தலைகளின் முகங்கள்

பிரம்மாவிற்கு நான்கு. முருகனுக்கு ஆறு. எலிபெண்டா குகைகளில் உள்ள சிவனுக்கு மூன்று ராவணனுக்குப் பத்து. நமக்கோ பல நூறு முகங்கள்.

ஒரு தலைவருடைய உண்மையான முகம் எப்போது வெளிப்படும்? நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரும் போது. அரசியல் தலைவர்களை, சில நேரங்களில் சில கார்ட்டூன்கள் நிதானமிழக்கச் செய்துவிடும். காரணம் கார்ட்டூன்களின் அடிப்படையே கேலிதான், எள்ளல்தான், ஏளனம்தான்.

ஆனால் தங்களைப் பற்றிய கார்ட்டூன்களைக் கண்டு புன்னகைத்த தலைவர்களும் இருந்திருக்கிறார்கள். கார்ட்டூனிஸ்ட் சங்கரின், ’சங்கர்ஸ் வீக்லி’ என்ற கேலிச்சித்திரங்கள் கொண்ட வாரப்பத்திரிகையின் தொடக்க விழாவில், “ என்னை விட்டுவிடாதீர்கள், சங்கர்” என்று நேரு பேசினார். தொடர்ந்து நேருவைக் கிண்டல் செய்து 18 வருடங்கள், வாரா வாரம் கார்ட்டூன்கள் வெளிவந்து கொண்டிருந்தன. பின்னால் அவை 1983ல் புத்தகமாக வந்த போது அதற்கு முன்னுரை எழுதியவர் இந்திரா! புத்தகத்தின் தலைப்பு ”என்னை விட்டு விடாதீர்கள், சங்கர்!” (Don’t spare me Sankar!)

கார்ட்டூனிஸ்ட்களின் கோடுகளிலும் பத்திரிகையாளர்களின் வரிகளிலும் அதிகம் அகப்பட்டுக் கொண்ட இன்னொருவர் ராஜாஜி. அவரது கூர்மையான மூக்கும், கறுப்புக் கண்ணாடியும் கார்ட்டூனிஸ்ட்களுக்கு எளிதாக இருந்தது. அவர் பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளில் பேச்சுவார்த்தைகள் நடத்தியவர். ஆதலால் அவருக்குப் பல ரகசியங்கள் தெரியும். ஆனால் அவற்றை எளிதில் அவரிடமிருந்து பெற முடியாது. அதனால் பத்திரிகையாளர்களுக்கு அவர் மீது ஆதங்கம்.
”மேற்கே ஒரு பாகிஸ்தான்; கிழக்கே ஒரு பாகிஸ்தான் இவற்றுக்கிடையே சென்றுவர உங்களுக்கென்று ஒரு தனிப்பாதை வேண்டாமா?” என்று ஜின்னாவிடம் கேட்டார் ஒரு பத்திரிகையாளர்.” வேண்டும் வேண்டும்” என்றார் ஜின்னா. ஏற்கனவே சிக்கலாக இருக்கும் ஒரு விஷயத்தை பத்திரிகையாளர்கள் இது போன்று கேள்விகள் கேட்டு மேலும் சிக்கலாக்கக் கூடாது என்று ஜின்னாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த ராஜாஜி கூறினார்.

பத்திரிகையாளர்கள் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டார்கள். தில்லி பத்திரிகையாளர் சங்கத்தில் கூட்டம் போட்டு ராஜாஜியைத் திட்டினார்கள். ராஜாஜி புன்னகைத்துக் கொண்டிருந்தார்

அவரை மிக மோசமாகச் சித்தரித்த கார்ட்டூன்கள் உண்டு. 1938ல் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி நடந்த போது அவரை திராவிட இயக்கப் பத்திரிகைகள், தமிழ்த்தாயை கத்தியால் நெஞ்சில் குத்துவது போலவும், சேலையை உரிவது போலும் கார்ட்டூன்கள் வெளியிட்டன. அவை ராஜாஜிக்கு நிச்சயம் வேதனை தந்திருக்கும். ஏனெனில் ஆங்கிலத்தில் எழுதும் திறமை பெற்றிருந்தும் அதனால் அகில இந்தியப் புகழ் அடைந்திருந்த போதும், தமிழை நேசித்த, அப்படி நேசித்ததால் தமிழில் எழுதிய எழுத்தாளர். ஆனால் அப்போதும் அவர் நிதானம் தவறி ஒரு வார்த்தை சொல்லிவிடவில்லை.

பழைய காலத் தலைவர்களைப் பற்றியே சொல்லிக் கொண்டு போகிறீர்களே, இன்று இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள் என நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. சொல்லத்தான்.நினைக்கிறேன் ஆனால்-

அவர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், ஏனோ தெரியவில்லை, தொண்டை அடைக்கிறது. சிறிது அவகாசம் கொடுங்கள். அடைப்பை உமிழ்ந்து விட்டு வருகிறேன்
த்த்தூ..!

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *