முடிவென்று ஒன்று இல்லை

“உலகம் ஏன் உருண்டையாக இருக்கிறது” எனக் கேட்டான் ஒரு சிறுவன்.

“உருள்வதற்கு அதுதானே எளிதான வடிவம்” என்று ஒருவர் பதிலளித்தார்

“கோளத்தில் மூலைகள் கிடையாது.எனவே எவரும் ஒளிந்து கொள்ள முடியாது” என்று தத்துவம் சொல்லி கபாலிச் சிரிப்புச் சிரித்தார்  இன்னொருவர்.

மூன்றாமவர் சொன்ன விடைதான் சிறுவனுக்குப் பிடித்திருந்தது. அவர் சொன்னார்: “பூமிக்கு முடிவும் கிடையாது. முதலும் கிடையாது. அதாவது முடிவு என்று நீ நினைப்பது மற்றொன்றின் தொடக்கம். முடிவும் முதலும் ஒன்றே”

முதலில் சிறுவன் குழம்பினான். யோசிக்கத் தொடங்கினான். இந்தியாவின் கிழக்கு எல்லை அருணாச்சல பிரதேசம். ஆனால் அதற்கும் ஒரு கிழக்கு இருக்கிறதல்லவா? இந்தியா முடிந்து விடுகிறது. ஆனால் மியன்மர் தொடங்குகிறது. வடக்கே நேபாளம். ஆனால் நேபாளத்திற்கும் ஒரு வடக்கு உண்டு.உலகின் கிழக்கு ஜப்பான் என்றால் ஜப்பானுக்கும் கிழக்கு உண்டு.அதாவது முடிவு என்று ஒன்று இல்லை

தற்செயலாகக் கையில் கிடைத்த புத்தகம் ஒன்றைப் புரட்டினான். அன்றைய டைனசரின் சுருங்கிய வடிவம்தான் கோழி என்றது புத்தகம். கோழியில் இருந்துதான் முட்டை. முட்டையில் இருந்துதான் கோழி. முடிவென்று ஒன்றில்லை.

புல்லும் மூங்கிலே. முதலையும் பல்லியே என்கிறது ஒரு கவிதை.

முதலும் முடிவுமாகத் தொடர்கிற கவிதை வகை ஒன்று தமிழில் உண்டு. அந்தாதி. அபிராமி அந்தாதி சொல்லிப் பழகியவர்களுக்கு நன்றாக புரியும். முதல் வரியில் முடிகிற சொல்லே அடுத்த வரியின் ஆரம்பம்

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த 
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் 
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.- 
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே. என்று படர்ந்து கொண்டு போகும் பாடலின் அடுத்த கண்ணி,  பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி,  என்று தொடரும்.

வகுப்பறையில் செறிவான இந்த உதாராணத்தைச் சொல்லி அந்தாதியைப் புரிய வைக்க முடியாத வாத்தியார் ஒருவர் அதை ஒரு ‘ஜோக்காக‘ மாற்றினார். அடுத்த வீட்டுச் சண்டையில் அவர் கண்டுபிடித்த அந்தாதி இது:

கணவன்: அறிவு இருக்கா?

மனைவி: இருந்தா உங்களைக் கட்டுவேனா?

க: கட்டிக்கிட்டுதான் அவஸ்தைப்படறேன்.

ம: அவஸ்தைப்படுவானேன். அன்னிக்கு யோசிச்சிருக்கணும்.

க: யோசிக்கிறதுக்குத் தான் இல்லையே அறிவு?

முடிவும் முதலும் ஒன்று.

கடைசிப்பக்கம்தான் நான் முதலில் படிக்கும் பக்கம் என எனக்குக் கடிதம் எழுதியவர்கள் இருக்கிறார்கள். நானே நாளிதழ்களை கடைசிப் பக்கத்திலிருந்துதான் படிக்கிறேன் (முதல் பக்கச் செய்திகளைத்தான் முந்தைய இரவில் டிவியில் கேட்டாச்சே)

இந்த வாரத்தோடு கடைசிப் பக்கத்தை நிறைவு செய்கிறேன். இன்னொரு தருணத்தில் சந்திக்கலாம். நமக்கிடையே

முடிவென்று ஒன்று இல்லை.

One thought on “முடிவென்று ஒன்று இல்லை

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *