ஊடகங்களும் இலக்கியமும்

பத்திரிகைகளுக்கும் படைப்பிலக்கியத்திற்கும் இடையேயான உறவு கணவன் மனைவி உறவு போன்றது. இரண்டும் தனித் தனி வரலாறுகள் கொண்டவை. இரண்டும் தனித்தனி அடையாளங்கள் கொண்டவை. வேறுபட்ட வடிவங்கள் கொண்டவை. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திராமல் தனித்தியங்கும் வல்லமை கொண்டவை.

ஆனால் ஒன்றை ஒன்று போஷிக்ககூடியவை. விமர்சிக்கும் உரிமையும் நெருக்கமும் கொண்டவை.. இரண்டும் காலம் காலமாக இணைந்து இயங்கி வருகின்றன.  இரண்டும் காலத்தின் குரல்கள். ஆனால்.ஒன்று அகவயமானது. மற்றொன்று புறஉலகு சார்ந்தது.

தமிழில் பத்திரிகைகள் தோன்றியது ஒரு தற்செயல். காது கேளா மனைவிக்குக்  கருவி செய்யப் புறப்பட்ட கிரஹாம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்ததைப் போல, சமயப் பிரசாரத்திற்காக தோன்றிய பத்திரிகைகள், சங்க இலக்கியம் பேசி, பின் வெற்று அரட்டையில் வீணாய்க் காலம் போக்கி, திடீரெனெ விழித்தெழுந்து விடுதலைக்குப் பிரசாரம் செய்து, இடையிடையே இலக்கியம் பகிர்ந்து, இன்றைக்கு துறைக்கொன்றாய் கிளை பரப்பி நிற்கின்றன.

ஆனால் அதன் ஆரம்ப நாட்கள் தட்டுத் தடுமாறி தவறி விழுந்து பின் எழுந்து நிற்பதாகவே அமைந்தன.” ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களில் நடக்கும் பத்திரிகைகளுடன் தமிழ்நாட்டுப் பத்திரிகையை ஒப்பிட்டுப் பார்த்து, இவற்றின் பரிதாபகரமான நிலைமையைக் கண்டு, ‘ஆஹா’ இப்படிப் பட்ட தமிழ் நாடுஎங்கே பிழைக்கப்போகிறது!’ என்று எண்ணி பாழும் நெஞ்சு “உடைந்து போகவேண்டாம். ஏனென்றால், வர்த்தமானப் பத்திரிகை நாமாக உண்டாக்கிய கருவியன்று. பிறரிடமிருந்து கற்றுக்கொண்டதந்திரம்; சென்ற முப்பது வருஷங்களாகத்தான் தெரிந்து கொண்டிருக்கிறோம். இன்னும், சரியாக முதிர்ச்சி அடையவில்லை” என்று எழுதுகிறார் பாரதி

நவீன இலக்கியத்தின் வகைகளான புதுக்கவிதை, நவீன கவிதை,  சிறுகதை, நாவல் ஆகிய புனைவுகளும் பிறரிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட தந்திரமே.

தற்செயலாகக் கிடைத்த கருவி என்ற போதிலும், தட்டுத் தடுமாறி எழுந்து நின்றோம் என்ற போதிலும், அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் ஊடகங்களும் நவீன இலக்கியங்களும் அளித்த கொடைகள் மூன்று வகை

  1. மொழிக்குச் செய்த பங்களிப்பு
  2. தமிழரின் அறிவை விரிவாக்க அவை மேற்கொண்ட/மேற்கொள்ளும் முயற்சி
  3. வாசிப்புப் பழக்கத்திற்குத் தந்த ஊக்கம்

தமிழ்ப் பத்திரிகைகள் மொழிக்குச் செய்த பங்களிப்புக்களில் முக்கியமானது, முதன்மையானது, உரைநடையை நிலை பெறச் செய்தததும் அதை மக்கள் வழக்கிற்கு அருகில் கொண்டு நிறுத்தியதுமாகும்,

தமிழில் பத்திரிகைகள் தோன்றும் முன்னரே உரைநடை இருந்தது. ‘பாட்டிடை வைத்த குறிப்பினானும்’ எனத் தொடங்கும் தொல்காப்பியச் சூத்திரம் எங்கெல்லாம் உரை நடை பயிலும் எனப் பட்டியலிடுகிறது. நச்சினார்கினியர், பரிமேலகழகர், இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், தெய்வச் சிலையார் எனப் பல உரையாசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். கல்வெட்டுக்கள் உரைநடை கொண்டு செதுக்கப்பட்டுள்ளன. சற்றே முறுகிய, சாதாரண மக்களின் பேச்சு வழக்கிற்கு அப்பாற்பட்ட உரைநடைகள் அவை.

இன்னொரு வகை உரை நடை இருந்தது. அது ஆனந்தரங்கம் பிள்ளையின் ‘சேதிக் குறிப்பு’களில் காணப்படும் உரை நடை. தமிழ்ப் பத்திரிகைகள் தோன்றுவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே 1781ல் ஆனந்தரங்கம் பிள்ளை மறைந்துவிட்டார்.தமிழின் முதல் இதழ் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடும் தமிழ் மேகசீன் தோன்றியது 1831ல்.அதற்கு 25 ஆண்டுகளுக்குப் பின்தான் (1856)  தினவர்த்தமானி  வருகிறது அதற்கு 27 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் 1883ல்  சுதேசமித்திரன்  வருகிறது. தமிழில் மைய நீரோட்ட (’Main Stream’)  பத்திரிகை தோன்றுவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் உரைநடை எழுதப்பட்டுத்தான் வந்தது.

ஆனால் ஆனந்தரங்கர் போல மக்கள் மொழியிலே எழுதப்படுவதற்குப் பண்டிதர்களின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. 1879ல், சுதேசமித்திரன் தோன்றுவதற்கு நான்காண்டுகள் முன்பு, வேதநாயகம் பிள்ளை உரைநடையில் எழுதப்பட்ட முதல் நாவலான பிரதப முதலியார் சரித்திரத்தை எழுதினார். அதற்கு முன்னுரை எழுதக் கேட்டுப் பலரை அணுகினார். ஆனால் அது உரைநடையில் எழுதப்பட்டது என்பதால் அதற்கு யாரும் அணிந்துரையோ, முன்னுரையோ எழுதித்தர முன்வரவில்லை. ஆனால் அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய நீதிநூலுக்கு வள்ளலார் உட்பட 56பேர் சாற்றுக் கவி எழுதினார்கள். ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட உரைநடை நூலுக்கு யாரும் முன்னுரை எழுத முன்வரவில்லை. அதனால் வேதநாயகம் பிள்ளையே ஆங்கிலத்தில் ஒரு முன்னுரை எழுதினார்.

தமிழில் பத்திரிகைகள் தோன்றியிராவிட்டால், உரைநடைக்கு இன்று இருக்கும் மதிப்பு ஏற்பட்டிராது  ஆனந்தரங்கரின் பிள்ளைத் தமிழ் போல, எங்கே முடியும் எனத் தெரியாத நெடிய வாக்கியங்களும், முற்றுப்புள்ளி, கால் புள்ளி, ஆச்சரியக்குறி ஏதுமற்ற பெருவெள்ளமாக அது இருந்திருக்கும்

இலக்கியத்திற்கு ஊடகங்கள் செய்துள்ள பங்களிப்பு எல்லையற்றது. தமிழின் இலக்கிய முயற்சிகள் பலவும் தமிழ் இதழ்களில்தான் துவங்கின.

பாரதியின் முதல் அரசியல் கவிதை எனக் கருதத் தக்க வங்கமே வாழிய, செய்திப் பத்திரிகையான சுதேசமித்திரனில் செப்டம்பர் 15, 1905 அன்று வெளியானது.ஆறில் ஒரு பங்கிற்கும் முன்னதாக ஷெல்லிதாஸ் என்ற பெயரில் பாரதியார் எழுதிய   துளசிபாயீ என்னும் ரஜபுத்திர கன்னிகையின் கதை நவம்பர் 1905,  மற்றும் ஜனவரி 1906 தொடங்கி, ஜூலை 1906 வரை, இதழுக்கு இரண்டு பக்கம் என்ற அளவில் சக்ரவர்த்தினியில் வெளியானது. பல மாதங்கள் வெளியான போதும் அதைத் தொடர்கதையென்றோ, நாவல் என்றோ சொல்வதற்கில்லை. தமிழின் ஆரம்பகால  நாவலான. கமலாம்பாள் சரித்திரம் விவேக சிந்தாமணியில் வெளியானது. தமிழின் முதல் சிறுகதை என வகுப்பறைகளில் போதிக்கப்படும் குளத்தங்கரை அரசமரம் வவேசு ஐயரால், தனது மனைவி பெயரான பாக்கியலக்ஷ்மி அம்மாள் பெயரில் எழுதப்பட்டு, விவேக போதினியில் 1915 செப்டம்பர் அக்டோபர் என இரு மாதங்களில் பிரசுரமானது.   சிங்கப்பூரர்கள் தங்களது முதல் சிறுகதை எனக் கருதும் மகதூம் சாயிபுவின் விநோத சம்பாஷணை சிங்கை நேசனில் வெளியிடப்பட்டது. மலேசியாவின் முதல்  நாவல் இரத்தின மாலை அல்லது காணமல் போன இராஜகுமாரி பினாங்கு ஞானாசாரியனில் வெளியாயிற்று.

செய்திப் பத்திரிகையான சுதேசமித்திரன் வருடம் தோறும் ஓர் இலக்கிய அனுபந்தம் வெளியிட்டு வந்தது. பாரதியின் கடைசிச் சிறுகதையான  கோயில் யானை 1921ஆம் ஆண்டு இலக்கிய அனுபந்தத்தில்தான் வெளியானது.

செய்திப் பத்திரிகையான சுதேசமித்திரன் இலக்கிய அனுபந்தம் வெளியிட்டது என்றால் மறுமலர்ச்சி இலக்கியத்திற்கு வித்திட்டதெனக் கொண்டாடப்படும் மணிக்கொடி முதலில் செய்திப் பத்திரிகையாகத்தான் வெளிவந்தது. முதல் 11 இதழ்களில் கதைகள் ஏதும் இல்லை. “ அதைத் தொடங்கியவர்களிடையிலோ அல்லது நடத்தியவர்களிடையோ  சிறுகதை பற்றிய சிந்தனை இருந்ததாகத் தெரியவில்லை” என்று சிட்டி-சிவபாத சுந்தரம் எழுதுகிறார்கள்

அன்று விடுதலைப் போராட்டத்தின் காரணமாக அரசியல் செய்திகளே முக்கியத்துவம் பெற்றன. பூதூர் வைத்தியநாதய்யரிடமிருந்து வாசன் ஆனந்த விகடனை வாங்கி  நடத்தத் தொடங்கிய போது (1928) விகடன் வெளியிட்ட தலையங்கம் “ஈண்டு ஆனந்த விகடன் புதிய ரூபத்தில் தோன்றியுள்ளான். பாரதத்தாயைக் கரத்திலேற்றிக் கொண்டான், அவளுக்கு உழைப்பதுவே தனது கடமையென கங்கணம் கட்டிக் கொண்டான்” என்று எழுதியது.

1935 ஜனவரியில் மணிக்கொடி நொடித்துப் போய் மூடப்பட்டுவிடும் நிலையில் இருந்த போது அதனுடன் பல வகைகளில் – எழுத்தாளராகவும், விளம்பரம் சேகரிப்பவராகவும், ஆபீஸ் பையனாகவும்- சம்பந்தப்பட்டிருந்த பி.எஸ்.ராமையா அதை நடத்தும் பொறுப்பேற்றுக் கொண்டபோது தமிழில் சிறுகதைகளுக்கு எனப் பத்திரிகைகள் இல்லாத நிலைதான் இருந்தது.. ராமைய்யா பொறுப்பேற்றுக் கொண்ட இதழில் அவர் எழுதிய முதல் அத்தியாயம் என்ற தலையங்கம் “ தமிழில் சிறுகதைக்கு என்று தனியாகப் பத்திரிகை  ஏதும் இல்லை” என்றுதான் தொடங்குகிறது

ராமய்யா மணிக்கொடி ஆசிரியர் ஆவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர்தான் கல்கி விகடன் ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார். அவர் பொறுப்பேற்ற போது  எழுதிய தலையங்கத்தில் தமிழ்நாட்டில் பத்திரிகை வளர்ச்சிக்கு முக்கிய சாதகமாயிருந்து வந்தது தேசிய இயக்கம் ஒன்றுதான் தலைவர்கள் தொண்டர்களுடைய தியாகமும்  துன்பமும் உச்ச நிலையை அடையும் போது பத்திரிகைகள் அதிகம் விற்கும் “மகாத்மா சிறைப்பட்டார்” “ தொண்டர்கள் அடிக்கப்பட்டனர்” அரசியல் கைதிகள் பட்டினி கிடக்கின்றனர்”  என்பவை போன்ற செய்திகளை தாங்கி வரும் தினங்களில் பத்திரிகைகள் அதிகமாக விற்பனையாகும்” என்று எழுதுகிறார்

எனவே பத்திரிகைகளின் விற்பனைக்கு இன்று போல் அன்றும் பரபரப்பான அரசியல் செய்திகள் காரணமாக இருந்திருக்கின்றனவே ஒழிய இலக்கியம் என்றைக்கும் அதற்குக் கை கொடுத்ததில்லை.

இன்று இலக்கியவாதிகளால் “இழிவான வணிக முயற்சிகள்” என்று கருதப்படும் பலவற்றை அன்றைய இலக்கியப் பத்திரிகைகள் செய்து வந்திருக்கின்றன.கறாரான விமர்சகர் என்று பின்னாளில் பெயர் பெற்ற கா.நா.சு ஆசிரியப் பொறுப்பேற்று நடத்திய “சூறாவளி” யில் “ஆர்ட் தாளில் சினிமாப்படங்கள் அச்சிட்டு  இதழ்தோறும் இணைத்திருந்தார்கள்” என்று பதிவு செய்திருக்கிறார் வல்லிக்கண்ணன்.

இலக்கிய வரலாற்றில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படும் “முல்லை” இதழின் ஆசிரியர் தொ.மு.சி. ரகுநாதன் அட்டையிலேயே, “ தாசானந்தா என்பவர் வரைந்த நிர்வாணப் பெண்ணோவியம் பிரசுரிக்கப்பட்டது “ என்று ஆ..இரா. வேங்கடாசலபதி எழுதியிருக்கிறார். “மாசி இதழில் இதே போல் இரண்டு கறுப்பு வெள்ளைப் படங்களும்,ஒரு  நிர்வாணப் பெண்ணின் பல வண்ண ஓவியமும் இடம் பெற்றன” என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

பின்னாளில் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற விமர்சகர் திகசி துருவன் என்ற பெயரில் , “சூடாகவும் காரசாரமாகவும்”  கிராம ஊழியனில் சினிமா விமர்சனங்கள் எழுதினார் என்று வல்லிக்கண்ணன் குறிப்பிடுகிறார்.

இலக்கியச் சிற்றேடுகளில் பாலுண்ர்வு ததும்பும் கதைகளும் வெளியாகின. சரஸ்வதியில் ஜெயகாந்தன் எழுதிய கதைகள் பெரும் சர்ச்சைகளுக்குள்ளாயின. “ மூன்றாவது ஆண்டில் சரஸ்வதியில் ஜெயகாந்தன் எழுதிய கதைகள் “ஆபாசம்”  என்ற கூச்சலை அதிகம் எழுப்பின. பலப்பல (sic) ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் – ஆண்களும் பெண்களும்-அவர் கதைகளில் எடுத்தாண்ட விஷயங்களையும், எழுத்தில் சித்தரித்த முறைகளையும் குறை கூறியும்  கண்டித்தும்  மாதம் தோறும் கடிதங்கள் எழுதி வந்தார்கள்” என சரஸ்வதி காலம் நூலில் வல்லிக் கண்ணன் எழுதுகிறார்.

பின்னாளில் கம்யூனிஸ்ட் என்றும், முற்போக்கு இலக்கிய ஆசிரியர் என்றும் அறியப்பட்ட தொமு.சி. ரகுநாதன்  முல்லையில் எழுதிய ‘கிரஹணம்’ கதையைப் படிக்கும் எவருக்கும்  அவரா இப்படி என்ற ஓர் வியப்பு எழவே செய்யும். கதையிலிருந்து சில வரிகள்:

“பக்கிரிசாமி கொத்தப் பிள்ளைமார் குடியில் பிறந்துவிட்ட காரணத்தால் சிறுவனாய் இருந்த காலம் முதற்கொண்டே கரண்டிபிடிக்கும்  கட்டிட வேலையில் ஈடுபட்டார். கல்யாணம் ஆகாமல் இருந்த காலத்திலும் கோகுலக் கிருஷ்ணன் மாதிரித்தான் வாழ்க்கை நடத்தினார். அந்தத் தொழிலில் வசதிகள் ஜாஸ்தி. அவர்களுடைய பறிக்க முடியாத உரிமை அது. கட்டிட வேலைக்கு செங்கல் சுண்ணாம்பு சுமக்க  வரும் சிறுமிகளோடு  முறை செப்பி  விளையாடும் உரிமையும் அவருக்கு உண்டு.  ரவிக்கை அணியாத நாட்டுக் கட்டைகள் முந்தானைச் சேலையைச் சுருட்டி தலையில் மணையாக வைத்துக் கொண்டு செங்க்ல் கூடைகளைச் சுமந்து வரும் போது தயிர்க்கலயம் கொண்டு வரும் பரமாத்மாவே ஆய்விடுவார். அவர்களுடைய திமிறிய உடல்கட்டையும், அங்க அசைவுகளையும், பார்த்துக் கொண்டே வேலை செய்தால் கரண்டி தன்னையறியாமலேயே விறுவிறுப்புக் காட்டும்.  கன்னிகழியாச் சிறுமிகளிடம் கைச்சரசமாடுவதிலிருந்து  வித்துக்கு விட்ட விரைச் சுரையான வத்தல் தார் வரை கைவைத்து அனுபோக வகை கண்டவர்”

இன்று இது போன்ற வரிகளை இலக்கியச் சிற்றேடானாலும் சரி வெகுஜன இதழானாலும் சரி ஆரம்ப  எழுத்தாளரோ, புகழ் பெற்றவரோ எழுதிவிட்டு தப்பி விட முடியாது. பெண்ணியவாதிகள், சாதிச் சங்கங்கள், தொழிலாளர் இயக்கங்கள், ஆத்திகவாதிகள் என எல்லோரும் இந்த வரிகளுக்கு மல்லுக்கட்ட முனையும் சூழ்நிலைதான் இன்று நிலவுகிறது. சுயமரியாதை உணர்வை வாசகர்களிடம் விதைத்ததில் அரசியல் இயக்கங்களுக்கும் கல்விக்கும் இணையான பங்கு ஊடகங்களுக்கும் உண்டு.

பாலுணர்வைத் தூண்டுதல், சர்ச்சைகளை கிளப்புதல், குழு சேர்த்தல், தனிமனித வழிபாடு- வீர வணக்கங்கள் இவை ஒருபுறம் இருந்தாலும் தேர்ந்த எழுத்தாளர்களைத் தமிழுக்குத் தந்ததில் பத்திரிகைகளுக்கு உண்டு. தமிழின் பெரும் இலக்கிய ஆளுமைகளான பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன் கல்கி, கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், ப.சிங்காரம், நா.பார்த்தசாரதி போன்றோர் பத்திரிகைப் பணியாற்றியவர்களே.

சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற படைப்புக்களான கல்கியின் அலைஓசை, அகிலனின் வேங்கையின்மைந்தன், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், லா.ச.ராவின் சிந்தாநதி, கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமத்து மக்கள், பிரபஞ்சனின் வானம் வசப்படும்,வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் போன்ற படைப்புகள் மைய நீரோட்ட இதழ்களில் வெளி வந்தவையே. இலக்கியச் சிற்றேடான கணையாழியில் இந்திராப் பார்த்தசாரதியின் குருதிப்புனல் வெளியானது.

இன்று இதழ்களில் பிரசுரமாகாமல், நேரடியாக நூலாக்கம் பெறும் படைப்புகளும் அகாதாமியின் பரிசினைப் பெறுகின்றன. சு.வெங்கடேசனின் காவல் கோட்டம், ஜோடி குரூசின் கொற்கை, பூமணியின் அஞ்ஞாடி சில எடுத்துக்காட்டுகள்

இலக்கிய ஏடுகளுக்கும் செய்தி இதழ்களுக்கும் இடையில் இருந்த ரேகைகள் கூட அழிந்து வருகின்றன. இன்று நவீன இலக்கிய ஏடுகள் என்று குறிக்கப்படும் இதழ்களும் புனைவிலக்கியமல்லாத பத்திகள், செய்திக் கட்டுரைகள், செய்தி விமர்சனக் க்ட்டுரைகளைத் தாராளமாக வெளியிடும் தகவல் ஊடகங்களாக பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன.  அவற்றில் இத்தகைய மாற்றம் ஏற்பட வெகுஜன செய்தி இதழகள் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பங்களித்துள்ளன.

அதே போல மைய நீரோட்ட பத்திரிகை நிறுவனங்களும் இலக்கியத்திற்கென தனி இதழ்களைத் தொடங்கி நடத்தி வருகின்றன.

சமகாலப் புனைவிலக்கியங்களின் வடிவங்கள் மாறிவிட்டன. அவை எளிதான வாசிப்பும், சுலபமாக வாசகர் தன்னை அதில் அடையாளம் கண்டு கொள்ளும் ஈர்ப்பும் கொண்ட யதார்த்தவாதப் புனைவுகளிலிருந்து விலகி நிற்கின்றன. சுயமாகப் பதிப்பித்துக் கொள்ளும் வாய்ப்புகளும்  மின் வெளி வழியே  ஓரு வாசகப்பரப்பைச் சென்றடையும் சாத்தியங்களும் இலக்கியம் ஊடகங்களின் கரம் பற்றி நடக்க வேண்டியதில்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளன.

அதே போல, பத்திரிகைகளுக்குப் புனைவு அப்படியொன்றும் அவசியமல்ல என்ற நிலையையும் அடைந்திருக்கிறோம்.

இதைக் கணவன் மனைவியிடையே ஏற்பட்டுள்ள பிணக்கு, மணவிலக்கல்ல என்று கொள்ளவே நான் விரும்புகிறேன். என் விருப்பங்கள் பொய்க்கலாம். ஆனால் கனவுகளுக்கு விளிம்புகள் இல்லை.

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these