தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!

வீழ்வேன் என்று நினைத்தாயோ?-13

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!

பளீரென்று பொழிந்து கொண்டிருந்தது பால் நிலவு. பெளர்ணமி என்பதால் சற்றுப் பிரகாசமாகவே பொலிந்து கொண்டிருந்தது. கடலில் இருந்து வீசிய குளிர்ச்சியான காற்று பகலெல்லாம் பட்ட கஷடத்திற்கு இதமாகவே இருந்தது. இரவு உணவை முடித்துக் கொண்டு வந்த தொழிலாளர்கள் திறந்த வெளியில் உட்கார்ந்து ஊர்க்கதைகள் பேச ஆரம்பித்தார்கள். உரையாடல்கள் எதில் துவங்கினாலும் எங்கு எங்கு சுற்றினாலும் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து விடும். பிறந்த மண்ணின் ஞாபகங்களை மறந்து விடுவது அவ்வளவு எளிதா?

ஏழைகளாகப் பிறந்தாலும் இனிப்பாகவே இருந்த குழந்தைப் பருவம் பேசிக் கொண்டிருந்தவர்களுக்குத் தங்கள் குழந்தைகளை நினைத்த போது நெஞ்சு விம்மியது. தொடக்க காலத்தில் சிங்கப்பூருக்குப் பிழைப்புத் தேடிப் போன தமிழர்கள் தங்கள் குடும்பங்களைத் தாயகத்தில் விட்டுவிட்டுத் தனியாகத்தான் போனார்கள்.ஆனால் நாளடைவில், போய்க் காலூன்றிக் கொண்டதும், குடும்பத்தையும் அழைத்துக் கொண்டார்கள். உதிரி உதிரியாக ஒவ்வொரு திசையில் கிடக்காமல் சேர்ந்து வாழ்ந்தது நிம்மதியாகத்தான் இருந்தது. ஆனால் அந்த நிம்மதிக்கு நடுவே ஒரு நெருடலும் இருந்தது. அது குழந்தைகளுக்கான கல்வி.

அன்றையத் தலைமுறையிடம் ஆங்கில மோகம் அத்தனை தலைவிரித்தாடவில்லை. அப்போது கல்வி என்றால் தமிழ்வழிக் கல்விதான். அதிலும் தமிழ் மொழிக் கல்வி மட்டும்தான்.

சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருந்த விங்லூங் என்ற கம்பத்தில், பசி தீர்ந்து, பால் நிலவின் கீழ் கூடிப் பேசிக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளர்களிடத்தில் ஒரு கேள்வி எழுந்தது. நம் பிள்ளைகளுக்காக நாமே ஏன் ஒரு தமிழ்ப் பள்ளி தொடங்கக் கூடாது?

ஆசை இருக்கலாம். அவசியமும் இருக்கலாம். ஆனால் அதற்குப் பணம் வேண்டாமா? முயற்சித்தால் முடியாது போகுமா? ஊர் கூடி இழுத்தால் ஓடாத தேரும் உண்டா?

ஊர் முழுக்க ஓடியாடிப் பணம் திரட்டினார்கள். 5340 வெள்ளி சேர்ந்தது. ஆனால் அது போதாது. கூலித் தொழிலாளர்களாக வந்தவர்களிடத்தில் கொட்டியா கிடக்கும் செல்வம்? பணம் குவிந்து கிடக்கவில்லை. ஆனால் மனம் விரிந்து கிடந்தது.பணம் கொடுத்தது போக வீட்டில் கிடந்த மரம், பலகை, மேசை போன்ற இதரப் பொருட்களைக் கொடுக்க முன் வந்தார்கள். அத்துடன் மாலை ஆறுமணிக்கு மேல் இலவசமாகக் கட்டட வேலை செய்வதற்குச் சிலர் முன் வந்தார்கள். கூலிக்காக யாருக்கோ வேலை செய்கிறோம், நம் குழந்தைகளுக்காக உடல் உழைப்பைத் தரமாட்டோமா என்ற எண்ணம் அவர்களை உந்தியது.

மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு அறை கொண்ட பள்ளி உருவானது. அதற்கு அவர்கள் சூட்டிய பெயர், ‘ஜீவானந்தம் தமிழ்ப் பள்ளி’. யார் இந்த ஜீவானந்தம்?

