காதல் என்னும் காந்தம்

கவலையோடு அமர்ந்திருந்த அக்கா எழுந்து சென்று கடவுள் படத்தின் முன் நின்று கண் மூடிப் பிரார்த்திப்பதைப் பார்த்தார் மேரி. அக்கா இவ்வளவு இறுக்கமாக இருக்கிறார் என்றால் பிரச்சினை நிச்சியம் சீரியஸானதாகத்தான் இருக்க வேண்டும்.
“என்ன ப்ரோனி. என்ன பிரச்சினை?” என்றார் மேரி.
“பிரச்சினைதான், ஆனால் அதை நீயும் நானும் தீர்க்க முடியாது. அந்தக் கடவுள் மனசு வைத்தால் முடியலாம்”
”உங்க கடவுளுக்கு எவ்வளவு வேலையோ?, எத்தனை பேர் அவரிடம் க்யூவில் நிற்கிறார்களோ? என்கிட்ட சொல்லு”
“ப்ச்” என்று அலுத்துக் கொண்ட மேரியின் அக்கா ப்ரோனிஸ்லவா ”இந்த வருஷம் என் மருத்துவப் படிப்பைத் தொடரமுடியாது போலிருக்கிறது” என்றார்.
“ஏன்?” என்றார் மேரி. கேட்டபின்புதான் அப்படிக் கேட்டிருக்க வேண்டாம் எனத் தோன்றியது.
“என்ன ஏன்? வீட்டின் நிலைமை உனக்குத் தெரியாதா?” மேரியை உற்றுப் பார்த்தார்.
நிலைமை மோசமாகத்தானிருந்தது.மேரியின் அப்பா ஒரு பள்ளி ஆசிரியர். ஆனால் கொஞ்சம் பூர்வீகச் சொத்துக்கள் இருந்தன. ரஷ்ய ஜார் மன்னனின் ஆளுகைக்குள் அடிமைப்பட்டுக் கிடந்த போலந்தின் விடுதலைக்காகப் போராடியதால் அவை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. அதிலிருந்து சிரமமான வாழ்க்கைதான். இறுதிப் பொதுத் தேர்வில் தங்க மெடல் வாங்கிப் பள்ளிப் படிப்பை முடித்திருந்த மேரி, மேலே படிக்க முடியாமல் மூன்று நான்கு பேருக்கு டியூஷன் எடுத்து சம்பாதித்துக் கொண்டிருந்தார்
”இந்த ஆண்டு கல்விக் கட்டணம் கட்டுவது கூட முடியாது என்று தோன்றுகிறது.” என்றார் அக்கா.
”படிப்பை நீ நிறுத்த வேண்டாம் ப்ரோனி, நான் ’ஹெல்ப்’ பண்றேன்.”
“முடியாது மேரி, உன் டியூஷனில் வரும் பணம் போதாது”
“நான் அதைச் சொல்லவில்லை. வேறு ஒரு யோச்னையில் இருக்கிறேன்”
”என்ன?”
”கவலைப்படாதே, நாளைக்கு உங்க கடவுள் உனக்கு ஒரு வழி சொல்வார்” என்ற மேரி, சற்று நிறுத்தி, ”கடவுளை நம்பாத என் மூலம்“ என்று புன்னகைத்தார். பனிரெண்டு வயதில் அடுத்தடுத்து அம்மாவையும் அக்காவையும் பறி கொடுத்ததில் மேரிக்குக் கடவுள் மீதிருந்த  நம்பிக்கை போய்விட்டது. ஆனால் இந்த அக்காவின் மீது பிரியம் அதிகமாகிவிட்டது
அப்பா வழிப் பணக்கார உறவினர் ஒருவர் வீட்டோடு வந்து தங்கி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு படிப்புச் சொல்லிக் கொடுக்கும்படி கொஞ்ச நாளாகவே கூப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். மேரிதான் அந்த வேலையை எடுத்துக் கொள்வதா இல்லை மேலே படிப்பதா என யோசித்துக் கொண்டிருந்தார். இனி யோசனைக்கே இடம் இல்லை.
மேரியின் முடிவைக் கேட்ட ப்ரோனி திடுக்கிட்டார். ”வேண்டாம் மேரி. நீ எங்கேயோ இன்னொருத்தர் வீட்டில போய் கஷ்டப்படுவ. அந்த உழைப்பில நான் கல்லூரிக்குப் போய் டாக்டர் ஆகணுமா? வேணாம்மா. நான் படிப்ப நிறுத்திறேன்.”
“நீ ஏன் மருத்துவம் படிக்கணும்னு நினைச்சேங்கிறது உனக்கு மறந்து போயிடுச்சா?”
ப்ரோனிக்கு அது நன்றாகவே ஞாபகம் இருந்தது. அக்கா, டைபாயிடிலும் அம்மா டிபியிலும், அடுத்தடுத்து இறந்து போனது அவரை உலுக்கியது.அன்று எடுத்த முடிவுதான் குடும்பத்தில் யாராவது ஒருவராவது மருத்துவம் படிப்பதென்பது. ஆனால் மேரிக்கு இயற்பியலிலும், கணிதத்திலும் ஈடுபாடு இருந்த அளவு மருத்துவத்தில் இல்லை.
“நல்லா ஞாபகம் இருக்கு. ஆனா…..”
”எனக்கு கஷ்டம் ஒண்ணும் இல்ல ப்ரோனி. அது சொந்தக்காரங்க வீடுதான். குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித் தர்ற வேலைதான்.”
”ஆனா, நீ சின்னப் பொண்ணு. என்னை விடப் படிப்பில கெட்டிக்காரியும் கூட. நீ படி. நான் வேலைக்குப் போறேன்”
”நாம இரண்டு பேருமே படிக்க முடியும் ப்ரோனி .
“அது எப்படி முடியும்?’
முதல்ல நீ படிப்பை முடி. இன்னும் இரண்டு வருஷம்தான். அந்த இரண்டு வருஷம் நான் வேலை செய்யறேன். நீ படிச்சு டாக்டரானதும் என்னைப் படிக்க வை.” என்றார் மேரி.
அட, அது கூட நல்ல யோசனைதான் என்று நினைத்தார் ப்ரோனி. அக்கா படிக்கப் போனார். மேரி சொந்தக்காரர் வீட்டில் வேலைக்குப் போனார். அங்குதான் அவரது முதல் காதல் துளிர்த்தது.

முதல் காதல்? ஆம். வாள் வாளாக நீட்டிக் கொண்டிருக்கும் கற்றாழைகளுக்கு நடுவே பூத்த கருஞ் சிவப்பு மலர் போல வாழ்வில் வந்த முதல் வசந்தம் அது. அந்த உறவினர்கள் செல்வந்தர்களாக இருந்தார்கள் ஆனால் சிநேகமானவர்களாக இல்லை. நீ தங்க மடல் வாங்கின கெட்டிக்காரியாக இருக்கலாம், ஆனால் நீ இங்கு தங்க வந்த வேலைக்காரி என நிமிடத்திற்கு நிமிடம் நினைவூட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடத்தில் பணம் இருந்த அளவிற்கு அறிவு தாகம் இருக்க வில்லை. படிப்பு என்பது கூட அங்கே சமூக அந்தஸ்திற்காக அணிந்து கொள்ளும் சட்டையைப் போலிருந்தது. வேலையை உதறிவிட்டுப் போய்விடலாமா எனப் பல நேரம் ஓர் எண்ணம் துளிர்க்கும். ஆனால் அக்காவிற்குக் கொடுத்த வாக்கு அதை அடுத்த நிமிடமே முறித்துப் போட்டுவிடும்.
அந்தப் பாலையிலும் ஒரு நிலவு பொலிந்தது. மேரி வேலை செய்யப் போயிருந்த போலந்தின் பெரும் நிலச் சுவான்தார்களில் ஒருவரான ஜெராவ்ஸ்கி குடும்பத்தின் பிள்ளைகளில் ஒருவர் கணிதத்தில் புலியாக இருந்தார்.
வானியலில் எப்படிக் கணிதத்தைப் பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றி ஜெராவ்ஸ்கி அடிக்கடி மேரியிடம் பேசினார். அந்த சிற்றூரில் நிலவிய அறிவுலகத் தனிமையில் அவரும்தான் வேறு யாரிடம் பேச முடியும்?. மேரிக்கு வானியலில் ஈடுபாடு இல்லை. ஆனால் கணிதம் அவரது காதல். கணித ஆசிரியராக இருந்த அப்பாவிடமிருந்து வந்த உந்துதல் அது.
ஜெராவ்ஸ்கியின் மேதமை வெளிப்பட வெளிப்பட கணிதத்தின் மீதிருந்த காதல் அவர் மீதும் பரவியது. ஜெராவ்ஸ்கியும் மேரியும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தார்கள். திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த போது பிரச்சினை வெடித்தது.
“அந்த வேலைக்காரப் பெண்ணையா?” என்று ஜெராவ்ஸ்கியின் அப்பா சீறினார். “அந்தக் குடும்பத்துக் கையில் சல்லிக் காசு கிடையாது தெரியும்ல” என்றார். மேரிக்கு அவமானமாக இருந்தது. ஆனால் அதுதானே உண்மை என்றும் மனது சொன்னது. ”கொஞ்சம் பொறு பேசி சரி செய்யலாம்” என்றார் ஜெராவ்ஸ்கி மேரியிடம்.
மேரி வேலையை உதறிவிட்டு வெளியேறினார். அக்காவிற்கு உதவ வேறு ஒரு வேலை கிடைத்தது. ஜெராவ்ஸ்கி சொன்னதைப் மேரி காத்திருந்தார்.. ஒரு நாள் இரு நாள் அல்ல. ஒரு வருஷம். ஜெராவ்ஸ்கியிடமிருந்து பதில் வரும் வரை. ”அப்பாவின் வார்த்தையை மீற முடியவில்லை. மன்னித்துவிடு” என்றது கடிதம் சுருக்கமாக.

ஒருவருக்கும் தெரியாமல் உடைந்து அழுதார். அது சில நொடிகள்தான். அழுவது பலவீனத்தின் அடையாளம். பலவீனங்களைப் பற்றிக் கொண்டு வாழ்க்கை நகர்த்த முடியாது. உனக்கு வேண்டியது பலமா பலவீனமா என உள்ளம் கேட்டது. தன்னுடைய பலம் எது என்று யோசிக்க ஆரம்பித்தார் மேரி.தன்னுடைய பலம் அறிவு, படிப்பு, ஆராய்ச்சி.  கல்வியின் பக்கம் அவர் கவனம் திரும்பியது.

போலந்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தார். ஆனால் தங்க மெடல் வாங்கிய மாணவி என்ற போதிலும் பல்கலைக்கழகங்கள் அவரை நிராகரித்தன. அவை சொன்ன காரணம்: அவர் ஒரு பெண்! அன்றைய போலந்தில் பெண்கள் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி பெற முடியாது!
காதலும் இல்லை, கல்வியும் இல்லை என்றால் இங்கு இனி வாழ்வதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது மேரிக்கு. “நீ இங்கு வா!” என்று அழைத்தார் பாரிசில் படிப்பை முடித்து மகளிர் மருத்துவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அக்கா. அங்கு மலர்ந்தது அடுத்த காதல்.

பேராசிரியர் பியர் க்யூரி இவ்வளவு இளமையானவராக இருப்பார் என மேரி சற்றும் எதிர்பார்க்கவில்லை. பேராசிரியர் என்றால் கிழவர்களாக இருக்க வேண்டுமா என்ன? பிரஞ்சுக்காரர்களுக்கே உரிய குறுந்தாடி. சற்று முக்கோணமான நீண்ட முகம். ஆனால் அந்தக் கண்கள்! கூர்மையான ஊடுருவிப் பார்க்கும் கண்கள். கல்விக்கே உரிய களை முகத்தில் படர்ந்திருந்தது.
”எதில் ஆராய்ச்சி செய்ய விரும்புகிறீர்கள்?” என்றார் க்யூரி.
”காந்தவியல்”
பேராசிரியர் பியரின் புருவம் ஒரு நொடி உயர்ந்து தாழ்ந்தது. அது அவருக்குப் பிடித்தமான துறை.அந்தத் துறையில் அவர் வல்லுநரும் கூட.
என்ன படித்திருக்கிறீர்கள் எனக் கேட்டுக் கொண்டே பேராசிரியர் கையை நீட்டினார். மேரி தனது சான்றிதழ்களை எடுத்து முன் வைத்தார்.
பாரீஸ் பல்கலைக்கழத்தில் பெற்ற இரண்டு பட்டங்கள். இயற்பியலில் ஒன்று, கணிதத்தில் ஒன்று. இயற்பியலில் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவி. கணிதத்தில் இரண்டாம் இடம். இந்தச் சிறப்புத் தகுதி காரணமாக ஆராய்ச்சிக்கு உதவி அளிப்பதாகச் சொல்லும் கடிதம், மற்றக் கல்விச் சான்றிதழகள்.

பேராசிரியரின் புருவம் மீண்டும் உயர்ந்தது.இம்முறை ஆச்சரியத்தால்.இந்தச் சின்னப் பெண்ணுக்குள் இத்தனை தாகமா?
“என் ஆராய்ச்சிசாலை மிகச் சிறியது” என்றார் க்யூரி
“ஆனால் நீங்கள் வல்லுநர் என எனக்குத் தெரியும்” என்றார் மேரி.
இருவரும் புன்னகைத்தார்கள்.

எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்த்தன. ஆழ்கடல் போல் அகன்று பரந்த பியர் க்யூரியின் அறிவைக் கண்டு பிரமித்தார் மேரி. கூர்ந்த மேரியின் அறிவைக் கண்டு குதூகலித்தார் க்யூரி . காந்தவியல் ஆராய்ச்சிக்கூடத்தில் ஒருவரை ஒருவர் கவர்ந்து கொண்டிருந்தார்கள். காதல் காந்தத்தைவிட வலிமையானது.

இந்தக் கோடையில் ஊருக்குப் போகலாம் என்றிருக்கிறேன் என்றார் மேரி சைக்கிளை மெல்ல மிதித்தபடி. க்யூரிக்கும் மேரிக்கும் பிடித்த இன்னொரு விஷயம் சைக்கிள்.ஆராய்ச்சிக்கு நடுவில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொண்டு அவர்கள் இப்படி சைக்கிளில் பக்கத்து ஊர்களுக்குப் பயணம் போவதுண்டு.

”என்ன?” அதிர்ந்து போன க்யூரி அப்படியே தன் வண்டியை நிறுத்திவிட்டார். முன்னே போன மேரி அதைப் பார்த்து அரை வட்டம் அடித்துத் திருப்பிக் கொண்டு அருகில் வந்தார்.

“என்ன அங்கேயே நின்று விட்டீர்கள்?”
“என்ன சொன்னாய், ஊருக்குப் போகிறயா?. எங்கே போலந்திற்கா?”

“ம். அதுதானே என் தேசம்?”
அரைநொடி தன் கூர்ந்த கண்களால் அவளை உற்றுப் பார்த்தார். “உன் இஷ்டம்!” என்றார்.

பெருந்தன்மையாகப் பேசிவிட்டாரே தவிர முந்தாநாள் பறித்த மல்லிகைப் பூ மாதிரி மனது வாடிவிட்டது. அந்த ஒருமாதத்தில் அடிக்கடி கடிதம் எழுதினார். எல்லாக் கடிதங்களும் ஒரே விஷயத்தைத்தான் பேசின. ஐ மிஸ் யூ.

திரும்பி வந்த மேரியிடம் க்யூரி கேட்ட முதல் கேள்வி: “நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?”

திருமணமான இரண்டாண்டுகளில் ஐரீன் பிறந்தாள். மூன்றாம் ஆண்டு முகிழ்த்தது ஒரு குழந்தை அல்ல, ஒரு தனிமம் (Element) அந்த அறிவியல் தம்பதிகள் உலகிற்குத் தந்தது ஓரு தனிமம். மேரி அதற்குத் தன் தாய்நாட்டின் நினைவாக போலோனியம் என்று பெயர் வைத்தார்.ஆம், எந்த தேசம் அவருக்குக் கல்வி மறுத்ததோ அந்த தேசத்தின் பெயரையே அவரது முதல் கண்டுபிடிப்புக்கு வைத்தார் மேரி.எந்த அடிமை தேசத்தின் விடுதலைக்காக மாண்வராக இருந்த போது குரல் எழுப்பினாரோ அந்த தேசத்திற்கு அறிவியல் உலகில் அழியாத ஒர் இடம் தேடிக் கொடுத்தார்.

அதற்கு அடுத்த ஆறுமாதத்தில் இன்னொரு கண்டுபிடிப்பு. அதுதான் ரேடியம். க்யூரி ஏற்கனவே கண்டுபிடித்திருந்த எலக்ட்ரோ மீட்டர் என்ற கருவியின் மூலம் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார் மேரி. யுரேனியம் போன்ற பொருட்களைச் சுற்றியுள்ள காற்று மின்சாரத்தைக் கடத்தும் ஆற்றல் கொண்டவை என்பதுதான் அது. இந்த ஆற்றல் ஒரு வேதியல் விளைவல்ல அணுவிலிருந்தே கிடைக்கும் ஆற்றல் என்பதைக் கண்டுபித்தார்கள் க்யூரியும் மேரியும். அதற்கு அவர்கள் வைத்த பெயர் ரேடியோ ஆக்டிவிட்டி. அதுதான் இன்று வரை அணுசக்திக்கான ஆதாரம்.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்தக் கண்டுபிடிப்பிற்காக அந்தத் தம்பதிக்கு நோபல் பரிசு கிடைத்தது. இன்றுவரை கணவனும் மனைவியும் ஜோடியாக நோபல் பரிசு பெற்ற ஒரே தம்பதி க்யூரியும் மேரியும்தான்.

சடசடவென்று மழை இறங்கியது.சரம் சரமாய் வெள்ளித் துளிகள் வீதியை நிறைத்தன. சாலையைக் கடப்பதற்காக காத்துக் கொண்டிருந்த பேராசிரியர் க்யூரி சற்றுத் தயங்கினார். அவர் உள்ளத்தில் ஆயிரம் சிந்தனைகள் பாய்ந்து கொண்டிருந்தன. ஆராய்ச்சி பற்றித்தான். அந்த நிமிடமே ஆராய்ச்சிக் கூடத்தைத் திறந்து சோதனைகள் செய்து பார்த்துவிடவேண்டுமென மனது பறந்தது. ‘கரைந்தா போய்விடுவோம்’ எனச் சொல்லிக் கொண்டே மழையைப் பொருட்படுத்தாமல் சாலையைக் கடக்க இறங்கினார். எதிரே வந்த எமனை அவர் கவனிக்கவில்லை.

எமன்? ஆம்.ஆனால் அவன் எருமை மேல் வரவில்லை. குதிரைமேல் வந்தான். காற்றின் வேகத்தில் வந்த குதிரை வண்டி ஒன்று அவர் மேல் மோதியது. விழுந்தார். வண்டிச் சக்கரங்கள் அவர் தலைமேல் ஏறி இறங்கின. கபாலம் நொறுங்கியது. அதற்குள் ஒளிந்திருந்த ஆயிரமாயிரம் அறிவியல் சிந்தனைகளும்தான்.

மேரியும் நொறுங்கிப் போனார். 24 வயதில் முதல் காதல் முறிந்த போது இருந்த உறுதி 39 வயதில் கணவனை இழந்த போது காணாமல் போயிருந்தது. “மீள முடியாத மிக மோசமான தனிமை என்னைச் சூழ்ந்தது” என எழுதுகிறார் மேரி.

ஆனால் பாரீஸ் பல்கலைக்கழகம் அவரை இழக்கத் தயாராக இல்லை.க்யூரி வகித்து வந்த அதே பேராசிரியர் பதவியை அவருக்கு அளித்தது.மனதைத் தேற்றிக் கொள்ள வேறு வழி தெரியவில்லை. மெல்ல மெல்ல மேரி ஆராய்ச்சியில் இறங்கினார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அந்த ஆராய்ச்சிகள் இன்னொரு நோபல்பரிசை ஈட்டித் தந்தன. இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே பெண்மணி மேரி ஒருவர்தான்.

ஐரோப்பாவில் ஆராய்ச்சிக்காக டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி, பாரீஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியர், இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஒரே பெண் என அடுத்தடுத்து அவர் மகுடத்தில் சேர்ந்த மாணிக்கங்களைக் கண்டு உலகம் பிரமித்தது. போலந்து சிலிர்த்தது. தாய் மண்ணுக்குத் திரும்பி வாருங்கள் என அறிவுஜீவிகள் பட்டாளம் ஒன்று அவரை நேரில் சந்தித்து அழைத்தது. பத்திரிகைகள் பகிரங்கமாக இயக்கம் நடத்தின.எந்தப் பல்கலைக்கழகம் அவர் பெண் என்பதற்காக அவரைச் சேர்ந்த்துக் கொள்ள மறுத்ததோ அது தனது வளாகத்தில் அவருக்குச் சிலை எழுப்பியது.

அந்த ‘சல்லிக்காசு இல்லாத வேலைகாரப் பெண்’ தாயகம் திரும்பி அங்கே ஒரு ஆராய்ச்சிக் கழகத்தை நிறுவினார். அதன் முதல் தலைவராக அவர் நியமித்தவர் ஒரு பெண். அவர்: அவரது அக்கா டாக்டர்.ப்ரோனி!
காசில்லாத பெண் என்பதற்காக காதலைக் கைவிட்ட ஜெராவ்ஸ்கி அனலெட்டிகல் ஜியாமெட்ரி துறையில் பெரும் மேதையாகத் தடம் பதித்தார். ஆனால் அவர் வாழ்க்கை தடுமாறியது. ஜெர்மானியர்களின் படையெடுப்பின் போது இவரது வீடும், ஆராய்ச்சி ஆவணங்களும் அழிக்கப்பட, சில காலம் அகதி முகாமிலும், பின் ஒற்றை அறை கொண்ட மாணவர் விடுதியிலும் வாழ்ந்து மறைந்தார்.
எது உண்மையான செல்வம் என்பது ஏனோ பலருக்குத் தெரியாமலே போய்விடுகிறது.

 

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these