ஜன கண மன Vs. வந்தேமாதரம்
அரசியலின் இலக்கியம்
அரசியலுக்கும் இலக்கியத்துக்குமான உறவு கணவன் மனைவி உறவு போன்றது. இரண்டும் தனித்தனி அடையாளங்கள் கொண்டவை. தனித் தனி மரபுகளும், பலங்களும், இயல்புகளும் கொண்டவை. சில நேரங்களில் முரண்படவும், பல நேரங்களில் உடன்படவும் செய்பவை. ஒன்றில்லாமல் ஒன்று தனித்து இயங்கவும் முடியும். என்றாலும் ஓர் ஆரோக்கியமான சூழலுக்கு ஒன்றை ஒன்று போஷிக்கவும் விமரிசிக்கவும் வேண்டும்.
ஆனால் ஓர் இலக்கியப் படைப்பு அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும்போது அது எப்படி அதன் உன்னதங்களைப் பறி கொடுக்கிறது என்பதற்கு வந்தேமாதரம் பாடல் ஓர் உதாரணம்.
பொது அரங்கில் வந்தேமாதரம் பாடல் பாடப்பட்டு, வரும் செப்டெம்பர் 7-ம் தேதியோடு நூறாண்டுகள் ஆகின்றன. ஒரு பாடல் நூறாண்டுகளுக்கும் மேலாக இந்தியர்களின் உணர்வில் சிறப்பான இடம்பெற்றுத் திகழ்வது எல்லா இலக்கியப் படைப்புக்களுக்கும் கிட்டும் ஒரு கௌரவம் அல்ல. ஆனால் அதே நேரம் வந்தேமாதரம் பாடல், அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு உள்பட, பல நேரங்களில் சர்ச்சைக்குள்ளாகியே வந்திருக்கிறதும் உண்மை.
வந்தே மாதரம் என்ற முழக்கம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான விடுதலைப் போரில் எழுப்பப்பட்டதால், அது அவர்களுக்கு எதிரான குரல் என்று பரவலாகக் கருதப்படுகிறது. அந்த முழக்கம் ஒரு பாடலின் வழியாக அரசியலுக்குக் கிடைத்த முழக்கம்.
அந்தப் பாடலை 1870-களின் ஆரம்பத்தில் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதினார். அந்த ஆரம்ப வடிவம் இரண்டு பத்திகள் கொண்டது. வன வளமும், கனிவளமும், நீர் வளமும், பயிர் வளமும், இனிய மொழிகளும் கொண்ட தாய் மண்ணை ஒரு சொர்க்கம் எனக் கருதும் அழகிய பாடல் அது. ‘நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும்’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பை (மொழிபெயர்த்தவர் பாரதி) இப்போது படித்தாலும் அந்த வர்ணனை அழகில் மனம் தன்னை இழக்கும்.
1870-களில் இரண்டு பத்திகளாக எழுதிய அந்தப் பாடலை 1881-ல் ஆனந்தமடம் என்ற தனது நாவலுக்காக பங்கிம் சந்திரர், ஐந்து பத்திகளாக விரிவுபடுத்தினார். அப்போது இந்தப் பாடல், நாவலின் தேவை கருதி, இந்துக்கள் வீரத்தின் குறியீடாக வழிபடும் துர்கையைத் துதிக்கிற பாடலாக வடிவம் கொண்டது. ஆனந்தமடம் என்ற அந்த நாவல், இந்து சன்யாசிகள் இஸ்லாமிய நவாப்களின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போரிடுவ-தாகக் கதையம்சம் கொண்டது. அந்த நாவல் இப்படி முடிகிறது:
சன்யாசிகளின் தலைவர் சத்தியானந்தரிடம் ஒரு ‘மகாபுருஷ்’ (கடவுள்?) பேசுகிறார். அந்த உரையாடலின் சுருக்கம் இது:
மகாபுருஷ்: உன் பணி முடிந்தது. இஸ்லாமியர்களின் அதிகாரம் அழிக்கப்பட்டுவிட்டது. இனி நீ செய்வதற்கு ஏதும் இல்லை. தேவையற்ற படுகொலைகளால் பயன் ஏதும் விளைந்துவிடாது.
சத்தியானந்தர்: நிச்சயமாக இஸ்லாமியர்களின் ஆட்சி அழிக்கப்-பட்டுவிட்டது. ஆனால் இன்னும் இந்துக்களின் அதிகாரம் நிறுவப்படவில்லை. கல்கத்தா இன்னும் ஆங்கிலேயர்கள் வசம்தான் இருக்கிறது.
மகாபுருஷ்: இந்துக்களின் ஆட்சி இப்போது ஏற்படாது. நீ அந்த முயற்சியில் இறங்கினால் அர்த்தமில்லாமல் பலர் கொல்லப்-படுவதுதான் நடக்கும். எனவே வந்துவிடு.
சத்தியானந்த்தர் (மிகுந்த வேதனையுடன்): கடவுளே! இந்துக்-களின் ஆட்சி இப்போது ஏற்படாது என்றால், நாட்டை யார் ஆள்வார்கள்? மறுபடியும் இஸ்லாமியர்கள் ஆட்சி புரிய வந்து-விடுவார்களா?
மகாபுருஷ்: இல்லை: ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்துவார்கள்.
சத்தியானந்தரால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் மகாபுருஷ், அவனது வாளைக் கீழே போடச் சொல்கிறார்.
மகாபுருஷ்: உன் சபதத்தை நிறைவேற்றிவிட்டாய். உன் அன்னைக்கு வளம் சேர்த்திருக்கிறாய். ஆங்கிலேயர் ஆட்சியை அமைத்திருக்கிறாய். போரிடுவதை நிறுத்திவிடு. மக்கள் கலப்பைகளை ஏந்தட்டும். பூமி பயிர்களால் செழிப்புறட்டும். மக்கள் செல்வத்தால் வளம் பெறட்டும்.
சத்தியானந்த்தர் (அழுது கொண்டே): நான் என் அன்னையை என் எதிரிகளின் ரத்தத்தைக்கொண்டு வளப்படுத்துவேன்.
மகாபுருஷ்: யார் எதிரிகள்? எதிரிகள் என்று யாரும் இல்லை. ஆங்கிலேயர்கள் நம் எதிரிகள் இல்லை. அவர்களை இன்று யாரும் வெல்ல முடியாது.
சத்தியானந்த்தர்: அப்படியானால் நான் என் அன்னையின் திரு-வுருவத்தின் முன்னால் என்னை மாய்த்துக்கொள்வேன்.
மகாபுருஷ்: என்ன அறியாமை! வா. அறிந்து கொள். அன்னை-யின் திரு உருவம் இமயத்தில் இருக்கிறது. நான் அதை உனக்குக் காட்டுகிறேன்.
இவ்வாறு சொல்லியபடி அமானுஷ்ய சக்தி சத்தியானந்தரின் கையைப் பற்றிக் கொண்டது.
1905-ல் கர்சன் பிரபு காலத்தில் வங்காளம், மதத்தின் அடிப்படை-யில் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் பெரும் கிளர்ச்சி எழுந்தது. மதங்கள் வேறு வேறா-யினும் நாம் ஒரே தேசத்தவர் என்பதை முன்னிறுத்தும் ‘இந்திய தேசியம்’ என்ற அரசியல் சித்தாந்தம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்தமடம் நாவலும் வந்தேமாதரம் பாடலும் மக்களிடையே பெரும் கவனம் பெற்றன. (அதனால்தான் பங்கிம் சந்திரர் இந்திய தேசியத்தின் குரு எனக் கருதப்படுகிறார்.) காங்-கிரஸ் கூட்டங்களில் அந்தப் பாடல் பாடப்பட்டது. அப்போது அதற்கு இசை வடிவம் கொடுத்தவர் ரபீந்திரநாத் தாகூர்.
முப்பதுகளில் இரண்டு காரணங்களுக்காக வந்தேமாதரம் சர்ச்சை-களுக்குள்ளாகியது. அந்தப் பாடல் ஆனந்தமடத்துடன் தொடர்புடையது, அந்த நாவல் இஸ்லாமியர்களை ‘துரோகிகள்’ என்று குறிப்பிடுவதால், சில இஸ்லாமியர்கள் அதை எதிர்த்தார்-கள். உருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் வேறு சில இஸ்லாமியர்கள் அதை எதிர்த்தார்கள். வந்தேமாதரம் பாடல் குறித்த சர்ச்சை எழுந்தபோது ‘அந்தப் பாடல் துர்கைக்கு அஞ்சலி செலுத்துகிறது. அந்த துர்கை வேறு யாருமல்ல, பாரத-மாதாதான். அறிவு, ஆற்றல், மாட்சி, புகழ் இவற்றின் குறியீடு அவள்’ என்று அரவிந்தர் கருத்து தெரிவித்தார். அரவிந்தர் வந்தே-மாதரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். அவரது தாய்-மொழி வங்காளம்.
1937-ல் மாநில சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலில் தேர்ந்-தெடுக்கப்பட்ட முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர்களும், முகமது அலி ஜின்னாவும் இந்தப் பாடலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். 1937-ல் நடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் மௌலான முகமது அலி என்பவர் வந்தேமாதரத்-துக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அவரது எதிர்ப்பு, இஸ்லாமியர்கள் உருவ வழிபாட்டை மேற்கொள்வதில்லை என்பதன் அடிப்படை-யில் அமைந்திருந்தது. இதையடுத்து, நேரு வந்தேமாதரம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு தாகூருக்கு எழுதினார். தாகூர், வந்தேமாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைப் பாடலாம், மற்றவற்றைத் தவிர்த்து விடலாம் என்று யோசனை தெரிவித்தார். ‘இஸ்லாமிய நண்பர்கள் எழுப்பிய ஆட்சேபங்களின் பின்னுள்ள உணர்வுகளை கமிட்டி புரிந்து கொள்கிறது’ என்று சொன்ன காரிய கமிட்டி, ‘முதல் இரண்டு பத்திகள் மட்டும் பாடப்பட வேண்டும்’ என்று முடிவு செய்தது. அந்த இரண்டு பத்திகள்தான் இப்போதும் பாடப்பட்டு வருகிறது. அதைப் பாடுவதில் இஸ்லாமியர்களுக்கு ஆட்சேபம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கு அமைத்த இசை மிகப் பிரபலம்.
இந்தியா விடுதலை அடைந்த போதும் வந்தேமாதரம் சர்ச்சைக்-குள்ளாகியது. அந்தச் சர்ச்சை இந்தியாவின் தேசிய கீதம் எது, வந்தேமாதரமா? ஜனகணமனவா என்பது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தனது இந்திய தேசிய ராணுவத்தின் கீதமாக ஜனகண-மனவைப் பயன்படுத்தி வந்திருந்தார். நேரு போன்றவர்களின் ஆதரவும் அதற்கு இருந்தது. ஆனால் சிலர், தாகூர் அதை, வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது அவரை வர-வேற்கும் முகமாக எழுதியது என்று சொல்லி வந்தார்கள். ஜனகணமன முதன் முதலில் 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி தாகூராலேயே கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பாடப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
அது எவ்வளவு தூரம் உண்மை என்பதைப் புரிந்துகொள்ள, அந்தப் பாடலின் பின்னணியையும் பார்க்கவேண்டும். இந்தியா-வுக்கு வருகை தர இருந்த மன்னர் ஐந்தாம் ஜார்ஜ், 1911-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கப் பிரிவினையை ரத்து செய்து ஆணை பிறப்பித்திருந்தார். அதை ஓர் அரசியல் வெற்றியாகக் கருதிய காங்கிரஸ், ஜார்ஜ் மன்னரை சிறப்பாக வரவேற்கக் கருதியது. அதைப் பற்றி விவாதிக்க கல்கத்தாவில் அதன் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் (டிசம்பர் 26, 1911) மாநாட்டில் பொதுவான அரசியல் நிலைமைகள் விவாதிக்கப்பட்டன. இரண்டாம் நாள் முழுக்க மன்னர் ஜார்ஜின் வரவேற்புக்காக ஒதுக்கப்பட்டது. அந்த இரண்டாம் நாளின் நிகழ்ச்சி தொடங்கும்போது தாகூர் அந்தப் பாடலைப் பாடினார் என்று சில பத்திரிகைக் குறிப்புகள் சொல்கின்றன. (ஸ்டேட்ஸ்மேன், டிசம்பர் 28, 1911)
ஆனால் அதை தாகூர் அபிமானிகள் மறுக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் இரண்டு பாடல்கள் பாடப்பட்டன. ஜன கண மனவை அடுத்து ராம் புஜ சவுத்ரியின் இந்திப் பாடல் ஒன்றும் பாடப்பட்டது. அதுதான் அரசரை துதித்து எழுதிய பாடல். இந்திய மொழிகளைப் பற்றி ஏதும் அறியாத ஆங்கிலப் பத்திரிகைகள் தவறாக செய்தி வெளியிட்டு விட்டன என்று அவர்கள் சொல்கிறார்கள்.
அன்றைய ஆங்கிலேயப் பத்திரிகையாளார்களுக்கு செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாது என்பதென்னவோ உண்மைதான். ஜனகணமன இந்தியில் எழுதப்பட்ட பாடல் என்றும், வந்தேமாதரம் பாடலை எழுதியவர் தாகூர் என்றும் ஒருமுறை சண்டே டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதுண்டு.
ஜனகணமனவை எந்தத் சூழலில் தான் எழுதினேன் என்பதைத் தாகூரே அவரது நண்பர் ஒருவருக்கு (புலின் பெகாரி சென்) எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்: ‘எனது நண்பரும் இங்கிலாந்து அரசின் உயர் அதிகாரியுமான ஒருவர் சக்கரவர்த்தி-யின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு ஒரு பாடல் எழுதித்தர முடியுமா என்று கேட்டார். அவரது வேண்டுகோளைக் கேட்டு நான் பெரும் ஆச்சரியம் அடைந்தேன். பெரும் மன உளைச்சலும் ஏற்பட்டது. அந்த மன உளைச்சல் காரணமாக ஜனகணமனவில் இந்தியாவின் வெற்றியை ‘பாக்கிய விதாதா’ தீர்மானிப்பதாக எழுதினேன். இந்தியா என்ற மகா ரதத்தை, யுக யுகமாக, உயர்விலும் தாழ்விலும், நேரான பாதையிலும் வளைந்து நெளிந்த பாதையிலும் வழிநடத்திச் செல்வது அதுதான். அந்த விதியின் தலைவன், அந்த இந்திய மனத்தின் ஒருமித்த வெளிப்பாடு, அந்த நிரந்த வழிகாட்டி, ஐந்தாம் ஜார்ஜாகவோ, ஆறாம் ஜார்ஜாகவோ, எந்த ஜார்ஜாகவோ ஒருபோதும் இருக்க முடியாது. என்னுடைய அந்த அதிகாரி நண்பருக்குக்கூட இது புரிந்தது. அவர் மிதமிஞ்சிய ராஜவிசுவாசியாக இருக்கலாம். ஆனால் முட்டாள் அல்லவே?’
சரி யார் இந்த பாக்கிய விதாதா?
அதைப் புரிந்து கொள்ள தாகூரைப் புரிந்துகொள்ள வேண்டும். தாகூர் வங்காளத்தின் செல்வக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். அன்றைய மேட்டுக்குடி குடும்பங்களைப் போல ஐரோப்பிய நாகரிகத்தையும் கலாசாரத்தையும் நன்கு அறிந்தவர் என்ற போதிலும், இந்தியக் கலை மரபு, பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஞானம் உடையவர். குறிப்பாக உபநிடதங்களில் ஆழ்ந்து தோய்ந்தவர். எல்லாம் வல்ல ஒரு பரம்பொருளுடன் அவர் மனம் திறந்து உரையாடுவதை அவரது பல படைப்புக்களில், குறிப்பாக கீதாஞ்சலியில், பார்க்கலாம். கண்ணுக்குத் தெரியாத, ஆனால் வல்லமை கொண்ட ஒரு சக்தி, மனிதர்களை, இந்தியாவை வழிநடத்துவதாக அவர் நம்பியிருக்க வேண்டும். அந்தச் சக்தியை Destiny என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறார்கள். (தமிழில் விதி என்று சொல்லலாமா?) அது தனி மனிதர்களை மட்டுமல்ல, நாட்டையும் வழி நடத்துவதாக நம்பினார்கள். இறை நம்பிக்கை இல்லாத நேரு போன்றவர்கள்கூட இந்த Destinyயை நம்பினார்கள். நேருவின் சுதந்தர தின உரை, Long years ago, India made a tryst with destiny என்றுதான் தொடங்குகிறது.
தாகூர், பல காங்கிரஸ் நாயகர்களைப் போல வீதியில் இறங்கிப் போராடினவர் அல்ல. ஆனால் அவர் காலனி ஆதிக்கத்துக்கு எதிரான உணர்வுகள் கொண்டிருந்தார் என்பதை அவரது பல படைப்புக்களில், குறிப்பாக இளம் வயதில் எழுதிய படைப்புக்-களில் காண முடிகிறது. அவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது. ஆனால் ஜாலியன் வாலா பாக் படுகொலைக்குப் பிறகு அவர் அதை ஆங்கில அரசிடம் திருப்பி அளித்துவிட்டார். தாகூரை பங்கிம் சந்திரரைப் போல ‘தேசியத்தின் குரு’ என்று சொல்ல முடியாது என்றாலும் அவர் இந்தியாவின் பெருமைக்குரிய மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைப்பதற்கான அரசியல் சாசன சபையில் 1948-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி நேரு ஓர் அறிக்கையை வெளியிட்டார்: ‘ஜனகணமன அல்லது வேறு எந்தப் பாடலை தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளலாம் என்பதைக் குறித்துத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு எல்லா மாநில ஆளுநர்களுக்கும் கடிதம் எழுதியிருந்தேன். அவர்கள் தங்களது முடிவை எழுதுவதற்கு முன் தத்தம் மாநில முதல்வர்களையும் கலந்து ஆலோசிக்கும்-படியும் கேட்டுக் கொண்டிருந்தேன். எல்லா ஆளுநர்களும் (மத்தியப் பிரதேச ஆளுநர் தவிர) ஜனகணமனவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். எனவே மத்திய அமைச்சரவை இந்த விஷயத்தைப் பரிசீலித்து ஜனகணமனவை தேசிய கீதமாக ஏற்பது எனத் தாற்காலிகமாக முடிவு செய்துள்ளது. இறுதி முடிவை அரசியல் சாசன சபைதான் எடுக்க வேண்டும்.’
ஆனால் ஜனகணமனவை தேசிய கீதமாக அங்கீகரித்து கடைசி-வரை அரசியல் சாசன சபை தீர்மானம் எதையும் நிறைவேற்றவில்லை. அரசியல் சாசன சபையின் இறுதி நாளான 1950 ஆண்டு ஜனவரி 24-ம் நாளன்று குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்-பட்ட ராஜேந்திர பிரசாத், அந்தச் சபையில் ஒரு அறிக்கை வெளியிட்டார்: ‘அரசியல் அமைப்புச் சட்டத்தின் பல்வேறு அம்சங்களை விவாதித்து முடிவு செய்துவிட்டோம். ