ஆதியில் கோடுகள் இருந்தன

                                                      
நான் தமிழில் எழுத வந்த இளம்பருவத்தில் என்னைப் பல கேள்விகள் மொய்த்துக் கொண்டிருந்தன. மாணவர்கள் நடத்திய மொழிக்கிளர்ச்சி ஒரு புயல் போல என் மனவெளியில் நடந்து கடந்திருந்தது. அந்தக் கிளர்ச்சியின் அடிநாதமாக இரண்டு அம்சங்கள் இருந்தன. ஒன்று தமிழ் மரபின் மீது பெருமிதம். மற்றொன்று நம்மை இரண்டாந்தரக் குடிமகனாக மட்டந்தட்டுவதை மறுதலிக்கும் ஆவேசம். என்னுடைய பார்வையில், I am second to none என்பதன் சீற்றம்தான் அந்தக் கிளர்ச்சி.

ஆனால் அதே கால கட்டத்தில், தமிழ்க் கவி உலகில், மரபை வலியுறுத்தி வந்த பண்டிதர்களிடம்  நவீன சிந்தனைகளை மட்டம் தட்டும் செருக்கு மண்டிக் கிடந்தது. யாப்பில் எதை எழுதினாலும் கவிதை, எனக் கொண்டாடுவதும், யாப்பற்று எழுதப்படும் எதையும் ஏளனம் செய்வதுமான ஓர் மனோபாவம் அவர்களிடம் நிலவியது. கவிமனம் இலக்கணத்திற்காகத் தன்னை குறுக்கிக் கொள்ள வேண்டுமா?, மரபைக் கைவிட்டதனாலேயே ஓரு படைப்பு அதற்குரிய இலட்சணங்களை இழந்துவிடுகிறதா என்ற கேள்விகள் என் முன் நின்றன. அந்தப் பதினாறாம் வயதில் என்னிடம் அதற்கு பதில்கள் இல்லை.

பதில்களைத் தேடத் தொடங்கிய போது, சி.சு செல்லப்பாவின் ‘எழுத்து’ எழுப்பிய கலகக் குரல் என்னை வசீகரித்தது. அதில் கவிதைகள் எழுதிய எனக்குக் கசடதபற அறிமுகமாயிற்று. அதில்தான் ஆதிமூலத்தின் ஓவியங்களை நான் முதலில் பார்த்தேன். நவீனத்தை உயர்த்திப் பிடிக்க, தமிழின் நெடிய மரபை அலட்சியப்படுத்தி தமிழறிஞர்களை ஏளனம் செய்து கொண்டிருந்த கசடதபறவின் மூர்க்கம் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஆதிமூலத்தின் ஓவியங்கள என்னைக் கவர்ந்தன. ஏன் என்று உடனடியாகக் காரணங்கள் தெரியவில்லை. பின்னர் ஆதிமூலம் காந்தியைப் பொருளாகக் கொண்டு 100 ஓவியங்கள் வரைந்திருக்கிறார் எனத் தெரிய வந்த போது அவற்றைத் தேடிச் சென்று பார்த்தேன். காந்தியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்குள் துளித்திருந்த நாட்கள் அவை. பார்த்துக் கொண்டே வந்த போது சட்டென்று ஒரு உண்மை புலனாகியது. அது: ஆதிமூலத்தின் ஓவியங்கள் நவீன ஓவியங்கள் என்றாலும், மரபின் ஏதோ ஒரு அம்சத்தை உள்வாங்கிக் கொண்டு அதிலிருந்து கிளைத்தவை அவை. கசடதபறவிற்கு அவர் உருவாக்கியளித்திருந்த இலச்சினையைப் பார்த்தால் அதை எளிதாக விளங்கிக் கொள்ள இயலும். வாளும் கேடயமும் ஏந்திக் கால்பரப்பி நிற்கும் ஓர் படைவீரனைக் குறிக்கும் ஓவியம் அது.

அந்தக் கணத்தில் என்னை நெடுநாளாக மொய்த்துக் கொண்டிருந்த வேறு ஒரு கேள்விக்கும் விடை கிடைத்தது. மரபும் நவீனமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஒரு நல்ல படைப்பாளி, மரபை உள்வாங்கிக் கொண்டு, அதைத் தனதாக ஆக்கிக் கொள்ளும் போது நவீனத்துவம் தானே அதிலிருந்து கிளைக்கும். பாரதி அத்தகைய ஒரு படைப்பாளி. ஆதிமூலம் தன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் எனச் சொன்ன ஜெயகாந்தன், சுந்தரராமசாமி இருவருமே அத்தகைய படைப்பாளிகள்தான். ஆதிமூலமே அப்படி ஒரு படைப்பாளிதான். இந்த உணமையின் முதல் வெளிச்சம் அவரது ஓவியங்கள் மூலம்தான் என் மீது படர்ந்தன.

பின்னால் திசைகள் இதழின் ஆசிரியப் பொறுப்பேற்ற போது, என்னைச் சூழ்ந்த கேள்விகள் என்னை அடுத்து வருபவர்களையும் தொட்டிழுக்கும் என நம்பினேன். என்னைப் போல விடைகலைத் தேடி அலையாமல் அதை அவர்கள் எளிதாகக் கண்டறிந்து கொள்ள வேண்டும் எனவும் விரும்பினேன். அதற்கு எனக்குக் கிடைத்த வாய்ப்புத்தான் ஓவியர் மருது. திசைகளில் 30 வயதிற்கு மேற்பட்ட எவரையும் பங்களிக்க அனுமதிப்பதில்லை என்ற ஒரு கொள்கையை வகுத்திக் கொண்டிருந்ததனால் ஆதிமூலத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் மருதுவின் வரிகளில் ஆதிமூலத்தின் ஒளி நிழலிட்டிருந்தது.

ஆசிரியர் சாவிக்கும் எனக்குமான முதல் கருத்து முரண்பாடு அது போன்ற ஒரு ஓவியத்தில்தான் துவங்கியது. கலாப்ரியாவின் கவிதை ஒன்றிற்கு மருதுவின் ஓவியத்தை பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்திருந்தேன். இதழின் இடப்புறம் கவிதையும் அதன் எதிரே ஒரு முழுப்பக்கத்திற்கு மருதுவின் ஓவியமும் அமைக்கப்பட்டிருந்தது. இதழின் இறுதி ஃபுரூப் சாவி சாரின் அறைக்குப் போயிற்று. சிறிது நேரத்தில் சாவி என்னை அழைத்தார். அந்தப் பக்கத்தை என்னிடம் காட்டி ”என்ன சார் இது?” என்றார்

“ என்ன?” என்றேன்.

”இஷ்யூ முடிக்க டைமாச்சு என்கிறதுனால அவசரத்தில படத்தைப் போட்டு முடிக்கும் முன்னாலேயே தூக்கிட்டு வந்திட்டீங்களா?”

நான் புன்னகைத்தேன். ஏனெனில் அந்த ஓவியத்தை வரைந்திருந்த மருதுக்கு அது எதற்கான ஓவியம் என்று தெரியாது. அவர் அப்போது விஜயவாடாவில் இருந்தார் என ஞாபகம்.

“இல்ல, கண், முழி எதையும் காணோம். அது இருக்க வேண்டிய இடம் ஒண்ணும் வரையாம வெறுமன விடப்பட்டிருக்கு. கழுத்து தாடை எல்லாம் பட்டை பட்டையா ஸ்கெட்ச் பண்ணி வைச்ச மாதிரி இருக்கு… அதான் கேக்கிறேன்” என்றார்.

”இது நவீன பாணி ஓவியம்”

“அது சரி. ஆனா ஒண்ணும் புரியலையே?”

”நவீன ஓவியர்கள் காட்சிகளை வரைவதில்லை. காட்சிகள் அவர்களது மனதில் ஏற்படுத்திய impressionஐ வரைகிறார்கள். நாம் எழுதும் போது சில விஷயங்களைச் சொல்லாமல் சொல்வதில்லையா, அது மாதிரி”

”எதற்கு சார் விஷப்பரிட்சை. வேணாம் விட்டிருங்க”
நான் அந்த ஓவியத்தை விலக்கிக் கொள்ளவில்லை. அந்த ஓவியம் அந்தக் கவிதையுடன் பிரசுரமாயிற்று.. சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறேன் என்று சாவி சாருக்கு என் மீது கோபம்.  கடைசி வரை அந்தக் கோபம் அவருக்கு இருந்தது.

ஆதிமூலத்தைப் பற்றிப் பேசும் போது இதை எதற்குச் சொல்கிறேன்? எண்பதுகளின் துவக்கத்தில் இதுதான் தமிழ் வெகுஜனப் பத்திரிகைகளில் இருந்த நிலைமை. இன்று வெகுஜனப் பத்திரிகைகளும் நவீன பாணி ஓவியங்களை ஏற்றுக் கொண்டுவிட்டன. இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவை ஆதியின் ஓவியங்கள்.

ஆனந்த விகடனில், பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த அவரது ஒவியம் ஒன்று, (கிராவின் கரிசல் காட்டுக் கடிதாசிக்கு என்று ஞாபகம்) இன்னும் மனதில் இருக்கிறது. கையை மடித்துத் தலைக்கு அண்டைக் கொடுத்துக் கொண்டு தூங்கும் ஓர் உழைப்பாளியின் படம். உழைப்பாளி என்று நான் சொல்லக் காரணம், நல்ல திண்மையான தோள்கள். மார்பில் மயிர்கற்றை. தலையில் இன்னமும் முண்டாசு இருக்கிறது. அதைப் பார்த்த நண்பர் ஒருவர், அசப்பில பார்த்தா மகாவிஷ்ணு மாதிரி இல்ல? என்றார். நான் புன்னகைத்தேன். உழைக்கிற மனிதன் ஒவ்வொருவரும்  கடவுள்தான். சராசரிப் பத்திரிகை வாசகனுக்கும் நவீன ஓவியத்தின் மூலம் ஒரு புதிய பார்வையைக் கொடுக்க முடியும் எனக் காட்டியவர் ஆதிமூலம். அவர் என்னைத் தொட்டது அந்த சாத்தியத்தை மெய்ப்பித்ததன் காரணமாகத்தான். ஏனெனில் எனக்கு அறிவுஜீவி இலக்கியவாதிகள் அல்ல, இந்த சராசரி வாசகன்தான் முக்கியம். நான் மல்லுக்கட்டுவதும் மார்புறத் தழுவிக் கொள்வதும் அவனைத்தான். அவனை அவன் மூளையைக் கொண்டே சிந்திக்க வைக்க வேண்டும் என்பதுதான் எழுத்தின், இலக்கியத்தின், இதழியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என விரும்பும் பேராசைக்காரன் நான். ஆதியின் ஓவியங்கள் சராசரி வாசகனும் கூட, பக்கத்தைப் புரட்டிவிடாமல், நின்று கூர்ந்து நோக்கி எதையோ தேடிக் கண்டு கொள்ளும் ஆற்றலைக் கொண்டிருந்தன.

ஆதிமூலத்தை நான் அதிகம் சந்தித்து அளவளாவியதில்லை. எழுபதுகளின் துவக்கத்தில், வாசகன் என்றொரு இலக்கியச் சிற்றேட்டை நடத்திக் கொண்டிருந்த போது, அதில் கவிதை என் நோக்கில் என்று தொடரைத் துவங்கியிருந்தோம். கோ.ராஜாராம் முதல் கட்டுரையை எழுதியிருந்தார். அடுத்த கட்டுரையை பற்றிப் பேசுவதற்காக தர்மு சீவராமை பெசன்ட் நகர் கடற்கரையில் சந்திப்பதாக ஏற்பாடு. அனறு சிவராம் வரவில்லை. காத்திருந்து பார்த்துவிட்டுக் கிளம்பும் போது, ஆதிமூலம் இங்கேதானே இருக்கிறார், பார்த்துவிட்டுப் போகலாம் எனத் தோன்றியது. அவர் அப்போது CPWD குடியிருப்பில் இருந்தார். நான் போன சமயம் அப்போதுதான் வேலையிலிருந்தோ, வெளியே, போய்விட்டோ வந்திருந்தார். தர்மு சிவராமின் கவிதைப் படிமங்களில் துவங்கிய பேச்சு, ஓவியங்கள் பற்றி விரிந்தது. அன்று space என்பதைப் பற்றிக் கொஞ்சம் பேசினோம். ஒரு வெள்ளைக் காகிதத்தின் குறுக்காகக் கிழிக்கப்படும் ஒரு கோடு எப்படி அங்கே ஒரு வெளியைக் கொண்டு வந்து விட முடியும் என்பதை ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு அதில் கறுப்பு மசியில் கோடிழுத்துப் புரிய வைத்தார். இந்தச் சிறு மாற்றம் எப்படி ஓவியனுக்கு ஒரு perspective£ஐ, பார்வையைக் கொடுக்கிறது, அந்தப் பார்வை எப்படி ஒரு அனுபவமாக விரிகிற சாத்தியம் கொண்டது எனப் பேசினோம் என ஞாபகம். ஆதிமூலம் அடங்கின குரலில்தான் பேசுவார். அதிகம் பேசுகிறவராகவும் தோன்றவில்லை. ஆனால் சாரமுள்ள பேச்சு.

ஆதிமூலத்தின் மறைவிற்குப் பிறகு, அவரது கோடுகள் தமிழ் உலகில் ஏற்படுத்தியுள்ள வெளியைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். பிரமிப்பாக இருக்கிறது. ஒரு தலைமுறையின் மாற்றம் அந்தக் கோடுகளுக்குள் ஒளிந்து நிற்கிறது. அந்த வெளியோ என்றும் நிரப்பப்பட முடியாத ஆகாசமாக விரிந்து கிடக்கிறது. 

புதியபார்வை பிப்ரவரி 1-15 2008

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these