புலி வேட்டை

உடலை நெளித்துச் சிலுப்பி உறுமிப் பார்த்துக் கொண்டது புலி. உறுமல் இல்லை. சின்னச் செருமல்தான். கூண்டுக்குள் அடைபட்டிருந்த காலத்தில் குரல் அடைத்துப் போய்விட்டிருக்குமோ என அதற்குச் சந்தேகம் இருந்திருக்க வேண்டும். கூண்டுக்குள் இருந்த காலத்தில் குரலெடுத்து உறுமி இரையைப் பயமுறுத்தவும், பாய்ந்து தாவி தாக்கவும் அதற்கு அவசியமோ அவகாசமோ இருந்திருக்கவில்லை. தோலுரித்த ஆடோ, முயலோ, அடிக்கடி இல்லை என்றாலும் அவ்வப்போது மாட்டிறைச்சியோ கூண்டிற்குள் வீசப்பட்டுவிடும். சவுக்கைச் சொடுக்கியதும்  வளையத்திற்குள் பாய்ந்து இறங்கி அரை வட்டமடித்து முக்காலியில் முன் கால் வைத்து ஏறுவதைத் தவிர வேறு ஏதும் வேலை இல்லை. ஒரு பூனை செய்யும் இந்த வித்தையை.

ஆனால் பூனைக்குப் பயப்படுகிறவர்கள் யார்? மனிதர்களுக்குப் பயம் காட்ட புலி வேண்டும். பலம் காட்டவும்தான். என் மீது தாவி ஏறிவிடுமோ என்ற அச்சம் வட்டத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு ஏற்பட வேண்டும். எத்தனை பெரிய புலியாக இருந்தால் என்ன, எனக்கு முன் அது மண்டியிடும் என்ற  ஆனந்த அகந்தை சவுக்கைச் சொடுக்குகிறவர்களுக்கு வேண்டும். மனிதர் உலகின் நியாயங்கள் விசித்திரமானவை. அவர்கள் பசிக்காக மட்டுமே இரை தேடுவதில்லை.

கூடாரத்தை இழுத்து நிறுத்தியிருந்த வெளிக் கயிற்றை உரசிக் கொண்டு நடந்தது புலி.இப்போது கூட பலத்தைக் காட்டிவிடலாம். வாலைச் சுழற்றிக் கயிற்றை இழுத்து விட்டால், அல்லது காலைக் கொண்டு கயிற்றைக் கட்டியிருக்கும் முளையைப் பறித்தெடுத்தால் கூடாரம் சரிந்து விழும். ஆனால் அதில் என்ன பயன்?  மீண்டும் சிறைப்பட நேரலாம். பசித்த வயிற்றுக்கு இறைச்சி கிடைக்கும். ஆனால் மறுபடியும் அந்த பூனை வாழ்க்கைக்கா?

சுதந்திரத்தின் விலை பசி

*

“பசிக்கிறது, உடனே என்ன கொடுப்பாய்?” கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டே ஆறுமுகத்தைக் கேட்டார் அரசநாயகம்.

“இரண்டு  நிமிடத்தில் முட்டையைப் பொரித்துக் கொண்டு வருகிறேன்” தட்டை, தட்டா அது, தாம்பாளம், மார்போடு  அணைத்துக் கொண்டு பணிவாய்க் குனிந்து சொன்னார் ஆறுமுகம். அவருக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பணக்காரர்களுக்கும் பசிக்குமா என்பதல்ல அவரது ஆச்சரியம். அவர்களுக்குப் பசிப்பதால்தான், தான் சோறு உண்ண முடிகிறது என்பதை அவர் அனுபவத்தால் அறிவார். பசியில்லாத வீட்டில் சமையல்காரர்களுக்கு இடமில்லை. மதுவருந்தாமல் அரசநாயகம் உணவருந்துவதில்லை. தனியாகச் சாப்பிட நேரும் தினங்களில் கூட சிவப்பு ஒயினோ வோட்காவோ அருந்துவார். நண்பர்கள் வந்திருந்தால் கச்சேரி 18 ஆண்டு பழைய ஷிவாஸ் ரீகலில் தொடங்கும்.

இன்றைக்கு நண்பர்கள் வந்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீரை பனிப் பாளங்களாக ஐஸ்பெட்டியில் உறைய வைத்து ஆறுமுகமும் காத்திருக்கிறார் விஸ்கி உள்ளே போனதும் வெளியே வரும் கதைகள் சுவாரஸ்யமானவை.

“நீ வருவேனு கச்சேரியை ஆரம்பிக்கக் காத்திட்டிருக்கோம், வாதபி கணபதிம்ல ஆரம்பிப்பனு பார்த்தா  மங்களம் பாடுறர?”

“ம்.இனிமேல் யானையைக் கும்பிடுவதற்கு பதில்  புலியைக் கும்பிடப் பழகிக் கொள்ளுங்கள்”

“வேறங்காவது தண்ணி சாப்பிட்டியா அரசு!, தத்துவம் எல்லாம் பேசற”

“தத்துவம் இல்லை, வியாபாரம்”

புரியவில்லை என்பதைப் போல்  நண்பர்கள் அரசநாயகத்தை கூர்ந்து பார்த்தார்கள்

“இப்போதுதான் ஒரு புலி வேட்டைக்குப் போய்விட்டு வருகிறேன்”

“வேட்டையா?” நண்பர்கள் தன்னிச்சையாக சுவரைப் பார்த்தார்கள். அங்கு 45 பாகை கோணத்தில் மாட்டப்பட்டிருந்த துப்பாக்கி அப்படியே இருந்தது.

ஆறுமுகம் ஒரு பெரிய கண்ணாடிக் கிண்ணியில் தோல்சீவி துண்டமிடப்பட்ட மாம்பழங்களையும் மூடப்பட்ட வெள்ளித் தட்டுக்களில் பொரிக்கப்பட்ட முட்டைகளையும் எடுத்து வந்து வைத்தார்!.

“கொன்னுட்டியா?” என்று நம்ப முடியாமல்  நண்பர் ஒருவர் அசட்டுத்தனமாகக் கேட்டார்.

” இது கொல்லமுடியாத புலி” என்று தொண்டையைச் செருமிக் கொண்ட அரசநாயகம் “காகிதப் புலி” என்றார்  “இன்றுதான் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. பன்னாட்டு நிறுவனத்தின் ப்ரான்ச்சைஸ்.. மில்லியன் டாலரில் ஆரம்பிக்கிறோம். என் கம்பளிப் பூச்சிக் கையெழுத்தின் விலை மில்லியன் டாலர்! ஹா ஹா!” என்று அதிரச் சிரித்தார்  அரசநாயகம்.விஸ்கி வேலை செய்ய ஆரம்பித்திருந்தது. ” என்னடா கையெழுத்து இது, கோழி கிறுக்கினாற் போல் என்று மணிக்கட்டிலேயே அடித்தார் எங்கள் எஸ்தர் டீச்சர்! இன்று அதன் மதிப்பு மில்லியன் டாலர்! டீச்சர் உங்கள் ஆத்மா சாந்தியடைவதாக!” என்று இன்னொரு மிடறு விழுங்கினார்.

“என்ன விற்கப் போகிற? சாராயமா?”

” புத்தி போகுது பார். புலி பசித்தாலும் புல்லைத் திங்காது”

“பின்னே?”

மாம்பழத் துண்டு ஒன்றை குத்தியால் (போர்க்) கெந்தி எடுத்தார் அரசநாயகம்

“இந்த மாம்பழம் எங்கிருந்து வந்தது என்று நினைக்கிறாய்?”

“இந்தியா?”

“இல்லை.பங்களா தேஷ்! உனக்குத் தெரியுமா பங்களாதேஷின் தேசிய மரம் மாமரம்”

“ஓ!”

“இனி பங்களாதேஷிலிருந்து மாம்பழம், பிலிப்பைன்ஸ் அல்லது ஹவாயிலிருந்து வாழைப்பழம். மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து வெண்டைக்காய். மெக்சிகோவிலிருந்து தக்காளி. எங்கள் சங்கிலிச் சில்லறைக் கடைகள் அவற்றை நாடு முழுவதும் விநியோகிக்கும், உலகக் குடிமகன்களுக்காக”

“உலகக் குடிமகன்களுக்காக?”

“அட, என் முட்டாள் நண்பா!  உள்ளூர் குடிமகன் என்று இன்று எவனும் இல்லை உலகமயமாதல் என்ற புலி முதலில் உண்ணுவது உள்ளூர் மான்களைத்தான். உள்ளூர் உணவு, உடை, மொழி, இசை, இலக்கியம், ஏன் உங்கள் ஜல்லிக்கட்டைக் கூட அர்த்தமில்லாமல் ஆக்குவதில் தொடங்குகிறது உலகமயமாதல். நீ சந்தோஷமாக ஜீன்ஸ் போட்டுக் கொள்ளவில்லை? கெண்டக்கி பொறித்த கோழிக் கடையில்  உன் பிலிப்பைன்ஸ் தோழியிடம் தங்க்லீஷில் கடலை போடவில்லை ? பின் நவீனத்துவக் கதைகள் பேசவில்லை? மெக்சிகோ தக்காளி மட்டும் கசக்கிறதோ?”

“பயமாக இருக்கிறது நண்பா. புலி வாலைப் பிடித்துவிட்டாய். இனி நீ இறங்க முடியாது”

“இறங்குவதோ இறப்பதோ நோக்கமில்லை. நோக்கமெல்லாம் கூடச்  சேர்ந்து வேட்டையாடுவதே! ஞாபகம் இருக்கட்டும். நான் Moneyகண்டன். புலியோடு உலவுகிறவன்”

*

உலாவத் தொடங்கிய புலி  ஆற்றில் இறங்கியது. நீரின் குளுமை அதன் உடலைச் சிலுப்பிய போது குஷியாய் வாலுயர்த்தி நீந்திக் களித்தது. ஆகா! என்னவொரு  ஆனந்தம்! அருகிலேயே இப்படி ஒரு ஆறு சல சலத்து ஓடும் போது அந்த முட்டாள்கள் ஏன் ரப்பர் குழாயைக் கொண்டு குளிப்பாட்டினார்கள். இயற்கை தரும் ஆனந்தத்தை தொழில்நுட்பங்க்களால் ஒரு போதும் தரமுடிவதில்லை. ரோஜாப்பூவின்  மென்மையையும் வாசத்தையும்  இயந்திரங்கள்  உருவாக்கித் தந்துவிடுமா?

எத்தனை இதமாக இருந்தாலும் இப்படியே நீந்திக் கொண்டிருந்து விடமுடியாது. ஆற்றுக்கு இலக்கில்லை. எந்த இடத்தையும் அடைய அல்ல சும்மா நடக்கவே விரும்புகிறது அது. ஆனால் வேட்டையாடவும், வேட்டையாடப்படவும் பிறந்தவை புலிகள். இன்னேரம் கண்டுபிடித்திருப்பார்கள். வேட்டையைத் தொடங்கியிருப்பார்கள்.

நதியில் நீந்திய புலி கரையேறியது. சகதியில் நடந்து, புதர்களைக் கடந்து  மரங்கள் செறிந்த  அந்த மாளிகையின்  வராந்தாவைக் கடந்து ஆற்றைப் பார்த்து அமைக்கப்பட்டிருந்த பில்லியர்ட்ஸ் அறையில்  மேசைக்குக் கீழ் படுத்துக் கொண்டது. சுதந்திரம் கிட்டிய நிம்மதியும் நீரில் அளைந்த சந்தோஷமும் கண்னை  அழுத்த இமைகளை மெல்ல மூடி உறங்க முயன்றது

*

முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆறுமுகம் தன் திறமைகள் அனைத்தையும் காண்பித்து சமைத்திருந்த உணவை அரசநாயகம் பெரிதும் ரசிக்கவில்லை. போதை தலைக்கேறிக் கிடந்தது.மதுவின் போதை மட்டுமல்ல. புலி வேட்டைக்குப் போன போதை.

*

போதை ஏதும் ஆறுமுகத்திற்கு இல்லை. உள்ளூர் தமிழனோ, உலகக் குடிமகனோ  போதை கொள்ள அவரது கலாச்சரத்திற்கு அப்பால் அதிக வாய்ப்புக்கள் இல்லை.

உணவுத் தட்டுக்களை ஏந்திக் கொண்டுக் கடந்த போது பில்லியர்ட்ஸ் அறையில் மேசையின் கீழ் ஒளிர்ந்த இரு தணல்களைப் பார்த்தார் ஆறுமுகம். அவை தணல்கள் அல்ல.விழிகள் என்று அவர் உணர்ந்த போது உடல் சிலிர்த்தது. அறையின் விளக்கைப்  போட்டார். புரிந்து விட்டது. அங்கே உறங்குவது புலி.

இடது காலில் முகத்தைச் சாய்த்து  பூனை போல் உறங்கிக் கொண்டிருந்த புலி இமை  திறந்து ஆறுமுகத்தைப் பார்த்தது. பசியில்லை என்பதால் அசுவாரஸ்யமாக இமைகளை மூடி உறங்க முயன்றது

ஆறுமுகம் மிரண்டு ஒடினார். “ஐயா புலி!”  என்று பதறினார்.

“பேசுவதையெல்லாம் ஒட்டுக் கேட்கிறாயா?”  என்று சீறினார் அரசநாயகம்.” காகிதப் புலியா?” என்று பகடி செய்தார். நிஜப் புலி என்று ஆறுமுகம வர்ணித்த போது நீயும தண்ணி அடிச்சிருக்கியா என்று நையாண்டி செய்தார்.

பதில் பேச நேரமில்லை .ஆறுமுகம் 45 பாகை கோணத்தில்ல்  சுவரில் கிடத்தியிருந்த துப்பாக்கியை எடுத்துக்  கொண்டார். ரவைகளை சோதித்தார்.வெற்றிட முனைகளையும்  அழுந்தத் திணிக்கப்பட்ட வெடிமருந்துகளும் கொண்ட ரவைகள் நிரப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நடந்தார்

பில்லியர்டஸ் அறையின் விளக்கைப் போடவில்லை. விளக்கைப் போட்டால் புலி விழித்துக் கொள்ளும் என்று தோன்றியது.  ஆனால் புலி விழித்துக் கொண்டுதான் இருந்தது. தணல்கள் போன்று  அதன் விழிகள் ஒளிர்ந்தது. மாளிகைகள் அதன் வசிப்பிடமல்ல என்பது அதற்கும் புரிந்துதான் இருந்தது.

ஆறுமுகம் இரு விழிகளுக்கு இடையிலிருந்த நெற்றிப் பொட்டைக் குறி வைத்தார் பயத்தில் அவர் கைகள் நடுங்கின. விரைந்து வரும் ரவையைக் கண்ட  புலி தலையை அசக்கியது, ரவை காதருகே துளைத்துக் கொண்டு வெளியேறியது. நவீனத் தொழில்நுட்பம் கைவிட்டுவிடவில்லை. வெற்றிட முனைகள் கொண்ட ரவைகள் புலியின் கபாலத்தை ஆழமாகவே சிதைத்திருந்தன. இனிப் புலியால் நடமாட முடியாது.

புலி தலையைத் தூக்கிப் பார்த்தது.வெறி கொண்டவன் போல ஆறுமுகம்  விசையை இன்னொரு முறை அழுத்தினார். சீறிக் கொண்டு பாய்ந்த ரவைகள் அதன் கண்களைத் துளைத்தன. புலியின் வால் 90 பாகை எழும்பி உயிரற்று வீழ்ந்தது. ஆறுமுகம் விளக்கைப் போட்டான்.

வெடிச்சத்தம் கேட்டு அரசநாயகம் எழுந்து வந்தார். பின்னால்  நண்பர்கள்.

“என்னடா பண்ணறே?” என்றார்

“புலியைச் சுட்டுட்டேன் முதலாளி” என்றான் ஆறுமுகம்

“என்னுடைய புலியைச் சுட முடியாது, அது காகிதப் புலி”  என்று அதிரச் சிரித்தார் அரசநாயகம்.

செத்துக் கிடந்த புலியை வாலைப் பற்றி இழுத்துக் கொண்டு போனான் ஆறுமுகம். அதைப் புதைப்பதற்கான குழியையும் அவன்தான் தோண்ட வேண்டும். அது நாளைக்கு.

குமுதம் லைப் 15.3.2017

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these