அரசியலின் இலக்கியம்

பள்ளிகளிலும் அரசு மற்றூம் தனியார் நிறுவனங்களிலும் வந்தேமாதரம் பாடப்பட வேண்டும் என்று சென்னை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வரவேற்கப்பட வேண்டிய முடிவு. கட்டாயப்படுத்துவதன் மூலம் தேசபக்தியை உருவாக்கவோ வளர்க்கவோ முடியாது என்பது உண்மைதான். ஆனால் தேசிய பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்றுகூடத் தெரியாத ஒரு  தலைமுறையிடம் சின்ன சின்ன வற்புறுத்தல்கள் தேவையாகத்தான் இருக்கிறது

பொது அரங்கில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு, (செப்டெம்பர் 7 1906) நூறாண்டுகள் தாண்டிவிட்டன. ஒரு பாடல் நூறாண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களின் உணர்வில் சிறப்பான இடம்பெற்றுத் திகழ்வது எல்லா இலக்கியப் படைப்புக்களுக்கும் கிட்டும் ஒரு கெளரவம் அல்ல விடுதலைப் போரில் எழுப்பப்பட்ட .வந்தே மாதரம் என்ற முழக்கம்  இன்றும் மன எழுட்சி தரும் மந்திரம், அந்த முழக்கம் இலக்கியத்தின் வழியாக அரசியலுக்குக் கிடைத்த முழக்கம்.

அந்தப் பாடலை 1870-களின் ஆரம்பத்தில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதினார். அந்த ஆரம்ப வடிவம் இரண்டு கண்ணிகள் கொண்டது வன வளமும், கனிவளமும், நீர் வளமும், பயிர் வளமும், இனிய மொழிகளும் கொண்ட தாய் மண்ணை ஒரு சொர்க்கம் என கருதும் அழகிய பாடல் அது. ‘நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் என்று தொடங்கும் அந்தப் பாடலின் தமிழ் மொழி பெயர்ப்பை (மொழிபெயர்த்தவர் பாரதி) இப்போது படித்தாலும் அந்த வர்ணனை அழகில் மனம் தன்னை இழக்கும்.

1870-களில் இரண்டு கண்ணிகளாக எழுதிய அந்தப் பாடலை 1881-ல் ஆனந்தமடம் என்ற தனது நாவலுக்காக பங்கிம் சந்திரர், ஐந்து கண்ணிகளாக விரிவுபடுத்தினார். அப்போது இந்தப் பாடல், நாவலின் தேவை கருதி, இந்துக்கள் வீரத்தின் குறியீடாக வழிபடும் துர்கையைத் துதிக்கிற பாடலாக வடிவம் கொண்டது

1905ல், கர்சன் காலத்தில், வங்காளம், மதத்தின் அடிப்படையில் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதையடுத்து நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சி எழுந்தது. மதங்கள் வேறு வேறானாலும் நாம் ஒரே தேசத்தவர் என்பதை முன்னிறுத்தும் ‘இந்திய தேசியம் என்ற அரசியல் சித்தாந்தம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்தமடம் நாவலும் வந்தேமாதரம் பாடலும் மக்களிடையே பெரும் கவனம் பெற்றன. (அதனால்தான் பங்கிம் சந்திரர் இந்திய தேசியத்தின் குரு எனக் கருதப்படுகிறார்.) காங்கிரஸ் கூட்டங்களில் அந்தப் பாடல் பாடப்பட்டது. அப்போது அதற்கு இசை வடிவம் கொடுத்தவர் ரவீந்திரநாத் தாகூர்.

1930களில் இரண்டு காரணங்களுக்காக வந்தேமாதரம் சர்ச்சைக்குள்ளாகியது. அந்தப் பாடல் ஆனந்தமடத்துடன் தொடர்புடையது, அந்த நாவல் இஸ்லாமியர்களை விமர்சிப்பதால், சில இஸ்லாமியர்கள் அதை எதிர்த்தார்கள். உருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் வேறு சில இஸ்லாமியர்கள் அதை எதிர்த்தார்கள்.

1937-ல் மாநில சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர்களும், முகமது அலி ஜின்னாவும் இந்தப் பாடலுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். 1937-ல் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் மெளலான முகமது அலி என்பவர் வந்தேமாதரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அவரது எதிர்ப்பு, இஸ்லாமியர்கள் உருவ வழிபாட்டை மேற்கொள்வதில்லை என்பதன் அடிப்பையில் அமைந்திருந்தது.

இதையடுத்து, நேரு, வந்தேமாதரம் குறித்துக் கருத்து தெரிவிக்குமாறு தாகூருக்கு எழுதினார். தாகூர் வந்தேமாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைப் பாடலாம் மற்றவற்றைத் தவிர்த்து விடலாம் என்று யோசனை தெரிவித்தார் ‘இஸ்லாமிய நண்பர்கள் எழுப்பிய ஆட்சேபங்களின் பின்னுள்ள உணர்வுகளை கமிட்டி புரிந்து கொள்கிறது என்று சொன்ன காரிய கமிட்டி, முதல் இரண்டு பத்திகள் மட்டும் பாடப்பட வேண்டும் என்று முடிவு செய்தது. அந்த இரண்டு பத்திகள்தான் இப்போதும் பாடப்பட்டு வருகிறது. அதைப் பாடுவதில் இஸ்லாமியர்களுக்கு ஆட்சேபம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கு அமைத்த இசை மிகப் பிரபலம்.

இந்தியா விடுதலை அடைந்த போதும் வந்தேமாதரம் சர்ச்சை குள்ளாகியது. அந்தச் சர்ச்சை இந்தியாவின் தேசிய கீதம் எது வந்தேமாதரமா? ஜன கண மனவா என்பது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது இந்திய தேசிய ராணுவத்தின் கீதமாக ஜன கண மனவைப் பயன்படுத்தி வந்திருந்தார். நேரு போன்றவர்களின் ஆதரவும் அதற்கு இருந்தது. ஆனால் சிலர், தாகூர் அதை, வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது அவரை வரவேற்கும் முகமாக எழுதியது என்று சொல்லி வந்தார்கள்

ஜன கண மன முதன் முதலில் 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தாகூராலேயே கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

இது எவ்வளவு தூரம் உண்மை என்பதைப் புரிந்துகொள்ள, அந்தப் பாடலின் பின்னணியையும் பார்க்கவேண்டும். இந்தியாவிற்க்கு வருகை தர இருந்த மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கப் பிரிவினையை ரத்து செய்து ஆணை பிறப்பித்திருந்தார். அதை ஓர் அரசியல் வெற்றியாகக் கருதிய காங்கிரஸ், ஜார்ஜ் மன்னரை சிறப்பாக வரவேற்கக் கருதியது.

அதைப் பற்றி விவாதிக்க கல்கத்தாவில் அதன் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் (டிசம்பர் 26, 1911) மாநாட்டில் பொதுவான அரசியல் நிலைமைகள் விவாதிக்கப்பட்டன. இரண்டாம் நாள் முழுவதும் மன்னர் ஜார்ஜின் வரவேற்புக்காக ஒதுக்கப்பட்டது. அந்த இரண்டாம் நாளின் நிகழ்ச்சி தொடங்கும்போது தாகூர் அந்தப் பாடலைப் பாடினார் என்று சில பத்திரிகைக் குறிப்புகள் சொல்கின்றன. (ஸ்டேட்ஸ்மேன், டிசம்பர் 28, 1911)

ஆனால் அதை தாகூர் அபிமானிகள் மறுக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் இரண்டு பாடல்கள் பாடப்பட்டன. ஜன கண மனவை அடுத்து ராம் புஜ சவுத்ரியின் இந்திப் பாடல் ஒன்றும் பாடப்பட்டது. அதுதான் அரசரை துதித்து எழுதிய பாடல். இந்திய மொழிகளைப் பற்றி ஏதும் அறியாத ஆங்கிலப் பத்திரிகைகள் தவறாக செய்தி வெளியிட்டு விட்டன என்று அவர்கள் சொல்கிறார்கள்.

அன்றைய ஆங்கிலேயப் பத்திரிகையாளார்களுக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாது என்பதென்னவோ உண்மைதான். ஜனகணமன இந்தியில் எழுதப்பட்ட பாடல் என்றும், வந்தேமாதரம் பாடலை எழுதியவர் தாகூர் என்றும் ஒருமுறை சண்டே டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதுண்டு.

ஜன கண மனவை எந்தச் சூழலில் தான் எழுதினேன் என்பதைத் தாகூரே அவரது நண்பர் ஒருவருக்கு (புலின் பெகாரி சென்) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்: “எனது நண்பரும் இங்கிலாந்து அரசின் உயர் அதிகாரியுமான ஒருவர் சக்கரவர்த்தி முடிசூட்டு விழாவை முன்னிட்டு ஒரு பாடல் எழுதித்தர முடியுமா என்று கேட்டார். அவரது வேண்டுகோளைக் கேட்டு நான் பெரும் ஆச்சரியம் அடைந்தேன். பெரும் மன உளைச்சலும் ஏற்பட்டது. அந்த மன உளைச்சல் காரணமாக ஜன கண மனவில் இந்தியாவின் வெற்றியை ‘பாக்கிய விதாதா’ தீர்மானிப்பதாக எழுதினேன். இந்தியா என்ற மகா ரதத்தை, யுக யுகமாக உயர்விலும் தாழ்விலும், நேரான பாதையிலும் வளைந்து நெளிந்த பாதையிலும் வழிநடத்திச் செல்வது அதுதான். அந்த விதியின் தலைவன், அந்த இந்திய மனத்தின் ஒருமித்த வெளிப்பாடு, அந்த நிரந்த வழிகாட்டி, ஐந்தாம் ஜார்ஜாகவோ ஆறாம் ஜார்ஜாகவோ, எந்த ஜார்ஜாகவோ ஒருபோதும் இருக்க முடியாது. என்னுடைய அந்த அதிகாரி நண்பருக்குக்கூட இது புரிந்தது. அவர் மிதமிஞ்சிய ராஜவிசுவாசியாக இருக்கலாம் ஆனால் முட்டாள் அல்லவே?” என்று எழுதுகிறார் தாகூர்.

சரி யார் இந்த பாக்கிய விதாதா?

அதைப் புரிந்து கொள்ள தாகூரைப் புரிந்துகொள்ள வேண்டும் தாகூர் வங்காளத்தின் செல்வக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் அன்றைய மேட்டுக்குடி குடும்பங்களைப் போல ஐரோப்பிய நாகரிகத்தையும் கலாசாரத்தையும் நன்கு அறிந்தவர் என்ற போதிலும், இந்தியக் கலை மரபு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் உடையவர். குறிப்பாக உபநிடதங்களில் ஆழ்ந்து தோய்ந்தவர். எல்லாம் வல்ல ஒரு பரம்பொருளுடன் அவர் மனம் திறந்து உரையாடுவதை  அவரது  பல படைப்புக்களில், குறிப்பாக கீதாஞ்சலியில், பார்க்கலாம்

கண்ணுக்குத் தெரியாத, ஆனால் வல்லமை கொண்ட ஒரு சக்தி  மனிதர்களை, இந்தியாவை, வழிநடத்துவதாக அவர் நம்பியிருக்க வேண்டும். அந்தச் சக்தியை Destiny என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். (தமிழில் விதி என்று சொல்லலாமா?) அது தனி மனிதர்களை மட்டுமல்ல, நாட்டையும் வழி நடத்துவதாக நம்பினார்கள். இறை நம்பிக்கை இல்லாத நேரு போன்றவர்கள்கூட இந்த Destiny யை நம்பினார்கள்  ‘Long years ago, India made a tryst with destiny” என்றுதான் அவரது முதல் சுதந்திர தின உரை தொடங்குகிறது

தாகூர், பல காங்கிரஸ் நாயகர்களைப் போல வீதியில் இறங்கிப் போராடியவர் அல்ல. ஆனால் அவர் காலனி ஆதிக்கத்துக்கு எதிரான உணர்வுகள் கொண்டிருந்தார் என்பதை அவரது பல படைப்புக்களில், குறிப்பாக இளம் வயதில் எழுதிய, படைப்புக்களில் காண முடிகிறது. அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது ஆனால் ஜாலியன் வாலா பாக் படுகொலைக்குப் பிறகு அவர் அதை ஆங்கில அரசிடம் திருப்பி அளித்துவிட்டார். தாகூரை பங்கிம் சந்திரரைப் போல ‘தேசியத்தின் குரு” என்று சொல்ல முடியாது என்றாலும் அவர் இந்தியாவின் பெருமைக்குரிய மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதற்கான அரசியல் சாசன சபையில் 1948-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தி நேரு ஓர் அறிக்கையை வெளியிட்டார்: ஜனகணமன அல்லது வேறு எந்தப் பாடலை தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளலாம் என்பதைக் குறித்துத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு எல்லா மாநில ஆளுநர்களுக்கும் கடிதம எழுதியிருந்தேன். அவர்கள் தங்களது முடிவை எழுதுவதற்கு முன் தத்தம் மாநில முதல்வர்களையும் கலந்து ஆலோசிக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தேன். எல்லா ஆளுநர்களும், மத்தியப் பிரதேச ஆளுநர் தவிர, ஜன கண மனவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். எனவே மத்திய அமைச்சரவை இந்த விஷயத்தைப் பரிசீலித்து ஜனகணமனவை தேசிய கீதமாக ஏற்பது தற்காலிகமாக முடிவு செய்துள்ளது. இறுதி முடிவை அரசியல் சாசன சபைதான் எடுக்க வேண்டும்.” என்றது அந்த அறிக்கை

அனால்  தேசிய கீதம் எது என்பது பற்றி அரசியல் சாசன சபை தீர்மானம் எதையும் நிறைவேற்ற வில்லை. அரசியல் சாசன சபையின் இறுதி நாளான 1950 ஆண்டு, ஜனவரி 24-ம் நாளன்று குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜேந்திர பிரசாத், அந்தச் சபையில் ஓர் அறிக்கை வெளியிட்டார்: “அரசியல் அமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை விவாதித்து முடிவு செய்துவிட்டோம். ஆனால் ஒரு விஷயம் நிலுவையில் இருக்கிறது. தேசிய கீதம் பற்றிய முடிவுதான் அது. முன்பு அது குறித்து சபையில் விவாதித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் தீர்மானம் மூலமாக முடிவு செய்வதற்குப் பதிலாக. நான் ஓர் அறிக்கை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது. அதனால் நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். ஜன கண மன என்ற பாடலின் இசையும் சொற்களும் இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுப் பங்களித்த வந்தேமாதரம் என்ற பாடலுக்கும் ஜனகணமனவுக்குச் சமமான அந்தஸ்து அளிக்கப்படும். (கரவொலி) இந்த அறிவிப்பு உறுப்பினர்களுக்குத் திருப்தி அளிக்கும் என்று நம்புகிறேன்.” என்பது அந்த அறிக்கை

இதற்குப் பிறகு விவாதம் ஏதும் நடைபெறவில்லை உதயமாகவிருந்த இந்தியக் குடியரசின் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ராஜேந்திர பிரசாத்தைப் பாராட்டி உரைகள் தொடங்கின.

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *