புத்தகங்களின் தேசம்

படங்களில் பார்த்து பிரமித்திருக்கிறேன். பல முறை நேரில் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். “ பலவித சாதகங்கள் கொண்ட இதைப் போன்ற இன்னொரு இடத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது” என்று தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன அந்த ‘இடம்’ சிங்கப்பூர் . அது அவரது கனவு நகரம்

அவர் உருவாக்கிய நகரம் இன்று எவ்வளவோ மாறிவிட்டது. ஆனாலும் அதன் வனப்புக் கூடிக் கொண்டுதான் வந்திருக்கிறது. ஆனால் சிங்கப்பூர் என்னை ஈர்ப்பதற்குக் காரணம் அதன் அழகு அல்ல. சுத்தம் அல்ல.ஒழுங்கு அல்ல. ஒரு நகரமே ஒரு நாடாக விரிந்து கிடக்கிற அதியசமல்ல. தமிழ் பேசி வாழக் கூடிய அயல்நாடுகளில் அது ஒன்று என்பதல்ல. சிங்கப்பூர் என்னை வசீகரிப்பதற்குக் காரணம் அது புத்தகங்களைக் கொண்டாடுகிற தேசம்.

அது புத்தகங்களை மட்டுமல்ல, எழுத்தாளர்களையும் கொண்டாடுகிற தேசம்.சிங்கப்பூரில் எழுதுகிற தரமான எழுத்தாளர்களுக்குப் பல பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. அந்தப் பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்க அயலகத்தில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்கள்  அழைக்கப்படுகிறார்கள். அதன் பின்னுள்ள நோக்கம்; ‘ திறமான புலமையெனில் அதை அயல் நாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் ஆசைதான்

சிங்கப்பூர் தமிழர்கள், பிழைப்பிற்காகவோ, வணிகத்திற்காகவோ, புலம் பெயர்ந்து சென்ற கடினமான வாழ்க்கைக்கு நடுவேயும் தமிழ் எழுத்துலகிற்குப் பங்களித்து வந்திருக்கிறார்கள். தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவரான சிங்கை நேசன் ஆசிரியர் மகதூம் சாய்பு 1887லேயே  ‘விநோத சம்பாஷணை’களை எழுதினார். அதுதான் தமிழின் முதல் சிறுகதை என்றும் அது சிறுகதையே அல்ல என்றும் இலக்கிய உலகில் நெடிய வாதங்கள் நடந்தன. அந்த ஆண்டிலேயே அங்கு பல்வேறூ தமிழ் நூல்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன. மிகக் கடினமான சித்திரகவிகள் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்கின்றன

தமிழ் எழுத்துலகிற்கும் சிங்கப்பூருக்குமான உறவு நெடியது. ஆழமானது. தமிழ் நாட்டில் எழுதுகிறவர்களுக்கு வாய்த்த பிரசுர வாய்ப்புக்கள் அங்கிருந்து எழுதிய எழுத்தாளார்களுக்குக் கிடைக்காத ஒரு காலம் இருந்தது. சிங்கப்பூரில் இருப்பது ஒரே ஒரு தமிழ் நாளிதழ். அதன் ஞாயிறு மலரில்தான் கவிதைகளும் கதைகளும் பிரசுரமாக வேண்டும். அண்மைக்காலமாக இலக்கிய மாத இதழ் ஒன்று அரும்பியிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அங்கு பதிப்பகங்கள் இல்லை. புத்தகம் வெளியிடத் தமிழ் நாட்டிற்குத்தான் வர வேண்டும். அந்நாட்களில் அவர்களது இலக்கியப் படைப்பிற்கு இடம் தந்தது வானொலி.

இந்தச் சூழலிலும் அன்றைய எழுத்தாளர்கள் நிறையவே எழுதினார்கள். சிலர் நிறைவாகவும் எழுதினார்கள். பெரும்பாலும் அவர்கள் வாழ்க்கையைச் சார்ந்த யதார்த்தவாதக் கதைகளை எழுதினார்கள். அவர்களுக்கு அகிலனும் மு.வ.வும் முன்னோடிகள்

இலக்கிய உலகில் ஏறத் தாழ ஒரு தீவைப் போலிருந்த சிங்கப்பூரை உலகோடு இணைத்தது இணையம். இணையமும், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்களும், பதிப்பக வாய்ப்புக்களும் சிங்கப்பூர் எழுத்துக்களுக்குப் புது முகம் அளித்தன  நவீன உத்திகளோடும் கதை மொழிகளோடும் படைப்புக்கள் வரத் தொடங்கின. எண்ணிக்கை மட்டுமல்ல தரமும் உயர்ந்தது.

இன்று சிங்கப்பூரிலேயே பிறந்து வளரும் சிங்கப்பூரர்களும் தமிழுக்குப் பங்களிக்கத் தொடங்கி விட்டார்கள் ஆனால் அவர்களும் சவால் நிறைந்த காலத்தில்தான் வாழ்கிறார்கள். சவால் மொழிதான். நம் குழந்தைகளைப் போல அவர்களுக்கும் தமிழ் கற்பது சவாலாகத்தான் இருக்கிறது

இந்த ஆண்டு புத்தக்க் கண்காட்சிக்கு சிங்கப்பூர் எழுத்தாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள். நான் தமிழ் எழுத்துலகின் சார்பாக அவர்களை  வருக என்று அழைக்கிறேன் நீங்கள் புத்தகக் கண்காட்சிக்குப் போனால் அவர்களைப் பார்த்து ஒரு ஹலோ சொல்லுங்கள்.

அது நாகரீகத்தின் அடையாளமாக மட்டுமல்ல, நட்பின் ஆரம்பமாகவும் அமையட்டும்,

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *