கற்றதனால் ஆன பயன்

மறுபடி ஒரு தரம் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மாணிக்கவாசகம். பத்திரமாக இருந்தது. மொறமொறவென்று சலவை நோட்டாய் பத்து நூறு ரூபாய், நேற்றைக்கு  பேங்க்கில்  வாங்கி  மடித்துப் பையில் சொருகியது. வாங்கியபோது, புதுசுக்கு உண்டான சுத்தமும் மொட மொடப்பும் தொடத் தொடச் சுகமாய் இருந்தது. ஊரான்  பணம் என்றபோதிலும் என்னவோ  ஒரு  பெருமையில்  மனது  திரிந்தது.  எடுத்து எண்ணச் சொன்னது என்றாலும் மாணிக்கவாசகத்திற்கு எடுப்பதற்குப் பயம். தொடுவதற்குக்  கூச்சம் காரணம், இது லஞ்சப் பணம். தப்பை மொழுகிப் பூச தரும் தண்டப் பணம்.

     தப்பு  இவனுடையது.  யாருக்கும்  அடி  சறுக்குகிற அல்பத் தப்பு. இரண்டு நாளைக்கு  முன்னால்,  கம்பெனி  மூடுகிற  நேரத்திற்குச் சற்று முன்னால், திடுதிடுவென்று இரண்டு பேர் ஜீப்பில் வந்து இறங்கினார்கள். ஸ்டாக் பார்க்க வேண்டுமென்று அதட்டலாய் உறுமினார்கள். மாணிக்கவாசகத்திற்கு அதட்டலைக் கேட்டதுமே உதறிப் போயிற்று. இந்த அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் அர்த்தம் புரிந்து கொள்கிற வயது இல்லை. அனுபவமில்லை. பட்டப்படிப்பை முடித்த கையோடு அங்கே இங்கே ஆளைப் பிடித்து இந்த வேலையில் சேர்ந்திருந்தான். இது ராட்சஸ வேலை. பேக்டரியில் இருந்து சரக்கை வாங்கி வைப்பது. ஸ்டோர் கணக்கை எழுதுவது, டைப் தட்டுவது, பாங்கிற்குப் போவது, இன்வாய்ஸ் தயாரிப்பது என்று ஒரே நேரத்தில் ஏழெட்டுப் பந்துகளை அடிக்கிற அஷ்டாவதானம். இதில் ஸ்டோர்  கணக்கிற்கு  இவன்தான்  முழுப்பொறுப்பு.  காலையில் பேங்க்கிற்குப் போயிருந்த நேரத்தில்,  அசலூர்ப்  பார்ட்டி  வந்ததென்று  சேட்  சாம்பிள் ஒரு டஜன் எடுத்துப் போயிருந்தார். புத்தகத்தில் எண்ட்ரி போடவில்லை. இப்போது அரசாங்க  பார்ட்டி  வந்து  எண்ணும்போது  புத்தக இருப்பிற்கும் கை இருப்பிற்கும் கணக்கு  உதைக்கிறது.

     “ இது  எத்தனை  பெரிய  குத்தம்  தெரியுமா ?

            அதட்டலாய்க் கேட்டது அரசாங்க பார்ட்டி. ஒன்றும் புரியாமல் மாணிக்கவாசகம் மலங்க மலங்க விழித்தான்.  எப்படித்  தப்பு நேர்ந்ததென்று விளக்க முன் வந்தான் வாசகம்.

     “ அதெல்லாம் வேண்டாம் … ஸ்டோரை பூட்டி சீல் வைக்கணும். வழக்கு போடுவோம்.  கோர்ட்டிற்கு  வந்து  பேசிக்கிங்க.

            வயிற்றைக் கலக்கியது. நாக்கு உலர்ந்து மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. பயமும் துக்கமுமாக சேட் வீட்டிற்குப் போன் செய்தான். விவரம் சொன்னான். அதிகாரிகளிடம் போனைக் கொடுக்கச் சொன்னார். சேட் என்ன பேசினார். எப்படிப் பேசினார் என்று தெரியவில்லை. அரை மணி நேரம் பேச்சுக்கு அப்புறம் அதிகாரிகள் அடியோடு  மாறிப்  போனார்கள். அமைதியாய் போனை வைத்தார்கள். ஸ்டோர் புத்தகத்தை  எடுத்துக்  கொண்டார்கள்.

     “ சேட் சொல்லுவாரு. அப்போ புத்தகத்தை வந்து வாங்கிக்க   என்று  புறப்பட்டுப் போனார்கள்.

     போன அரை மணியில் சேட் வந்தார். விஷயம் கேட்டுக் கொண்டார். சலனம் இல்லாமல் ; கவலை தெரியாமல் ஏதோ யோசனை செய்தார். மேஜையைத் திறந்து பணத்தை  எண்ணினார்.  பின்,  வேண்டாம்  என்று  உள்ளேயே  வைத்து  மூடினார்.

     மறுநாள் பதினொரு மணிக்குத் தனியே கூப்பிட்டார். ஆயிரம் ரூபாய் செக்கைக் கொடுத்தார்.

     “ பேங்க்கிற்குப் போய் செக்கை மாற்றிக்கோ. இங்க வரவேணாம். நேரே வெங்கடேஸ்வரா  லாட்ஜுக்கு  போயிடு. ரூம் 210. யாரையும் எதுவும் விசாரிக்க வேண்டாம். நேரே ரூமிற்குப் போயிடு. அன்னிக்கு இங்கே வந்தாங்கள்லே அவுங்க இருப்பாங்க.  கொடுத்திடு. கவர்ல போட்டுக் கொடு. ரூம்ல வேறே வெளி ஆளுங்க இருந்தா கொடுக்க வேணாம். வந்திரு. கவர் உள்ளே என்ன இருக்குன்னு உனக்குத் தெரியும்னு  காமிச்சுக்க  வேண்டாம்.  சின்னப் பையனா இருக்கியே, செய்திடுவியா ?  நான் போனாச் செலவு அதிகமாயிடுமேன்னு  யோசிக்கிறேன்.  சேட்டு வரலையானனு கேட்டா  வெளியூர்  போயிருக்கார்னு  சொல்லிடு.  பொய்  சொல்லுவியா ?  ம் !

            சொல்லி விடுவேன். செய்து விடுவேன் என்று அப்போது தைரியமாய்த்தான் சொன்னான். எப்படியோ ஒரு வழியாய் முடிந்தது என்று பாரம் இறங்கின நிம்மதியாய் இருந்தது. ஆனால் இப்போது பயமாய் இருக்கிறது. மாட்டிக் கொண்டு விடுவோமோ என்று உதைப்பாய் இருந்தது. லஞ்சம், வாங்குவதைப் போல் கொடுப்பதும் குற்றம் என்று சொல்கிறார்களே, எக்கச்சக்கமாக எதாவது ஆகி விடுமோ ?  கவரை  வாங்கிக்  கொண்டு ஆபீஸர்  திறந்து  பார்த்துவிட்டு,   ‘ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்னை  என்று கோபமாய் கடாசி விடுவானோ ?  இதனால்தான் சேட்,  அவருக்கு  பதில்,  தன்னை அனுப்பி வைக்கிறாரா ? திகைப்பும் கவலையும் பயம் காட்ட, படி இறங்கினான் மாணிக்கவாசகம்.

     ஐந்தடிக்கு மூணடியில், அசுர சைஸில், காசுமாலையும், கழுத்தில் சவரனுமாய் நின்று  கொண்டிருந்தார்  வெங்கடாசலப்  பெருமாள்.  சுற்றிலும்  சின்னச்  சின்னப்  பூவாய் சீரீயல் விளக்கு. சூடம் எரிந்து கறுப்புப் படிந்த பித்தளைத் தாம்பாளம். படத்து உச்சியில்  நாலுமுழ  வாசனைக்  கதம்பம். கீழே காலடியில் கண்ணாடி உண்டியல். உள்ளே குவியும் காசும் பணமும் துலாம்பாரமாய் வெளியில் தெரியும் கண்ணாடி உண்டியல்.

     பெரிதென்றும்  சொல்ல  முடியாமல்,  சிறிதென்றும்  உதறமுடியாத  ஒரு  லாட்ஜ் அது. வாசற்புறத்தில் சின்னத் தோட்டம். கையகல கார் பார்க். உள்ளே மொசைக் தரை குளியலரையில் வெந்நீர்.  கூப்பிடு  மணி  இருந்தாலும், இரும்புக் கட்டில், பருத்தி மெத்தை,  பழைய  காலக் கட்டிடம்.

     கார் பார்க்கின் சிமெண்ட் தளத்தின் தெற்கு மூலையில் செருப்புத் தைக்கும் தொழிலாளி.  பக்கத்தில்  கிடத்திய  கறுப்புக் குழந்தை. நாலாய் மடித்து  மேலே போர்த்திய கிழிசத்துப்பட்டி.

     பட்டை கட்டிய குதிரை மாதிரி விடுவிடுவென்று நேரே இருநூற்றுப் பத்தாம் அறைக்குப்  போனான்  மாணிக்கவாசகம். அரைச் சாத்தாய் சாத்திலிருந்தது கதவு. தயங்கித் தயங்கிக் கூப்பிட்டான். உள்ளே இருந்தவர் தூங்கிக் கொண்டிருந்தார் போலும். அசையவே  இல்லை. தடக்கென்று நாதாங்கியைப் பிடித்து இழுத்தான். சப்தம் தூக்கி வாரிப் போட திடுக்கிட்டு எழுந்தார் மாணிக்கவாசகம் பயந்து பின்னால் நகர்ந்தான். கைலியைச்  சரியாய்க் கட்டியபடி  கண்ணைக்  கசக்கிக்  கொண்டு  வெளியே  வந்தார்.

     “ என்ன ?

            அன்றைக்குக்  கடைக்கு  வந்தவர்  இவரில்லை.  இது  வேறு  யாரோ.

     “ ஆபீஸர்  இல்லீங்களா ?

            ஆபீஸர்னா ?  யாரு ?  நாலைஞ்சு பேர் இருக்கோம்.

            சிவகடாட்சம்னு

            இல்லியே …  வெளியே  போயிருக்காங்க.

            எப்போ வாருவாங்க …

            அவங்க  உத்தியோகத்திலே எங்கே போயிருக்கார்ன்னு எப்ப வருவார்ன்னு சொல்ல முடியுங்களா ?  அது  சரி …  நீங்க  யாரு ?

            இல்லை. பார்க்கணும்.

            வாசல் நடையிலேயே காத்திருந்து, மணிக்கொரு தரம் போய்ப் பார்த்து வந்தான். சிவகடாட்சம்  வந்ததாகத்  தெரியவில்லை.

     துறுதுறுவென்று ஆபீஸில், தினம் எட்டு  திக்கும்  சமாளித்து,  நாலு  வகை  வேலை செய்து,  ஓட்டமும்   அலைச்சலுமாக இருந்தே பழகி விட்டு, இன்றைக்கு நெட்டைப் பார்வையாகத் தெருவை அளந்து கொண்டிருப்பது போரடித்தது. அலுப்பாய் இருந்தது. உள்ளே திரும்பி சுவற்றை மேய்ந்தது.  கண்ணாடி உண்டியலில் வந்து நின்றது.

உண்டியலைக் கண்ணாடியால் பண்ணி வைக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது ?  உண்டியல் பணம் கடவுளுக்கென்றால், ஊருக்குத் தெரிய வேண்டியது என்ன அவசியம் ? அழகாக இருக்கட்டும் என்ற ரசனையா ? பளிச்சென்று தெரியட்டும் என்று பீற்றிக் கொள்கிற டாம்பீகமா? இந்தப் பணத்தைப் பார்த்து இன்னும் நாலு பேர் போடட்டும் என்ற நல்லெண்ணமா?  எத்தனை பணம் இருக்கிறதென்று யாரும் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாம் என்ற கணக்குச் சுத்தமா ?

     தெற்கு  மூலையில் வெள்ளை வெய்யிலில்  சுருண்டு கிடந்த செருப்புத் தொழிலாளியின் குழந்தை திடீரென்று வீறிட்டது. திடுக்கிட்டு அருகில் ஓடினான் மாணிக்கவாசகம். குழந்தை பந்து போல் துள்ளித் துள்ளி விழுந்தது. அந்த அலறலும் துள்ளலும் பயங்கரமாய் இருந்தது. கோரமாய் இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் கையைப்  பிசைந்து  கொண்டு  நின்றான்.

     கண்ணில்  கவலை  நிழலிட்டது.

     “ என்ன ஆச்சு குழந்தைக்கு ? ’‘

            “ இரண்டு  நாளாய்க்  காய்ச்சல்  பொரியுது.  கண்  திறக்காத  ஜுரம்.

            டாக்டர்கிட்டே காட்டறது தானே ?

            நாட்டு  மருந்து  குடுத்திருக்குங்க.  ஒண்ணுந் தேறலை.

            வேற இடத்தில காட்டக் கூடாது ?

     “ பொழப்பை போட்டு எங்க போவறது ? துட்டும் இல்ல. சம்பாரிக்கிற காசு சாப்பாட்டுக்கே  பத்தலீங்களே.  எங்களுக்கெல்லாம்  நோவு  வரலாங்களா ?

            சட்டென்று  பையைத்  தடவி,  கையில் கிடைத்த ஐந்து ரூபாயை எடுத்து நீட்டினான் மாணிக்கவாசகம்.

     “ வேணாங்க.

            உடம்பில் தெம்பும் உழைக்க வருவும் இருக்கும்போது உன் பணம் எனக்கெதற்கு என்கிற  கேள்வியாய்  நிமிர்ந்தது அவன் பார்வை. நான் தொழிலாளி. பிச்சைக்காரனில்லை  என்கிற  கம்பீரம்  எட்டிப்  பார்த்தது.

     “ சும்மா தரலப்பா, கடனா வச்சுக்கோ.

            வேணாங்க. முன்னே  பின்னே  தெரியாதவங்ககிட்ட  எப்படி  கடன்  வாங்கறது ?

            இவனோடு விவாதித்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம்  இல்லை என்று தோன்றியது. விடுவிடுவென்று எதிர்சாரிக்குப் போய் ஒரு சைக்கிள்  ரிகஷாவை அழைத்து  வந்தான். கடையைக் கட்டிக் கொண்டு உடனே புறப்படச் சொன்னான். குழந்தையை வாரிக் கொண்டு டாக்டரிடம் கூட்டிப் போனான்.

     ரிகஷா  முனை திரும்பிய நேரத்திற்கு வந்து சேர்ந்தார் சிவகடாட்சம். வாசல் கவுண்ட்டரில் விசாரித்துக் தெரிந்து கொண்டு, இரண்டிரண்டு படியாகத்தாவி, இருநூற்றுப் பத்தை  அடைந்தான் மாணிக்கவாசகம். அறைக்குள்ளிருந்து அசட்டுச் சிரிப்பாய் பொரிந்தது. இந்தி, தமிழ், சிதார் மீட்டல், அமெரிக்க ஆங்கிலம் என்று வேறு வேறு அலைவரிசைகளில் ரேடியோ முள் அவசரமாய் நகர்த்தப்படுவது கேட்டது. கூப்பிடுவதா வேண்டாமா என்று தயங்கி ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான். சில்வர் கிரே மினுமினுப்பில் புத்தம் புதியதாய் ஒரு டூ இன் ஒன் தென்பட்டது. கேஸட் பகுதியின் குறுக்காய்ப் படிந்திருந்த காகித உறை கிழிபடாமல் அப்படியே இருந்தது. அத்தனை புதுசு. இந்தப் புதுசுகளுக்கு வந்தனம் சொல்வது போல், எதிரே முழு உயரத்திற்கு ஒரு தங்க வண்ண அட்டைப் பெட்டி, ‘ ராயல் சல்யூட் என்ற சிவப்பு வாசகத்தின் கீழ், கை உயரத்தில் கால் நீட்டி, நடக்கும் சிப்பாய். அதற்கும் கீழே சிறிய எழுத்தில் ஃபைன் ஸ்காட்ச் விஸ்கி என்ற முத்திரை. எதிரே சுல்தான்.

     ஊரில் சுல்தானைத் தெரியாதவர்கள் கிடையாது. மருந்துக்கடை, உர ஏஜென்சி, மண்ணெண்ணெய், விநியோகம், சோப்பு பேக்டரி என்று நாலுவகை வியாபாரம். கிடுகிடுவென்று ‘மேலேவந்தவர். யாரை எதால் அடிக்க வேண்டும் என்பதை சுல்தானைக் கேட்டால் தெரியும் என்பது வியாபாரிகள் மதிப்பீடு.

     “ சரக்கு  நல்லாத்தான்  இருக்கு.  நமக்குத்தான்  தோதில்லை.

            என்னது !

            எத்தினி குடுக்கணும்கிறே ?

            எப்படி ? நீங்க கொடுக்கிறதாவது ?  இது வியாபாரத்திற்குக் கொண்டாரலீங்க. ஐயா கிட்ட  எல்லாம்  வியாபாரம்  பண்ணினா  நாங்க  அளிஞ்சு  போயிட  மாட்டோம் !

            என்னய்யா பெரிய  வார்த்தையெல்லாம் உடறே.

            நிசமாத்தாங்க ; மருமகப் பிள்ளை கேட்டாருன்னு துபாய்ல சொல்லி வச்சிருந்தேன். இன்னிக்குத்தான் சரக்கு வந்திச்சு. ஐயாவும் வந்தீங்க. ஐயாவிற்கு சங்கீதம்னா உசிருன்னு  தெரிஞ்சிக்கிட்டப்புறம் நம்மகிட்ட வைச்சுக்கப் பிடிக்கலை. நாமதான் துடைப்பக்கட்டை. சங்கீதம் விளாங்காத ஜன்மம். காது குளிர கேக்கிறவங்களுக்கும் கொடுக்க மாட்டேன்னா அது நியாயம்களா ?

            அடடே !  மாப்பிள்ளைக்கு வந்ததுங்களா. அவுரு கோச்சுக்கப் போறாரு.

            அடே துபாய் எங்க போவுது,  அவுரு  தான் எங்க போறாரு. கோச்சுக்கட்டுமே – இப்ப என்ன வந்துச்சு. அக்கா மவன் தாங்க மாப்பிள்ளை. சரக்கு சாப்பிடறீங்களா. நா வேணா எந்திரிச்சுப் போயிடறேன்.

            இருக்கட்டும் இருக்கட்டும்.

            எடுத்து உள்ளே வையுங்க. ஜன்னல்ல தலை தெரியுது. டக்கென்று சரக்கைக் கட்டிலடியில் தள்ளினார் சிவகடாட்சம்.

     “யாரு?

            மாணிக்கவாசகம் மெல்ல உள்ளே நுழைந்தான்.

     “யாரு?

            சிமன்லால் சேட் அனுப்பிச்சாரு.

            அனுப்பிச்சாரா? அவர் வரலியா?

            ஊர்ல இல்லீங்க.

            ம்?

            மாணிக்கவாசகம் கொஞ்சம் தயங்கினான். எதிரே உட்கார்ந்து இருக்கிற சுல்தானைப் பார்த்தான். ‘வேறு யாரும் இருந்தா கொடுக்க வேண்டாம்என்று சேட் சொன்னது நினைவு வந்தது. இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.

     “ என்னய்யா, என்ன விஷயம் ?

            மாணிக்கவாசகம் மெல்ல கவரை நீட்டினான். கவரை வாங்கிக் கொண்டு அரை குறையாய்த் திறந்து பார்த்தார்.

     “ ம், சரி.

            ஸ்டாக் ரிஜிஸ்டர் வாங்கிட்டு வரச் சொன்னாரு.

            சேட்டை நாளைக் காலை வரச் சொல்லு. பேச வேண்டியிருக்கு.

            சட்டென்று ஒரு சோர்வு மனத்தில் படிய, மெல்ல கதவை நோக்கித் திரும்பினான். பணம் கொடுத்ததும் காரியம் முடியாத தோல்வி அழற்சியைத் தந்தது. இதை சேட் எப்படி எடுத்துக் கொள்வார் ? தன்னுடைய கையாலாகாத்தனம் என்றா? சாமர்த்தியம் போதாதென்றா ?

     அவமானம் பிடரியை நெட்டித் தள்ள மெல்ல படியிறங்கினான் மாணிக்கவாசகம். மாடிப்படி வளைவின் எதிரில் காசும், நோட்டும் மண்டிக் கிடக்கிற கண்ணாடி உண்டியல் கண்ணில் பட்டது.  குழந்தையை கிழிஞ்ச துப்பட்டியில் கிடத்தி இன்னும் செருப்பு தைத்துக் கொண்டிருந்தான் அந்தத் தொழிலாளி. தவிர்க்க முடியாமல் மனத் தராசு சிவகடாட்சத்தையும் இவனையும் எடை போட்டது. குழந்தை சாகக் கிடக்கும் போதும் கண் எதிரில் இருக்கும் உண்டியலை உடைக்கத் தோன்றாத அவனின் நேர்மையும் சுகபோகத்திற்காக ஊரைச் சுரண்டும் சிவகடாட்சத்தின் மனப்பாங்கும் மாறி மாறி ஆடின. அத்தனை பெரிய மனிதரிடம் அடிப்படை நேர்மையும், தன் தொழில் மீதான கௌரவமும் எவ்விதம் இப்படிச் செல்லரித்துப் போனது ? 

திரும்பத் திரும்ப யோசித்தான். கடைசியில் விடை கிடைத்தது. அந்தத் தொழிலாளியைப் போல் அல்லாமல் சிவகடாட்சம் படித்த மனிதர். மெத்தப் படித்த மனிதர்.

( தினமணி கதிர் )

About the Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these