வீழ்வேன் என்று நினைத்தாயோ?-12
அடி சறுக்கிய யானை
மாலன்
தேவன் நாயர் பற்றி நமக்குப் படிக்கக் கிடைக்கும் வாழ்க்கைக் குறிப்புகள் திரைப்படங்களை விடத் திகைப்பும் வியப்பும் அளிப்பவை. கணீரென்ற குரல், வசீகரமான பேச்சாற்றல், அமைப்புக்களைக் கட்டும் திறன், தொழிலாளர்கள் முன்னேற்றத்தில் ஆர்வம், இவற்றின் காரணமாக அவர் மலேசியாவிலிருந்ந்து சிங்கப்பூர் பிரியும் முன்னரே அரசியலில் கவனம் பெற்றவராகத் திகழ்ந்தார். 1964ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில், கோலாலம்பூர் அருகே உள்ள பங்சார் என்ற தொகுதியிலிருந்து மலேசியப் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தடுக்கப்பட்டார். மலேயா பகுதியிலிருந்து மக்கள் செயல் கட்சியின் சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.பி. அவர்தான்.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்த போது, தனது தொகுதி மக்களுக்குப் பணியாற்றுவதற்க்காக அவர் மலேசியாவிலேயே தங்கிவிட்டார். ஆனால் அப்போது மலேசியாவில், மக்கள் செயல் கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால், அவர் அங்கு ஜனநாயகச் செயல் கட்சி என்ற ஒன்றைத் தொடங்கினார். (அது “ராக்கெட்” என்று ஒரு பத்திரிகையும் வெளியிட்டது. அதன் சின்னமும் ராக்கெட்தான். அந்தக் கட்சி இன்னமும் மலேசியாவில் செல்வாக்கோடு விளங்குகிறது)
மலேசியப் பாராளுமன்றத்தில் தனது பதவிக் காலம் முடிந்ததும் சிங்கப்பூர் திரும்பினார்.கம்யூனிஸ்ட்கள் பிடியில் இருந்த தொழிற்சங்க இயக்கத்தை மீட்டு மக்கள் செயல் கட்சிக்கு ஆதரவாக NTUCஐ கட்டியவர். ஐம்பதாண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆளும் ஒரே கட்சியாக மக்கள் செயல் கட்சி இருப்பதற்கு அது NTUCயின் ஆதரவைப் பெற்றிருப்பது ஒரு முக்கிய காரணம் என்று சொல்கிறவர்களும் உண்டு.
ஆனால் தேவன் நாயர் எந்த நாட்டைக் கட்டி எழுப்பத் துணை நின்றாரோ, எந்த நாட்டின் அதிபராகப் பதவி வகித்தாரோ அந்த நாட்டை விட்டு தனது 65ஆம் வயதில் வெளியேறினார் – தலைக் குனிவுடன்!
காரணம் லீ குவான் யூவுடன் அவருக்கு ஏற்பட்ட மனத்தாங்கல். பின்னாளில் அது இருவருக்குமிடையே ஆன மனக் கசப்பாக முற்றியது
1965ல் குடியரசான பின் 1968ல் நடந்த முதல் தேர்தலில் லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி நாடாளுமன்றத்தில் இருந்த அனைத்து இடங்களையும் கைப்பற்றியது (அப்போது இருந்த மற்றொரு கட்சியான பாரிசான் சோசலிஸ் அந்தத் தேர்தலைப் புறக்கணித்தது.) அதன் பின் 1980வரை நடந்த எல்லாத் தேர்தல்களிலும் (இடைத் தேர்தல் உட்பட) லீயின் கட்சியே அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்று வந்தது.
அந்த சாதனையைத் தடுத்து நிறுத்தியவர் ஜோஷ்வா பெஞ்சமின் ஜெயரத்தினம் என்ற இலங்கைத் தமிழர். லண்டனில் சட்டம் படித்த, சிங்கப்பூரில் பிரபலமாக விளங்கிய வழக்கறிஞர். பலவீனமடைந்து அஸ்தமிக்கும் நிலையில் இருந்த தொழிலாளர் கட்சியை 1971ல் ஜெயரத்தினம் கைப்பற்றினார். 1972 தேர்தலில் போட்டியிட்டார். தோல்வி. 1976ல் போட்டியிட்டார், தோல்வி 1977 இடைத்தேர்தலில் போட்டியிட்டார் தோல்வி. 1979 இடைத்தேர்தலில் போட்டியிட்டார் மறுபடியும் தோல்வி.
ஆனால் 1981ல் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். முதன் முறையாக நாடளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினராக அமர்ந்தார். எதிர்கட்சியில் அவர் ஒரே ஒருவர் மட்டும்தான்! 1984ல் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். அந்த முறை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் பலம் இரண்டாக உயர்ந்தது (மற்றொருவர் வேறு கட்சியைச் சேர்ந்ந்தவர்)
எதிர்கட்சிகள் மெல்ல மெல்லத் தலையெடுத்து வந்த நேரத்தில், 1986ல் ஜெயரத்தினம் மீது அவர் தனது கட்சியின் கணக்குகளை சரியாகப் பராமரிக்கவில்லை என அரசு வழக்குப் போட்டது. கீழமை நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த மூத்த நீதிபதி அவர் மீது குற்றம் இல்லை எனத் தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பு தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்தது. அவர் வழக்கை மறு விசாரணைக்கு வேறு ஒரு நீதிபதியிடம் அனுப்பினார். மேல் முறையீட்டிற்கு அல்ல, மற்றொரு கீழமை நீதிபதியிடம் மறு விசாரணைக்கு! மேல் முறையீட்டில் தீர்ப்பு ஜெயரத்தினத்திற்கு எதிராக இருந்தால் அவர் ப்ரீவி கவுன்சிலில் முறையீடு செய்ய முடியும். கீழமை நீதிமன்றம் என்றால் மறுபடியும் உச்ச நீதிமன்றம்தான் வர வேண்டும்.
கீழமை நீதி மன்றம் அவரைக் குற்றவாளி எனத் தீர்மானித்து மூன்று மாத சிறைத் தண்டனை விதித்தது சிறை தண்டனை விதித்தால் ஜெயரத்தினம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். ஐந்தாண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார்.
சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம், அவர் வழக்க்றிஞராகப் பணிசெய்யும் உரிமையையும் ரத்து செய்தது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ப்ரீவி கவுன்சில் போக முடியாது.(ப்ரிவீ கவுன்சில் என்பது காமென்வெல்த் நாடுகள் மேல் முறையீடு செய்வதற்கான உச்ச பட்ச அமைப்பு. இங்கிலாந்தில் அமைந்திருந்தது). ஆனால் வழக்கறிஞராகப் பணி செய்யும் உரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து ப்ரிவீ கவுன்சிலில் மேல்முறையீடு செய்தார். “அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது” என்று தீர்ப்பளித்த ப்ரிவீ கவுன்சில் கீழமை மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ப்ரீவீ கவுன்சில் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தன் மீதான தண்டனையை, குறிப்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி இழப்பை, ரத்து செய்ய வேண்டும் என ஜெயரத்தினம் அதிபருக்குக் கடிதம் எழுதினார். ஆனால் 1991வரை அவர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்படவில்லை
தேர்தலில் போட்டியிட முடியாத சூழலிலும் ஜெயரத்தினம் விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளவில்லை.1988 பொதுத் தேர்தலில் தன் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்யும் போது லீயையும், அவரது அரசையும் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்துப் பேசிவந்தார். 1983ல் ஒரு அமைச்சர் ஊழல் புகாரில் சிக்கி, விசாரணை நடந்து கொண்டிருந்த போது தற்கொலை செய்து கொண்டார். அது தொடர்பாக சர்ச்சைக்குரிய விதத்தில் அந்தத் தேர்தல் பிரச்சரத்தில் பேசினார். அவர் மீது மானநஷ்ட வழக்குப் போடப்பட்டது. வழக்கில் அவர் 2லட்சத்து 60 ஆயிரம் வெள்ளி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. மேல்முறையீடும் அவருக்கு எதிராக அமைந்தது. அவரால் இம்முறை ப்ரீவி கவுன்சிலுக்குப் போக முடியவில்லை. முன்னர் ஜெயரத்தினத்திற்கு ஆதராவக வந்த தீர்ப்பிற்குப் பின், பிரீவி கவுன்சிலுக்குப் போக இயலாத வண்ணம் சட்டங்கள் மாற்றப்பட்டிருந்தன
விமர்சனங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுவதாக தேவன் நாயர் கருதினார்.அப்படிச் செய்தால் மக்களிடம் அச்சமும் பீதியும் ஏற்படும் என்று அவர் அஞ்சினார்.
தனது நண்பரின் அச்சம் குறித்து லீ ஊகித்திருக்கக் கூடும். அவரைத் தொழிற்சங்கத்தை விட்டு விட்டு நாட்டின் அதிபராகப் பதவி ஏற்க அழைத்தார் லீ. அதைப் பற்றிப் பேசும் போது, நாயர் “ ஒரு உதை கொடுத்தார், மாடியில் போய் விழுந்தேன்” (“He kicked me upstairs.”) என்றார் ஒரு பத்திரிகைப் பேட்டியில்.
“எனக்கு இந்த மனிதன் அச்சுறுத்தலாக இருப்பான்” என்று தன்னைப் பற்றி லீ கருதியதாக அந்தப் பேட்டியில் நாயர் கூறியிருந்தார். .
முற்றிலும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலையில் 1995ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதி தேவன் நாயர் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் குடிநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக பதவியை ராஜினாமா செய்திருப்பதாக லீ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தனக்குக் குடிநோய் இல்லை என்றும், மருத்துவர்கள் தனக்கு போதை மருந்தை கொடுத்தார்கள் என்றும் தேவன் நாயர் கூறினார். அவர் சராவக்கிற்கு அரசு முறைப் பயணமாகச் சென்ற பொது அங்கு முறை தவறி நடந்து கொண்டதாகக் கிசுகிசுக்கள் பரவின. தனது நற்பெயரைக் கெடுப்பதற்காக விஷமப் பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் தேவன் நாயர் கூறினார். 1988ல் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். பின்னர் அங்கிருந்து கனடாவிற்குச் சென்றார்.
பல ஆண்டுகள் அமைதி காத்த தேவன் நாயர் 199ல் கனடாவில் வெளியான ஓர் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டியில்தான் லீ பற்றி மேலே குறிப்பிட்ட விஷயங்களைச் சொல்லியிருந்தார். தேவன் நாயர் மீது கனடாவில் மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார் லீ. அதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தேவன் நாயர் மனுச் செய்தார். தேவன் நாயர் தரப்பில் நியாயம் இருப்பதாகக் கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
லீ தனது மான நஷ்ட வழக்கை மேலே தொடராமல் கைவிட்டார்.கனடா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக இருக்கும் எனப் பலர் கருதுகிறார்கள். ஆனால் நாயரின் மறைவுக்குப் பின், ‘மருத்துவ ஆவணங்களின் படியும், குடும்ப உறுப்பினர் என்ற முறையில் அவர் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்த சூழலைத் தாங்கள் அறிந்த வரையிலும் தனக்கு போதை மருந்து கொடுத்ததாக லீ மீது தேவன் நாயர் சொல்லும் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இல்லை” என அவரது மகன்கள் கொடுத்த அறிக்கையின் பேரில் லீ வழக்கை மேலே தொடரவில்லை என லீயின் உதவியாளர் நியூயார்க் டைம்ஸ்க்கு எழுதிய கடிதத்தை அந்த நாளிதழ் டிசம்பர் 22 2005 அன்று வெளியிட்டது.
2005ஆம் ஆண்டு நாயர் தனது மனைவி ஆவுடை தனம் இறந்த சில மாதங்களில் இறந்து போனார். அவர் ஒரு முறை எழுதினார்:
“எதைக் கண்டு நீங்கள் அஞ்சினீர்கள்? சுமார் முப்பது வருடத் தோழரை இத்தனை பெரும் பொது நடவடிக்கை மூலமாக முற்றிலும் சிதைக்க உங்களை உந்தியது எது? நாட்டை கட்டியெழுப்புவது என்ற பொது லட்சியத்திற்காக நாம் நடத்தியப் பொதுப் போரட்டத்தின் வழியே, முப்பதாண்டு நெருக்கமான தோழமை மூலம், கட்சியில், தொழிற்சங்கத்தில், அரசில் இருந்த எல்லாத் தோழர்களும் நான் ஒழுக்கத்தில் உயர்ந்த ஒரு மனிதன் என்பதை எப்போதும் அறிந்திருந்தார்கள். நீங்களே அடிக்கடி பாராட்டியிருக்கிறீர்கள்.
தற்காலிமானது எனத் தெளிவாகத் தெரியும் ஒரு நிகழ்வு, திடீரென்று ஓர் இரவில் எப்படி என்னை உதாவக்கரைக் குடிகாரனாக, பெண்பித்தனாக, மனைவியை உதைப்பவனாக கேடுகெட்டவனாக மாற்றும்?
இதை எழுதிய தேவன் நாயர், இன்னொன்றும் சொன்னார்: “அவர் எனக்கு என்ன செய்திருந்த போதிலும், நான் அவரை இப்போதும் நேசிக்கிறேன்.
அதைச் சொல்லும் போது அவரது கண்களில் நீர் ததும்பியது.