அரை உண்மைகளும் முழுப் பொய்களும்

மாலன்

“தன் விருப்பம் போல் கோடிக்கணக்கான பேரை வாழ்விற்கோ சாவிற்கோ இட்டுச் செல்லும் அதிகாரம் கொண்ட ஒரு பிரிவினரால் இந்த உலகம் ஆளப்பட வேண்டும் என்பது வெறுப்பையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. அந்தப் பிரிவு உலகம் முழுக்கத் தனது வலையைப் பின்னியிருக்கிறது. முதலாளித்துவம் தேச எல்லைகளைப் பொருட்படுத்துவதில்லை. அண்மைக்கால நிகழ்வுகளிலிருந்து அது எதையும் கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை.ஏனெனில் கோடிக்கணக்கான மக்களை விட அதற்குத் தனது நலன்கள் முக்கியம். . .  சுடர் மிகும் அறிவுத் திறன் கொண்டவர்கள் வறுமையில் துவண்டு போவதையும் மற்றவர்கள்  அவர்களுக்குப் பயன்பட்டிருக்கக் கூடிய பணத்தை வாரியிறைத்து ஆடம்பரத்தில் திளைப்பதையும் காண குமட்டிக் கொண்டு வரவில்லையா? அந்த வர்க்கமும் கடினமாக முயன்றுதான் பணம் சம்பாதித்தார்கள் என்று நீ சொல்லலாம். இருக்கலாம். ஆனால் முதலாளித்துவம் அதன் செல்வத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்தபோது தொழிலாளிகள் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதையும் நீ அறிந்திருப்பாய்தானே?”

இதைச் சொன்னவர் யாராய் இருக்கக் கூடும்? மார்கஸ்? எங்கல்ஸ்? மாவோ? சேகுவாரா?

இன்னொரு க்ளுவும் கொடுக்கிறேன். கீழே உள்ள வாசகமும் அவருடையதுதான்.

முதலாளித்துவ அரசின் கீழ், ஒரு தொழிலாளி,- அப்படி இருக்க நேர்ந்தது அவனுடைய மிகப்பெரிய துரதிருஷ்டம்- ஒரு உயிர்ப்புள்ள மனிதன் அல்ல. ஒரு படைப்பாளி அல்ல. ஒன்றை உருவாக்குபவன் அல்ல. அவன் ஒரு இயந்திரம், ஒரு எண், இயந்திரத்தின் ஒரு திருகாணி. அவனது தயாரிப்பிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டவன்

இவற்றைச் சொன்னவர் மார்க்ஸோ, எங்கல்ஸோ, வேறெந்த கம்யூனிசத் தலைவர்களோ அல்ல. இவற்றைச் சொன்னவர் ஜோசப் கோயபல்ஸ்

ஆம், “ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாக ஏற்றுக் கொள்ளப்படும்” என்ற ‘பொன்மொழி’யைச் சொன்னவர் என்று சொல்லி வருகிறார்களே, அந்த கோயபல்ஸ். உண்மை என்னவென்றால் அது அவர் சொல்லிய வாசகம் அல்ல. அந்த வாசகத்தை அவர் சொன்னார் என்ற பொய் நம்மிடம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது!

கோயபல்ஸின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. ஒரு குமாஸ்தாவின் மகன். நுரையீரல் பிரச்சினையால்  அவதிப்பட்ட இளம் பருவம் அவருடையது. பொருளாதாரம், உடல்நலம் இவற்றில் பின்னடைவு இருந்த போதிலும்,  ஹைடல்பெர்க் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அவருக்கு வலதுகாலில் பிரச்சினை. பாதம் உட்புறமாக மடிந்திருந்தது. ஆதலால் விந்தி விந்திதான் நடப்பார். ஹிட்லர் தனக்குப் பின் கோயபல்ஸ்தான் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று உயில் எழுதி வைத்திருந்தார். தலைவனின் ஆணையை ஏற்று ஒரே ஒரு நாள் நாட்டின் தலைவராக (Chancellor) பதவி வகித்துவிட்டு மறுநாள், மனைவிக்கும் தனது 5 குழந்தைகளுக்கும் சயனைட் கொடுத்துவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். கோயாபல்ஸ் அபாரமான பேச்சாளர். அவர் பரப்புரை பற்றிச் சொல்லிய உத்திகள் இன்றும்  விளம்பர உலகில் செல்லுபடியாகின்றன. (“Propaganda should be popular, not intellectually pleasing.”)

இந்தக் கட்டுரை கோயபல்ஸ் பற்றியது அல்ல.ஆனால்,  எப்படி அவர்  சொல்லாத ஒற்றை வாக்கியத்தை கொண்டே கோயபலஸ் பற்றிய ஒரு மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் சமைக்கப்பட்டதோ, அதைப் போன்றே இன்றும் அரை உணமைகள், சொல்லப்பட்ட சூழலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒற்றை வாக்கியங்கள், படங்கள், காட்சிகள், அடிப்படையில் மனச்சாய்வுகளைச் செய்தியாக விற்கும் ஊடகங்களையும் அதை நம்பி வரிந்து கட்டிக் கொண்டு நட்பு ஊடகங்களில் சர்ச்சையிடுவோரையும் பற்றியது.

ஜூலை 27 அன்று பிரதமர்.ராமேஸ்வரம் அருகில் உள்ள பேக்கரும்பில் அப்துல் கலாம் நினைவகத்தைத் திறந்து வைத்தார். அந்த நினைவகத்தின் வெளியே அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம் ஒன்று நெடிதுயர்ந்து நிற்கிறது. உள்ளே நுழைந்ததும் வெவ்வேறு வகை ஏவுகணைகளின் சிறிய அளவு மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன. நினைவகத்தில் 900 ஓவியங்கள், 200 அபூர்வப் புகைப்படங்கள், குடியரசுத் தலைவர் அலுவலக மேசையின் பின் கலாம் அமர்ந்துள்ள உருவச் சிலை, அவர் பயன்படுத்திய குதிரை வண்டியின் மாதிரி, அவரது பொன்மொழிகள், அவற்றின் கீழ் ஏவுகணை முத்திரை இவையும் இருக்கின்றன.

இவற்றோடு கலாம் வீணை வாசிப்பது போன்ற ஒரு மரச் சிற்பம்.  சிற்பத்தின் ஒரு பகுதியாக அவர் அருகே பகவத் கீதை..

அசுரப் பசியில் அலைந்து கொண்டிருந்த ஊடகங்களுக்கு அவல் கிடைத்து விட்டது. அந்த நினைவகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏவுகணை மாதிரிகள், 900 சித்திரங்கள், 200 புகைப்படங்கள் இவற்றையெல்லாம் ஊடகங்கள் கண்ணில் காண்பிக்கவில்லை. வீணைச் சிற்பத்தை முன்னிலைப்படுத்தின.

கிடைக்கும் ஒவ்வொரு சிறிய வாய்ப்பையும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டுவிட வேண்டும் என்ற பெருந்தாகத்தில் இருக்கும் நம் அரசியல்வாதிகள் விமர்சனக் கணைகளை வீசினர். முதல் கணை கீதை மீது பாய்ந்தது.

“கலாம் வீணை வாசிப்பது போலவும், அருகில் பகவத் கீதையும் வைக்கப்பட்டுள்ளது. நியாயமாக திருக்குறள் புத்தகத்தை வைத்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.” என்று தமிழக எதிர்கடசித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.

திருக்குறள் மிக உயர்ந்த நூல். அதன் மீது மரியதையும் பெருமிதமும் கொள்ளாத தமிழர்கள் எவரும் இருக்க முடியாது. கலாமிற்குப் பிடித்த நூல்களில் அதுவும் ஒன்று. கலாம் தன்னுடைய சில உரைகளில் அதனை மேற்கோள் காட்டியிருக்கிறார் என்பதில் மறுப்பேதும் இல்லை.

என்றாலும் அவர் கீதையைத் தன்னோடு வைத்திருந்தார். அண்ணாப் பல்கலைக் கழக விருந்தினர் அறையில் அவர் தங்கியிருந்தபோது அங்கிருந்த மேசையில் கீதை இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அமைதியற்ற தருணங்களில் அவர் மனதில் கீதை ஒலித்தது என்பதை அவரே குறிப்பிடுகிறார்.

“நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக பம்பாய் சென்றேன். அதில் என்ன மாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்பது பற்றி எனக்குத் திட்டவட்டமாக ஏதும் தெரியவில்லை. எதையும் படிப்பதற்கோ அல்லது அனுபவம் வாய்ந்த எவரிடமாவது பேசுவதற்கோ எனக்கு நேரம் கிடைக்கவில்லை. பகவத் கீதையிலிருந்து மேற்கோள் காட்டும் லட்சுமண சாஸ்திரியின் குரல் (லட்சுமண சாஸ்திரி ராமேஸ்வரம் கோயிலின் தலைமை குருக்கள்; கலாமின் வகுப்புத் தோழர் ராமநாத சாஸ்திரியின் தந்தை) என் காதுகளில் எதிரொலித்தது”. என்றெழுதும் கலாம் (:அக்னி சிறகுகள்  பக்கம் 78) கீதையிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்.

வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி என்பதைக் கலாம் அறிந்து கொண்டது கீதையின் அந்த வரிகள் மூலம்தான். அதனால்தானோ என்னவோ அவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வெளியானபோது, அண்ணாப் பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதும் அவர் கீதையிலிருந்துதான் மேற்கோள் காட்டிப் பேசினார். “எது நடந்ததோ… ம். சொல்லுங்க” என்று செய்தியாளர்களையும் தன்னோடு திரும்பச் சொல்லச் சொன்னார்.

375 பக்கம் உள்ள அவரது சுயசரிதத்தில் ஒரு குறள் கூட மேற்கோள் காட்ட்ப்படவில்லை.

இஸ்லாமியராகப் பிறந்த ஒருவர் குறளை மேற்கோள் காட்டுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.  ஏனெனில் அது எல்லோருக்கும் பொதுவான  ஒரு நூல். ஆனால் அவர் கீதையை வாசிக்கிறார், மேற்கோள் காட்டுகிறார் என்றால் அவர்  பரந்த மனப்பான்மைக் கொண்டவராகத்  திகழ்ந்தார் என்றுதானே புரிந்து கொள்ளப்படும். ஒரு தமிழர் அப்படி வாழ்ந்தார் என்பதில் நமக்குப் பெருமைதானே?

ஆனால்  அவர் கேவலப்படுத்தப்பட்டதாக ஸ்டாலின் சொல்கிறார்: “மத்திய அரசு ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமை கேவலப்படுத்தி அரசியலுக்காக அதனை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இதனை தட்டிக் கேட்க முடியாத முதுகெலும்பில்லாத ஆட்சியாக தமிழக அரசு திகழ்கிறது.

ஸ்டாலினைப் பொறுத்தவரையில் தமிழக அரசைச் சாடுவதற்கு இந்தச் சிலை ஒரு வாய்ப்பு; ஒரு சாக்கு. அதற்கு அப்துல் கலாம் பயன்படுகிறார். அவ்வளவுதான். “அரசியலுக்காக” மத்திய அரசு கலாமைப் பயன்படுத்திக் கொண்டது என்றே வைத்துக் கொள்வோம். இவர் இந்தச் சிலை விவகாரத்தை ஸ்டாலின் எதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்? அரசியலுக்குத்தானே?

இரண்டாவது கணை வீணை மீது எறியப்பட்டது. “தாஹிராவை வைப்பார்களா?” என்று ஒரு கவிஞர் முகநூலில் ஆதங்கப்பட்டார். கலாம் தாஹிரா வாசிப்பவராக இருந்தால் வைத்திருக்கக் கூடும். ஆனால் அவர் வீணை வாசிப்பதில்  அல்லவோ ஆர்வம் கொண்டிருந்தார்.?கீதையை வேண்டுமானால் இந்துக்களின் நூல் என்று வகைப்படுத்தலாம். வீணையையுமா?  

இசையை மதத்தோடு, அல்லது ஜாதியோடு தொடர்புபடுத்துவது போல அபத்தம் ஏதுமில்லை. வீணைப் போட்டியில் வென்று காந்தருவ தத்தையை சீவகன் மணந்த செய்தியை  ”வெள்ளிமலை வேற்கண்ணாளைச் சீவகன் வீணை வென்றான்” என்று சீவக சிந்தாமணி பேசுகிறது. சீவகன் சமணன்.  ஷேக் சின்ன மெளலானா சாகேபின் நாதஸ்வரத்தில் மயங்காதார் யார்? இன்றும் அவருடைய பேத்தி சுபாணி காலிஷா நாதஸ்வரம் வாசித்துக் கொண்டுதானே இருக்கிறார்?

வீணை தனித்துவமான இந்திய இசைக் கருவி. வயலின் போன்றோ, சாக்ஸஃபோன் போன்றோ, கிளாரினெட் போன்றோ, மேலை நாட்டு சங்கீதத்தில் வாசிக்கப்படும் கருவியல்ல. இந்திய அடையாளத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட கலாம் வீணை வாசிக்கக் கற்றிருக்கலாம். கலாம் தனது வழிகாட்டியாக கருதிய விக்ரம் சாராபாய் கலைகளின் ரசிகராகவும் இருந்தார். ஓசைகளுக்கு நடுவே இசை கேட்கும் காதுடையவராகத் திகழ்ந்தார் என்பது விக்ரம் சாராபாய் மீதான புகழ்ச்சிகளில் ஒன்று

இந்தச் சிலையைப் பார்ப்பவர்கள் கலாம் விஞ்ஞானி அல்ல, வீணை வித்துவான் என்று எண்ணிவிடுவர்கள் என்ற எள்ளல்கள் நட்பு ஊடகமான முகநூலிலும் டிவிட்டரிலும் இரைந்தன. வாசலில் நிற்கும் அக்னி ஏவுகணையின் மாதிரி, உள்ளே உள்ள ஏவுகணைகளின் மாதிரிகள், 900 சித்திரங்கள், 200 புகைப்படங்கள் இதையெல்லாம்  பார்க்காமல் கண்ணை   மூடிக் கொண்டு வருபவர்கள் வேண்டுமானால் அப்படி எண்ணிக் கொள்ளலாம். ஆனால் ஊடகங்களின் ஒற்றை வரிச் செய்தியை நம்பாமல் மனதைத் திறந்து வைத்துக் கொண்டு வருபவர்களுக்கு, அந்த நினைவிடம், ஒரு இந்தியனின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தவே செய்யும்

 சுதந்திர தினத்தன்று வெளியான ஒரு “தேசிய” நாளிதழில் வாஞ்சிநாதனைப் பற்றி அவரது “பேரன்” (?) பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. தனது மனைவிக்கு எதிர்காலத்திற்கு வேண்டிய பொருளியல் பாதுகாப்பைச் செய்து வைக்காமல் வாஞ்சிநாதன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தன்னை மாய்த்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டியது பேட்டி. சுதந்திர நாளில், அதற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களை நன்றியுடன் நினைத்துப் போற்ற வேண்டிய நாளில் இப்படி ஒரு பேட்டி. இதை வாசிக்கும் இளைய தலைமுறை எப்படி ஒரு பொது நோக்கத்திற்காக தியாகம் செய்ய முன்வரும்? போராட்டங்கள் போக்கு வரத்திற்கு ‘இடையூறாக’ இருப்பதாக நினைக்கும் மனோபாவம் வலுத்து வரும் காலத்தில் இது போன்ற பேட்டிகள் எத்தகைய மனநிலையைக் கட்டமைக்கும்?

இந்தப் பேட்டியளித்தவர் உண்மையிலேயே வாஞ்சியின் பேரனாக இருந்திருந்தாலாவது ஏதேனும் சிறிதளவாவது நியாயம் இருந்திருக்கும். வாஞ்சியின் மனைவி பொன்னம்மாள் திருமணம் ஆகி ஓராண்டு கூட அவரோடு வாழவில்லை. வாஞ்சி இறந்த பின்பு அவர் தனது தங்கை குடும்பத்தோடு வாழ்ந்து 1967ல் இறந்து போனார். அவருக்குக் குழந்தை ஏதும் இல்லை. அதாவது பேட்டியளித்தவர் வாஞ்சியின் வாரிசோ, குடும்பத்தைச் சேர்ந்தவரோ அல்ல.

“வயிற்றில் ஏழு மாதக் குழந்தையுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த எங்க பாட்டியை சொந்த வீடும் கண்டுக்கல; இனத்தாரும் அவருக்குக் கைகுடுக்கல.” என்று குற்றம் சாட்டும் பேட்டியாளர் “பொன்னம்மாளுக்கு அடைக்கலம் கொடுத்து, தாயையும் மகளையும் வெள்ளை ஆட்சியரின் பார்வையிலிருந்து மறைத்து பாதுகாத்தது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தந்தை உக்கிரபாண்டியத் தேவர்.” என்கிறார் (முதலில் வெளியன போது பாதுகாத்தது முத்துராமல்லிங்கத் தேவர் என்றிருந்தது.அது சாத்தியமில்லை ஏனெனில் ஆஷ் கொலை நடந்த போது முத்துராமலிங்கத் தேவருக்கு வயது 3 என்பது சுட்டிக் காட்டப்பட்டபின், தானே கண்டுபிடித்தது போல செய்திக்குத் திருத்தம் வெளியிட்டது நாளிதழ்) யாருக்குப் “புகழ்” சேர்க்க இந்தப் பேட்டி வெளியிடப்பட்டது என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

பேட்டியில் உள்ள விவரங்கள் சரிதானா என விசாரித்து உறுதி செய்து கொள்ளும் சாத்தியங்கள் நாளிதழுக்கு இருந்தன. நெல்லையில் வாழும் வரலாற்றாசிரியர் ஆ.சிவசுப்ரமணியன் ஆஷ் கொலைபற்றி ஓர் சிறந்த நூல் எழுதியிருக்கிறார். சென்னையில் வசிப்பவரும், அந்த நாளிதழுக்கு நெருக்கமானவருமான வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதியைக் கேட்டிருக்கலாம். பேட்டி வெளியாகும் முன் சரிபார்த்துக் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, பேட்டி வெளியான பின்  பேட்டியில் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட கடிதங்களையும் நாளிதழ் பிரசுரிக்கவில்லை. பேட்டி வெளியான நான்கு நாள்களுக்குப் பிறகு வருத்தம் தெரிவித்து – கவனிக்க மன்னிப்புக் கேட்கவில்லை- விஷயத்தை முடித்துக் கொண்டது நாளிதழ்.

இது போன்று அரை உண்மைகளை ஊதிப் பெருக்குவது அல்லது ஒற்றை வரித் தகவல்களாகக் குறுக்குவது, ஆதாரமற்ற தகவல்களை அவசரப்பட்டு வெளியிடுவது, இதற்கெல்லாம் என்ன காரணம்? இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று வம்பு கேட்கும் ஆர்வமுள்ள வாசகனின்/ நேயர்களின் பலவீனத்தைப் பயனபடுத்தி எதையேனும் பரபரப்பாக்கி, காசு பார்ப்பது அல்லது கவனம் பெறுவது. அல்லது தன் அரசியல் காழ்ப்பையோ, ஜாதி அபிமானத்தையோ உமிழ்ந்து கொள்ள வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வது.

இரண்டுமே ஆரோக்கியமானதல்ல. அதிலும் இரண்டாவது அபாயகரமானது

அடுத்த முறை ஊடகங்களில் நீங்கள் கேட்கும் அல்லது வாசிக்கும் செய்தியின் காரணமாக நட்பு ஊடகங்களில் பொங்கும் முன் சற்று தாமதியுங்கள். இது உண்மையாக இருக்கக் கூடுமா என்று யோசியுங்கள். அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் பொது நன்மைக்கும் நல்லது.

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *