“தலைவர்களைப் பார்ப்பதில்லை; தலைக்குள் பார்க்கிறேன்”

Kumudam-ist-page

இலக்கியம், இதழியல் இரண்டிலும் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டுத் தடம் பதித்தவர். உலகம் நெடுகிலும் இவருக்கு விசிறிகளும் வாசகர்களும் நண்பர்களும் (விமர்சிப்பவர்களும்) உண்டு. பத்திரிகை உலக ஜாம்பவான்களின் நாற்காலிகளில் அவர்களுக்குப் பின் அமரும் பேறு பெற்றவர் மாலன். அவரை அரட்டைக்கு அழைத்த போது :-

 நாராயணன், மாலனாக மாறியது ஏன்?…..

எழுத ஆரம்பித்தது ஒரு இரண்டும் கெட்டான் பருவத்தில். 13 வயதில் கையெழுத்துப் பத்திரிகையில் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன்.அச்சுப் பத்திரிகைகளுக்கு அனுப்பலாம் என்ற ஆசை வந்தபோது என் ஜன்னலுக்கு வெளியே அரசியல் அனல் பறந்து கொண்டிருந்தது. இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ச்சி. நானும் அதில் முழங்கால் அளவு இறங்கியிருந்தேன். திராவிட இயக்கத்துத் தலைவர்கள் எல்லாம் இயற்பெயரையும் இறைவனையும் துறந்துவிட்டுத் தமிழ்ப் பெயர்களைச் சூடிக் கொண்டிருந்தார்கள். சாமி கண்ணைக் குத்திவிடும் என்ற பயத்தால் இறைவனைத் துறக்க தைரியமில்லை. ஆனால் தமிழ்ப் பெயரைத் தேடிக் கொண்டிருந்தேன். நான் வசித்த தெருவில் மார்கழி மாதத்தில் திருப்பாவை வகுப்புக்கள் நடக்கும் தங்கையை அந்த வகுப்பில் கொண்டு விடப் போனபோது இனிய தமிழ் என் காதில் விழுந்தது. இரவல் வாங்கி திருப்பாவை படித்தேன். அதில் மாலே! மணிவண்ணா! என்று ஆண்டாள் நாராயணனை அழைக்கக் கண்டேன். ‘அடியார்களை உன் மீது மயக்கம் கொள்ளச் செய்த மாலனே! என்று அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆகா! தேடிக் கொண்டிருந்த பெயர் கிடைத்து விட்டது. 19 வயதில் சி.சு.செல்லப்பாவின் எழுத்து இதழில் என் கவிதை வி.வே. மாலன் என்ற பெயரில் பிரசுரமாயிற்று. வி.வே. என்பது என் இனிஷியல். அந்தக் கவிதையைப் பார்த்த அம்மா, ‘ ஏண்டா உன் பெயரில்தான், அப்பா பெயரும் என் பெயரும் இருக்கே, எதுக்குத் தனியா இனிஷியல்? என்றார் விழித்தேன். அப்பா பெயர் மணி அம்மா பெயர் லலிதா ஆங்கிலத்தில் இருவர் பெயரின் முதல் இரு எழுத்துக்களும் (MA,LA,) என் பெயரின் முதல் எழுத்தும் (N) அதில் பொதிந்திருந்தது.அம்மா அதைச் சுட்டிக் காட்டியதற்குப் பிறகு அந்தப் பெயரை விட மனது வரவில்லை

சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, அரசியல் எல்லாம் எழுதும் உங்களுக்கு இவற்றில் சவாலாக இருப்பது எது?

கவிதை மனதுக்கு நெருக்கமானது. என் மனதோடு பேசிக் கொள்ளும் மொழி அது. நான் அதைக் கொண்டு கோஷங்களோ, முழக்கங்களோ, செய்வதில்லை.சமூக விமர்சனம் கூட அரிதாகத்தான் இருக்கும். சிறுகதை என் முகம் கொஞ்ச காலம் சின்னச் சின்ன ஒப்பனைகள் செய்து பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.ஆயுதம் கதைக்குப் பின் என் எண்ணங்கள் மாறின. சமூக விமர்சனத்திற்கான குரலாக அது ஆயிற்று. 90களுக்குப் பின் எழுதும் கதைகளில் தமிழில் அதிகம் பயன்படுத்தப்படாத ‘புனைவற்ற புனைவு’ (non fiction –fiction) அல்லது புத்திதழியல் (New journalism) என்ற உத்தியைப் பயன்படுத்துகிறேன். அந்த உத்திக்கு உரிய மரியாதை இன்னும் இங்கு கிடைக்கவில்லை. ஆனால் வருத்தமில்லை. காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது.என்றாவது ஒரு நாள் கை தட்டும். கட்டுரை எழுதுவது நிறையப் படிக்கத் தூண்டும் தேடத் தூண்டும். எதையாவது தேடப் போனால் வேறு ஒன்று கையில் சிக்கும். அதனால் யோசனை வரும். எனவே கட்டுரை பிடிக்கும். ஆனால் இந்த மூன்றுமே சவால் இல்லை. எனக்கு இது தண்ணீர் குடிப்பது மாதிரி. ஆனால் தாகம் எடுக்க வேண்டும். நாவலோடு ஜல்லிக்கட்டு பழகிக் கொண்டிருக்கிறேன்

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப்  போன்ற மாற்று மீடியாக்களின் தாக்கத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

வரம். ஆனால் நடைமுறைக்குப் பயன் தராத வரங்கள் எல்லாம் சாபமாக முடியும்

எழுத்தாளனாக ஆகாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது உண்டா? எப்போது?

கேரளத்தில் திரூர் என்று ஒரு ஊர். அங்கு ஆண்டுதோறும் நவீன மலையாளத்தின் தந்தை என்று கொண்டாடப்படும் எழுத்தச்சனுக்கு விழா எடுக்கிறார்கள். அந்த விழாவிற்கு என்னையும் தென் தமிழகத்திலிருந்து இன்னொரு எழுத்தாளரையும் அழைத்திருந்தார்கள். அவர் ரயிலில் தூங்கிவிட்டார். திரூர் தாண்டிவிட்டது. விஷயம் தெரிந்ததும் அலறி அடித்துக் கொண்டு ஸ்டேஷனில் இறங்கினார்.

திரூருக்கு எப்படிப் போவது எனத் திகைத்து, அடுத்த ரயில் எப்போது என அறிந்து கொள்ள ஸ்டேஷன் மாஸ்டரிடம் விசாரிக்கப் போனார். டிக்கெட்டை வாங்கிப் பார்த்தார் மாஸ்டர். “உங்களுக்கு திரூர் வரைதான் டிக்கெட் இருக்கிறது. ஒரு ஸ்டேஷன் நீங்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்திருக்கிறீர்கள். அதற்கான கட்டணத்தையும் அபராதத்தையும் கீழே வைத்தால்தான் இந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே போக முடியும்” என்று ஒரே போடாகப் போட்டார். மிரண்டு போனார் நம் எழுத்தாளர். திருவிழாவில் காணாமற் போன குழநதை போல மலங்க மலங்க விழித்தார். “திரூரில் என்ன விசேஷம்?” என்று விசாரித்தார் மாஸ்டர். “ஐயா நான் ஒரு எழுத்தாளன். எழுத்தச்சன் விழாவிற்கு அழைத்தார்கள் வந்தேன். தூங்கிப் போய்த் தொலைந்தேன்’ என்றார் எழுத்தாளர் நொந்து போய்.. “என்ன சொன்னீர்கள்? எழுத்தாளனா?’ நம் நண்பர் பையிலிருந்து புத்தகங்களை எடுத்துக் காண்பித்தார். “சாகித்ய அகாதெமி கூட கொடுத்திருக்கிறார்கள்’ என்றார் முனகலாக.

அவ்வளவுதான். சொடக்குப் போடுகிற நேரத்தில் தலைகீழாக மாறிவிட்டார் ஸ்டேஷன் மாஸ்டர்.  ‘எழுத்தாளரா, எழுத்தாளரா நீங்கள், சொல்லவே இல்லையே!” என்றார். எங்கேயோ பார்த்து சமிஞ்கை செய்தார். சூடாக டீயும், வேக வைத்த வாழைப்பழமும் வந்தது. டிக்கெட் காசைக் கொடுக்க பர்ஸை எடுத்தார் எழுத்தாளர். ‘அட! உள்ள வைங்க சார்!” என்று செல்லமாக அதட்டினார். சற்று நேரம் கழித்து, ஒரு போர்ட்டர் பையைத் தூக்கிக் கொண்டு பின் வர, எதிர்ப்புறம் வந்த ரயிலில் எழுத்தாளரை முதல் வகுப்பில் ஏற்றி விட்டார். அந்த டிக்கெட் கலெக்டரிம் ஏதோ சொன்னார். இந்த எதிர்ப் பயணம் முழுதும் இலவசம். அந்தக் கலெக்டர் பவ்யமாக எழுத்தாளரை வரவேற்று, திருரில் இறக்கிவிடும் போது அங்கிருந்த ஸ்டேஷன் மாஸ்டரிடம் ஏதோ சொல்ல, மறுபடி டீ, போர்ட்டர் என்று ராஜ உபசாரம்!

இதை நண்பர் விவரித்த போது எழுத்தாளனாகப் பிறந்தால் கேரளத்தில் பிறக்க வேண்டும் என நினைத்திருக்கிறேனே தவிர  ஏண்டா. எழுத்தாளனாகப் பிறந்தோம் என ஒரு போதும் நினைத்ததில்லை

நீங்கள் பொருளாதாரத்தை மனதில் கொண்டு கேட்கிறீர்களோ? இல்லை சார், என் பதிப்பாளார்கள்  கனவான்கள். ராயல்டியை கரெக்ட்டாக அனுப்பி விடுகிறார்கள்.  .

நீங்கள் செய்திக்காக அலைந்து திரிந்த அசைன்மெண்ட்களில் மறக்க முடியாதது எது?

இதழியல் மாணவனாக இருந்த போது இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் வகுப்பில் கொடுக்கப்பட்ட ஓர் அசைன்மென்ட்.. ஜான் இர்பி என்ற உள்ளூர் நீதிபதியின் குலம் கோத்திரம், ஜாதகம், சங்காத்தம், காதல்(கள்), பிரிவு, காசு, கட்டிய வரி எல்லாவறையும் திரட்டி அலச வேண்டும் இரண்டு நிபந்தனைகள் 1.அவரையோ, குடும்பத்தினரையோ, நண்பர்களையோ சந்திக்கக் கூடாது. 2. எழுதும் ஒவ்வொரு வரிக்கும் ஆதாரம் இருக்க வேண்டும்.

அசைன்மென்ட் சுவாரஸ்யம். ஆசாமி படு போர்

டி ஆர் பி ரேட்டிங்கிற்காக சாதாரண விஷயத்தைக் கூட பரபரப்பாக்குகிறார்களே?  ஏற்புடையதா?

தப்பு! தப்பு! பெரிய தப்பு! ஆனால் ஐயா, அதைவிட பெரிய தப்பு உங்கள் ரிமோட்டை நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பது.

பத்திரிகைகளின் எதிர்காலம்?

ஓகோ என்று இருக்கும். ஆனால் அச்சில் அல்ல

யாரை பேட்டி காண ரொம்ப பிடிக்கும்? ஏன்?

வார்த்தைகளை நம்புகிறவர் கலைஞர். (பேட்டி காண) வந்தவனை நம்புகிறவர் எம்.ஜி.ஆர். யோசித்து பதில் சொல்கிறவர் நரசிம்ம ராவ். பதில் சொல்லி யோசிக்க வைக்கிறவர் அத்வானி.சிரிக்காமல் பதில் சொல்பவர் ஜோதிபாசு. சிரிக்க வைத்து பதில் சொல்பவர் வாஜ்பாய். இவர்கள் எல்லோரையும் சந்தித்துக் கேள்வி கேட்டாயிற்று. இனி நான் பேட்டி காண விரும்பும் நபர்  ஜெயலலிதா. அதற்கும் ஒரு காலம் வராமலா போய்விடும்?

நீங்கள், பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு அந்தக் கூட்டணி பற்றி..

“அவர்கள் ஓருவரை ஒருவர் நேசித்தார்கள்; ஆனால் ஒன்றையும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஓருவருக்கொருவர் உதவிக் கொள்வார்கள்.ஆனால் தனித் தனியாகத்தான் செயல்படுவார்கள். அவர்கள் தங்கள் பாதைகளைத் தாங்களே தீர்மானித்துக் கொண்டார்கள். எத்தனை பத்திரமாய் பாதுகாக்கப்பட்டிருந்தாலும், எத்தனை தொலைவில் இருந்தாலும், தங்கள் பாதைகளைத் தாங்களே திறந்து கொண்டார்கள்” இவை த்ரீ மஸ்கட்டியர்ஸ் என்ற நாவலில் அலெக்ஸாண்டர் டூமா எழுதியது. எங்களைப் பற்றித்தான் எழுதியிருக்காராக்கும்!

புதிதாய் வரும் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களுக்கு உங்கள் அட்வைஸ்?

பேனாவைத் திறக்கும் முன் புத்தகத்தைத் திறங்கள்

ஒரு இலக்கியவாதி பத்திரித்துறைக்கு வருவதை மனப்பூர்வமாக வரவேற்பீர்களா?

ஒய் நாட்? பாரதி, கல்கி, புதுமைப்பித்தன் இவர்கள் எல்லாம் என்ன வானத்திலிருந்தா வந்தார்கள்? எழுத்தாளன் பத்திரிகையாளன் ஆவதென்பது ஒரு பரிணாம வளர்ச்சி. குரங்கு மனிதன் ஆனதைப் போல.(அதற்காகக் குரங்குகளாகவே இருப்பதென்று தீர்மானித்து விட்டவர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை)

திசைகள் மாதிரி ஒரு பத்திரிகை இப்போது சாத்தியமா?

அன்றைக்கு இருந்த அவசியம் இன்றைக்கு இல்லை. இளைஞர்களை உள்ள அனுமதிக்காத ஓர் இரும்புக கதவு பத்திரிகை உலக வாசலகளை வழி மறித்து நின்றது. இன்று இணையம் எல்லாக் கதவுகளையும் திறந்து விட்டுவிட்டது.

பிரிண்ட் மீடியா, விஷுவல் மீடியா உங்களுக்கு மிக நெருக்கமானது எது?

டிவி:  நிலவு. இதமாக இருக்கும் என்றாலும் இரவல் வெளிச்சம். அச்சு: சூரியன். சுடும் என்றாலும் சுயம் பிரகாசம்

உலகமே அணு உலையை எதிர்க்க நீங்கள் மட்டும் ஆதரிக்கிறீர்களே?

 பெண்ணைப் பிசாசு என்பாரும் உளர். ஆனால் அவள் எனக்கு சக்தி

உங்கள் ஜனகமன தான் ஹேராம்! நீங்கள் ஏன் சினிமா பக்கம் போகவில்லை?

அதென்ன அப்படிக் கேட்டுவிட்டீர்கள்? விருமாண்டியில் அரிவாள் தூக்காத, ஒரே ஆண்மகன் நான்தான்!

சமீபத்தில் நீங்கள் ரசித்த புத்தகங்கள்?

இலக்கியத்தில் மேலாண்மை (இறையன்பு) ஆறஞ்சு (ஆழகுநில –சிங்கப்பூர்) வீதியென்று எதனைச் சொல்வீர் (தஞ்சாவூர் கவிராயர்)

இந்தியாவில் அவசர நிலைக்கு எதிராக எழுதிய உங்கள் கவிதை அமெரிக்க பேராசிரியர் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டது. அது பற்றி? அச்சுறுத்தல்?

விந்தியத்திற்கு வடக்கே ஏதோ நடக்கிறது, ஆனால் என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ள முடியாத/ தெரிந்து கொள்ள விரும்பாத ஓர் இருள்  தமிழகத்தின் மீது கவிந்திருந்தது. பொது வெளிகளில் அரசியல் தவிர மற்ற அனைத்தும் வழக்கமான உற்சாகத்துடன் பேசப்பட்டது. அந்த கள்ள மெளனம்தான் பெரும் அச்சுறுத்தல். அரசிடமிருந்து எனக்குத் தனிப்பட்ட முறையில் அச்சுறுத்தல் ஏதுமில்லை

அது ஒரு ஆகச் சிறந்த கவிதை இல்லை. என்னை அடையாளப்படுத்தி நிற்கப் போகிற கவிதையும் இல்லை. ஆனால் காலத்தை தனக்குள் உறைய வைத்திருக்கும் கவிதை அது

இன்றைக்கு – உங்கள் ஜன்னலுக்கு வெளியே ?

தரையில் தணலைக் கொட்டியதைப் போல நெருப்பு நிறப் பூக்கள் தெருவெங்கும் நிறைந்து கிடக்கின்றன. இருள் இன்னமும் முற்றாக விலகிவிடாத இந்த இளம் காலையில் ஒரு துப்புரவுத் தொழிலாளி அதை வாரித் திரட்டி வழித்தெடுத்துக் கொண்டிருக்கிறாள். இந்த குல்மோஹர் பூக்கள் அவளுக்குக் குப்பையா? பூவா? விரிந்து கொண்ட விரல்களைப் போல அகன்ற ஒரு இரும்புத் துடைப்பம், வரட் வரட் என்று தார்ச்சாலையோடு தர்க்கம் செய்து கொண்டிருக்கிறது கோலப் பொடியோடு வாசலுக்கு வந்த எதிர்வீட்டுக் கிழவி,”ஏன் காலங்கார்த்தால இப்படி தகரத்தைக் கொண்டு தரையைப் பிறாண்டி என் காதைக் கிழிக்கிற? அதைக் கேட்டாலே பல்லு கூசுது’ என்று ஏசி விட்டுக் கோலப் புள்ளிகளை வைக்கிறார். இந்தப் பெண் அந்த வசவை, ஏதோ வாழ்த்துப் பத்திரம் வாசித்து அளித்ததைப் போல வாங்கிக் கொண்டு சிரிக்கிறது. கிழவியின் கோலம் சிறு குழந்தையின் கையெழுத்தைப் போல ஒரு பக்கமாக்க் கோணிக் கொண்டு முடிகிறது. அதற்குத்தான் காத்திருந்தது போல ‘சொட்’ என்று குல்மோஹர் பூ உதிர்ந்து அதன் நடுவில் அமர்கிறது. இப்போது இவள் என்ன செய்யப் போகிறாள்? அவளுக்கு இது பூவா? குப்பையா? ஒரு கணம் தயங்கி அவள் அந்த ஒற்றைப் பூவை எடுக்கிறாள். விரல் நடுவே வைத்து விழி விரியப் பார்க்கிறாள். அவள் வாரித் திரட்டிய குப்பையோடு அதைச் சேர்க்கப் போகிறாளா? என்ன செய்யப் போகிறாள் அவள்? சரட்டென்று கையைப் பின்னால் கொண்டு வந்து கூந்தலில் செருகிக் கொண்டாள். அந்தச் சிறு கணத்தில் அவள் முகமே ஒரு குல்மோஹர் ஆயிற்றோ?

மரத்தில் இருந்தால் மலர். தரையில் வீழ்ந்தால் குப்பை. தலையில் அமர்ந்தால்?

எதுவோ?எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால் அழகாகத்தானிருக்கிறது

உங்களுக்குப் பிடித்த கெட்டவார்த்தை?

அறிவுஜீவி

உங்களுக்குப் பிடிக்காத புகழ்ச்சி?

‘சார்தான் என் குரு’

நேரடி அரசியலில் நீங்கள் ஈடுபடாவிட்டாலும் உங்கள் ஆதரவை மாற்றிக் கொண்டே வந்திருக்கிறீர்கள். அது ஏன்? ஆதாயம் கருதியா?

ஜனகணமன வெளிவந்தபோது என்னை ஆர்.எஸ்.எஸ் என சந்தேகித்தார்கள். ‘ஆயுதம்’ கதை வந்தபோது நக்சலைட் என்றார்கள். மூப்பனாரின் நண்பன் என்றதால் த.மா.கா. என்றார்கள். தொலைக்காட்சி வேலையை சாட்சி வைத்து திமுக என்றார்கள். இப்போது ஜெயலலிதாவை ஆதரிப்பதாக முகநூலில் சேறு வீசுகிறார்கள். இதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஏனெனில் நான் தலைவர்களைப் பார்ப்பதில்லை. அவர்கள் தலைக்குள் இருப்பதைப் பார்க்கிறேன். தாய் நாட்டின் நலனைப் பார்க்கிறேன். என்னுடைய அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. நாட்டில் காணும் காட்சிகள் (பிரச்சினைகள்) சார்ந்தது

எல்லாம் சரி, அநியாயத்துக்கு இளமையாக இருக்கிறீர்களே, அது எப்படி?

அநியாயமாக இருக்கிறதே, ஒரு சின்னப் பையனிடம் கேட்கிற கேள்வியா இது? எனக்கு இப்போது 65தானே ஆகிறது?

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these