”தமிழ் இலக்கியம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களால் இன்னும் விரிவடையும் ”

”தமிழ் இலக்கியம் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களால் இன்னும் விரிவடையும் ”

நட்பு ஒளிரும் கனிவான முகம், அன்பான புன்னகை, சந்தித்தவுடனே ‘இவ்வளவு நாளும் சந்திக்காமல் இருந்து விட்டோமே’ என ஆதங்கப்படவைக்கும் ஒரு பண்பான மனிதர் திரு.மாலன் அவர்கள். குமுதம், திசைகள், உத்தமம், சன் டி.வி இப்ப்டி பல்வேறு அமைப்புகளின் மூலம் நம் நினைவில் நிற்பவர் மாலன். தன் எழுத்து வீச்சுக்களினால், மேடைப்பேச்சுக்களினால், நேர்காணல்களினால் மக்கள் மனதினில் ஆழமான பதிவுகளை ஏபடுத்திய இந்த இலக்கியவாதி தனது இடர்பாடுகள் நிறைந்த கால நெருக்கடிகளுக்கிடையில் நிலாச்சாரல் வாசகர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்.

திசைகள் எனும் இதழின் தோற்றத்தைப் பற்றிச் சிறிய பின்னணி தரமுடியுமா?

திசைகள் 1981-ல் இளைஞர்களுக்கான ஒரு வார இதழாக அச்சு வடிவில் வெளிவரத் தொடங்கியது. தமிழுக்கு முற்றிலும் ஒரு புதிய கான்செப்ட் (concept) ஆக, ஆச்¢ரியர் சாவி அவர்களின் வெளியீடாக, என்னை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. திசைகள் இளைஞர்களுக்காக, இளைஞர்களால் நடத்தப்படும் இதழ் என்றே அறிவிக்கப்பட்டிருந்தது. முப்பது வயதுக்குக் குறைவான, பிரபல்யமற்றவர்களின் படைப்புக்கள் மட்டுமே இடம் பெற வேண்டும் எனும் நிலைப்பாடு இருந்தது. இதற்கு இரண்டே இரண்டு விதிவிலக்குகள்; ஒன்று சுஜாதா, மற்றொன்று மணியன் செல்வன். இதன் அடிப்படை நோக்கம், புது எழுத்தாளர்கள், புதுப் புகைப்படப்பிடிப்பாளர்கள், புது ஓவியர்கள் என்று புதிய இளம் கலைஞர்களை முன்னுக்குக் கொண்டு வருவது. அந்தச் சமயத்தில் சென்னையை மையமாகக் கொண்டுதான் பத்திரிகைகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் திசைகள் மற்றைய மாவட்டங்களில் உள்ள இளம் எழுத்தாளர்கள், மற்றும் நிருபர்களை ஆசிரியர் குழுவில் இணைத்துப் பரவலாகச் செயற்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இன்று நீங்கள் காணும் இணைய இதழ். இதுகூட உலக அளவிலான தமிழ்ப் படைப்பாளிகளின் எழுத்து வீச்சை, தமிழூற்றை வெளிக்கொணரும் ஒரு முயற்சியே.

திசைகளை அச்சு வடிவில் வெளிக்கொணரும் எண்ணம் இருக்கிறதா?

இந்த வேண்டுகோள் பல இடங்களிலும் இருந்து வந்து கொண்டிருக்கிறது. அதற்கான பல ஆலோசனைகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. வேலைப்பளுவின் காரணமாக தற்சமயம் அப்படியான நோக்கம் இல்லை. எதிர்காலத்தில் பார்ப்போம்.

தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான உங்களின் பார்வையில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி எதில் தேங்கியுள்ளது?

தமிழ் இலக்கியம் பலர் சொல்லுவது போலத் தேங்கிப் போய்விடவில்லை, அது தனது வடிவங்களை மாற்றிக்கொண்டு வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. தமிழ் ஒரு டயனமிக் (Dynamic) ஆன மொழி; தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளக்கூடிய, வளர்த்துக் கொள்ளக்கூடிய ஆற்றலுடைய மொழி. தமிழ் இலக்கிய வளர்ச்சி வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களால் இன்னும் விரிவடையும் என எண்ணுகிறேன். ஏனெனில் அவர்களுடைய அனுபவங்கள், இங்கேயிருக்கக் கூடியவர்களுடைய அனுபங்களை விட மாறியதாக இருப்பதால், படைப்புக்கள் இன்னும் விரிவான கருத்துக்களைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன்.

இணையம் தற்போதைய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு புது உத்வேகத்தைக் கொடுக்கிறது என்பது பற்றித் தங்கள் கருத்து என்ன?

நிச்சயமாக ஒரு புது உத்வேகத்தைக் கொடுத்துள்ளது; காரணம், இணையம் இரண்டு விடயங்களைப் பின் தள்ளி விட்டது; ஒன்று தொலைவு, மற்றொன்று காலம். இது நமது அன்றாட வேலைகளிலும் பல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. உதாரணத்திற்குக் கடந்த ஆண்டு வரை 5 பத்திரிகைகள் வாங்கிப் படித்த நான், இப்போது 2 பத்திரிகைகள் தான் வாங்குகிறேன்; மற்றவற்றை இணையத்திலே படித்து விடுகிறேன். அதே போல வெளிநாட்டுப் பத்திரிக்கைகளைப் படித்து அவர்களின் பார்வையின் வீச்சைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. நிச்சயமாகக் கணிணி தமிழ் வளர்ச்சிக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

இணையத்தில் பல படைப்பாளிகள் இருந்தாலும், இணையத்தை எட்டாமல் இருக்கும் படைபாளிகளுக்கு இணையத்தைப் பற்றிச் சரியாக எடுத்துச் சொல்லப்படுகிறதா?

அதற்கு எமது இணையத்தைப் பயன்படுத்தும் நண்பர்கள் தம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும். தமிழ் மென்பொருட்கள், தமிழ்ச் செயலிகள் என்பன இலவசமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை, தமிழ் மின்மடல்கள் அனுப்பக்கூடிய வழிவகை, தமிழில் தேடக்கூடிய வசதி அனைத்தும் இருக்கும் காலகட்டத்தில் இது சகலரையும் சென்றடைவதற்கு நாமெல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும்.

உத்தமம் (INFITT) அது ஆரம்பிக்கப்பட்டதின் அடிப்படை நோக்கத்தை நோக்கி சரியான முறையில் செல்கிறதா?

அதில் சந்தேகமில்லை. உத்தமம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால், தமிழ்க் கணினிச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து, மேம்படுத்த வேண்டும் என்பதுவே. டிசம்பர் மாதம் நடந்த தமிழ் இணைய மாநாட்டின் மூலக்கருவைப் பார்த்தீர்களென்றால், “நாளைய உலகில் தமிழ்“ அதாவது கைத்தொலைபேசியில் குறுஞ்செய்தி தமிழில் அனுப்புவது, பேச்சைப் புரிந்து பிரதியாக்கும் தொழில் நுட்பம் என்பன பற்றிய கலந்துரையாடல். ஆகவே உத்தமம் செல்லும் பாதை சரியானதுவே என்பதுதான் எனது நிலைப்பாடு.

இணையம் இவ்வளவு வளர்ந்து விட்ட நிலையில் புத்தகப் பதிப்பின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

புத்தகப் பதிப்புலகில் இணையத்தால் மாற்றங்கள் வராது. இடமாற்ற வசதியின்மையால், பாதிப்புகளால் ஏற்படலாமேயின்றி, புத்தகங்கள் வாங்கும் வாய்ப்புக்களைப் பெருக்குவதல்லாமல் சுருக்கும் வாய்ப்பு இணையத்தினால் ஏற்படாது.

மகாகவி பாரதி காலம், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி காலம், தற்போதைய காலம் ஒரு சிறு ஒப்பீடு செய்ய முடியுமா?

மகாகவி பாரதியை நான் ஒரு கவிஞனாக மட்டும் பார்க்கவில்லை. அவரது பார்வை மிகவும் விரிந்தது. கார்ட்டூன் (Cartoon) எனும் கேலிச்சித்திரத்தை ஆரம்பித்தவரே அவர்தான் என்று சொல்லலாம். அதன் மூலமாக மக்களிடம் ஆங்கிலேயருக்கெதிரான விடுதலை உணர்வுகளைத் தூண்டும் முறையைக் கையாண்டார். அவரது வீச்சு மிகவும் பரந்தது. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ஆகியவர்கள் தமது கால கட்டத்திற்கேற்பப் படைப்புக்களை அளித்தார்கள். அவர்களின் கதைகளின் பாணி அமெரிக்கக் கதைகளின் பாணியில் அமைந்திருந்தது, அத்துடன் தமது பார்வையின் அழுத்தத்தைப் படைப்புக்களில் கொடுத்திருந்தார்கள். தற்போது கிராஃப்ட் (Craft) நன்றாக இருக்கிறது. ஆனால் எழுதும் போது சமயங்களில் உள்நோக்கி, குறுகிய பார்வையோடு எழுதுவது போல் தெரிகிறது. சமுதாய விழிப்புப்பற்றி எழுதி என்ன ஆகப்போகிறது எனும் விரக்தியுடன் எழுதுவது போல் தெரிகிறது. இது மாறவேண்டும்.

இன்றைய தமிழ் சினிமாவில் இலக்கியத்திற்குப் பங்கு இருக்கிறது என எண்ணுகிறீர்களா?

சினிமாவில் என்றைக்குமே இலக்கியத்திற்கு இடம் இருந்ததாகத் தெரியவில்லை. மலைக்கள்ளன் காலத்திலிருந்து இன்று வரை, அச்சில் வந்த கதைக்கும் படத்தில் வரும் கதைக்கும் இடையே மாறுபாடுகள் இருக்கும்; மறைமுகத் தாக்கங்கள் இருக்கும். சில பாத்திரங்கள் உருவாக்கப்படலாம். கதாநாயகர்கள், கதை, தொழில்நுட்பம் என்பனவற்றில் மாறி மாறி சினிமா தங்கியுள்ளது. சினிமா தமிழை விட்டு விலகி பல காலமாகிவிட்டது.

புதிய தமிழ் இலக்கியங்கள் படைக்க ஏதாவது முயற்சிகள் எடுக்கப்படுகிறனவா?

நல்ல வாசகர்களை உருவாக்க எழுத்தாளர்களும், பத்திரிகைகளும் பணி புரிந்தால் அதன் தொடர்ச்சியாக நல்ல புதுத் தமிழ் இலக்கியங்கள் புது எழுத்தாளர்களால் படைக்கப்படலாம்.

ஈழத்து எழுத்தாளர்களில் உங்கள் மனதைக் கவர்ந்தவர் யார்?

பல்வேறு காரணங்களுக்காகப் பலர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இல்லாத சில திறமைகள் ஈழத்தில் இருந்தன. விமர்சனங்களில் ஈழத்தின் எழுத்தாளர்கள் ஆழமாகவும் கூர்மையாகவும் எழுதும் வல்லமை படைத்தவர்கள். கைலாசபதி, சிவத்தம்பி என்பவர்கள் மிகச்சிறந்த விமர்சகர்கள். படைப்பாளிகளின் வரிசையில் தளையசிங்கம், டொமினிக் ஜீவா போன்றவர்கள் என் நினைவில் நிற்கிறார்கள். ஈழத்தின் இலக்கிய வளர்ச்சி தொடரும் ஓர் நிகழ்வாகும்.

இன்றைய புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?

அவர்களுக்கு மற்ற எழுத்தாளர்களால் எழுத முடியாதவைகளை எழுதும் வாய்ப்புகள் உண்டு. அதை அவர்கள் எழுத வேண்டும் என நினைக்கிறேன். தமிழ்ச் சமூகத்தைப் பற்றி மட்டும்தான் எழுத வேண்டும் என்னும் அவசியமில்லை. மற்றைய சமூகத்தவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிக்கூட எழுதலாமே? உதாரணத்திற்குத் திரு. முத்துலிங்கத்தை எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் அவர்கள் நல்ல படைப்புக்களை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

 

நிலாச்சாரல் இணைய இதழ் ஜனவரி 24 2005

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *