ஒருதலைக் காதல் என்று ஒன்றுண்டா?

மாலை நேரம். மாடியில் கடலைப் பார்த்து உட்கார்ந்திருக்கிறான் அவன். பூனைக் காலால் நடந்து அவன் பின்புறம் வந்து நிற்கிறாள் அவள். கையெடுத்துக் கண்ணைப் பொத்துகிறாள். “யார் சொல்லு, பார்ப்போம்!’ என்கிறாள்.

“‘என்ன விளையாட்டு இது? கையை எடு!”

“யாரு, சொல்லு!’

அவள் பெயரைச் சொல்கிறான் அவன். கலகலவென்று சிரித்துக் கொண்டு முன்னால் வந்து நிற்கிறாள் அவள். “ எப்படிக் கண்டுபிடிச்சே?” என்கிறாள்.

அவள் குரல், அவள் ஸ்பரிசம், அவள் எடுத்துக் கொள்ளும் உரிமை, அவள் பர்ஃப்யூம், எல்லாம் அவனுக்குத் தெரியாதா என்ன? அவனுக்குத் தெரியும் என்பது அவளுக்குத் தெரியாதா என்ன? ஆனால் அவன் சொல்கிறான்.

“ஓட்டிடும் இரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன். ஓங்கி வரும் உவகை ஊற்றிலறிந்தேன்”

இதுதான் காதல்..வானொலியின் முள்ளை நகர்த்தும் போது வசப்படுகிற அலைவரிசை போல, இரு மனங்களின் அலை வரிசைகள் ஓன்றோடு ஒன்று ஒட்டுவது, -Sync ஆவது- அப்படி ஒன்றும் போது மகிழ்ச்சி பெருக்கெடுத்து வருவது காதல். மகிழ்ச்சி வெள்ளம் போல பெருகி வந்து கடந்து போவதல்ல, ஊற்றுப் போல இடைவிடாது வந்து கொண்டே இருந்தால் அது காதல்.

மேலே உள்ள கவிதை வரிகளை எழுதியவன் பாரதி.

ஒரு தலைக்காதல் என்றொரு சொல் அண்மைக்காலத்தில் அதிகமாக ஊடகங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.  காதல் என்பது இருமனங்கள் சம்பந்தப்பட்டது என்னும் போது எப்படி ஒரு தலையாக ‘காதல்’ உருவாகும்? ஒரு தலையாக உருவாவதெல்லாம் வேட்கை, விருப்பு, மோகம், விரகம். காதல் அல்ல.

மோகம் என்பது முள். காதல் என்பது மலர். முள்ளோடோ, முள்ளின்றியோ மலர் இருக்கலாம். ஆனால் முள் ஒரு போதும் மலராகாது.

மெல்லிய உணர்வுகளுக்குத் தனித்தனியே தமிழ் தந்திருக்கும் சொற்கள் ஏராளம். மகள் மீது வைப்பது வாஞ்சை. மனைவி மீது கொள்வது காதல். அம்மா மீது உள்ளது அன்பு. சகோதரி மீது ஏற்படுவது பாசம். அண்டைவீட்டாரோடு கொள்வது நேசம். ஆண்டவன் மீது வைப்பது பக்தி.

இவை எல்லாவற்றையும் ஆங்கிலம்ல் ‘லவ்’ என்று ஒரு சொல்லில் குறிக்கும். தமிழோ தனிச் சொல் தந்து வகைப்படுத்தி நம்மை வளர்த்திருக்கிறது

காதல் அரும்பியிருக்கிறதா எனக் கண்டு கொள்வது எப்படி?

 • மெளனங்கள் அர்த்தமாகும். வார்த்தைகள் விரயமாகும்
 • காரணமின்றி முகம் மலரும். காரணமின்றி சண்டை வரும்
 • கடுமையான சண்டைகள் எழுந்தாலும் கசப்பு மிஞ்சாது
 • நிரூபணங்கள் தேவையிராது; சந்தேகங்கள் வரக் கூடாது
 • அனுதாபமோ வழிபாடோ காதல் அல்ல.
 • இயல்புகளையும் விருப்பங்களையும் மாற்றுவதல்ல,ஏற்றுக் கொள்வது காதல்
 • காதல் என்பது போட்டியோ தேர்வோ அல்ல. அங்கு வெற்றி என்பதும் தோல்வி என்பதும் வெற்றுச் சொல்
 • தன்னை இழப்பதல்ல, தன்னை அறிந்து கொள்ள உதவுவது காதல்

கடைசியாக காதல் என்பது கனவுகளின் ஜரிகை அல்ல, வாழ்வின் வெளிச்சம் அங்கு கத்திக்கோ புத்திக்கோ வேலை இல்லை. மனமே மெய்.

One thought on “ஒருதலைக் காதல் என்று ஒன்றுண்டா?

 1. S

  Hi Sir,

  We can describe love in many forms in English too. Compassion, Charity, Passion, Affection, Piety, Adulation, Amity, Agape and many more.

  Rgds

  Reply

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *