பாரதியும் பாரதமும்

மகாபாரதம், இராமாயணம் என்ற இரு பெரும் இதிகாசங்களும் மக்களிடமிருந்து இலக்கியம் பெற்ற கொடை.. இதனால்தான் எல்லா இந்திய மொழிகளிலும் எல்லாவித வடிவங்களிலும் இன்றும் எழுதப்பட்டு வருகிறது.இந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தோனீசியாவில் வழங்கும் ஜாவனீஸ் மொழியிலும் ககவின் என்ற கவிதை வடிவில் எழுதப்பட்டுள்ளது

பழந்தமிழில் மகாபாரத்தைச் செய்யுள் வடிவில் எழுதியவர்கள்  எட்டுப் பேர். இப்போது லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள பாண்டியர்களின் பழைய வரலாற்றைச் சொல்லும் சின்னமன்னூர் செப்பேட்டில் “”மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்…..” என்று ஒரு வரி காணப்படுகிறது. மகாபாரதத்தைத் தமிழ்ப்படுத்திய புலவர் யார் என்று தெரியவில்லை.  குறுந்தொகை, நற்றிணை, அகநானுறு, புறநானுறு ஆகிய நூல்களைத் தொகுத்தவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்”. இவர் சங்க்காலப் புலவர் அல்ல. கி.பி. ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாம்.அவர் தமிழ்ப்படுத்திய பாரதமும் கிடைக்கவில்லை. ஆனால் பாரத வெண்பா என்றொரு நூல் கிடைத்திருக்கிறது.கருணிலை விசாகன் என்பவர் பாரதத்தை செய்யுள் வடிவில் எழுதியதாக திருவாலங்காடு கல்வெட்டுக் கூறுகிறது. தன்னுடைய புரவலர் வரபதி ஆட்கொண்டான் கேட்டுக் கொண்டதற்கேற்ப வில்லிப்புத்தூரார் எழுதிய வில்லிபாரதம் நாடறிந்தது. நல்லாபிள்ளை அந்த வில்லிப்புத்தூராரின் பாரதத்தை புதிதாக 11 ஆயிரம் பாடல்கள் எழுதி விரிவுபடுத்தினார் இவர்களைத் தவிர அஷ்டாவதனாம் அரங்கநாதக் கவிராயர், அம்பலத்து ஆடும் ஐயன் ஆகியோரும் எழுதியிருக்கிறார்கள்.

இவை அனைத்தும் பாரதத்தின் சுவாரஸ்யமான கதையம்சம் கருதியோ,அல்லது அதன் கருப்பொருளாக்க் கருதப்படும் தர்மம் அதர்மத்தை வெல்லும் என்ற விழுமியத்தை வலியுறுத்தவோ, அல்லது காவியச் சுவை கருதியோ, அல்லது தங்களது இலக்கியப் புலமையை நிறுவும் ஆசையிலோ எழுதப்பட்டவை பாரத வெண்பா முழுவதும், வெண்பாக்களாலும், வில்லிபாரதம் முழுவதும் விருத்தங்களாலும் எழுதப்பட்டன.

பாரதி இவர்கள் அனைவரிலிருந்தும் முற்றிலும் வேறுபடுகிறான். அவனது நோக்கம் தனது இலக்கியப் புலமையை நிலை நாட்டுவதல்ல. பாஞ்சாலி சபதம் நாடோடிகள் பாடும் நொண்டிச் சிந்திலே அமைந்தவை, பாஞ்சாலி சபதம் பற்றி பாரதியே எழுதிய குறிப்புகளில் அந்தப் பாடல்களுக்கு மெட்டுக்களும் எழுதியிருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது. “எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்தில் செய்து தருவோன் தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோன் ஆகிறான்” என்ற அவரது முன்னுரை வாசகமும் இங்கு நினைவுகூறத் தக்கது.

தன்னுடைய புலமையை நிலைநாட்டும் நோக்கோடு பாரதி பாஞ்சாலி சபதத்தை எழுதவில்லை என்பது மட்டுமல்ல, கதை சொல்லும் நோக்கோடும் எழுதவில்லை. கதை சொல்வதுதான் நோக்கம் என்றால் அவர் பாரதம் முழுவதையும் அல்லவா எழுதியிருப்பார்? பாரதத்தின் சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்த பகுதிகள் சூதாட்டத்திற்குப் பின் துவங்குகின்றன. சூதாட்டச் சருக்கம் வாதங்களும் எதிர்வாதங்களும் நிறைந்த பகுதி

சரி, அப்படியானால் பாரதி ஏன் பாஞ்சாலி சபதம் எழுதினார்? அதையும் எளிய மக்கள் பாடும் சந்தத்திலே சொல்ல முற்பட்டார்?

அதற்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று சமூக சார்ந்தது. மற்றொன்று ஓர் அரசியல் செய்தியைச் சொல்வது

விடுதலைப் போராட்டம் 1907க்குப் பிறகு  தீவிரவாதிகள் (”Garam Dal” இந்தியில் கரம் என்றால் சூடு.அதனால் ஆங்கிலப் பத்திரிகைகள் அவர்களை Extremist  எனக் குறிப்பிட்டன. அது தமிழில் தீவிரவாதிகள் என மொழிபெயர்க்கப்பட்டது)) என்றும் மிதவாதிகள் (“naram Dal”_ என்றும் பிளவுபட்டது. ஆங்கிலேயர்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிராமல், மனுக்கள் போட்டு, சட்டங்களைச் சீரமைத்து நாடாளுமன்ற முறையை இந்தியர்கள் கைப்பற்றுவதன் மூலம் அரசியல் சுதந்திரம் பெற முடியும் என நம்பியவர்கள் மிதவாதிகள். ஆங்கிலேயர்களை அடித்துத் துரத்த வேண்டும் எனக்கருதிய தீவீரவாதிகள். திலகர் தீவிரவாதிகளின் தலைவராகக் கருதப்பட்டார்.

ஆனால் வரலாற்றின் முரண் என்னவென்றால், அரசியலில் தீவிரவாதிகளாக விளங்கியவர்கள் சமூக சீர்திருத்தத்தில் பழமைவாதிகளாக இருந்தார்கள். Socially speaking the revival of Indian nationalism in 1907 was definitely reactionary என்று நேரு தன் சுயசரிதையில் எழுதுகிறார் அரசியலில் மிதவாதிகளாகக் கருதப்பட்டவர்கள் சமூக சீர்திருத்தங்களை வரவேற்பவர்களாக இருந்தார்கள். திலகரே அதற்கொரு உதாரணம். குழந்தைத் திருமணத்தை நெறிப்படுத்தும் சட்டம் ஒன்றினை ((age of consent bill)* 1891ல் ஆங்கிலேய அரசு கொண்டு வந்தபோது அதனை திலகர் கடுமையாக எதிர்த்தார். தனது பத்திரிகையில் கண்டித்து தலையங்கம் எழுதினார். காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் மிதவாதி என்று அறியப்பட்ட ரானடே அந்தச் சட்டத்தை ஆதரித்தார்.

பாரதி திலகரைத் தனது அரசியல் வழிகாட்டியாக ஏற்றவர். ஆனால் அவரது சமூக சீர்திருத்திற்கு எதிரான நிலைபாட்டை ஏற்றவர் இல்லை. மாறாக சமூக சீர்திருத்தமே அரசியல் விடுதலைக்கு ஆதாரம் எனக் கருதியவர்

1904ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி இந்து நாளிதழுக்கு பாரதி எழுதிய கடிதம் இதற்கொரு சான்று:

“Without social reform, our political reform is a dream, a myth, for social slaves can never really understand political liberty. And unless and until our social conferences prove a success our National Congress is nothing but glare and dust “

அன்று பெண்களுடைய நிலைமையும் ‘சமூக அடிமைகள்’ என்ற நிலையிலேதான் இருந்தது. பெண் விடுதலை இல்லாமல் மண் விடுதலை இல்லை என்று பாரதி கருதினார்.

மங்கள்யான் விண்ணிலே பறந்தபோது என் மனதில் பெருமிதம் பொங்கியது. அதே நேரம் பாரதியின் குரலும் மனதிலே ஒலித்தது

“விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்

விடுதலை என்பீர்! கருணை வெள்ளம் என்பீர்!

பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லை என்றால்

பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை

(பாரதி அறுபத்தியாறு)

ஆனால் அன்று பெண்களுடைய நிலை பரிதாபகரமாக இருந்தது. சமூகரீதியான ஒடுக்குமுறைகள் தவிர பாலியல் ரீதியான வன்முறைகளும் அவர்கள் மீது ஏவப்பட்டன. ஆனால் அதைக் கண்டித்துப் பெரிதாகக் குரல்கள் அதிகம் எழவில்லை/ மாறாக அது குறித்து ஒரு கனத்த மெளனம் நிலவியது. அந்த மெளனம் குறித்து பாரதி தனது நடிப்புச் சுதேசிகள் என்ற கவிதையிலே பதிவு செய்கிறான்

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போல் உயிரைக்-கிளியே
பேணி இருந்தாரடீ!

ஏன் அந்த கனத்த மெளனம்?

அன்றைய அரசியல் சூழலை ஆராய்ந்தால் அதற்கான விடைகளைக் கண்டெடுக்க முடியும். அன்று கடும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. அன்று நிலவிய சூழலைப் பற்றி ம.பொ.சி எழுதுகிறார்: ”1912ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியிலே சித்ம்பரனார் சிறையிலிருந்து விடுதலை பெற்றார்.சிறை வாயிலிலே அவ்வீரரை வரவேற்க ஆளில்லை. சிறைக்குப் போகும் போது வீதிதோறும் மக்கள் திரண்டு வழியனுப்பி வைத்தனர் தூத்துக்குடியிலே! அது நிகழ்ந்து நான்கரையாண்டுகளுக்குள் ”வா!” என்று சொல்லி வரவேற்க ஒரு ஆள் இல்லாத நிலையிலே சிறையிலிருந்து விடுதலை பெற்றார். அந்த அளவிற்கு அடக்குமுறைக் கொடுமையால் நாட்டுமக்களின் உள்ளங்கள் எல்லாம் ஒடுங்கிக் கிடந்தன”

இப்படி அடக்குமுறை ஏவிவிடப்பட்டிருந்த காலத்தில்தான். மக்களுடைய உள்ளம் ஒடுங்கிக் கிடந்த காலகட்டத்தில்தான் பாரதி பாஞ்சாலி சபதத்தை எழுதுகிறார். பாஞ்சாலி சபதம் முதலில் பிரசுரமானது 1912ஆம் ஆண்டு, பாரதியாலேயே சிறு நூலாக வெளியிடப்பட்டது. அன்று அவருக்குப் பொருளாதர வசதி இல்லாத காரணத்தால் முதல் பாகம் வெளியிடப்பட்டது. பாஞ்சாலி சபதம் முழுத் தொகுதியும் அவரது மறைவுக்குப் பின்னாலே 1924ஆம் ஆண்டு வெளிவந்தது.

அவர் பாஞ்சாலி சபதத்தை எழுதி வெளியிடுகிற காலத்தில் அவரது பத்திரிகைகள் எல்லாம் முடக்கப்பட்டுவிட்டன. 1919ஆண்டு மார்ச் 12ஆம் தேதியோடு இந்தியா பத்திரிகை நிறுத்தப்பட்டுவிட்டது. அதை அடுத்து விஜயாவும் நின்று போனது, 1910ஆம் ஆண்டு இறுதிக்குள் பாரதியார் தனக்கென பத்திரிகைகள் ஏதும் இல்லாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

ஒரு பக்கம் அவரது கைகள் கட்டப்பட்டுவிட்டன. மறுபக்கம் பெண்கள் மீதான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. சமூகம் அதைக் குறித்து மெளனம் சாதிக்கிறது. விடுதலைப் போராட்ட இயக்கம் முடங்கிக் கிடக்கிறது.

பத்திரிகையாளனாகத் தன்னால் செய்ய முடியாமல் போன பணியை பாரதி, பாஞ்சாலி சபதத்தின் மூலம் செய்ய முற்படுகிறான். அவன் முன் இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. ஒன்று பெண்கள் நிலை குறித்த அறச்சீற்றம். மற்றொன்று”கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்.” என்று விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது.

அறச்சீற்றம் மேலோங்க வேண்டும், அதுவும் பெண்களே தங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதிகளுக்கு எதிராகப் பொங்கி எழ வேண்டும் என்ற பாரதியின் விருப்பத்திற்கான சான்றை வியாசர், வில்லிப்புத்துரார், பாரதி ஆகிய மூவரும் ஒரு கட்டத்தை எப்படிக் கையாளுகிறார்கள் என்பதைப் பார்த்தால் கண்டு கொள்ள முடியும்

பாஞ்சாலியை சபைக்கு அழைத்து வரச் சொல்லுகிறான் துரியோதனன். அவள் மாதவிலக்கு காரணமாக ஒற்றை ஆடையில் இருக்கும் நேரமது. பாஞ்சாலி சபைக்கு வர மறுக்கிறாள். அவளுக்கு சபைக்கு வா. நீ இப்போதிருக்கும் நிலையில் சபைக்கு வந்தால் எல்லோர் கோபமும் துரியனுக்கு எதிராகத் திரும்பும் என வியாசன் பாஞ்சாலிக்கு செய்தி அனுப்புவதாக வியாசர் எழுதுகிறார். அவரது நோக்கம், வாச்கர்களது சினம் துரியோதனுக்கு எதிராக திரும்ப வேண்டும் என்பது

வில்லிபுத்தூரார் கதையில், சபைக்கு வருமாறு அழைக்கப்பட்டதும் பாஞ்சாலி காந்தாரியிடம் சென்று அழுது முறையிடுகிறார். காந்தாரி அவள் கண்ணீரைத் துடைத்து சமாதானம் செய்யவில்லை. மாறாக உறவினர்கள்தானே அழைக்கிறார்கள் போய்வா என்கிறாள். காரணம் அவள் கெளரவர்களைக் கண்டு, தான் பெற்ற பிள்ளைகளைக் கண்டே, பயந்து போயிருந்தாள்.  எப்படி இந்திய சமூகம் தனது மக்கள் பெண்களுக்கு இழைக்கிற அநீதிகளைக் கண்டு பயந்து வாய்மூடிக் கிடந்ததோ அது போல.

பூவார் குழலி தளர்வொடுதன்

புறஞ்சேர் பொழுதும் சிறிதிரங்காள்

நீ வாவென்றே அருகிருத்தி

நெடுங்கண் பொழியும் நீர்துடையாள்

மேவரல்லர், தமர் அழைத்தால்

மேலுன் கருத்தி விளம்பிவர

பாவய்! அஞ்சாது ஏகென்றாள்

பல்பாதகரைப் பயந்தாளே!

(சபா பருவம் பாடல் 218)

வில்லியாரின் நோக்கம் பாஞ்சாலியின் மீது அனுதாபம் ஏற்படுத்துவது

ஆனால் பாரதியின் பாஞ்சாலி சீற்றத்திலே பொங்குகிறாள். “பாண்டவரை
மின்செய் கதிர் விழியால் வெந்நோக்கு நோக்கினாள்.” என்று எழுதுகிறார் பாரதி. செயலற்று நிற்கும் பாண்டவரை எரித்து விடுவது போல் பார்க்கிறாள். சபையிலே நியாயம் கேட்கிறாள் ஆடவருக்கு ஒப்பில்லை மாதர். ஒருவன்தன் தாரத்தை விற்றிடலாம்;தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம் என சாத்திரம் பேசும் பீஷ்மனோடு வாதம் செய்கிறாள்
பண்டோர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால
கொண்டோர் வனத்திடையே வைத்துப்பின்,கூட்டமுற
மந்திரிகள் சாத்திரிமார் தம்மை வரவழைத்தே,
செந்திருவைப் பற்றிவந்த செய்தி யுரைத்திடுங்கால்
“தக்கது நீர் செய்தீர்;தருமத்துக் கிச்செய்கை
ஒக்கும்”என்று,கூறி உகந்தனராம் சாத்திரிமார்!

பேயரசு செய்தால்,பிணந்தின்னும் சாத்திரங்கள்!
மாய முணராத மன்னவனைச் சூதாட
வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ?
முற்படவே சூழ்ந்து முடீத்ததொரு செய்கையன்றோ?
மண்டபம்நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்ளவன்றோ?
பெண்டிர் தமையுடையீர் பெண்க ளுடன்பிறந்தீர்!
பெண்பாவ மன்றோ? பெரியவசை கொள்வீரோ?

பாரதி பாஞ்சாலி சபதத்தில் சித்தரித்திருக்கும் பாஞ்சாலி, பாரதமாதா, அடிமைப்பட்டிருக்கும் அவளை முன்னிறுத்தி அவள் விடுதலையை வேண்டி பாரதி எழுதினார் என்று ஜீவா, மபொசி போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்தப் பெரியவர்களது பார்வையிலிருந்து அடியேன் வேறுபடுகிறேன்.

பாரதமாதாவின் விடுதலையைக் கருத்தில் கொண்டல்ல, பெண்விடுதலையை வலியுறுத்தி பாரதி எழுதிய காவியம்தான் பாஞ்சாலி சபதம்.

தர்மன் திரெளபதியைத் தோற்று அவள் அடிமைப்பட நேர்ந்த நிலையைப் பற்றி எழுதுகிறான் பாரதி

தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக,
பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக,
வானத்துத் தேவர் வயிற்றிலே தீப்பாய,
மோன முனிவர் முறைகெட்டுத் தாமயங்க,
வேதம் பொருளின்றி வெற்றுரையே யாகிவிட,
நாதங் குலைந்து நடுமையின்றிப் பாழாக,
கந்தருவ ரெல்லாங் களையிழக்கச் சித்தர்முதல்
அந்தரத்து வாழ்வோ ரனைவோரும் பித்துறவே,
நான்முகனார் நாவடைக்க, நாமகட்குப் புத்திகெட,
வான்முகிலைப் போன்றதொரு வண்ணத்திருமாலும்
அறிதுயில்போய் மற்றாங்கே ஆழ்ந்ததுயி லெய்திவிட
செறிதருநற் சீரழகு செல்வமெலாந் தானாகுஞ்
சீதேவி தன்வதன்ம செம்மைபோய்க் காரடைய,
மாதேவன் யோகம் மதிமயக்க மாகிவிட

என்று குழப்பம் மேவியதாக எழுதிச் செல்கிறான். அதன் பொருள் பெண்கள் அடிமையானால் உலகில் எல்லாம் கெடும்.குழப்பம் மேவும்

1911ல் இந்தியா அப்படித்தான் இருந்தது. அதுதான் பாரதியை பாஞ்சாலி சபதத்தை எழுதச் செய்தது

மக்களிடமிருந்து பெற்ற இலக்கியத்தைக் கொண்டே மக்களுக்கு சமூக சீர்திருத்தத்தைச் சொல்லமுடியும். அடக்குமுறைகளுக்கு எதிராக நம்பிக்கை தரமுடியும் என்பதுதான் மகாபாரதத்தின் மீதான பாரதியின் கண்ணோட்டம். அவர் ஒரு பண்டிதனாக இல்லாமல், காசுக்கோ, சொந்த சுகத்திற்கோ கவிதை எழுதுபவனாக இல்லாமல் ஒரு பத்திரிகையாளனாக இருந்ததுதான் அவனுக்கு அந்தப் பார்வையைத் தந்தது

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these