Y Not?
நாடாளுமன்றத் தேர்தலில்
அதிமுக –திமுக கூட்டணி!
மாலன்
அண்மையில் நடந்து முடிந்த குஜராத், இமாசலப்பிரதேசச் சட்டமன்ற முடிவுகள் ஒன்றைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றன. 2014ல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில். -ஏதேனும் அலை வீசினால் ஒழிய- காங்கிரஸ், பாஜக இரண்டும் தனித்து ஆட்சிக்கு வரமுடியாது. மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஒன்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றுமானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு வேளை காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையில் கூட்டணி அரசு அமைந்தால் அந்தக் அரசில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் வலுவானதாகவே இருக்கும்
குஜராத்தில் எதிர்பார்த்தபடியே நரேந்திர மோடி ( நமோ) வெற்றி பெற்றுவிட்டார். ஆனால் அது கொண்டாடிக் குதூகலிக்கும் அளவிற்குப் பெரிய வெற்றி இல்லை. ஏனெனில் இதை விடப் பெரிய வெற்றிகளை பாஜக அங்கு கண்டிருக்கிறது. இன்று நமோவின் எதிரியாக சித்தரிக்கப்படும் கேசுபாய் படேல், 1995ல். 121 இடங்களில் பாஜகவிற்கு வெற்றி தேடித் தந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் மோடி தலைமையில், பாஜக, குஜராத்தில், ஒவ்வொரு தேர்தலிலும் அது முன்பு பெற்ற இடங்களை விடக் குறைவாகப் பெற்று வருகிறது (2002ல் 127, 2007ல் 117, 2012ல் 115) வாக்கு வீதமும் குறைந்து வருகிறது (2002ல் 49.85%, 2007ல் 49.12%, 2012ல் 47.9%) எனவே இந்த வெற்றி குஜராத்தில் பாஜக வலுப்பெற்று வருகிறது என்பதைக் காட்டவில்லை.
குஜராத்திற்கு வெளியே பாஜகவின் பலம் என்ன என்பது கேள்விக்குறி. கர்நாடகத்தில் எடியூரப்பாவின் வெளியேற்றத்திற்குப் பின் அங்கு அது பலவீனமடைந்திருக்கிறது. 2013ல் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிகழவிருக்கும் தேர்தல்களில் அது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்விகள் இருந்து வருகின்றன.
காங்கிரசும் வலுவான நிலையில் இல்லை. தொடர்ந்து இரு முறை ஆட்சியில் இருந்து வரும் நிலையில், அது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. ஆளுவோருக்கு எதிரான மனநிலை (anti incumbency) அதன் வெற்றி வாய்ப்புக்களைப் பாதிக்கும். அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி உரத்து எழும். ராகுல்காந்தி தனது ஆளுமையை இன்னும் நிரூபிக்கவில்லை. ஊழல் புகார்கள், விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம், பணவீக்கம், அயல்நாட்டில் உள்ள கறுப்புப்பணம், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு, அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தாரளமயக் கொள்கை காரணமாகப் பல்வேறு தரப்பினருக்கு ஏற்பட்டு வரும் நெருக்கடிகள், போன்ற பிரசினைகளுக்கு அது முகம் கொடுக்க வேண்டி வரும்.
இரண்டு பெரிய கட்சிகளும் பலவீனப்பட்டுப் நிற்கும் சூழ்நிலையில் மாநிலக் கட்சிகள் அடுத்த தேர்தலில் ஆட்சியைத் தீர்மானிக்கும் வல்லமை பெறுகின்றன. நம் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிப்பது ஆறு மாநிலங்கள்தான். காரணம் மக்களவையில் உள்ள 552 இடங்களில், 291 இடங்கள் இந்த மாநிலங்களில் உள்ளன. இந்த மாநிலங்களில் எந்தெந்தக் கட்சிகள் கணிசமாக வெற்றி பெறுகின்றனவோ அவைதான் ஆட்சியைத் தீர்மானிக்கும். அந்த மாநிலங்கள் இவைதான் உத்தரப் பிரதேசம் (80) மகராஷ்டிரம் (48) மேற்கு வங்கம் (42) ஆந்திரப் பிரதேசம் (42) பிகார் (40) தமிழ்நாடு (39)
இந்தப் பின்னணியில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்கள் (புதுச்சேரியையும் சேர்த்து 40) முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றை சிந்தாமல் சிதறாமல் எந்தக் கூட்டணி கைப்பற்றுகிறதோ அந்தக் கூட்டணி அடுத்து வரும் மத்திய ஆட்சியில் புறக்கணிக்க முடியாத சக்தியாக விளங்கும்.
க |
டந்த சில ஆண்டுகளாக உயிர்நாடியான பிரச்சினைகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசிடமிருந்து நியாயம் கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறு, காவிரி நதி நீர்ப்பங்கீடு போன்ற விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிட்ட பிறகே ஓரளவு நிவாரணம் கிடைத்தது. அவையும் பலன் தரவில்லை. மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த அல்ல, கட்டுப்படுத்தக் கூட மத்திய அரசால் முடியவில்லை. முடியவில்லை என்பதைவிட மத்திய ஆட்சியாளர்கள் முழு மனதுடன் அதற்கு முயலவில்லை என்பதுதான் நிஜம். தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளை விட, இலங்கை அரசின் உறவிற்கே மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. தில்லி அரசு உபரியாகக் கொடுத்த மின்சாரத்தைத் தமிழகத்திற்குத் தருமாறு வைக்கப்பட்ட கோரிக்கையும், கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்குத் தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையும் கனத்த மெளனத்தை சந்திக்கின்றன. இவையாவும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதரத்தோடு தொடர்புடைய பிரச்சினைகள். இவற்றின் மீதே அலட்சியம் காட்டப்படுகிறது.
கூடுதலாக நிதி கோரி தமிழகம் வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்படுகிற அதே நேரம் உபி, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க முன் வந்ததற்காக சமாஜ்வாதி கட்சிக்கும், நிதிஷ்குமாருக்கும் அளிக்கப்பட்ட பரிசு இவை என ஊடகங்கள் அப்போது (ஜீலை 2012) எழுதின.சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவு பெற, மாயவதியின் வற்புறுத்தலின் பேரில், பதவி உயர்வில் இடஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்டமுன்வடிவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
ஓர் அரசு கூட்டணி அரசாகச் செயல்படும் போது, பிரச்சினைகளை அரசியல் லாபங்களைக் கருத்தில் கொண்டே அணுகும் என்பது, அடுத்தடுத்து அமைந்த கூட்டணி அரசுகளின் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது. இந்த யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தமிழகத்தின் நலன்களைக் காப்பாற்ற வேண்டுமானால் அதற்கு ஒரு வழிதான் உண்டு.
அது-
தமிழகம் மத்திய அரசைச் சார்ந்திருக்காமல், மத்திய அரசு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்குவது. அந்த நிலை ஏற்பட வேண்டுமானால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக –திமுகவிடையே கூட்டணி ஏற்பட வேண்டும்.
இந்த இரண்டு கட்சிகளுக்கும் இருக்கும் வாக்கு வங்கி கணிசமானது. இந்த இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியாக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுமானால் இந்த இரண்டுகட்சிகளுமே லாபம் அடைய முடியும். அதிக எண்ணிக்கையில் அந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் இடம் பெற முடியும் இந்தக் கட்சிகளின் ஆதரவில்லாமல் மற்ற கட்சிகள் இங்கு வெற்றி காண முடிந்ததில்லை என்பது வரலாறு
தமிழகத்தின் வாழ்வாதரமான பிரச்சினைகளில் இந்தக் கட்சிகளின் அணுகுமுறையில் வேறுபாடுகள் இருந்திருக்கலாம் ஆனால் நோக்கத்தில் வேறுபாடுகள் இல்லை. அண்மையில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பிரச்சினையில் இரண்டு கட்சிகளும் ஒரே நிலையை மேற்கொண்டன.
இந்த இரண்டு கட்சிகளும் இனைந்து செயல்படுவது இன்னொரு விதத்திலும் பலனளிக்கும். தமிழகத்தில் தலைதூக்கத் துவங்கியிருக்கும் ஜாதிய அரசியலை முளையிலேயே கிள்ளி எறியமுடியும்.
எ |
திர் எதிர் துருவங்களாக இருக்கும் இரண்டு கட்சிகள் எப்படி இனைந்து செயல்பட முடியும்? இப்படி ஒரு கேள்வி எழுவது இயற்கையானது. ஆனால் தமிழகத்தில் இது போன்ற கூட்டணிகள் புதிது அல்ல.
என்னைக் கொலை செய்ய சதி நடக்கிறது என கருணாநிதி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியதன் காரணமாகத்தான் வைகோ திமுகவிலிருந்து வெளியேறி மதிமுகவை ஆரம்பித்தார். ஆனால் அதே திமுகவுடன் 1999 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ கூட்டணி வைத்துக் கொண்டார். பொடா சட்டத்தின் கீழ் ஜெயலலிதா அரசால் கைது செய்யப்பட்டவர் பின்பு அதிமுகவுடன் கூட்டணி கண்டார். மதவாதக் கட்சி என்று அண்மையில் கூட கருணாநிதி பாரதிய ஜனதாக் கட்சியை விமர்சித்திருக்கிறார். ஆனால் 1999ல் அந்தக் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துக் கொண்டது. அதன் தலைமையிலான அரசிலும் பங்கேற்றது.
1967ல் காங்கிரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் அண்ணா ஒரு கூட்டணி அமைத்தார். அதில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், வலதுசாரி முதலாளித்துவ கட்சி என வர்ணிக்கப்பட்ட ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் இடம் பெற்றன. எந்தக் காங்கிரசை வீழ்த்த 1967ல் திமுக கூட்டணி கண்டதோ அதே காங்கிரசுடன் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணி வைத்துக் கொண்டது. எமர்ஜென்சியின் போது திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது. திமுகவினர் பலர், மாறன், ஸ்டாலின் உட்பட, மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.ஆனால் 1980ஆம் ஆண்டுத் தேர்தலில், ’நேருவின் மகளே வா, நிலையான ஆட்சி தா’ என்ற முழக்கத்தோடு திமுக இந்திராவோடு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டது. கடந்த காலத்திலிருந்து இது போன்று நிறைய உதாரணங்களைத் தர முடியும். எதிர் எதிர் துருவங்கள் இணைவது அரசியலில் புதிதல்ல.
அவ்வளவு ஏன்? எம்,ஜி,ஆர் வாழ்ந்த காலத்தில் அதிமுக திமுக இணைப்புக் குறித்து கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்குமிடையே பேச்சு வார்த்தைகள் நடந்தன. அதை குறித்து கருணாநிதி நெஞ்சுக்கு நீதியில் (மூன்றாம் பாகம்) எழுதியிருக்கிறார்:
“1979, செப்டம்பர் 6ம் தேதி மாலையில் டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர்பிஜு பட்நாயக்; தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்பு கொண்டு, முக்கியமானஅரசியல் விஷயம் பேச வேண்டுமென்றும் சென்னைக்கு வந்து என்னைச்சந்திப்பதாகவும் கூறினார். நானும் அவர் என்னை சென்னைக்கு வந்து சந்திப்பதைஒப்புக்கொண்டேன்.
என்னிடம் தொலைபேசியில் கூறியவாறு 12-9-79 அன்று பிஜு பட்நாய்க்சென்னையில் என் வீட்டில் என்னைச் சந்தித்து தி.மு.க, அ.தி.மு.க, இணைப்புக்குறித்துப் பேசினார். நீண்ட நேரம் இருவரும் விவாதித்த பிறகு; ஏற்கனவே நான்கழகப் பொதுச்செயலாளருடனும் கழக முன்னணித் தலைவர்களுடனும் கலந்து பேசிஎடுத்த முடிவுக்கேற்பஇரு கட்சிகளும் இணைந்திடச் சில நிபந்தனைகளைச்சொன்னேன்.
1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும்.
2. அக்கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.
3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும்.
4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை.
5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின்தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள்குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.
6. முக்கியமான விஷயம்: எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில்கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்புஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும்.
இவற்றைக் கேட்டவுடன்; பிஜு பட்நாயக் அவர்கள் மிகவும் மகிழ்ந்துஉற்சாகத்துடன் “இந்த நிபந்தனைகளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்ள எந்தக்கஷ்டமும் இருக்காது. நான் இப்போதே எம்.ஜி.ஆர். இல்லம் செல்கிறேன்.இன்றைக்கே உங்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறேன்” என்றார்.
அதற்கு நான்; “அவரைச் சந்திப்பதில் எனக்கொன்றும் மறுப்பு இல்லை.சந்திப்பதற்கு முன்பு கழக முன்னோடிகள் அனைவரிடமும் நான் கலந்து பேசவேண்டும். பொதுச் செயலாளர் வெளியூர் சென்றுள்ளார். இன்று மாலையில்தான்வருகிறார். அவரையும் மற்றவர்களையும் கலந்து பேசிக் கொள்கிறேன். எனவேசந்திப்புக்கு நாளைய தினம் ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். மறுநாள் 13-9-1979 அன்று சந்திக்க முடிவாயிற்று.
அன்று 11 மணியளவில் பிஜுபட் நாயக் முன்னிலையில் நானும்எம்.ஜி.ஆரும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் சந்தித்துப் பேசினோம்.அப்போது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், அ.தி.மு.க. சார்பில் நாவலர்நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
பிறகு நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் அந்த விடுதியின் வேறொரு அறையில்தனிமையில் பேசினோம். பிஜுபட்நாயக்கிடம் நான் தெரிவித்த கருத்துக்களும்நிபந்தனைகளும் உண்மைதானா என்று எம்.ஜி.ஆர். வியப்புடன் கேட்டார். இருகட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில் இயங்க வேண்டுமென்பதற்கு தி.மு.க.என்ற பெயரில்தான் ஏற்கனவே பல இடங்களில் கட்டிடங்கள், சொத்துக்கள்இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், தி.மு.க. என்பதுதான் அண்ணா உருவாக்கியகழகம், எனவே அந்தப் பெயரே நிலைக்கலாம் என்பதையும் அவரிடம் விளக்கினேன்.
அண்ணாவின் படத்தைப் பதித்துள்ள கொடியே இணைந்து விடப் போகும் கட்சியின்கொடியாக இருக்கட்டுமென்றும் கூறினேன். மற்றும் பிஜு பட்நாயக்கிடம் கூறியமற்றவைகளையும் எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன். அவர் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின்செயற்குழு, பொதுக் குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் கூட்டி இரு கட்சிகளின்இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அறுதியிட்டுக் கூறினார்.
பின்னர் இருவரும் நாங்கள் தனித்துப் பேசிக் கொண்டிருந்த அறையிலிருந்துவெளியே வந்து பிஜு பட்நாயக்கிடமும் அங்கிருந்த இரு கட்சிகளின்தலைவர்களிடமும் பேச்சின் முடிவு குறித்துத் தெரிவித்தோம். செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு கை குலுக்கினர்.புகைப்படமெடுத்தனர். நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்த போதும் நான், எம்.ஜி.ஆர். இருவருமே இரு கட்சிகளின் செயற் குழு, பொதுக்குழுக்களில்விவாதித்து முடிவுஅறிவிக்கப்படுமென்று கூறினோம்” என்று எழுதுகிறார் கருணாநிதி
ஆனால் அதற்குப் பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை. மறுநாளே வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில், எம்ஜிஆரை மேடையில் வைத்துக் கொண்டே அவரது அமைச்சர்கள் திமுகவைத் தாக்கிப் பேசினர் என்று கருணாநிதி சொல்கிறார். அதன் பின் இரு கழகங்களும் எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன
ஆனால், இப்போதும் கூட, இந்திய அரசியலில் ஏற்பட்டு வரும் சூழ்நிலைகளைத் தமிழக நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு, இரு கட்சிகளும் (இணையக் கூடத் தேவை இல்லை) ஒரே அணியாக நின்று நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளலாம்.
அதற்கு இரண்டு தலைவர்களின் ஈகோ இடம் கொடுக்குமா? அல்லது அந்தத் தலைவர்களின் ஈகோவிற்கு தமிழக நலன்கள் பலியாகுமா?
One thought on “அதிமுக -திமுக கூட்டணி”
யார் மத்தியில் ஆண்டாலும் தமிழர்களின் உணர்வுகளைவிட இலங்கயின் உறவுதான் முக்கியம் என்பது சரியானஉண்மை