முக்காலிகள்

இவன் எழுந்திருந்தான்.

இவனைச் சுற்றிலும் நாற்காலிகள் இறைந்து கிடந்தன. நேரம் முடிந்து விட்டு ஆபீஸ் கலைந்து கிடந்தது. இவனுடையது நாற்காலியில்லை. இந்த நாற்காலிகள் பழைய காலங்காலமாக, இந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிற நாற்காலிகள். பல கை முறிந்தவை. உடல் நார் நாராய்க் கிழிந்தவை. சுவற்றைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தவை. நொண்டிக் காலில் இப்படியும் அப்படியும் ஆட்டம் காட்டி வீழ்த்துபவை. ஆனாலும் இவை நாற்காலிகள். பரம்பரை பரம்பரையாக இடத்தை விட்டு அகலாத பழைய கனமான நாற்காலிகள்.

பழசானாலும் வனப்பு இருந்தவை. இவற்றின் செய்திறன் நேர்த்தியாய் இருக்கும். கால்கள் உருண்டு முனைகள் அற்ற வழுவழுப்பாய் இருக்கும். கைகள் சாரைப் பாம்புகள் போல் நௌந்திருக்கும். கழுகுகள் கூர்த்த அலகோடு ஒற்றைக் கண் திறந்திருக்கும். மரங்களும் உயர்ந்தவை. திடமான தேக்குகள். வாழ்வின் நீரோட்டம் தெரிகிற வேம்புகள் ; ஆங்காங்கே கருங்காலிகள்.

       கொஞ்ச நாளைக்கு முன் புதிய நாற்காலிகள் வந்தன. ஒரு நாள் இரவோடு இரவாக வந்து சேர்ந்தன. எப்போது வரப் போகின்றன என்று தெரியாமல் இருந்தபோது வந்தன. வந்த புதிதில் புதுசுகளுக்கு உள்ளே வாசனையும் கவர்ச்சியும் மனத்தைச் சுண்டின. அவற்றின் தூரத்துப் பளபளப்பில் கம்பீரத்தில் ‘ப்பா… பழைய நாற்காலிகள் ஒழிந்தனஎன்று நிம்மதியாகக்கூட இருந்தது. ஆனால் கிட்டப் போய்ப் பார்க்கும்போது வேலை அவ்வளவு சுத்தமில்லை என்று தோன்றுகிறது. இவைகளை நம்பக்கூட முடியாத பயமாக இருக்கிறது. சில கோணங்களிலிருந்து பார்க்கும்போது பழசே தேவலை என்று கூடத் தோன்றியது.

       இவனுக்கு இன்னும் புதிய நாற்காலிகளின்  வசதி கிட்டவில்லை. ஆனால் ஆபீஸில் அவைகளுக்கு ஏக ஆரவாரம். இப்போது ஆபீஸில் எங்கே போனாலும் இந்தப் புகழ் வார்த்தைகளில்தான் இடறிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாய் புகழ்ந்தவர்கள், ஒவ்வொன்றாய்ப் பார்த்துப் பார்த்துப் புகழ்ந்தவைகள், கையழகு, காலழகு, பின்னழகு, வனப்பு, மினுக்கு என்று கவிதை அஞ்சலி செலுத்தியவர்கள், புகழ்ச்சியில் எத்தனை வகை. உலக ஞானம் கெழுமிய ஒருவர் ரஷ்யாவில் நாற்காலிகள் இப்படித்தான் இருக்கும் என்று கருத்துத் தெரிவித்தார். ரஷ்ய நாற்காலிகள் பழைய மாதிரியானவை. சீனா நாற்காலிகள்தான் சௌகர்யம் மிக்கவை. நமது நலனுக்கு உகந்தவை. அதுதான் நமக்குத் தேவை என்று இன்னொரு உலக ஞானம் மிக்கவர் விவரம் சொன்னார். புகழ்ச்சி ; எதிர்ப் புகழ்ச்சி. புகழ்ச்சி ஓங்குக. ஆபீஸிலிருந்த எந்திரங்களுக்கு வார்த்தைகள் பிடித்துப் போயின. வார்த்தைகளை முழங்கி நாற்காலிகளாகச் செய்து போட்டன. சில சமயங்களில் கண்ணாடிச் சுவர்களையும் குளிர்ச் சாதனங்களாகவும் செய்தன. இதற்கெல்லாம் பிரயோசனப்படாத வார்த்தைகளை அலங்காரத் திரைச் சீலைகளாக மாறத் தொடங்கிவிட்டன. தொண்டையில் முள்ளாய் சிக்கிக் கொள்கிற வார்த்தைகளைப் பிரித்துக் கட்டி பாதாள ரிக்கார்ட் ரூமிற்கு அனுப்பின.

       முதுகுச் சாய்மானம் இல்லாத இவனை மாதிரி முக்காலிகள் முன ஆரம்பித்தன. நாற்காலிகளின் சுகம் கிடைக்காத முனகல். நாற்காலிகளின் விநியோகம் சரியில்லை என்ற முனகல். ஆனால், அனைத்தும் அடையாளம் தெரியாத முனகல். இயந்திரங்களின் சப்தம் உரக்கக் கேட்டால் அடங்கிப் போகிற முனகல். கொஞ்ச நாளில் முனகல் முணுமுணுப்பாயிற்று. போகப்போக முணுமுணுப்பு இரைச்சலாகி நாற்காலிகளை ஆட்ட ஆரம்பித்தன. கண்ணாடிச் சுவர்கள் நடுங்கின. இயந்திரங்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிற்று.

       சத்தம் கேட்டுச் சிம்மாசனம் கோபத்துடன் வெளியில் வந்தது. கூட்டம் பெருத்துப் போய்விட்டது. கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

       இயந்திரங்களுக்கு குஷி. உத்திரவைத் தின்றுவிட்டு வேகமாகச் சுழல ஆரம்பித்தன. ஜனன உறுப்புகளைக் கழற்றி கொடுக்காதவர்களுடைய முக்காலிகள் பறிபோகும் என்று உறுமின. எதிர்ப்படுகிறவர்களுடைய ஜனன உறுப்புகளை அகற்ற ஆரம்பித்தன.

       இவனுக்கு இன்னும் நாற்காலி கிடைக்கவில்லை. ஆனால் ஜனன உறுப்புப் போய் விட்டது. தான் என்ன இனம் என்று அவ்வப்போது குழப்பம் ஏற்படும்போது நினைவூட்ட முக்கோணக்குறி அங்கே பொறிக்கப்பட்டது.

( பாலம் )

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *