கறிவேப்பிலைக் காதல்

அன்புள்ள அப்பா,

நினைவிருக்கிறதா உங்களுக்கு? நான் சின்னக் குழந்தையாக இருந்த போது நீலவானத்தில் திரியும் வெள்ளை மேகங்களைக் காட்டி அவை மட்டும் ”ஏன் வெள்ளையா இருக்கு?” என்று நான் கேட்கும் போது நீங்கள் சொல்வீர்கள்: கடவுள் ஷேவ் பண்ணிக்கிறார்மா, அந்த சோப் நுரைதான் அது”

இப்போது இங்கு பூமி தேவன் ஷேவ் செய்து கொள்கிறானோ என்னவோ, நவம்பரிலேயே பனி கொட்ட ஆரம்பித்துவிட்டது.பசும் புலதரைகளிலெல்லாம் மாவு சிந்திய மாதிரி வெள்ளை விரவிக் கிடக்கிறது.

இந்த வீக்எண்ட் எல்லாம் வீடியோ பார்த்துக் கொண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தோம். ஆ! அந்த வீடியோ பற்றி அவசியம் உங்களுக்குச் சொல்ல வேண்டும். ஏன் என்றால் அதன் நாயகன், உங்கள் ஹீரோ, ஐன்ஸ்டீன். ஆமாம் உங்களுக்குப் பிடித்த அதே விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான். ஆனால் அது சொல்ல முயற்சிப்பது அவரது மனைவியின் பரிதாபக் கதையை.

மிலிவா இதுதான் அவர் பெயர். அவர் பெற்றோர்களுக்குச் செல்லமாக மிட்ஸா. படிப்பில் கெட்டிக்காரி.கணக்கு அவளுக்குத் தண்ணீர் பட்ட பாடு. அதைத் தவிர இசை இலக்கியம் எனக் கலக்குகிறாள். ஆனால் ஒரு சிறு குறை. பிறவிக் குறை. அவள் இடுப்பு எலும்பில் ஏதோ பிரசினை. அவளால் விந்தி விந்திதான் நடக்கமுடியும்.

படிப்பில் அவள் ஜொலிப்பதைப் பார்த்த அவள் அப்பா, அவளுக்குப் பதினைந்து வயதாகும் போது, அவளை ஸ்பெஷல் பெரிமிஷன் வாங்கி ஒரு பள்ளியில் சேர்க்கிறார். எதற்கு ஸ்பெஷல் பெர்மிஷன்? ஏனெனில் அது ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி. ஆனால் நல்ல பள்ளி. பெண்களுக்கு அதைப் போன்ற பள்ளிகள் இல்லை. அந்தக் காலத்தில் அங்கேயும் –அதாவது ஐரோப்பாவிலும் – பெண்கள் படிப்பதை சமூகம் ஊக்குவிக்கவில்லை. ஆனால் தங்கள் பெண் குழந்தைகள் மீது நம்பிக்கையும் பிரியமும் வைத்து அவர்களை ஆண்கள் பள்ளிக்குப் படிக்க அனுப்புகிற அபூர்வ அப்பாக்கள் இருந்தார்கள், உங்களைப் போல.
 
அங்கேயும் கலக்குகிறார் மிலிவா. பள்ளி இறுதித் தேர்வில், கணிதம், பிசிக்ஸ் இரண்டிலும் முதல் மாணவி. மேலே படிக்க பல்கலைக் கழகத்திற்குப் போக வேண்டும். ஆனால் அவர்கள் நாட்டில்- அதாவது செர்பியாவில்- அதற்கு வசதி இல்லை. மிலிவாவை வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவுசெய்தார் அவரது அப்பா. அதற்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். அந்த நுழைவுத் தேர்வில்  ஆறுக்கு 4.5 மதிப்பெண்கள் பெற்று
21 வயதில் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் பாலிடெக்னிக்கில் வந்து சேர்கிறார் மிலிவா. ஆறு மாணவர்கள் உள்ள வகுப்பில் ஒரே பெண் மாணவி.
ஐன்ஸ்டீனின் கதை என்று சொன்னாய். ஆனால் அவரைப் பற்றி ஒரு வரியைக் கூடக் காணோமே என்றுதானே கேட்கிறீர்கள்? வருகிறார், வருகிறார், இதோ, வந்தேவிட்டார்! 

மிலிவா சேர்ந்த அதே பாலிடெக்னிக்கிற்கு வந்து சேர்கிறார் ஐன்ஸ்டீன். அந்த வகுப்பில் இருந்த ஆறு மாணவர்களில் அவரும் ஒருவர். அப்போது அவருக்கு வயது 17. மிலிவாவை விட 4 வயது சின்னவர். வெயிட், வெயிட்!. உடனே காதல் அரும்பிவிடவில்லை. அதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம். வாழ்க்கை விளையாட்டின் விதிகள் வேறு.

முதல் இரண்டு வருடம் உங்கள் ஐன்ஸ்டீனை யாரும் கண்டு கொள்ளவே இல்லை. மிலிவாதான் தொடர்ந்து கலக்கிக் கொண்டிருந்தார். ஒரு செமஸ்டரை ஹைடல்பெர்க் என்ற ஊரிலிருந்து படிக்கலாம் என்று போயிருந்தார் மிலிவா. அப்போதுதான் இருவருக்குமிடையில் கடிதப் போக்குவரத்துத் துவங்கியது. “பயந்தாங்குள்ளி, ஓடிப்போயிட்டியே!” என்றல்லாம் சீண்டினார் ஐன்ஸ்டீன். “இருடா, வந்து வெச்சுக்கிறேன் கச்சேரியை” என்று பதிலுக்கு மிரட்டினார் மிலினா.
இரண்டு பிசிக்ஸ் மாணவர்களிடையேயும் கெமிஸ்ட்ரி வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

சரிப்பா. மிச்சத்தை அப்புறம் எழுதுகிறேன். வேலை கிடக்கு. எல்லாத்தையும் இ-மெயிலேயே எழுதிவிட முடியாது. முடிந்தால் ஞாயிற்றுக் கிழமை காலை (உங்க ஞாயிற்றுக் கிழமை இரவு) கூப்பிட்டுப் பேசுங்க. போனுக்கு காசை வேஸ்ட் பண்ணாதீங்க.. . ஸ்கைப் பண்ணுங்க. லேப்டாப்போடுதான் உட்கார்ந்திருப்பேன். கழுதை கெட்டா கம்ப்யூட்டர்!.
அன்புடன்
ஜனனி.
“அப்பா, நான் தெரியறேனா? கிளியரா இருக்கா? நீங்களும் உங்க வெப்கேமை ஆன் பண்ணிக்கங்க”
“ஞாயிற்றுக் கிழமைதானே கூப்பிடச் சொன்னே?”
“சனிக்கிழமை சமையல் சாமான்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் போகலாம்னு இருந்தேன். இன்னிக்கு ஒரு ஓசி ரைட் கிடைச்சது. வேலையை முடிச்சிட்டேன்”
”ஐன்ஸ்டீனை அப்படியே அம்போனு விட்டுட்டுப் போயிட்டேயே?”
“ஐன்ஸ்டீன்தான் மிலிவாவை அம்போனு விட்டவரு”
“இரு! இரு. அதற்குள்ள போவதற்கு முன்னால, ஒரு திருத்தம். மிலிவாவின் தேசம் செர்பியானு எழுதியிருந்த. ஆனால் அப்போது அது ஹங்கேரி. அதுதான் இன்னிக்கு செர்பியா”

“சரி சரி. நீங்க உங்க பூகோளப் பாடத்தை ஆரம்பிக்காதீங்க. வாட்ஸ் இன எ நேம்?
“சரி நீ உன் வரலாற்றை ஆரம்பி. ஐன்ஸ்டீனுக்கும் மிலிவாவிற்கும் இடையில காதல் பத்திக்கிச்சுனு கதையை நிறுத்தின.. ஓடிப்போன மிலிவா திரும்பி வந்தாளா இல்லியா?”
”வந்தார். வந்தபோது இரண்டு பேருக்கும் இடையில் இருந்த தயக்கங்கள் உடைந்து போயிருந்தன. ஐன்ஸ்டீன் மிலிவாவை “டாலி!”னு கொஞ்சினார். மிலிவா ஐன்ஸ்டீனை ஜானினு கூப்பிட்ட்டா”
“வீட்டுக்கு விஷயம் தெரிஞ்ச போது பெற்றோர்கள் என்ன சொன்னாங்க?”
“ மிலிவா வீட்டிலே எதிர்ப்பில்லை. பார்க்கலாம்னு மையமா சொல்லி வைத்தாங்க.”
”:ஊனமுற்ற பெண், புத்திசாலியான,படிப்பில் கெட்டிக்காரியான பெண். அதனால் மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டமாயிருக்கும்னு அவங்க நினைச்சிருக்கலாம். ஐன்ஸ்டீன் வீட்டிலே என்ன சொன்னாங்களாம்?”
“அவங்க இந்தக் காதலைக் கடுமையா எதிர்த்தாங்க.”
“ஏன்?”
“அவ உன்னை விட மூத்தவ, நொண்டி, புத்தகப் புழு. அதெல்லாம் விட முக்கியமான காரணம் அவ யூதர் இல்ல. வெள்ளைக்காரங்ககிட்டேயும் ஜாதி மத வித்தியாசங்கள் எல்லாம் இருந்திருக்குப்பா”
“வெள்ளைக்காரன்னா என்ன பெரிய கொக்கா? தோல்தான் வெள்ளை. மனசு, மூளை எல்லாம் ஒண்ணுதானே?”
“ஆனா அவங்க எதிர்க்க எதிர்க்க இவங்க காதல் வலுவாச்சு”
“வளராதா பின்னே? இந்தப் பெற்றோர்களுக்கு ஒண்ணு புரியவே மாட்டேங்குது. தண்ணில நெருப்பைப் போட்டா சாம்பல். நெருப்பு மேல தண்ணியை வைச்சா சமையல்!”
“சினிமாக்கு ஏதாவது டயலாக் எழுதப் போறீங்களா அப்பா?”
“இல்லையே, ஏன்?”
“திடீர்னு பஞ்ச் டயலாக்கெல்லாம் விடறீங்களே?”
“சரி. நீ கதையைச் சொல்லு. காதல்னா அப்புறம் கல்யாணம்தானே?’
“அதுதான் இல்லை. இங்கே கர்ப்பம்”
“என்னம்மா, இப்போ நீ சினிமாக் கதை சொல்ல ஆரம்பிச்சுட்ட?”
”அப்பா! இது கதையல்ல நிஜம்!”
“சரி சொல்லு”
“காதலில் மனசு விழுந்ததும் கல்வியில் கவனம் சிதைந்தது.  இறுதித் தேர்வின் இறுதியாண்டில் இருவருமே தடுமாறினார்கள். பட்டம் பெற வேண்டுமானால் குறைந்தது ஐந்து புள்ளிகள் வேண்டும். மிலிவா பெற்றது 4. ஐன்ஸ்டீன் பெற்றது 4.9.  அதை 5 என்று ரவுண்ட் ஆஃப் செய்து ஐன்ஸ்டீனுக்கு பாஸ் கொடுத்துவிட்டார்கள். ஆனால் மிலிவா ஃபெயில். அவர் இயற்பியலில் நிறைய மதிப்பெண் எடுத்திருந்தும் ஆசிரியர்கள் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.”

“கர்ப்பம் கிர்ப்பம் என்று பயம் காட்டினாயே?”
“இருங்கப்பா!. ஐன்ஸ்டீனுக்கு பட்டயம் கிடைத்தது. ஆனால் வேலை கிடைக்கவில்லை. மிலிவா அடுத்த தேர்வுக்குத் தயாராகும் வரை ஒரு சிறிய வேலையில் சேர்ந்தார். இடையில் ஒரு மூன்று நாள் இருவரும் விடுமுறைக்காக வெளியூர் போனார்கள். அதன் விளைவு சில மாதங்களுக்குப் பிறகு தெரிந்தது. மிலிவா கர்ப்பம்.”
“அச்சச்சோ!”
“அந்தக் குழப்பத்தோடு மிலினா அடுத்த தேர்வையும் எழுதினார். ஆனால்…”
 அதிலும் பெயில்”
”ஆமாம். இப்போது மிலிவா ஐன்ஸ்டீனை அதிகம் சார்ந்திருக்கத் துவங்கினார். குழந்தைக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வார். தேர்வில் தேறாவிட்டாலும் தன்னுடைய புத்திக் கூர்மை, அறிவியல் அறிவு எல்லாம் அவருக்குத் தெரியும். அதை வெளிப்படுத்த உதவுவார் என்றெல்லாம் நம்பினார். இதற்கிடையில் ஜூரிச்சிலிருந்து 20 கீ.மீ தள்ளியிருந்த ஒரு பள்ளியில் லீவ் வேகன்சியில் ஐன்ஸ்டீனுக்கு வேலை கிடைத்தது. அதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஐன்ஸ்டீன மிலிவாவைச் சந்திப்பதைத் தவிர்க்கத் தொடங்கினார்.”
”சாக்கு என்று ஏன் நினைக்க வேண்டும்? உண்மையிலேயே அவருக்கு நேரமில்லாமல் போயிருக்கலாம்”
“அது என்னவோ? மிலிவா பிரசவத்திற்குத் தன் தாய் வீட்டுக்குப் போனார். பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதைப் பார்க்கக் கூட ஐன்ஸ்டீன் வரவில்லை.”
“ச். . .ச்”
”அப்போது மிலிவாவிற்கு வயது 27. தேர்வில் தோற்றவர். கையில் குழந்தை. ஆனால் கல்யாணமாகாத பெண். குழந்தைக்குக் காரணமானவரோ திரும்பிப் பார்க்கவில்லை. எந்தக் குடும்பம் அவளைக் கெட்டிக்காரி என்று தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடியதோ அதே குடும்பம் அவரை இப்போது ஒரு அவமானமாகக் கருதத் தொடங்கியது.”
“அவர்களது வேதனை உனக்குப் புரியாதுமா?”
“இல்லப்பா. நான் அவர்களைக் குறை சொல்லலை. மிலிவாவின் சரித்திரத்தைப் புரட்டினால் அவருக்குக் கடைசிவரை துணை நின்றது அவர் பிறந்த குடும்பம்தான்.”
“ஐன்ஸ்டீன் மிலிவாவைத் கல்யாணம் செய்து கொண்டதாகத்தான் நான் படித்திருக்கிறேன்”
“ஆமாம். திருமணம் செய்து கொண்டார். அவருக்கு காப்புரிமை அலுவலகத்தில் வேலை கிடைத்த பிறகு.”
“கல்யாணத்திற்கு முன் பிறந்த குழந்தை?”
“அது பெரிய மர்மம். அது சில நாட்களிலேயே இறந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் சிலர் அதை யாருக்கோ மிலிவா தத்துக் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்கிறார்கள். எது உண்மையோ? ஆனால் ஐன்ஸ்டீன் மிலிவாவைத் திருமணம் செய்து கொண்டபோது அவரிடம் குழந்தை இல்லை”
”இப்போது உன் வரலாறு மர்மநாவல் ஆகிவிட்டது”
“இல்லப்பா. இன்னும் நிறைய இருக்கு. கொஞ்ச நேரத்தில் அது சோக நாடகம் ஆகப் போகிறது”
“சரி. நீ  போய்த் தூங்கு. நாளைக்குப் பேசலாம்”

அப்பா, மிலிவாவின் கதையை வீடியோவாகப் பார்த்தபின் தூங்க முடியவில்லை. அதைச் சொல்லாவிட்டால் எனக்குத் தலை வெடித்து விடும். அதனால்தான் இந்த மெயில்
திருமணத்திற்குப் பின் ஐன்ஸ்டீன் தன் ஆராய்ச்சிகளில் கவனத்தைத் திருப்பினார். இரண்டாண்டுகள் கழித்து ஒரே வருடத்தில் இயற்பியலில் புரட்சியை ஏற்படுத்திய நான்கு கட்டுரைகளை வெளியிட்டார். அதை அவர் மிலிவாவின் துணை இல்லாமல் எழுதியிருக்க முடியாது. ஏனெனில் அவர் அப்போது வாரத்திற்கு ஆறுநாள் காப்புரிமை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு வார விடுமுறை நாளில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
குழந்தையைப் பிரிந்த சோகம், தேர்வில் தோற்ற ரணம் எல்லாவற்றுக்கும் அது அவருக்கு மருந்தாக இருந்திருக்க வேண்டும். ஐன்ஸ்டீனுக்கும் மிலிவாவிற்கும் திருமணமான இரண்டாம் ஆண்டு பியர்ரி-மேரி க்யூரி தம்பதிகளுக்கு நோபல் பரிசு கிடைத்தது. கணவனும் மனைவியுமாக இயற்பியலில் சாதிக்கலாம் என்ற உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அந்தச் செய்தி மிலிவாவிற்குக் கொடுத்தது.

கட்டுரைகள் வெளியான பிறகு ஐன்ஸ்டீனுக்குப் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தது. சில நாட்களில் அவருக்கு இன்னொரு காதல் முளைத்தது எல்ஸா என்ற அந்தப் புதிய காதலி அவரது முறைப் பெண். அதை மிலிவா கண்டிக்க முயன்ற போது ஐன்ஸ்டீனுக்கும் அவருக்கும் சச்சரவு மூண்டது. தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார் மிலிவா.ஐன்ஸ்டீன் எலிசாவோடு குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.
 
வீட்டுக்கு வெளியிலும் சண்டை வெடித்தது. மிலிவா வீட்டை விட்டு வெளியேறிய சில நாள்களில் முதலாம் உலகப் போர் மூண்டது. பிரிந்து போன மிலிவாவிடம் விவாகரத்துக் கோரி நோட்டீஸ் அனுப்பினார் ஐன்ஸ்டீன்.

மனமொடிந்து படுக்கையில் வீழ்ந்தார் மிலிவா. மருத்துவமனையில் சேர்ந்தார்கள். அவரது தோழி ஹெலன் வந்து இரண்டு குழந்தைகளையும் பார்த்துக் கொண்டார். மிலிவாவின் தங்கை சோர்க்காவிற்குச் செய்தி போயிற்று. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்க அவர் வந்தபோதுதான் அந்த விபத்து நேர்ந்தது. அது-

வரும் வழியில் சோர்க்கா ராணுவ வீரர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளானார். அவர் உடனடியாக ஒடிந்து போய்விடவில்லை. அக்கா குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கடமை உணர்வு அவரை உந்தியிருக்கலாம். தன்னுடைய துயரத்தை வெளியே கொட்டாமல் உள்ளேயே அடைத்து வைத்திருந்ததாலோ என்னவோ மெல்ல மெல்ல சில நாள்களில் அவர் மன நோய்க்கு உள்ளானார். உதவி செய்ய வந்தவருக்கே உதவி தேவையாக ஆகிவிட்டது.

வேறு வழியின்றி மிலிவா விவாகரத்துக்கு சம்மதித்தார். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஐன்ஸ்டீன் ஏதாவது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார். ஐன்ஸ்டீனிடம் அப்போது பணம் இல்லை. ஆனால் அவருக்கு அந்த வருடம் நோபல் பரிசு கிடைக்கும் என்ற பேச்சிருந்தது. ”பரிசு கிடைத்தால் அந்தப் பணத்தை தந்து விடுகிறேன். உனக்கல்ல குழந்தைகளுக்கு. அதை நீ அவர்கள் பெயரில் முதலீடு செய்ய வேண்டும்” என்று நிபந்தனைகள் விதித்தார்.

பரிசு கிடைத்தது. ஆனால் அதைப் பெற்றுக் கொள்ள ஐன்ஸ்டீன் விழாவிற்குப் போகவில்லை. இரண்டாண்டுகள் கழித்து அதை அவரிடம் வீட்டில் வந்து தந்தார்கள். அந்தப் பணத்தை அவர் மிலிவாவிற்கு அனுப்பி வைத்ததும், அவர் அந்தப் பணத்தைக் கொண்டு குழந்தைகள் பெயரில் வீடு வாங்கியதும் தனிக் கதை.

ஐன்ஸ்டீன் நோபல் பரிசு பெற்றபின் பெரிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவில்லை. புதிய அறிவியல் தத்துவங்களை வெளியிடவில்லை. அதனால் அவர் மிலிவாவின் எண்ணங்களைக் கொள்ளையடித்து நோபல் பரிசு பெற்றுவிட்டதாக இப்போதும் சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படியோ போகட்டும். அப்பா, என் கேள்வியெல்லாம் இதுதான்:  
ஏன் உலகம் எப்போதும் பெண்களை இப்படி நடத்துகிறது, வெறும் கறிவேப்பிலைகளாக?

*
 
 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *