலாம். கேட்கலாம். உணரலாம். ஆனால் அதைக் குறித்து எத்தனை கவிதைகள் எழுதினாலும் மழையின் ஈரத்தை விரல்களில் உணர முடியாது
அனுபவம் அது முக்கியம்
உளியை மரத்தின் மீது வைத்து சுத்தியலால் மெதுவாகத் தட்டினால் உளி நழுவி விழுகிறது. வேகமாக ஓங்கித் தட்டினால் உளி மரத்தில் சிக்கிக் கொள்கிறது. எவ்வளவு மெதுவாக அல்லது வேகமாகத் தட்ட வேண்டும் என்பதை புத்தகம் படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. தானாக வேலை செய்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.
அனுபவம் அது முக்கியம்
ரோஜப்பூவைப் போன்ற வண்ணம், மென்மை ஏன் அதன் மணம் கூட கொண்ட பூவைத் தொழில்நுட்பம் கொண்டு, இயந்திரத்தில் தயாரித்து விட முடியும். ஆனால் அந்தப் பூவின் உயிர்ப்பை இயந்திரங்களால் தர முடியுமா?
அனுபவம் அது முக்கியம்
வாழ்க்கைக்கு மட்டுமல்ல, இலக்கியத்திற்கும் அனுபவம் முக்கியம். வாழ்ந்து பெறாத அனுபவத்தை வார்த்தைக் குவியல்களால் விவரிக்கும் இலக்கியங்கள் இயந்திரங்கள் செய்த ரோஜாப்பூவைப் போல உயிர்ப்பின்றி இருக்கின்றன.
எழுத்துக்கு அனுபவம் அவசியம் என்றால், நான் சரித்திரக் கதைகள் எழுதுவது எப்படி?கொலையைப் பற்றி நான் கதை எழுதுவதற்குக் கொலை செய்திருக்க வேண்டுமா? வேண்டாம், ஆனால் அதை எழுதும் நேரம் நீங்கள் கொலைகாரனாக மாறியிருக்க வேண்டும். ராஜராஜனாக மாறத எவராலும் பெருங்கோயில் கட்ட முடியாது, கற்களினால் அல்ல, சொற்களைக் கொண்டு கூட.
அப்படிக் கூடுவிட்டுக் கூடு பாய புத்தகங்கள் உதவும்.அவ்வளவுதான். ஆனால் புத்தகங்கள் மட்டும் போதாது.கருவாடு என்றாலும் கல்கண்டு என்றாலும் அது அப்படியே ரத்தத்திற்குச் செல்வதில்லை.படித்தது அனுபவமாகச் சேமிக்கப்படாவிட்டால் அதனால் பயனில்லை. படைப்பாளிக்கும் பண்டிதனுக்கும் உள்ள வித்தியாசமே இதுதான்.
வாசிப்பும் ஓர் அனுபவம்தானே? ஆம். ஆனால் வாழ்க்கை வாசிப்பிற்கு அப்பாலும் விரிந்து கிடக்கிறது, உமா ஷக்தியின் ஒரு கவிதை சொல்வது போல
கவிதை எழுத அமர்ந்தேன்
ஜன்னலருகே ஓடி மறைந்தது
அணில் ஒன்று
கணினியை மூடிவிட்டேன்