நம் ஜீவாதான். தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம்தான். சிங்கப்பூரில் 1940,50 களில் சிங்கப்பூரில் பல பகுதிகளில் தமிழ்ப் பள்ளிகள்  தொடங்கப்பட்டன. அவற்றைத் தொடங்கியவர்கள் தொழிற்சங்கங்களில் ஆர்வமுடன் செயல்பட்டுவந்த இடதுசாரிகள். அவர்களே அந்தப் பள்ளிகளில் ஆசிரியராகவும் செயல்பட்டார்கள். எழுத்தறிவு பெற்றால் விழிப்புணர்வு பெறலாம், விழிப்புணர்வு ஏற்பட்டால் அதன் மூலம் சமூக மாற்றம் ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கைகளில் ஒன்று.

“தொழிற்சங்க இயக்கத்தில் பிரபலமாக இருந்த பல தொழிற்சங்க தலைவர்கள் தமிழ்க் கல்வி வளர்ச்சிக்கும், பல தமிழ்ப் பள்ளிகள் சிங்கையில் எழுவதற்கும் மூலகாரணமாக இருந்தனர் என்பதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது” என்கிறார் சிங்கப்பூர் வானொலியில் தமிழ்ப் பிரிவின் தலைவராகப் பணியாற்றிய திரு.எம்.கே.நாராயணன்.

அந்தக் காலகட்டத்தில், சிங்கப்பூர் தமிழர்களிடையே, சிங்கப்பூர், மலேயா அரசியலை விட, இந்திய அரசியலின் தாக்கம்தான் அதிகம் இருந்தது. இந்திய அரசியலின் மூன்று போக்குகள் அவர்கள் மீது செல்வாக்கு செலுத்தின. ஒன்று இந்திய தேசிய அரசியல். அவர்களிடத்தில் காந்தியை விட நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தாக்கம் அதிகம். மற்றொன்று சுயமரியாதை இயக்கம். வேறொன்று இந்திய, குறிப்பாகத்  தமிழகப் பொதுவுடமைக் கடசியின் தாக்கம்.

இடதுசாரிகளைப் போல, திராவிட இயக்கத்தினரும் பல தமிழ்ப் பள்ளிகளைத் தொடங்கினார்கள். அவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு ஈ.வே.ரா, நாகம்மையார் (பெரியாரின் மனைவி.) நீலாம்பிகை (மறைமலையடிகளின் மகள்) பாரதிதாசன், தாளமுத்து போன்றோரது பெயரைச் சூட்டினர்.சுபாஷ் சந்திர போஸ், கமலா நேரு, அரவிந்தர்  எனத் தமிழர் அல்லாத பெயர்களில் கூட பள்ளிகள் இருந்தன. அரசியல் இயக்கங்களைச் சாராத சரஸ்வதி, தண்டாயுதபாணி, வள்ளுவர், அவ்வையார், வள்ளலார், பெயர்களிலும் பள்ளிகள் நடந்தன.

1940களில்சுமார் 47 தமிழ்ப் பள்ளிகள் சிங்கப்பூரில் செயல்பட்டுவந்தன.சீனப் பள்ளிகளோ, மலாய் பள்ளிகளோ இல்லாத பகுதிகளில் கூட தமிழ்ப் பள்ளிகள் இயங்கி வந்தன என்பது அன்றைய சிங்கைத் தமிழர்களின் தமிழ்ப் பற்றிற்கும், கல்வியின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைக்கும் சான்றளிக்கின்றன. இந்தப் பள்ளிகள் பொருளாதாரத்தில் மிகச் சாதாரண நிலையில் இருந்தவர்களால் தொடங்கப்பட்டன என்பது இவற்றின் இன்னொரு சிறப்பு. ஆறுமுகம் என்ற மருத்துவமனை ஊழியர் ஒருவர் தொடங்கிய கலைமகள் தமிழ்ப் பள்ளி ஓர் உதாரணம் (பின்னர் இந்தப் பள்ளியை ராமகிருஷ்ண மடம் நிர்வகித்தது. அப்போது அதன் பெயர் விவேகானந்தர் தமிழ்ப்பள்ளி எனப் பெயர் மாற்றப்பட்டது)

தனியார் முயற்சி என்கிறீர்களே, அரசாங்கம் எதுவும் செய்யவில்லையா? எனக் கேட்கிறீர்களா? சிங்கப்பூர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் கீழ் ஒரு காலனி நாடாக இருந்த போது அது அங்கிருந்தவர்களின் கல்வியில் பெரிய அக்கறை செலுத்தவில்லை. தனது நிறுவனத்தின் பணியாடகள் தேவைக்காக இரண்டு ஆங்கிலோ –தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வந்தது (1878) அங்கு மாணவர்களுக்குத் தமிழ் வழியே ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது.

தமிழ்ப் பள்ளிகள் வரலாற்றில் இன்றளவும் பேசப்படும் பள்ளி உமறுப் புலவர் பள்ளி. கடைய நல்லூரைச் சேர்ந்த அ.நா.மொய்தீன் என்பவரது முயற்சியால் உருவான பள்ளி அது. “சிங்கப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் ஆசிரியர்களை உருவாக்கி  அதன் மூலம் சிங்கப்பூரில் தமிழ்க் கற்பிக்கவும், தமிழ் இலக்கியம் படைப்பதற்கும், போற்றுதலுக்குரிய தொண்டு நிறுவனமாக உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி திகழ்ந்தது. அதற்குக் காரணமாக அமைந்தவர் திருமிகு அ.நா.மெய்தீன் அவர்களே!” என்று எழுதுகிறார் சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் மேநாள் செயலர்  வி.ஆர்.பி. மாணிக்கம்

அந்தப் பள்ளி தொடங்கப்பட்ட போது அதற்கு உமறுப் புலவர் பெயரிடப்படவில்ல்லை. “சிறுவர் தமிழ்ப் பாடசாலை” என்று பொதுப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது..பள்ளியைப் பார்வையிட வந்த அரசின் கல்வித்துறை அதிகாரி சின்னப்பா அதற்கென ஒரு தனிப் பெயரைத் தேர்ந்து கொள்ளுமாறு யோசனை சொன்னார். அவரே உமறுப் புலவரின் பெயரைப் பரிந்ந்துரைத்தார். அதன் பின்னரே அது உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளி என்று பெயர் பெற்றது என மெய்தீன் எழுதியிருக்கிறார்.

அந்தக் கல்வி அதிகாரி பார்வையிட வந்தபோது, வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு கட்டிடத்தின் மாடியில் பள்ளி இயங்கிக் கொண்டிருந்தது. அந்த இடம் பள்ளி நடத்துவதற்கு உகந்த இடம் அல்ல என்று கருதிய அவர் இடத்தை மாற்ற வேண்டும் என ஆணையிட்டார்.

பள்ளிக்கான கட்டிடம் கட்ட முடிவு செய்து அதற்கான நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினார் மெய்தீன். தமிழ்ப் பள்ளி என்றால் தமிழ்நாட்டினர் தாராளமாக உதவி செய்வார்கள் என்று யாரோ யோசனை சொல்ல, அவரது சொந்த ஊருக்குத் திரும்பி பலரிடம் உதவி கேட்டார். சிறிய துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு விநியோகித்தார். எதுவும் நடக்கவில்லை .ஏமாற்றத்துடன் திரும்பினார். ஆனால் அவரை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று சிங்கப்பூரில் நடந்தது

“பொதுமக்களிடம் நன்கொடை திரட்ட வீதிதோறும், வீடுகள்தோறும் செல்வது என்ற முடிவுக்கு வந்த குழுவினர் 8.6.1957 அன்று பிற்பகல் வசூலிக்கச் செல்லும் போது முதலில் ஐந்தடியில் (ஐந்தடி என்பது நடைபாதை போல கட்டிடங்களின் முன்னுள்ள இடம்) கடலை வறுத்து விற்கும் நம் தமிழ்ச் சகோதரன் ஒருவரைக் கண்டோம்.அவரிடம் இப்பள்ளி வேண்டுகோள் அறிக்கையை நீட்டினோம். அவர் அதை வாங்கிப் படித்ததும் அன்று காலை முதல் 4 மணி வரை கச்சான் பூத்தே (வறுகடலை) விற்றுப் போட்டு வைத்திருந்த பணக்குவளையை எடுத்தார். அப்படியே  அன்றைக்கு விற்ற பணத்தை எல்லாம் எங்கள் நிதி வசூலிப்பாளர்களிடம் கொடுத்து விட்டார். எண்ணிப் பார்த்தோம் 2 வெள்ளி 75 காசு இருந்தது. அந்தத் தமிழ்மகனுடைய தாய்மொழிப் பற்றையும் முகமலர்ச்சியுடன் அப்படியே விற்ற பணத்தை வழங்கிய பெருந்தன்மையையும் வியந்து உளமாறப் பாராட்டினோம்” என்று சிறப்பு மலர் ஒன்றில் எழுதியிருக்கிறார் மெய்தீன்.

இப்படி பாட்டாளிகளின் உழைப்பாலும் கொடையாலும் உருவான தமிழ்ப் பள்ளிகள் ஒரு கட்டத்தில் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டன.

அது ஒரு எதிர்பாராத திருப்பம்.

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *