மாலன்
Writer – Journalist -Broadcaster
திசைகள்,குமுதம், தினமணி, இந்தியா டுடே (தமிழ்), குங்குமம், புதிய தலைமுறை, புதியதலைமுறை கல்வி ஆகிய தமிழகத்தின் முன்னணித் தமிழ் இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றிய மாலன் தனது எழுத்துலகப் பயணத்தை இலக்கியச் சிற்றேடுகளில் துவக்கியவர்.
மணிக்கொடி எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் மூலம் 15 வயதில் கவிதைக்கும், தனது கவிதைகள் மூலம் இலக்கியத்திற்கும் அறிமுகமான இவர் பாராட்டப்படுவது பத்திரிகைப் பணிகளுக்காக மட்டுமல்ல, இவரது படைப்பிலக்கியங்களுக்காகவும்தான் .
‘ஒரு முழுமையான சிறுகதைத் தொகுப்பு எப்படி இருக்கும்? இதோ இப்படி இருக்கும்’ என ஆனந்தவிகடன் இவரது சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எழுதியது.
தி.ஜானகிராமன், ஜெயகாந்தன் போன்ற முன்னோடிகளாலும், சிட்டி, வல்லிக்கண்ணன் போன்ற விமர்சகர்களாலும்,பிரபஞ்சன், அ.முத்துலிங்கம், பா.ஜெயப்பிரகாசம், பொன்னீலன், போன்ற அவரது சமகாலத்தவராலும், எஸ்.ராமகிருஷ்ணன், பாரதிபாலன் போன்ற அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளாலும் பாராட்டப்பட்ட இவரது சிறுகதைகள் மதுரைக் காமராசர் பலகலைக்கழகத்தில் சமகால இலக்கியத்திற்கான நூலாக ஐந்தாண்டுகளுக்கும் மேலாக முதுநிலை மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இவரது படைப்புக்கள் குறித்து ஒரு முழுநாள் கருத்தரங்கை நடத்தியது. இவரது படைப்புக்கள் குறித்து தமிழகத்தின் பல பல்கலைக் கழகங்களில் ஆறு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்.
இவரது கதைகள் ஆங்கிலத்திலும் மற்ற இந்திய மொழிகளிலும், சீனம், மலாய், பிரன்ச் ஆகிய சில அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் A Phantom Tiger and other stories என்ற நூலாகவும், இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைகள் சங்கீத் வித்வான் என்ற நூலாகவும் வெளியாகியுள்ளன. இவரது புகழ் பெற்ற நாவல் ஜனகணமன ஆங்கிலம் ,இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இவரது சிறுகதைகள் சர்வதேச சிறுகதைத் தொகுப்பான Unwinding and other contemporary stories என்ற நூலிலும், கல்கத்தாவில் உள்ள Writers Workshop வெளியிட்ட Modern Tamil stories தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளன.இவரது கவிதை ஒன்று அமெரிக்காவிலுள்ள டஃப்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஆலிவர் பெரி தொகுத்த Voices of Emergency-an anthology of protest poetry என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இவரது கவிதைகளும், கதையும் சாகித்ய அகதாமியின் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன ஃபிரான்சில் உள்ள ழார்ழோ என்ற இடத்தில் 2021ஆம் ஆண்டு ஜுன் 1-5 தேதிகளில் நடைபெற்ற இலக்கிய விழாவில், ஃபிரன்ச் நாடகக் கலைஞர்கள் அவரது சிறுகதைகளை வாசித்தார்கள்
நூல்களில் மட்டுமின்றி இவரது படைப்புக்கள், இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா,(ஆங்கிலம்) டெகான் ஹெரால்ட், (ஆங்கிலம்) இந்தியா டுடே (மலையாளம்) மாத்ருபூமி (மலையாளம்) விபுலா(இந்தி) ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. சாகித்ய அகாதெமியின் இந்தியன் லிட்ரச்சர், தி ஹிண்டு, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட ஆங்கில இதழ்கள் இவரது படைப்புக்களை விமர்சித்துள்ளன. இவரது கதை ஒன்றை தமிழின் சிறந்த நூறு கதைகளில் ஒன்றாக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். .
சிங்கப்பூர் அரசின் ஆதரவோடு நடத்தப்படும் ‘எழுத்தாளர் வாரம்’ நிகழ்ச்சிக்கு 1993ம் ஆண்டு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர். 2011ம் ஆண்டு சிங்கப்பூர் அரசு நிறுவனமான நூல்கள் மேம்பாட்டு மன்றத்தால் (Singapore National Book development Council) அந்நாட்டுப் படைப்பாளிகளுக்குப் புனைகதைப் பயிலரங்கு நடத்துமாறு அழைக்கப்பட்டவர்.2013ம் ஆண்டு சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் (National Library Board) நடத்திய வாசிப்போம் சிங்கப்பூர் (Read Singapore!) நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டவர்.
சிங்கப்பூர் இலக்கியப் பரிசு, மலேசிய எழுத்தாளர்கள் சங்கப் பரிசு, கனடாவில் உள்ள இலக்கியத் தோட்ட விருது ஆகியவற்றிற்கான சர்வதேச நடுவராகப் பணியாற்றுமாறு அழைக்கப்பட்டவர்.
சாகித்ய அகாதெமியின் பொதுக்குழு உறுப்பினர்களில் இவர் ஒருவர்.லலித் கலா அகாதெமி பொதுக்குழு உறுப்பினர். ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளையின் அறங்காவலர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை தமிழ் இலக்கியப் பாடத் திட்டக்குழு உறுப்பினர். [Member Board of Studies Tamil Literature (PG)]
இலக்கியம், மொழி குறித்து இவரை உரையாற்ற அழைத்த பல்கலைக்கழகங்கள்:
- மெல்பேர்ன் பல்கலைக்கழகம், மெல்பேர்ன், ஆஸ்திரேலியா
- சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் – சிங்கப்பூர்
- மலேயா பல்கலைக்கழகம் – கோலாலம்பூர், மலேசியா
- பெய்ஜிங் அயலகக் கல்வி பல்கலைக்கழகம் –பெய்ஜிங்- சீனா
- ஜவஹர்லால் பல்கலைக் கழகம் –புதுதில்லி- இந்தியா
- தமிழ்ப்பல்கலைக் கழகம் – தஞ்சை இந்தியா
- சென்னைப் பல்கலைக்கழகம்- சென்னை, இந்தியா
- மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் – மதுரை, இந்தியா
- பாரதியார் பல்கலைக்கழகம் –கோவை, இந்தியா
- அண்ணா பல்கலைக்கழகம்- சென்னை, இந்தியா
விருதுகள்
அயலக விருதுகள்
சிங்கப்பூர் தேசிய நூலகம் வழங்கும் லீ காங் சியான் புலமைப் பரிசில் (Lee Kong Chian Fellow- National Library Board, Singapore) (இதனைப் பெற்ற ஒரே இந்தியரும், தமிழரும் இவரே)
Academic Excellence in Advanced Editing –University of Florida, USA
தேசிய அளவிலான விருதுகள்
சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பரிசு 2021
பாரதிய பாஷா விருது- கல்கத்தா
வாழ்நாள் சாதனையாளர் விருது – தட்சிணபாரத் இந்தி பிரசார சபா, சென்னை
தமிழக விருதுகள்
- தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
- கம்பன் விருது- கம்பன் கழகம், சென்னை
- கண்ணதாசன் விருது- கண்ணதாசன் கழகம். கோவை
- வாழ்நாள் சாதனையாளர் விருது- உரத்த சிந்தனை இலக்கிய அமைப்பு சென்னை
- படைப்புலகச் சிற்பி விருது- உறவுச் சுரங்கம்
- சிறந்த எழுத்தாளர் விருது- நெய்வேலி புத்தகக் காட்சி
பிற சிறப்புகள்
1997ஆம் ஆண்டின் சிறந்த நூல் (மாறுதல் வரும்-சிறுகதைத் தொகுப்பு) பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது சிறுகதைகள் இடம் பெற்ற தொகுப்புகள்;
One Sky – National Library Board. Singapore
Modern Tamil Stories –Writers Workshop. Calcutta
Unwinding and other Contemporary Stories –Emerald Publishers
Greatest Tamil Stories Ever Told – Aleph Book Company
மொழிபெயர்க்கப்பட்ட கவிதை வெளியான நூல்
Voices of Emergency –Anthology of Protest Poetry
ஆங்கிலக் கட்டுரை வெளியான தொகுப்பு
Chapters on Asia –National Library Board, Singapore
பத்திரிகைப்பணியில் மாலன்
தமிழின் முதல் இளைஞர் இதழான திசைகள் இதழின் ஆசிர்யராக தனது இதழியல் பணிகளைத் துவக்கியவர்.” எண்பதுகளில் எழுத வந்த அத்தனை இளைஞர்களும் உச்சரித்த மந்திரச் சொல் மாலன்’ என விமர்சகர்களால் குறிப்பிடப்படும் இவர், இலக்கிய சிற்றேடு, நாளிதழ், பருவ இதழ்கள், தொலைக்காட்சி, வானொலி, இணையம் என அனைத்து வகை ஊடகங்களிலும் செயலாற்றிய ஒரே தமிழ்ப் பத்திரிகையாளர்.
தமிழ் இதழியலின் முன்னோடிகளான ஏ.என். சிவராமன், சாவி, எஸ்.ஏ.பி அண்ணாமலை ஆகியோர் அமர்ந்த நாற்காலிகளில் அவர்களுக்குப்் பின் அமர்ந்த ஒரே பத்திரிகையாளர் என்று தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் குறிப்பிடுகிறார்.
தமிழின் முன்னணி இதழ்களான இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம் குங்குமம், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி ஆகியவற்றின் ஆசிரியராகப் பணியாற்றியவர். வாசகன், கணையாழி ஆகிய இலக்கியச் சிற்றேடுகளிலும் ஆசிரியராகப் பங்களித்தவர். இவற்றில் இந்தியா டுடே, புதிய தலைமுறை, புதிய தலைமுறைக் கல்வி ஆகியவை, அது வரை வெளிவந்து கொண்டிருந்த இதழ்க்ளைப் போன்று இல்லாமல் பொருள் புதிது, சொல் புதிது என்று அமைந்தவை. அவை முன்னுதாரணம் இல்லாதவை. அவற்றின் முதல் ஆசிரியராகப் பொறுப்பேற்ற மாலன் அவற்றின் மூலம் தமிழ் இதழியலுக்குப் புதிய பரிமாணம் அளித்தார்.
இந்திய மொழிகளில் முதன் முதலில் துவக்கப்பட்ட 24மணிநேர செய்தித் தொலைக்காட்சியான சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தியவர். அதன் மூலம் செய்திகளை அறிந்து கொள்ள மக்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, செய்தி மக்களுக்காக எந்நேரமும் காத்திருக்கும், அதை அவர்கள் உட னு க்குடன்் அவை நிகழும் போதே அறிந்து கொள்ளலாம் என்ற நிலையை ஏற்படுத்தியவர்.
1991 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான போது அவற்றை உட னுக்குடன்் தூர்தர்ஷனுக்காக நேரலையில் வழங்கியவர் மூவர். ஆங்கிலத்தில் பிரணாய்ராய், ஹிந்தியில் துவா, தமிழில் மாலன். கருத்துக் கணிப்புகள், செய்தியின் பின்னணித் தகவல்கள், விவாதங்கள், முக்கிய நிகழ்வுகளை நேரலையில் வழங்குதல் என்பனவற்றைத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அறிமுகப்படுத்தியவர் . சன் தொலைக்காட்சியில் 870 நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
“என்னுடைய இதழியல் பணிகள் யாவும் தமிழ் இதழியலின் விளிம்புகளை விரிவாக்குவதாகவே அமைந்தன என்பதில் மகிழ்வும் மன நிறைவும் கொள்கிறேன்” என்கிறார் மாலன்
பிபிசியின் தமிழ்ச் சேவைப் பிரிவான தமிழோசையில் 10 ஆண்களுக்கு மேலாக மாதந்தோறும் செய்தி விமர்சனங்களை அளித்து வந்துள்ள இவர், சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசில் நான்காண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வாரம் தோறும் எழுதியுள்ளார். சிஙகப்பூரின் வசந்தம், மலேசியாவின் வான்வில், இலங்கையின் மகாராஜா, இங்கிலாந்தின் ஐபிசி, ஆஸ்திரேலியாவின் ஏபிசி, சீனாவின் சி.ஆர்.என் ஆகிய ஒலிபரபப்பு நிறுவனங்கள் இவரின் பேட்டிகளை ஒலிபரப்பியுள்ளன.
பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய், குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் ஆகியோரது அயலகப் பயணங்களில், இந்திய அரசின் அழைப்பின் பேரில் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராகப் பங்கேற்றுள்ளார்.
சீனத்தில் உள்ள Boao forum என்ற அமைப்பு நடத்திய Round Table of Media Leaders of Asia என்ற நிகழ்வுக்குத் தொடர்ந்து மூன்றாண்டுகள் (2014,2015,2016) அழைக்கப்பட்ட ஒரே பத்திரிகையாளர். இந்தியா –பாகிஸ்தான் இடையே நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பேனோஸ் (Panos) என்ற சர்வதேச அமைப்பால் கூட்டப்பட்ட இந்திய-பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் உரையாடலில் பங்கேற்ற்க அழைக்கப்பட்டவர். பிரிட்டீஷ் கவுன்சில் ஏற்பாடு செய்த Conference on Media, Public Interest and Issues of Regulation: Indo-UK Perspectives என்ற மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்ட ஒரே தமிழ்ப் பத்திரிகையாளர்.
Global Knowledge Foundation என்ற அமைப்பினால் நேபாலில் நடைபெற்ற ஊடகக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்ட ஒரே தமிழ்ப் பத்திரிகையாளர். South Asia Broadcasting in the satellite age, organized by British Council என்ற பொருளில் பிரிட்டீஷ் கவுன்சில் நடத்திய கருத்தரங்கில் ஓர் அமர்விற்குத் தலமை ஏற்றவர்
ஹங்கர் புரோஜக்ட் என்ற சர்வதேச நிறுவனத்தின் தேசிய ஊடக ஆலோசகராகப் பணியாற்றிவர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியல் கல்வி பெற்றவர். அங்கு மாணவராக இருந்தபோது, 1990களிலேயே , மின் இதழ்களுக்கான முன் மாதிரியை (prototype for electronic newspaper) வடிவமைத்தவர்.அங்கு Academic Excellence in Advanced Editing என்று விருதளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர்
2003ல் தமிழில் முதன் முதலில் யூனிகோடில் அமைந்த திசைகள் மின்இதழைத் துவக்கியவர்.
மைக்ரோசாஃப்டின் எம்.எஸ்.ஆபீஸ் பொதி தமிழ்ப்படுத்தப்பட்டபோது அதைச் சரிபார்த்து ஒப்புதல் அளித்ததோடு அவர்களுக்காக கணிச் சொல் அகராதி ஒன்றினையும் தொகுத்தளித்தவர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் செனட் உறுப்பினராக, அந்நாள் ஆளுநர்கள் டாக்டர்.சென்னா ரெட்டி, திரு.சுர்ஜித் சிங் பர் னா லா ஆகியோரால் நியமிக்கப்பட்டவர். சென்னைப் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் இதழியல் பாடத்திட்டங்களை வகுக்கும் குழுவில் பங்களித்த இவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் பங்களித்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையின் (முதுநிலை) பாடத்திட்டக் குழு உறுப்பினர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, போச்சுகல், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, நேபாளம், சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, சீனம்ஆகிய நாடுகளுக்கு அழைப்பின் பேரில் சென்று வந்துள்ள மாலன், சமகால இலக்கிய, அரசியல், விஷயங்கள் குறித்து மெல்பேர்ன், சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உள்பட பல அறிஞர் அவைகளில் உரையாற்றியிருக்கிறார்.