காளைகள் மோதலில் கசங்கும் மலர்கள்

”பட்டத்து யானைக்குப் படாம் போர்த்தின மாதிரி பல வர்ணப்பட்டு, ஜரிகை, ஜிகினா இவைகளால் ஆன சிங்காரப் பொன்னாடை திமிலுக்கு முன்னிருந்து புட்டாணிவரைக்கும் முதுகோடு படிந்து இருபுறமும் மணிக் குஞ்சலங்களுடன் தொங்க, ஒரே புஷ்பாலங்காரமாக ஜல்ஜல் என்று சலங்கை மாலையும் கொம்பு, கால் சதங்கைகளும் அசைவுக்கு அசைவு விட்டுவிட்டு ஒலிக்க, நாட்டியக்காரி மேடைக்கு வருகிற மாதிரி நிமிர்ந்து நிமிராமலும் முகம் லேசாகத் தணித்து, கண்கள் கீழ் நோக்கி இரு பக்கமும் பார்க்க, கம்பீர நடைபோட்டு அமரிக்கையாக வந்து நின்றது காரி. ….
சில விநாடிகளில் வாடிவாசலில் முண்டியடித்து எக்கி நின்ற கூட்டம் போன இடம் தெரியவில்லை. காரி கொம்புக்கு எட்டாதபடி எப்படியெல்லாம் பாதுகாத்துக்கொள்வதென்று தவித்து அவனவன் அங்குமிங்கும் ஓடிப் பதுங்கப் பார்த்தான். துடைத்துவிட்ட மாதிரித் திட்டிவாசல் குழப்பமின்றி விஸ்தாரமாகியது.. இரண்டாவது வரிசையில் நிற்கவே ஒவ்வொருவரும் தவித்தனர்”.இது 1959ல் வெளியான வாடிவாசல் என்ற நாவலில் சி.சு.செல்லப்பா தீட்டும் சித்திரம்.
‘எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்’ என்று கலித்தொகை இன்னும் கச்சிதமாகக் காட்டுகிறது இலக்கியத்தில் உயிர்ப்போடு இருந்த ஜல்லிக் கட்டு, தொலைக்காட்சிகளில் வீரசாகசமாகவும், அரசியலில் நாடகமாகவும் மாறியது காலம் வரைந்ததோர் கேலிச் சித்திரம்.
கொடூர குற்றமிழைக்கும் சிறார்களுக்குத் தண்டனையைக் கடுமையாக்கும் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது, மக்களின் ‘அசட்டுணர்ச்சி’க்கு (Sentiment) அரசு வளைந்து கொடுத்துவிட்டது எனக் குற்றம் சாட்டி நெற்றிக் கண் திறந்த ஊடகங்கள் இப்போது குதூகலித்துக் கொண்டாடுகின்றன.

ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதிக்க ஏதுவாக காங்கிரஸ் தலைமையிலான அரசால் அறிவிக்கை வெளியிடப்பட்டது (ஜூலை 11, 2011) அப்போது திமுக, பாமக ஆகியவை அந்த ஆட்சியில் பங்கு பெற்றிருந்தன. எனவே காங்கிரஸ் Vs பாஜக, திமுக Vs அதிமுக என்ற சட்டகத்தில் அமைந்த தமிழக அரசியல் தேர்தல் களத்தில் இது முக்கிய விவாதப் பொருளாக மாறியது. கட்சிகளிடையே மல்லுக் கட்டு தொடங்கியது.

தடையை நீக்குவது, தனக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என பாஜக கருதியது. அதிகாரத்தில் பங்கு பெற்றிருந்தும் தமிழர்களது பண்பாட்டு உரிமையைக் காக்கத் தவறியது என்று திமுகவைக் குற்றம் சாட்ட கிடைத்த ஒரு வாய்ப்பு என அதிமுக எண்ணியது. தற்காத்துக் கொள்ள, தங்கள் ஆட்சிக் காலத்தில் மெளனம் சாதித்த திமுகவும் காங்கிரசும் இப்போது,”மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்’ என அறிக்கைகள் விடுத்தன. காங்கிரஸ் அரசில் ஐவரை அமைச்சர்களாகப் பெற்றிருந்த போது ஏதும் செய்யாத கருணாநிதி, இப்போது, மத்திய அரசில் துணை அமைச்சராக உள்ள பொன்னர்“பிரதமரை உடனே சந்தித்து ஆணை பெற் வேண்டும்” எனக் கடிதம் எழுதினார். தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதை! ஜல்லிக்கட்டில் கொம்பைப் பிடிப்பவர்களை வீரர்களாகவும், வாலைப் பிடிப்பவர்களை கோழைகளாகவும் இலக்கியங்கள் சித்தரிக்கின்றன.

ஏறு தழுவுதல் மட்டுமல்ல, அரசியல்கட்சிகளும் ஊடகங்களும் அரங்கேற்றும் இந்த நாடகங்களும் நம் பண்பாடுதான்.

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *