வளர்ந்த்திருக்கிறோமா?

“ஒற்றை வருமானம் கொண்ட கடந்த தலைமுறைக் குடும்பங்களை விட இருவர் சம்பாதிக்கும் இந்தத் தலைமுறைக் குடும்பங்களின் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. அவர்களது கடன் சுமை அதிகரித்திருக்கிறது. செலவுகள் அதிகரித்திருக்கின்றன.   ஆனால் சேமிப்புக்கள் குறைந்திருக்கின்றன”

அண்மையில், அமெரிக்கத் தேர்தல் களத்தில், ஹார்வேர்ட் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் எலிசபெத் வாரன் ஆற்றிய உரையில் காணப்படும் இந்த வரிகள் இவை. அமெரிக்க  நடுத்தர வர்க்கத்தைப் பற்றிய இந்தக் கருத்துக்கள்  இந்திய நடுத்தரக் குடும்பங்களுக்கும் பொருந்துமோ?

கடந்த முப்பது ஆண்டுகள். இதுதான் இந்த முறை அமெரிக்க அதிபர் தேர்தலில் விவாதத்தின் மையப் புள்ளியாக அமைந்திருந்தது. முப்பதாண்டுகள் என்பது தனி மனிதர்கள் வாழ்வில் வேண்டுமானால் நீண்டதொரு காலமாக இருக்கலாம்,  ஆனால் ஒரு  நாட்டின் சரித்திரத்தில் பெரிய காலம் அல்ல என்று சொல்வார்கள். ஆனால்  கடந்த முப்பதாண்டுகள் உலகத்தையே புரட்டிப் போட்ட ஆண்டுகள்.

இணையம், மடிக்கணினி,  கைபேசி,மின்னஞ்சல், டிஜிட்டல் கேமரா,கூகுள், முகநூல், கட்செவி போன்ற  நட்பு ஊடகங்கள், காணொளிக் காட்சிகள், ஆன் லைன் வர்த்தகம், எனப் பலவும் நம்மை வந்தடைந்தது இந்த முப்பதாண்டுகளுக்குள்தான். இந்தத் தொழில்நுட்பம் நம் வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள் ஏராளம். பணம் எடுக்க வங்கிக்குப் போக வேண்டியதில்லை.கடிதம் அனுப்ப அஞ்சலகம் செல்லத் தேவையில்லை. பயணச் சீட்டு பதிவு செய்ய ரயில் நிலையம் போக வேண்டாம். ஏன், துணிமணிகள், பலசரக்கு காய்கறிகள்  வாங்க அங்காடிகளுக்குச் செல்லும் அவசியம் இல்லை. அயலகத்தில் வாழும் உறவுகளிடம் உரையாட அதிகச் செலவில்லை.செய்தி அறிந்து கொள்ள செய்தித்தாள் வாங்க வேண்டாம். விழாக்களுக்கு வாழ்த்துச் சொல்ல வண்ண அட்டைகள் வாங்க வேண்டாம். திறன்மிகு கைபேசிகள்,  நாட்குறிப்பேடுகள், நாட்காட்டிகள், வானொலிப் பெட்டி, கேமிரா, அலாரம் கடிகாரம், ஒலிப்பதிவு கருவிகள், இசைப்பேழைகள் தொலைநகல், கார்பன் காகிதம்,குறுந்தகடுகள் எனப் பலவற்றிற்கு விடை கொடுத்துவிட்டன. பேசுவதைக் காட்டிலும் பெரும்பாலும் கைபேசிகள் வேறு பணிகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன என்பதுதான் பலரது அனுபவம்.

ஆனால் என் சிந்தனையைப் பெரிதும் ஈர்ப்பது தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை மட்டுமல்ல. கடந்த முப்பதாண்டுகளில் அரசியல் உலகில் ஏற்பட்ட அதிர்வுகளும், பொருளாதார உலகின் பூகம்பங்களும்தான்.

கடந்து சென்ற முப்பதாண்டுகளில்தான்-

1987 ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் நாள், “அந்தச் சுவரை இடித்துத் தள்ளுங்கள்” என்று  ஜெர்மனிகளைப் பிரித்த பெர்லின் சுவற்றை அகற்றுமாறு அமெரிக்க அதிபர் ரீகன், சோவியத் யூனியன் அதிபர் கொர்பச்சேவிற்கு சவால் விடுத்தார். 1991 நவம்பருக்குள் சுவர் முற்றிலுமாகத் தகர்ந்து வீழ்ந்தது.  இரண்டு  ஜெர்மனிகளும் ஒன்றாகின.  அதே 1991 டிசம்பர் 26ஆம் நாள் சோவியத் யூனியன் பிரிந்து சிதறியது. அமெரிக்கா சோவியத் யூனியன் என்ற இரு துருவங்களிடையே இயங்கிக் கொண்டிருந்த உலக அரசியல் ஒற்றைப் புள்ளியை நோக்கிக் குவியும் நிர்பந்தம் நேர்ந்தது.  சமன் குலைந்த உலகின் அரசியல் சதுரங்கத்தில் பொருளாதாரம் காய்  நகர்த்த ஆரம்பித்தது.

இந்தியப் பொருளாதாரமோ அந்தக் காலகட்டத்தில் படு பாதாளத்தில் இருந்தது.  1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சந்திரசேகர் பிரதமராகப் பதவி ஏற்றபோது, வளைகுடாப் போரின் காரணமாகப் பெட்ரோல் விலை எகிறிப் போயிருந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு வெகுவேகமாகக் கரைந்து கொண்டிருந்தது. எந்த நேரமும் செலாவணி நாணய மாற்று விகிதம் குறைக்கப்படும் என்ற அச்சத்தில் அயல் நாட்டில் வசித்த இந்தியர்கள், இந்தியாவில் போட்டு வைத்திருந்த வைப்புத் தொகை கணக்குகளை மூடிக் கொண்டிருந்தார்கள். இதே காரணத்திற்காக அயல் நாட்டு வணிகர்கள் நமக்குக் கொடுக்க வேண்டிய தொகைகளைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தனர். பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டிருந்த நிதிப்பற்றாக்குறைக்கும், நிஜமான பற்றாக்குறைக்கும் இடையே மலைக்கும் மடுவிற்குமான இடைவெளி. இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தது இந்தியா.

முழு பட்ஜெட்டிற்கு பதில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா.உலக வங்கியிடம் கடன் கேட்டுப் போய் நின்றார். முதலில் உதட்டைப் பிதுக்கியது. முழுமையாக ஒரு பட்ஜெட் கூட இல்லாமல், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் திட்டம் ஏதும் அறிவிக்கப்படாமல், எப்படிக் கடன்  கேட்கிறீர்கள் என வியந்தது.  ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான இடைவெளி ஒரு பில்லியன் டாலர் என்றிருக்கும் போது எப்படிக்  கடன் கொடுக்க முடியும் எனக் கேட்டது.

நெருக்கடி ஏற்படும் நேரத்தில் இந்திய மத்தியதர வர்க்கம் என்ன செய்யுமோ அதை இந்த தேசம் செய்தது. கைவசம் இருந்த தங்கத்தை 400 மில்லியன் டாலருக்கு அடகு வைத்தது. 1991ஆம் ஆண்டு, ஜூன் மாதம் மதச்சார்பற்ற இந்திய ‘சோஷலிச’ குடியரசு பொருளாதார சீர்திருத்தங்களை அறிவித்து அன்னிய முதலீட்டிற்குக் கதவுகளைத் திறந்து விட்டது.

பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட இந்த 25 ஆண்டுகளில், 90களில் நாம் எதிர்கொண்டநெருக்கடிகளிலிருந்து நிச்சயமாக மீண்டு விட்டோம். பொருளாதாரத்தில் வளர்ந்திருக்கிறோம். அடிப்படைக் கட்டுமானங்கள் அதிகரித்திருக்கின்றன. அன்றிருந்ததை விடவும் இன்று நம் சாலைகளின் மொத்த நீளம் நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதாவது நம் நகரங்கள் கிராமங்களிடையேயான தொடர்பு அதிகரித்திருக்கிறது. மக்களிடையே தொடர்பு அதிகரித்திருப்பதைத் தொலைபேசிகளின் எண்ணிக்கை சொல்கிறது. கல்விக் கூடங்களின் எண்ணிக்கை கூடியிருப்பததையும், கற்போர் எண்ணிக்கை  அதிகரித்திருப்பதையும் கணக்குகள் காட்டுகின்றன.முப்பதாண்டுகளுக்கு முன்பு கிராமப்புறத்து இளம் பெண் ஒருவர் எம்.பி.ஏ போன்ற படிப்புகளைப் படிப்பதென்பது பெரும் கனவாகவே இருந்தது. அன்னிய முதலீடும் அதன் விளைவாக வேலை வாய்ப்புக்களும் பெருகியிருக்கின்றன.

ஆனால்-

வளர்ந்திருக்கிறோம் எனச் சொல்லி வைக்கப்படும் புள்ளிவிவரங்களைக் கூர்ந்து ஆராய்ந்தால்  மகிழ்ச்சியை விட கவலைகளே மிஞ்சுகின்றன.நாட்டின் மொத்த உற்பத்தியில் கணிசமான பங்களிப்பை விவசாயம் செய்து வந்தது. ஆனால் அது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. இப்போது நாம் கண்டிருக்கும் வளர்ச்சியின் பெரும்பகுதி சேவைத்துறையின் வழியே நமக்குக் கிடைத்திருக்கும் வளர்ச்சி. 1991ல் இருந்ததை விட சேவைத்துறை 20 சதவீதப் புள்ளிகள் அதிகரித்திருக்கின்றன. அனால் விவசாயம் எதிர்மறை வளர்ச்சி கண்டிருக்கிறது

விவசாயத்தின் வீழ்ச்சிக்குஒரு முக்கிய காரணம் அரசு அதற்கு அளித்து வந்த பல்வேறு வகையான ஆதரவுகளை (இடு பொருட்களுக்கான மானியங்கள் குறைப்பு, விளை பொருட்களுக்கான ஆதரவு விலையில் பெரிய அளவு மாற்றமின்மை, உணவுப் பொருட்கள் இறக்குமதி, நீர்வளங்க்களை இணைப்பதில் அல்லது மேம்படுத்துவதில் போதிய அக்கறை செலுத்தாமை) விலக்கிக் கொண்டது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட வேளாண் கடன்களைக் குறைத்துக் கொண்டன. கூட்டுறவு வங்கிகள் ஏற்கனவே நலிவுற்று வந்த நிலையில் விவசாயிகள் தனியாரிடம் (அவர்களில் கணிசமானோர் புதிதாக உருவான கந்து வட்டிக்காரர்கள்) கடன் வாங்கத் தலைப்பட்டனர். விவசாயிகளின் தற்கொலைகள் அன்றாடச் செய்திகளாயின

அன்னிய முதலீட்டைத் தக்க வைத்துக் கொள்வதே அரசின் முதன்மை நோக்கமாக இருந்ததால் அது  அதற்கான சலுகைகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதைச் சமன் செய்ய வேளாண்மைக்கு அளித்து வந்த ஆதரவைக் குறைத்துக் கொண்டது

வேளாண்மையையே வாழ்வாதாரமாகக் கொண்டு கணிசமானோர் வாழ்ந்த நம் நாட்டில் இந்த திடீர் மாற்றம் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினாலும் சமூகத்தில் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. ஏனெனில் நாம் மேற்கொண்ட  பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஒரு பரிணம வளர்ச்சியின் அடிப்படையில் படிப்படியாக ஏற்பட்டவை அல்ல. மாறாக ஒரு நெருக்கடியின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட அவசர நடவடிக்கை

இந்த அவசர நடவடிக்கையின் காரணமாக கடந்த முப்பதாண்டுகளில் சமூகத்தின் சமநிலை குலைந்திருக்கிறது. கிராமப்புற வறுமையைத் தீர்மானிக்க வரையறுக்கப்பட்டிருக்கும் அளவுகோல் நபர் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 2200 கலோரி உணவு. இதற்குக் கீழாக பெறுவோர் வறுமையில் உழல்வோர் எனக் கருதப்பட்டனர். 1993-94ல் இவர்களது எண்ணிக்கை 58.5 சதவீதம் 2011-12ல் 68 சதவீதம்

ஒரு புறம் விவசாயிகள், நடுத்தர மக்கள், மாணவர்களின் கடன் சுமை அதிகரித்து வரும் விலையில் இன்று நாட்டின் செல்வத்தில் முக்கால் பகுதி 10 சதவீத மக்களின் கையில் இருக்கிறது  ( Credit Suisse’s Global Wealth Databook 2014.) ஏழைகள் வசமுள்ள சொத்துக்களைப் போல 370 மடங்கு, மக்கள் தொகையில் 10 சதவீதமே உள்ள பணக்காரர்கள் வசம் இருக்கிறது.

அவர்களது செல்வம் எப்படி உயர்ந்தது? நிலம், நீர், வனம், தாதுப் பொருட்கள், அலைக்கற்றை  போன்ற   இயற்கை வளங்களைக்  கையாளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டியதுதான். உற்பத்தித் துறையின் மூலம் மட்டும் அடைந்த வளர்ச்சி அல்ல. கடந்த 30 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த எந்த ஒரு பெரிய நிறுவனத்தை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அவர்களுக்கு இந்த வளங்களில் ஏதேனும் ஒன்றுடன் அல்லது பலவற்றோடு தொடர்பு இருப்பதைக் காணலாம்.

அவசர அவசரமாகப் பொருளாதாரத்தில்  சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய நம் ஆட்சியாளர்கள், தேர்தல், நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை, கல்வி இவற்றில் பெரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள  கடந்த முப்பதாண்டுகளில் முன்வரவில்லை. ஏன்?

கடந்த முப்பதாண்டுகளில் நடந்திருப்பவைகளை ஒரு சேரத் தொகுத்து யோசித்தால், வாழ்க்கை முறை மாறியிருக்கிறது (தொழில் நுட்பத்திற்கு நன்றி ) நாட்டின் பொருளாதாரம் மாறியிருக்கிறது.தொழில் நுட்பத்தின் கொடைகள் சாதாரண மனிதனுக்குக் கூட (காசு கொடுத்தால் ) கிடைக்கிறது. ஆனால் நாட்டிற்குப் பொதுவான இயற்கை வளங்களிலிருந்து அவர்கள் அன்னியப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

குடும்ப வருமானங்கள் கூடியிருக்கின்றன. ஆனால் அவை அதிகம் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றன

வளர்ந்திருக்கிறோமா?  இல்லை மாறியிருக்கிறோமா?

 

 

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *