நள்ளிரவில் நடந்த நாடகம்

நள்ளிரவில் நடந்த நாடகம்

மாலன்

லோக்பால் மசோதா நிறைவேறுவது தந்திரத்தால் முறியடிக்கப்பட்டது

 

அந்த வியாழக்கிழமை (டிசம்பர் 29) காலையிலிருந்தே ஊடக உலகை ஒரு பரபரப்புத் தொற்றியிருந்தது. மாநிலங்கள் அவையில் லோக்பால் மசோதா தாக்கலாக இருந்தது. அதற்கு இரு தினங்களுக்கு முன் மக்களவையில் பெரும்பாலான எதிர்கட்சிகளின் வெளிநடப்பிற்குப் பின் அந்த மசோதா நிறைவேறியிருந்தது. மாநிலங்களவையிலும் நிறைவேறி, ஜனாதிபதி கையெழுத்திட்டுவிட்டால் அது சட்டமாகிவிடும். ஜனாதிபதியின் கையெழுத்தைப் பெறுவதில் பிரசினைகள் இல்லை. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேறுமா என்பது பெரிய கேள்விக்குறியாக முளைத்து நின்றது.

 

கணக்கில் பிணக்கு

காரணம் மாநிலங்களவையில் காங்கிரசிற்குப் பெரும்பான்மை இல்லை. 243 உறுப்பினர்கள் உள்ள மாநிலங்களவையில் காங்கிரசின் பலம் 71. அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று பார்த்தாலும் கூட பெரும்பான்மை இல்லை. அப்போதும் அதன் பலம் 95தான். மசோதா நிறைவேற 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

 

கூட்டணிக் கட்சிகளில் பல முறுக்கிக் கொண்டு நின்றன. லோக்பால் மசோதாவின் மூன்றாம் பகுதி மாநிலங்களில் அமைக்கப்பட வேண்டிய லோக் ஆயுக்தாவிற்கான மாதிரி விதிகளை வகுத்திருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் உள்ள எல்லா மாநிலக் கட்சிகளும் அது மாநில சட்டமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் தலையிடுவதாகும், மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகும் என எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. திரிணாமூல் காங்கிரசின் எதிர்ப்பை அடுத்து இந்தப் பிரிவு ‘மாநிலங்கள் விரும்பினால் இந்த விதிகளை ஏற்கலாம்’ எனத் திருத்தம் செய்து மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் கூட திருணாமூல் அதை ஏற்கவில்லை. அந்த மூன்றாம் பிரிவையே திரும்பப் பெற வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தது.

 

திருணாமூலின் ஆதரவும் இல்லையென்றால் ஐ.மு.கூவின் பலம் 89 ஆகக் குறைந்துவிடும், இந்தச் சூழ்நிலையில் மசோதா எப்படி மாநிலங்களவையில் நிறைவேறும் என்ற கேள்வி வியாழன்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்து நின்றது.

 

ஆளும்கட்சியின் அவசரம்

 

காங்கிரசைப் பொறுத்தவரை இந்த மசோதா நிறைவேறுவது முக்கியம்.ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தலின் போது எதிர்கட்சிகள் காங்கிரசை ஊழல் மன்னன் என பிரசாரம் செய்யும். 2ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் எனப் பட்டியலிடும். எதிர்கட்சிகள் மட்டுமன்றி இந்த முறை அன்னா ஹசாரே குழுவினரும் காங்கிரசிற்கு எதிராக பிரசாரம் செய்வார்கள். அதையெல்லாம் முறியடிக்க அதற்கு இந்தச் சட்டம் கை கொடுக்கும். ஊழலுக்கு எதிராக சட்டம் கொண்டுவந்தர்கள் நாங்கள்தான் என மார்தட்டிக்கொள்ள உதவும். குறிப்பாக உ.பி.யில் மாயாவதியை ஊழல் அரசியாகச் சித்தரித்து தன்னை அவரது கட்சிக்கு மாற்றாக நிறுத்திக் கொள்ள முடியும். அதனால் அது மசோதாவை ’எப்படியாவது’ நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தது.

 

எதிர்கட்சிகள் அதற்கு அந்த வாய்ப்பைக் கொடுத்துவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தன. லோக்பாலுக்கு தேர்தல் கமிஷன் போல் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அமைந்த அமைப்பு என்ற அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி சொன்னதனாலேயே மக்களவையில் அதற்கான சட்டத்திருத்தத்தைத் தோற்கடித்திருந்தது பா.ஜ.க.

 

இந்தச் சூழ்நிலையில் மாநிலங்களவையில் எப்படி மசோதா நிறைவேறப்  போகிறது என்பதைக் காணப் பலர் ஆவலாக இருந்தனர். லோக்பால் என்ற கருத்தாக்கத்தையே எதிர்க்கும் சமாஜ்வாதி, லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதள், ஆகியவையும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் வாக்கெடுப்பின் போது வெளியேறிவிட்டால், திருணாமூலும், சிவசேனாவும் வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் நடுநிலை வகித்தால் மசோதா நிறைவேறிவிடும் என ஒரு கணக்குப் போடப்பட்டது.

 

பேச்சுக் கச்சேரி

வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் இணை அமைச்சர் நாராயணசாமி மசோதாவைத் தாக்கல் செய்த பின் எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி பேச்சைத் துவக்கினார். ஒரு வழக்கறிஞருக்கே உரிய சாதுர்யத்துடனும், வாக்குவன்மையோடும் மசோதாவை அக்கு அக்காகப் பிரித்து அலசினார். அதன்பின் வரிசையாக ஒவ்வொருவராகப் பேசினார்கள், பேசினார்கள் பேசிக் கொண்டே இருந்தார்கள். ஒரே ஒரு உறுப்பினர் இருக்கிற கட்சிக்குக்கூட வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போதே திரைமறைவில் ‘ஏதோ நடக்கிறது’ என்று பொறிதட்டியது.

மாலை 5:30, 6 மணி வாக்கில் காங்கிரஸ் உயர்மட்டக் குழு –சோனியா, பிரணாப், சிதம்பரம் ஆகியோர்- முக்கிய ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் எனச் செய்தி வந்தது. திருணாமூலோடும் மற்ற கட்சிகளோடும் காங்கிரஸ் ‘பேச்சு வார்த்தை’ நடத்திக் கொண்டிருக்கிறது என ஊகங்கள் கசிந்தன. திருணாமூல் தன் நிலையில் உறுதியாக இருக்கிறது அது அளித்துள்ள சட்டத்திருத்தங்களைத் திரும்பப் பெறப் போவதில்லை என அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. மாயாவதி தனது கட்சியின் எம்.பி.கள் அனைவரும் அவையில் இருக்க வேண்டும், வெளிநடப்பு செய்யக்கூடாது, அவைக்கு வராமல் இருக்கக் கூடாது என ஆணையிட்டிருப்பதாகச் செய்தி வந்தது. இடதுசாரிகளும், பாஜகவும் வாக்கெடுப்பை வலியுறுத்தும் என்றும் தகவல்கள் வந்தது. ஆளும் கட்சி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிய ஆரம்பித்தது.

 

திரைமறைவுத் திட்டங்கள்

 

ஆனாலும் கூட ஒரு நாடகத்திற்கான கதை வசனம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் அப்போது ஊகிக்கவில்லை. இரவு 9 மணி அளவில் அமைச்சர் பன்சல், இரவு உணவு தயாராக இருப்பதாகவும் எம்.பி.கள் சிறு சிறு குழுக்களாகச் சென்று உணவருந்திவிட்டு வருமாறும் அழைப்பு விடுத்தார். கூட்டம் இரவு 12 மணி வரைக்கும் நடக்கப் போகிறது என்பது உறுதியானதும் ஆளும் கட்சி வாக்கெடுப்பை நடத்துமா என்ற  கேள்விகள் முளைத்தது.

மாநிலங்களவையின் கூட்டம் ஒரு நாளின் நள்ளிரவைக் கடந்தும் நடக்க வேண்டுமானால் ஜனாதிபதியின் அனுமதி வேண்டும். 12 மணி வரை பேச்சுக் கச்சேரியை நடத்திவிட்டு நேரமாகிவிட்டது என்று கடையைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிடுமோ எனப் பலர் சந்தேகம் ஏற்பட்டது. மார்க்.கம். உறுப்பினர் சீதாராம்யெச்சூரி எழுந்து வாக்கெடுப்பு நடக்குமா நடக்காதா என நேரடியாக அவைத்தலைவரிடம் கேட்டார்.

 

இரவு 11:20 மணி அளவில் அவையில் ஒருவிதப் பதட்டம் நிலவியது. உறுப்பினர்களது உரைகளுக்கு பதிலளித்து இணைஅமைச்சர் நாராயணசாமி பேசிக் கொண்டிருக்கும் போது லாலு கட்சியின் எம்.பி. ராஜ்நீதி பிரசாத் அவரை அணுகி அவர் கையிலிருந்த காகிதத்தைப் பறித்து கிழித்தெறிய முயற்சித்தார். அது முடியாமல் போக நாராயணசாமியின் மேஜையில் இருந்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்தார். அதையடுத்துப் பதற்றம் அதிகரித்தது.

 

நாராயணசாமி இதோ, இப்போது முடித்துவிடுவார், முடித்ததும் வாக்கெடுப்பு நடக்கும் என எதிர்கட்சிகள் காத்துக் கொண்டிருந்தபோது பதற்றம் காரணமாக அவைத் தலைவர் அவையை 15 நிமிடம் ஒத்தி வைத்தார். 11:45க்கு அவை மீண்டும் கூடியது. பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பவன் குமார் பன்சல் மசோதாவிற்கு 187 திருத்தங்கள் வந்திருப்பதாகவும் அவற்றைப் பரிசீலிக்க அரசுக்கு அவகாசம் வேண்டும் எனவும் சொன்னார். எதிர்கட்சித் தலைவர் நாங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருந்து வாக்களிக்கத் தயார் என்றதும், அவையை நள்ளிரவு 12 மணிக்குமேல் நடத்த இயலாது எனவும் அவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதும் நடத்துவதும் அரசின் உரிமை எனவும் பன்சல் சொன்னார். அவையை எவ்வளவு நேரம் நடத்துவது என்பதை அவைதான் தீர்மானிக்க முடியுமே தவிர அரசு அல்ல என்று அருண் ஜெட்லி வாதாடினார்.

அவையில் வரலாறு காணாத சூழ்நிலை நிலவுவதாகவும், கூச்சல்களுக்கிடையே அவையை நடத்த இயலாது என்பதால் வேறு வழியின்றி மிகுந்த தயக்கதோடு அவையை ஒத்திவைப்பதாகவும் அவைத்தலைவர் அன்சாரி அறிவித்து வந்தேமாதரம் இசைக்க உத்தரவிட்டார்.

 

நள்ளிரவு நாடகம் கேலிக்கூத்தாய் முடிந்தது.

 

பாக்ஸ்:

அவ்வளவுதானா லோக்பால்?

 

மாநிலங்களவையில் வாக்கெடுப்பிற்கே வராத லோக் மசோதாவின் கதி என்னவாகும்? மீண்டும் அதை மாநிலங்களவையில் கொண்டுவர முடியும். ஆனால் அது உடனடியாக நடக்காது. ஏனெனில் பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்து விட்டது. அடுத்த கூட்டத் தொடர் பட்ஜெட் கூட்டத் தொடர். அது அநேகமாக பிப்ரவரி இறுதியில்தான் துவங்கும்.

குளிர்காலக் கூட்டத் தொடர்மட்டுமல்ல, ஆண்டும் முடிந்து விட்டது. ஒரு புதிய ஆண்டு துவங்கும் போது நாடாளுமன்றத்தில் அதன் முதல் நிகழ்ச்சியாக ஜனாதிபதி உரை நிகழ்த்துவார். அதன் பின் அவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது விவாதம் நடக்கும். எனவே அதற்கு முன்பு லோக்பால் மசோதாவை மீண்டும் கொண்டுவர முடியாது. பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பட்ஜெட் தயாரிப்பு வேலையிலும் அதை நிறைவேற்றுவதிலும் மும்முரமாக இருக்கும். அதனால் அந்தக் கூட்டத் தொடரில் அது வரும் என்று எதிர்பார்க்க முடியாது.

மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்களை, குறிப்பாக திருணாமூல் தெரிவித்துள்ள திருத்தங்களை ஏற்காமல்  இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது. ஏற்பது என அரசு முடிவெடுத்தால் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் வடிவமும் இதன் வடிவமும் வேறு வேறாக இருப்பதால் மசோதா மீண்டும் மக்களவைக்குப் போக வேண்டும். மசோதாவையும் திருத்தங்களையும் நிலைக்குழுவிற்கு அனுப்பி அங்கு பரிசீலக்கலாம். ஆனால் அதற்கு சற்று காலம் பிடிக்கும்.

சுருக்கமாகச் சொன்னால் மசோதா இறந்து விடவில்லை. கோமாவில் இருக்கிறது அவ்வளவுதான்      

    

 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *