கரிச்சான் குஞ்சு

நட்பு தரும் அன்பிற்குப் புறச்சார்புகள் அவசியமில்லை

Karichan Kunju

அள்ளி முடிந்த வெள்ளிக் குடுமி. நெற்றி நிறைய வரி வரியாத் திருநீறு. அறுபது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனக் கிழவர், “தேர்தல் பாதை திருடர் பாதை!’ என்ற நக்சலைட்களின் கோஷத்தை ஊர்வலத்தில் உரக்க முழங்கிக் கொண்டு போவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

பார்த்திருந்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும், அவர்தான் கரிச்சான் குஞ்சு!

ஏதோ ஒரு அசுர கணத்தில்-(இன்று அது தேவ கணம் போல் தோன்றுகிறது- சென்னை வேலையை உதறிவிட்டு), ஒரு பிரம்மசாரி ஜீவிப்பதற்குரிய சம்பளத்தில், தஞ்சையில் வேலை தேடிக் கொண்டு குடிபெயர்ந்தேன். தஞ்சையில் நான் பணியாற்றிய தொழிற்சாலையின்- (தொழிற்சாலை என்றால் புகைபோக்கிகள் கரும்புகை கக்க. ராட்சத இயந்திரங்கள் சுழன்று கொண்டிருக்கும் எனக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்.)-சுற்றுச் சுவர்களை பட்டை பட்டையாக காவியும் வெள்ளையும் மாற்றி மாற்றி அடித்து ‘அலங்கரித்திருந்தார்கள்’

நண்பகல். சாப்பாட்டு வேளை முடியும் தருணம்.  ‘நமஸ்காரம்’ என்று என் எதிரில் தோன்றினார் அவர். குள்ளமான உருவம். வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கையில் ஒரு துணிப்பை. நீர்க்காவி ஏறிய பழுப்பு வேட்டி. தட்டுச் சுற்றாகத்தான் கட்டியிருந்தார். ஆனால் தலையில் கட்டுக் குடுமி. புருவங்கள் லா.ச.ராவினுடையதைப் போல அடர்ந்து செறிந்த வெள்ளைப் புருவங்கள். அந்தணர் என்பதை ஐயம் திரிபற அறிவிக்கும் தோற்றம். யார் இவர்? சுற்றுச் சுவரைப் பார்த்து, ஒருவேளை, இது ஏதோ கோவில் அல்லது மடம் என்று நினைத்துக் கொண்டு  நுழைந்து விட்டாரோ?

“நமஸ்காரம். என் பெயர் நாராயணசாமி. “கரிச்சான் குஞ்சு” என்ற பெயரில் எழுதி வருகிறேன்” என்றார் வந்தவர்.

எனக்கு ‘ஜிவ்’ என்றது!

கரிச்சான் குஞ்சு ! மணிக்கொடி எழுத்தாளர்! நான் தஞ்சைக்கு இடம் பெயர்கிறேன் என்று தி.ஜானகிராமனுக்கு எழுதிய போது, தஞ்சையில் நீங்கள் சந்திக்க வேண்டிய நபர்கள் என்று அவர் இட்ட பட்டியலில் இடம் பெற்றிருந்த முதல் நபர். அதற்கும் முன்பே ‘வாசகன் வந்து கொண்டிருந்த போது “எக்சிஸ்டென்ஷியலிசம் என்றால் என்ன என்று விளக்க முடியுமா?” என்று கேட்டு  எனக்கு ஒரு தபால் கார்டு எழுதியவர். அதைப் பார்த்த பாலகுமாரன், “ வாத்தியார் உனக்கு டெஸ்ட் வைக்கிறார்” என்று எச்சரித்த நபர். இத்தனையும் நொடிப் பொழுதில் மனதில் மின்னி மறைந்தன.

என் முகத்தையும் புன்னகையையும் பார்த்துக் கொண்டே கரிச்சான் குஞ்சு பேச ஆரம்பித்தார் : “ விகடன்ல உங்க படம் பார்த்தேன். ஜானகிராமனும் எழுதியிருந்தான். ஆனா கிளம்ப நேரம் வாய்க்கலை. இன்னிக்கு வேளை வந்துடுத்து” என்றார். அந்த வார ஆனந்த விகடனில், அதற்கு முந்தைய ஆண்டில் அவர்கள் ‘அறிமுக’ப் படுத்திய எழுத்தாளர்களில் என்னையும் குறிப்பிட்டு படமும் வெளியிட்டு இருந்தார்கள்.

தி.ஜானகிராமனின் மிக நெருங்கிய நண்பர் கரிச்சான் குஞ்சு. தி.ஜா.வின் இளமைக்கால அந்தரங்கங்களை அறிந்தவர். கரிச்சான் குஞ்சுவின் தந்தை தி.ஜா.வின் தந்தையின் சீடர். பழுத்த வைதீக குடும்பம்.ஆனால் கரிச்சான் குஞ்சுக்கு 8 வயது இருக்கும் போது அவரது தந்தை இறந்து போனார். வறுமையில் உழன்றது குடும்பம். அதனால் எட்டாவது வயதில் வேத பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். வேதபாடசாலையில் வேதக் கல்வியும் சாப்பாடும் இலவசம். அங்கேயே தங்கிப் படிக்க வேண்டும்.(அந்த வேதபாடசாலைதான் ‘அம்மா வந்தாளில்’ வரும் வேத பாடசாலை) பள்ளிக்கூடம் என்றால் என்னவென்றே தெரியாது வளர்ந்த கரிச்சான் குஞ்சு 16 வயதில் வேதக் கல்வியை முறித்துக் கொண்டு வேதபாடசாலையிலிருந்து வெளியேறினார். குடும்ப்ப் பொருளாதாரம் ஒன்றும் பெரிதாக மேம்பட்டுவிடவில்லை. ஆனால்  ஒரு புரோகிதராக வாழ்க்கை நடத்த அவருக்கு மனம் ஒப்பவில்லை. அப்போது தமிழ்ப் பண்டிதர்களை உருவாக்க ‘ஓரியண்டல் ஸ்டீஸ்’ என்று ஒரு படிப்பு இருந்தது. நுழைவுத் தேர்வி எழுதி வெற்றி பெற்றால்தான் சேர முடியும். கரிச்சான் குஞ்சு அதில் தேறி அந்தப் படிப்பில் சேர்ந்தார்.

ஒரு முறை தி.ஜா.வின் அறைக்குப் போயிருந்த கரிச்சான் குஞ்சு அங்கிருந்த பாரதியார் கவிதைகள் நூலைப் படிக்க எடுத்துக் கொண்டு வந்தார். முதல் வாசிப்பிலேயே அவரைக் கிறங்க அடித்தான் பாரதி. கவிதைகளை வாய்விட்டுப் படிப்பதும், பாடுவதுமாக இருந்தார். அப்போது இந்தியா விடுதலை பெற்றிருக்கவில்லை. பாரதியைப் படிப்பது குற்றம் எனச் சொன்ன அவரது ஆசிரியர்கள் அதை நிறுத்தச் சொன்னார்கள். கரிச்சான் குஞ்சுக்கு அதில் சம்மதம் இல்லை. அவர்கள் முன் தலையை ஆட்டிவிட்டு, தனியே வந்து ரகசியமாகப் படிக்கும் போது ஓர்நாள் கையும் களவுமாகப் பிடிபட்டார். இரண்டு நாளைக்குச் சாப்பாடு கிடையாது என்றும் பாடசாலையை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தண்டனை விதிக்கப்பட்டது. அவரிடமிருந்த பாரதியார் கவிதைகள் பறித்து வீசப்பட்டன.

குலைப்பட்டினி கிடந்த அந்த நாள்களை, பின்னால் சிரித்துக் கொண்டே நினைவு கூர்ந்து, “பாரதி, படிப்பவனுக்கு பசி கொடுப்பான்” என சிலேடையாகச் சொல்லி கடகடவென்று சிரிப்பார்

பாரதி எங்களை நெருங்கச் செய்தான். ஆனால் அவனைப் பற்றிய புதிய வெளிச்சங்கள் எனக்கு அவரிடமிருந்து அதிகம் கிடைக்கவில்லை. அவர் எதிரொலித்த கு.ப.ரா, சிட்டியின் கருத்துக்களை நான் ஏற்கனவே வாசித்திருந்தேன். ஆனால் உபநிஷதங்கள் மீது அவர் பாய்ச்சிய ஒளி எனக்கு உவகை தந்தது. புதுச்சேரியில் அவர் வீட்டு மாடி வராந்தாவில் ஒரு இரவு முழுக்க இருளில் உட்கார்ந்து கதோ உபநிஷதம் பற்றி உரையாடியிருக்கிறோம். இலக்கியத்தில் த்வனியின் முக்கியத்துவம் குறித்துப் பேசும் த்வனியாலோகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவரும் அவர்தான்

இலக்கிய வாசிப்பும், தமிழ்ப் பற்றும்,வேதக் கல்வியும் அவரது புலமையைச் செழுமைப்படுத்தியிருந்தன. அவர் ஞானஸ்தர் என்பதில் நண்பர்கள் யாருக்கும் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. ஜெயகாந்தன் அவரை பண்டிதர் என்றுதான் பிரியமாய் அழைப்பார். ஆனால் அவரது சகாக்களுக்குக் கிடைத்த அளவு வாசக அங்கீகாரம் அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் புத்தகங்கள் ஒவ்வொன்றும் பெரும் போராட்டத்திற்கும் மன்றாடலுக்கும் பின்னரே வெளிவந்தன.

1987 மார்ச். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் எழுத்தாளர் மாநாடு. நான் அழைக்கப்பட்டிருந்தேன். கரிச்சான் குஞ்சுவும் வந்திருந்தார். எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் ஒரு சேர உரையாற்றும் ஓர் அமர்வு. பதிப்பாளர்கள் தரப்பில் பேசிய இரு பெரும் பதிப்பாளர்கள் ஏதோ போனால் போகிறது என்று இலக்கியத்திற்குச் சேவை செய்வது போல பேசினார்கள். நிறையக் கஷ்டப்பட்டுக் கொண்டும், நஷ்டப்பட்டுக் கொண்டும் சில உயர்ந்த இலக்கிய நூல்களை வெளியிடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பொறுக்க மாட்டாமல் க.நா.சு, எழுந்து மேடையை நோக்கிப் போனார். அவர் மேடையை நெருங்கவும், ‘அமர்வு நிறைவுற்றது’ என்று அறிவித்துவிட்டு எழுந்தார் தலைமை தாங்கிய விக்ரமன். க.நா.சு  பேசாமல் அமர்ந்து விட்டார். ஆனால் கரிச்சான் குஞ்சு எழுந்தார். “திரு.வேம்பு அவர்களே!” என்று விக்ரமனின் இயற்பெயரைச் சொல்லி  அழைத்தார். திடுக்கிட்ட விக்ரமன் நிமிர்ந்து பார்த்தபோது கரிச்சான் குஞ்சு பேச்சைத் தொடங்கியிருந்தார். ‘என்னவோ இலக்கிய சேவை செய்வதைப் போலப் பதிப்பாளர்கள் பேசுகிறார்கள். கடந்த 10 வருடங்களில் வெளியான நாவல்களில் சிறந்த ஒன்று என க.நாசு, கோவை ஞானி, ஞானக்கூத்தன் போன்றவர்கள் என் பசித்த மானிடம் நாவலைச் சிலாகிக்கிறார்கள்.ஆனால் அது வெளி வந்து பல ஆண்டுகள் ஆகியும் மறுபதிப்புக் காணவில்லை. அதைப் பதிப்பித்த பதிப்பாளர், “ உன் நாவல் இலக்கிய ஆராய்ச்சிக்கு உகந்ததே ஒழிய, வியாபாரத்திற்கு லாயக்கில்லை” என்கிறார். இன்னொரு பதிப்பாளரிடம் போனேன். அவரோ, ஏற்கனவே ஒருவர் போட்ட புத்தகத்தை நான் போட மாட்டேன்” என்கிறார் என்று விளாசத் தொடங்கினார். ஒரு முன்னணிப் பதிப்பாளர் மேடைக்கு வந்து “பெரியவரே! நீங்கள் கோப்ப்பட வேண்டாம். நான் போடுகிறேன்’ என்று வாக்குக் கொடுத்தார். பசித்த மானிடம், சிறுகதைகள் கொண்ட தொகுப்பு என இரு நூல்களை வெளியிடுவது என்று முடிவாயிற்று

மேடையில் வாக்குக் கொடுத்த பதிப்பாளர் சென்னை வந்ததும், வாக்குறுதியை சுத்தமாக மறந்து போனார். கரிச்சான் குஞ்சு நச்சரிக்கத் தொடங்கினார். உங்கள் கையெழுத்துப் புரியவில்லை, பிரதி தொலைந்து விட்டது, இல்லை இல்லை தேடினோம் கிடைத்து விட்டது, மெய்ப்புப் பார்க்க ஆளில்லை, என்று என்னென்னவோ சாக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கலானார்.

மனம் நொந்து போன கரிச்சான் குஞ்சு எனக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதினார். கோடு போட்ட பள்ளிக் கூட நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட காகிதத்தில்,எறும்பு ஊர்வதைப் போன்ற சிறிய எழுத்துக்களில் 10 பக்கத்திற்கு எழுதப்பட்ட கடிதத்தைப் படித்ததும் என்ன உலகமடா இது என்று நொந்து கொண்டேன். வேறு என்ன செய்ய என்று அயர்ந்தபோது, ஏன் அந்தப் பதிப்பாளரிடம் பேசக் கூடாது என்ற எண்ணமும் சிறிது தயக்கத்திற்குப் பின் பிறந்தது. தயக்கத்திற்குக் காரணம், அவர் என் நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர் அல்ல. இரண்டொரு கூட்டங்களில் மேடையைப் பகிர்ந்து கொண்டதைத் தவிர வேறு நெருக்கமான நட்பில்லை.

அவரைத் தொலைபேசியில் அழைத்தேன். என்ன தயக்கம் என்று கேட்டேன். கையெழுத்துப் புரியவில்லை ஸார் என்றார். பிரதியை என்னிடம் அனுப்புங்கள் நான் தட்டச்சு செய்து தர ஏற்பாடு செய்கிறேன் என்றேன். இல்லை சார் நானே பார்த்து எப்படியும் புத்தகம் கொண்டு வந்து விடுகிறேன் என்றார்.இன்னொரு வாக்குறுதி. அன்று அண்ணாமலையில் காற்றில் எழுதிய வாக்குறுதி. இன்று தண்ணீரில் எழுதிய வாக்குறுதி என்று நினைத்துக் கொண்டேன்.

என்ன ஆச்சரியம்! ஒரு மாதம் கழித்து கரிச்சான் குஞ்சுவிடமிருந்து ஒரு கடிதம். இம்முறை அஞ்சலட்டையில். “ இன்று …….. (பதிப்பாளர் பெயர்) இடமிருந்து கடிதமும் ரூ 1000க்கான டிடியும் வந்தது. தாமதத்திற்கு வருத்தப்பட்டு எழுதியதுடன், நீங்கள் போன் செய்ததையும் எழுதி உங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுமாறும் தெரிவிக்கிறார். இது எப்படி இருக்கு?” என்றது கடிதம்.

அவரது சிறுகதைத் தொகுப்பிற்கு நான் முன்னுரை எழுத வேண்டும் என்று கேட்டிருந்தார். நான் உறுதியாக மறுத்துவிட்டேன். ஏதோ நான் முன்னுரை எழுதுவதற்காக புத்தகம் வெளிவரச் செய்ததைப் போல, பதிப்பாளருக்கோ, அல்லது வேறு எவருக்குமோ ஒரு தோற்றம் உருவாவதை நான் விரும்பவில்லை. ஆனால் கரிச்சான் குஞ்சு வேறு மாதிரி நினைத்து விட்டார் என்பதை அடுத்து வந்த கடிதம் உணர்த்தியது. நேர்பட நடந்த எங்கள் உரையாடல்களில் அவரது கதைகள் உட்பட பல மணிக்கொடிக்காரர்களின் கதைகளை விமர்சித்திருக்கிறேன்.முன்னுரை என்று வந்தால் சிலாகிக்க வேண்டியிருக்கும் எனத் தயங்குகிறேன் போலும் என அவர் நினைத்துக் கொண்டுவிட்டார். “அன்றிரவே என்ற தொகுப்பிற்கு ஆதவன் முன்னுரை எழுதியிருக்கிறார். இதற்கு நீங்கள் எழுத வேண்டும். கட்டாயம்.நல்லது இது கெட்ட்து இது, நடுத்தரம் இது, எதுவுமே சரியில்லை என்று நிஷ்பக்ஷபாதமான, இந்தத் தலைமுறை ரஸனையுடன்  அந்த முன்னுரை அமைதல் அவசியம்” என்று எழுதியிருந்தார். கடைசியில் என் முன்னுரை இல்லாமலேதான் அந்தத் தொகுப்பு வெளிவந்தது.

இதை இத்தனை விரிவாகச் சொல்வதற்குக் காரணமே எங்கள் நடபைப் புரிந்து கொள்ள இது உதவும் என்ற நம்பிக்கைதான். எனக்கும் அவருக்கும் 31 வயது வித்தியாசம். அவர் வயது கொண்ட, அவரது சக எழுத்தாளர்கள் எல்லாம் எங்களை ஜூனியர்களாகத்தான் பார்த்தார்கள். ஆனால் கரிச்சான் குஞ்சு எங்களைத் தோளில் கை போட்டுக் கொள்ளும் உரிமை உள்ள சமவயது சகாவாக பாவித்தார். அவரது கதைகளை அவர் முகத்திற்கு நேரே விமர்சனம் செய்யும் நெருக்கமும், அதே நேரம் பாவனைகள் அற்ற மரியாதை உணர்வும் எனக்கு அவரிடம் இருந்தது. அவரை நாங்கள் விமர்சிக்காமல் புறக்கணித்திருக்கலாம். அவர் எங்களைப் பொருட்படுத்தாமல் ஒதுக்கியிருக்கலாம். ஆனால் இரு தரப்பிலும் இரண்டும் நடக்கவில்லை. மாறாக வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு வாஞ்சை இருந்தது நட்பு தரும் அன்பிற்குப் புறச்சார்புகள் அவசியமில்லை. இது சமஸ்கிருத மகாகவி பவபூபதியின் வார்த்தைகள். கரிச்சான் குஞ்சுவை நினைக்கும் போது என் மனக் கதவைத் தட்டுவதும் இந்த சொற்கள்தான்

ஆனால் குடும்பம் என்னும் அகச்சார்பு –அகம் என்றால் குடும்பம்தானே- கரிச்சான் குஞ்சுவை பெரிதும் பாதித்தது அவரது ஏழ்மை அவரது மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்கமுடியாமல் அவரது கைகளைப் பிணைத்திருந்தது. முப்பது வயதைத் தாண்டியும் அவர்கள் முதுகன்னிகளாக நிற்கிறார்களே என்ற கவலை அவரது மனத்தைக் கரையான் போல அரித்துக் கொண்டிருந்தது. அவரது ஒரு கடிதத்திலிருந்து

“37,33,30 என்று மூன்று பெண்கள். ஐயோ … வயிறு குமுறுகிறது…. கல்யாணம் கார்த்தி அதெல்லாம் நடக்கப்போவதில்லை. பேசாமல் செத்துப் போய்விடலாம். … தற்கொலைக்கு மனம் வல்லையே இயற்கைச் சாவும் வல்லியே காலனின் நீள் கரங்கள் என்னைக் கவ்வ மறுக்கின்றன. பொல்லாக் காலம். சாப்பாடு, தூக்கம், ஏதோ படிப்பு, யாருக்கும் தெரியாமல் அழுது புலம்புவது. இதுதான் வாழ்க்கையின் அந்திமாலைக் காலமா? போடா போ! பைத்தியக்காரா! சோற்றுக்குப் பஞ்சம் இல்லை. சொரணை இருப்பதுதான் கஷ்டம்!’

1988 ஆகஸ்டில் எனக்கு எழுதிய கடிதத்தில் இப்படி அரற்றிய அவரை நான்காண்டுகளுக்குப் பின், அவரது 69 வயதில் காலனின் நீண்ட கரங்கள் அவரை அரவணைத்துக் கொண்டன. ஆனால் அவரது குரல் இப்போதும் இறக்க மறுத்து என் செவிகளில் அறைந்து கொண்டே இருக்கிறது:

“சொரணை இருப்பதுதான் கஷ்டம்!”

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these