இலங்கைத் தமிழரின் இழப்புக்கள்

என் தனி நூலகத்திலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்தால், படித்த பின்பு, அதை எடுத்த இடத்தில் வைக்கிற நல்ல வழக்கம் என்னிடம் கிடையாது.இதனால் ஏதோ ஒரு புத்தகத்தைத் தேடிப் போகும் ஒவ்வொரு முறையும், வேறேதோ புத்தகம் கையில் தட்டுப்பட, தேடலின் நோக்கம் திசைமாறிப் போகும். ஆனால் அப்போது கிடைக்கிற வாசிப்பனுபவமும் மனதிற்கு இதமாகத்தான் இருந்திருக்கிறது. அண்மையில் ஏற்பட்ட ஓர் அனுபவம் தவிர.

தேடிப்போன புத்தகத்திற்கு பதிலாக இந்த முறை இலங்கைக் கவிஞர் சேரனின் கவிதை ஒன்று அகப்பட்டது.

"ஊரான ஊர் இழந்தோம்
ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம்
பாராள வந்தவரே
உம்மையும்தான் நாமிழந்தோம்.
கடலே நீ இரையாதே
காற்றே நீ வீசாதே
நிலவே நீ அவியாதே
நெஞ்சமெல்லாம் தீயாச்சே"

என்று விரிகிறது கவிதை. கண்கள் கவிதையில் இருந்த போது எதிரே தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. செய்தித் தொலைக்காட்சி. அதில் சற்று முன் கிடைத்த செய்தியாக விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அண்டன் பாலசிங்கத்தின் மறைவை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். மனம் தன்னிச்சையாக ‘பாராள வந்தவரே உம்மையும்தான் நாமிழந்தோம்’ என்ற வரியை மறுபடி படிக்கப் போனது.

எண்பதுகளில் பாலா சென்னையில் வசித்த காலங்களில் என் அயல் வீட்டுக்காரர். நான் அப்போது வசித்து வந்த சென்னை இந்திரா நகரில்தான் அவரும் அப்போதிருந்தார். காலையில் உலாவச் செல்லும் போது எதிர்படுவார்.அநேகமாக அவர் மனைவி ஒரு நாயை நடத்திக் கூட்டிக் கொண்டு போக, இவர் அருகில் மெல்ல நடந்து வருவார்.

நாங்கள் அதிகம் பேசிக் கொண்டதில்லை. பேச வாய்ப்புக் கிடைத்த நேரங்களிலும் அரசியல் அதிகம் பேசியதில்லை. வடிவமைப்பிலும், அச்சிலும் தரமான இலக்கிய இதழ் ஒன்று அவரது ஆலோசனையின் பேரில் உருவாகிக் கொண்டிருந்தது. அதன் முதல் இதழில், தமிழின் மிகச் சிறந்த நாவல்கள் என்று கருதப்படுபவை குறித்து விளக்கக் குறிப்புக்களோடு ஒரு பட்டியல் வெளியாக இருந்தது. அதைக் குறித்து சில நிமிடங்கள் உரையாடியிருக்கிறோம்.

அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்த பாராட்டுக்களும், விமர்சனங்களும் எனக்கு உண்டு. ஆனால் அவை எல்லாவற்றையும் விட மனதில் உறைந்திருக்கும் எண்ணம், ஆயுதம் ஏந்தாத ஒரே விடுதலைப் புலி அவர் ஒருவர்தான் என்பதுதான். விடுதலைப் புலிகளுக்கு அவர் ஓர் தத்துவத் தளத்தை உருவாக்கித் தர பெரிதும் முயன்றார். அவரது பங்களிப்பு மட்டுமில்லாது போயிருந்தால், அந்த இயக்கம் ஓர் இராணுவ இயக்கமாக கருதப்பட்டிருந்திருக்கும். ஓர் அரசியல் இயக்கம், விடுதலை இயக்கம் என்ற மரியாதை அதற்குக் கிடைக்காமலே கூடப் போயிருந்திருக்கலாம்.
இராஜதந்திர தளங்களுக்கும், சிந்தனையாளர் விவாத அரங்குகளுக்கும், விடுதலைப் புலிகளின் தாகத்தை எடுத்துச் சென்ற பெருமை அவருக்குரியது.

இதுதான், அவரது மறைவிற்குப் பின், இலங்கையின் இனவாத சிக்கல், மேலும் இறுக்கமடைந்து, இராஜதந்திர முயற்சிகளுக்கோ, பேச்சுவார்த்தைகளுக்கோ இடமில்லாது போய், முடிவற்ற யுத்தமாக மாறிப் போகுமோ என்ற கவலையை எழுப்புகிறது.அவரோடு பல பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட சிங்களவரான பேராசிரியர் பீரீஸ் சொன்னது போல பாலாவின் மரணம் சிங்களர்களுக்கும் ஓர் இழப்புத்தான்.

பாலாவின் மறைவின் அளவிற்குக் கவனம் பெறாமல் போன இன்னொரு அறிவுஜீவிப் போராளியின் மரணமும் அண்மையில் நிகழ்ந்தது.விடுதலைப் புலிகளின் இயக்கம் துவக்கப்படும் முன்னரே, ஈழ விடுதலையை லட்சியமாகக் கொண்டு ஈரோஸ் என்ற அமைப்பை நிறுவிய இரத்னசபாபதி இந்த டிசம்பர் 13ம் தேதி லண்டனில் காலமானார். ரத்னா, மார்க்சியத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும், பிடிப்பும் கொண்டவர்.மார்க்சிய அடிப்படையில் இனப்பிரசினைக்குத் தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கையில், ஈழ மாணவர் புரட்சிகர அமைப்பு (EROS) என்ற அமைப்பை 1975ல் லண்டனில் அவர் துவக்கினார். அப்போது யாழ்ப்பாணத்தில் ஆயுதம் குழுக்கள் ஓர் அமைப்பாக உருவாகியிருக்கவில்லை. ரத்னா, பாலஸ்தீன விடுதலை இயக்கங்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர் பேரவை என்ற அமைப்பில் இருந்த உமாமகேஸ்வரன், பத்மநாபா, சங்கர் ராஜூ ஆகியோரை, ஆயுதப் பயிற்சி பெற ஏற்பாடு செய்தார். பின்னாளில் உமா மகேஸ்வரன், PLOTE என்ற இயக்கத்தையும், பத்மநாபா, EPRLF என்ற இயக்கத்தையும் ஏற்படுத்தினர். சங்கர் ராஜூ EROSலியே தொடர்ந்தார். ஈழ விடுதலை இயக்கங்கள் ஒன்று பலவாகக் கிளைவிட்டுள்ள வரலாறு அநேகமாக எழுத்து வடிவில் பதிவு பெறாமலேயே போய்விட்டது.

அந்த இயக்கங்கள் நிலை பெற்றிருந்தால், ஈழம் என்ற கருத்துரு, ஓர் அரசியல் வடிவம் பெற்று, உலக அரங்கில் அங்கீகாரமும் பெற்றிருந்திருக்கக் கூடும். ஈழம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தை விட, தங்கள் மூலம் மட்டுமே ஈழம் அடையப் பெற வேண்டும் என்ற விடுதலைப்புலிகளின் இறுக்கமான நிலைப்பாடு, ஈழம் என்ற நோக்கத்திற்குப் பின்னடைவையே ஏற்படுத்தியிருக்கிறது. இதைக் குறித்து திறந்த மனதோடும். வரலாற்றுப் பார்வையோடும் கூடிய விவாதம் ஓர் இலங்கைத் தமிழரிடையே நடைபெறுமானால், இந்த மரணங்கள் காரணமாக ஏற்பட்ட பின்னடைவுகள் மேலும் மோசமாகாமல் இருக்க உதவும்.

அண்மைக்காலத்தில் மேலும் சில இழப்புக்கள் இலங்கைத் தமிழருக்கு ஏற்பட்டன. அவை அரசியல் உலகில் ஏற்பட்ட இழப்புக்கள் அல்ல. இலக்கிய உலகிற்கு ஏற்பட்டவை இலக்கிய உலகிற்கு ஏற்பட்டவை என்பதால் அவை இலங்கைத் தமிழருக்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இலங்கைத் தமிழர்களின் அரசியல் அவர்களுடன் மட்டுமே தொடர்புடையது.மற்ற நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அதற்காக அனுதாபப்படுவதைத் தவிர வேறெதையும் பெரிதாகச் செய்துவிட முடியாது.( கவிஞர் கனிமொழியைப் போல ஓர் ஒருநாள் அடையாள உண்ணவிரதம் வேண்டுமானால் இருக்கலாம்) ஆனால் இலங்கைத் தமிழர்கள் தமிழ் இலக்கியத்திற்கு அளிக்கும் கொடை மொழிக்குச் செழுமை சேர்ப்பதால், அந்த மொழியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் பலனளிப்பது. அதனால் இலக்கிய உலகில் ஏற்படும் இழப்பின் பரிமாணம் அரசியல் உலகில் ஏற்படும் இழப்பின் பரிணாமத்தைவிடப் பெரியது.

இப்படிப்பட்ட ஒரு பெரிய இழப்புத்தான் ‘ஏஜே’யின் இழப்பு. அவரது நண்பர்களால் ஏஜே என்றழைக்கப்பட்ட, இலக்கிய உலகில் ஏ.ஜே.கனகரட்னா, என்றறியப்பட்ட, அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்னா, இந்த ஆண்டு அக்டோபரில் கொழும்பில் தனது ச்கோதரர் இல்லத்தில் காலமானார். எப்போதுமே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டாத ஏஜேயின் மரணமும், வெறும் வாய்வழிச் செய்தியாகவே அவரது நண்பர்களை எட்டியது. பின்னரே அவை ஊடகங்களின் கவனம் பெற்றன.

ஏஜே. யாழ் பல்கலையில் 18 ஆண்டுகள் ஆங்கிலம் போதிப்பவராகக் கடமையாற்றியவர். ஆனால் சமகாலத் தமிழிலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். ஏ.ஜே.கனகரத்னாவின் மிகப் பெரிய பங்களிப்பு, அவர் ஈழத் தமிழ் இலக்கியத்தை ஆங்கிலம் மூலமாக உலகறியச் செய்தது. அதேவேளையில், தமிழ் எழுத்தாளர்களுக்கு ஆங்கில இலக்கிய உலகின் வளர்ச்சிகளை தமது எழுத்துகளின் வழியே தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். அவை, ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களை உதிர்த்து, அதன் மூலம் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களைக் கட்டமைத்து, வழிபாடுகளை உருவாக்கும் முயற்சிகளை முறியடிக்க உதவின. இதற்கோர் உதாரணம் மெளனி பற்றி அவர் எழுதியது.

"எமது மதிப்புக்குரிய எழுத்தாளர்களும் இலக்கிய விமர்சகர்களுமான – புதுமைப்பித்தன், ரகுநாதன், கா.நா.சுப்பிரமணியம், சி.சு.செல்லப்பா முதலியவர்கள் இந்த மௌனியினுடைய கதைகளைப் புகழ்ந்து போற்றியிருக்கிறார்கள். ‘எழுத்து’ பத்திரிகையைத் தவறாது படிக்கும் வாசகர்கள், அதிலே ஒரு மௌனி வழிபாட்டின் பிரதிபலிப்பை – மௌனியையும் ஹென்றி ஜேம்ஸையும் ஒப்புநோக்குவதிலும், ஒருமித்தலிலும் காணலாம். ஹென்றி ஜேம்ஸின் சிக்கலான நடைக்கும் மௌனியின் அவலட்சணமான, ஓட்டமில்லாத கட்டுக்கடங்காத ‘குடைநிழலி’ன் நடைக்கும் அதிக வேறுபாடுகளுண்டு. மௌனியின் எழுத்துலக இடைக்காலச் சன்னியாசத்தினால் எழுத்துப் பரிச்சயம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. ‘குடை நிழலி’ல் எத்தனை வசனங்கள் ‘போலும், போலும்’ என்று முடிவடைகின்றன என்பதைக் கவனித்தால் இது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவாகும்….

….மௌனியை சிறுகதையாசிரியர் என்ற மட்டில் இவருக்குக்கிடைத்துள்ள பெருமை இவருக்குத் தேவையான அளவைவிடக் கூடியதாகவிருக்கிறது; கொடுக்கப்பட்ட தரம் குறைக்கப்பட வேண்டும். அதை நான் ஏன் எடுத்துக் கூற வந்தேனென்றால் இப்பொழுது மௌனி வழிபாடு என்னும் தன்மை வளர்ந்து வருவது கவனிக்கக் கூடியதொன்றாக இருக்கிறது. மௌனி ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே தனது பாத்திரங்களைப் படைக்கிறார். புதுமைப்பித்தனுடைய கதைகளோ எல்லாக் கோணங்களையும் தொட்டு மிகவும் பரந்து கிடப்பது மாத்திரமல்ல பூரணத்துவமும் அடைந்திருக்கிறது.

தமிழில் உண்மையான ஆக்கபூர்வமான விமர்சனத்துக்கு வழிபாடுகள் நந்திகளாக குறுக்கே இருக்கின்றன. உருவ வழிபாடுகளால் நாம் துக்கப்பட வேண்டும்; அதுவும் அந்த உருவமானது தன்னையே தாங்கிக் கொள்ள முடியாத அத்திவாரமுடையதாக இருந்தால் கூறவே வேண்டியதில்லை"

மெளனி மீதான இந்த விமர்சனத்தை ஏஜே 1961ல் எழுதினார்.ஆனால் அவரது விருப்பத்திற்கு மாறாகத் தமிழ் இலக்கிய உலகில் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களும், வழிபாடுகளும் 70ற்குப் பிறகு அதிகரிக்கவே செய்தன. அதற்கு நமது எழுத்தாளர்கள் மட்டுமல்ல, விமர்சகர்களும் காரணம்.

விமர்சனம் என்ற பெயரில் தமிழ் இலக்கிய உலகில் நடத்தப்படும் கேலிக் கூத்துக்களை நினைக்கும் போது இலங்கைக் கவிஞர் சு.வில்வரத்தினம் எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது:

நூல் வெளியீடு ஒன்று நிகழ்ந்தது.
நால் வகைக் கிரியைகளும் நடந்தேறியபின்
‘நூலை இவர் விமர்சிப்பார்’ என்னவும்
எழுந்தார் ஒருவர் எழுத்தாளர்.

வந்தார் அரங்கில் சபையை
வடிவாக நோட்டம் விட்டே
எங்கோ ஒரு மூலையில் இருப்போனை
இலக்கியத்தில் எளியோனாகச்
சிந்தையில் ‘பாவம்’ கொண்டு
சின்னச் செருமலோடு ஆரம்பித்தார்.

எளிமையாய் விளக்கப் போனால்
இதற்கொரு கதை சொல்வேன் என்று
கதை சொல்லத் தொடங்கி மனுஷன் ஓர்
கழுதையின் மேலே தொற்றி
கழுதையை விட்டிறங்கிப் பின்னொரு
குதிரையின் பிடரி மயிர் பிடித்தேறிப்
பெருவெளிச் சவாரி செய்து பின்
குதிரை விட்டிறங்கி உடனே
குரங் கொன்றின் வாலைப் பற்றி

இப்படியே
கதை கதையாம் காரணமாம்
காரணத்துக்கோர் கதையாம் என்று
பலகுட்டி ஈன்றபன்றியைப் போல
குட்டிக்கைகளை ஈன்ற களைப்பில்
குலைதள்ளி நின்றவேளை

குட்டிக் கதைகளின் கும்பலின் இடைநழுவி
விமர்சனம் மெல்ல எங்கோ விடை யூர்ந்தேகிற்று.

மரபுக் கவிதையின் மொழிச் செழுமையோடு புதுக் கவிதைகளையும் எழுதிய சு.வில்வரத்தினமும் இந்த டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் காலமானார்.காந்தீயத்தில் நம்பிக்கை கொண்டவராக இலக்கிய உலகில் அறிமுகமான 70களின் போது தோன்றிய வில்வரத்தினம், 90க்குப் பிறகு வன்முறைப் போராட்டத்தை அங்கீகரிக்கிறவராக தனது படைப்புகளில் தோற்றம் தருகிறார். அநேகமாக பெரும்பாலான இலங்கைத் தமிழர்கள் இப்படிப்பட்டதொரு ‘வளர்சிதை மாற்றத்திற்கு’ (Metamorphosis) உள்ளாகியிருப்பதற்குரிய அரசியல், சமூக, இலக்கிய காரணங்கள் ஆராயவும், பதிவு செய்யப்படவும் வேண்டியவை.

ஆனால் எந்தவித ஆராய்ச்சியும் இல்லாமல் உறுதியாகச் சொல்லமுடிந்தது ஒன்று. 2006ன் கடைசி மாதங்களில் இலங்கைத் தமிழருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் சாதாரணமானவை அல்ல.அந்த இழப்புக்கள் அவர்களது வரும் நாட்களின் மீது பெரும் தாக்கம் ஏற்படுதத்க் கூடியவை.

                                                                                                    தமிழ்முரசு சிங்கப்பூர் டிசம்பர் 20 2006

  

  

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these