தவமிருந்த முனிவர் இரண்டு வரங்கள் பெற்றார். நீரின் மேல் நடக்க ஒன்று. நெருப்பில் எரியாதிருக்க மற்றொன்று. மறுநாள் குளிக்கப்போனார். ஆற்றில் இறங்க முடியவில்லை. முனிவர் ஒரு நாள் செத்துப் போனார். உடலை எரிக்க முடியவில்லை. ஊர் மக்கள் முயற்சியைக் கைவிட்டனர். பருந்தும் நாயும் தின்றபோக பாக்கி இருந்ததை புழுக்கள் தின்றன. இந்தக் கதையை ஞானக் கூத்தன் ஒரு கவிதையாக எழுதியிருக்கிறார்
நாம் பெறும் வரங்கள் நமக்கு உதவாது போனால் ஒரு நாள் அவை சாபமாக மாறும். பேஸ்புக்கைப் போல.
மூஞ்சிப் புத்தகம் என்று செல்லமாகச் சீராட்டப்படும், முகநூல் எனப் பண்டிதர்களால் கொண்டாடப்படும் பேஸ்புக் அவ்வப்போது சில நல்ல காரியங்களுக்குக் களமாக இருந்திருக்கிறது. கள்ளிச் செடி காவல் வேலி ஆவது போல. ஆனால் பலருக்கு அது விளம்பரப் பலகை. வம்பளக்கும் டீக் கடை. முகம் பார்த்து மகிழும் கண்ணாடி.
இன்னும் சிலருக்கு அது நேரம் கொல்லி. அந்த நேரம் கொல்லி உயிர்க்கொல்லியாக உருமாறுவதுதான் கவலைக்குரியது.
பட்டப்படிப்பை முடித்துவிட்டு பணியில் சேரக் காத்திருந்த ஓர் இளம் பெண் தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக அமைந்துவிட்டது பேஸ்புக். அவரின் புகைப்படத்தைக் கணினியின் துணை கொண்டு அவர் அரை குறை உடையில் இருப்பது போல ஆபாசமாக மாற்றி, அந்தப் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுப் பரவச் செய்ததோடு, அந்தப் படத்தை அவரைப் பெற்றவருக்கே அனுப்ப, அவர் பெண்ணைக் கடிந்து கொள்ள, அப்பாவே நம்மைச் சந்தேகப்பட்டு விட்டாரே என்ற ஆற்றாமையில் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகச் செய்திகள் சொல்கின்றன.
ஆயுதங்கள் மட்டுமல்ல, அபிப்பிராயங்கள் கூட மனிதர்களைக் கொல்லக் கூடும்.
கொலையுண்ட பிறகும் கூட
அரும்பி மலர்ந்த அதிகாலைப் பொழுதில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட இளம் பெண்ணைப் பற்றி அவரது மறைவுக்குப் பிறகு அவதூறுகள் பரப்பப்பட்டன . அதுவும் பேஸ்புக்கில்தான்.
படித்த இளம் பெண்களைப் பற்றிச் சொல்லப்படுகிற எல்லாப் பொரணிகளும் அந்தப் பெண்மீதும் உமிழப்பட்டன. திமிரானவர், ஒருவரையும் பொருட்படுத்தாமல் ஒதுங்கிச் செல்பவர், என்ற வழக்கமான வார்த்தைகள் வாரி இறைக்கப்பட்டன. ஆனால் அதையும் மீறி அவரது ஜாதி விமர்சிக்கப்பட்டது.
வேறெந்த ஜாதியினரைக் காட்டிலும், அந்தணக் குலத்தில் பிறந்தவர்களை, அவர்கள் கல்யாண சமையல்காரரானாலும், கவர்னாக இருந்தாலும், விமர்சிக்க அவர்களது ஜாதி ஒன்றே போதுமானதாக இருக்கிறது. பொது நீரோட்டத்தில் கலந்து கொள்ளும் விருப்போடு அந்தணக் குலத்தின் அடையாளங்களைத் துறந்து விட்டவர்களையும் கூட இந்த விஷக் காற்று விட்டு வைப்பதில்லை. அவர்கள் நட்போடு அல்ல, சந்தேகக் கண்களாலேயே பார்க்கப்படுகிறார்கள். அவர்களது எல்லாச் செயல்களுக்கும் உள்நோக்கம் கற்பிக்க அவர்களது ஜாதி ஒன்றே போதுமானதாக இருக்கிறது. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாதவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் ஜாதி துவேஷம்.
இங்கு வெறுப்பின் விதைகள் வேரோடி விருட்சங்களாக எழுந்து நிற்கின்றன. அதற்கு பேஸ்புக்கும் விலக்கல்ல.
இன்னும் சொல்லப் போனால் பேஸ்புக் என்பது நவீனத் தொழில் நுட்பம் நமக்குத் தந்த கொடையாக இருக்கலாம். ஆனால் அது நம் மரபார்ந்த மனங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நதிகளைச் சாக்கடைகளாக மாற்றத் தெரிந்தவர்கள் அல்லவோ நாம்?
அகத்தின் அழுக்கு முகத்தில் தெரியத்தானே செய்யும்?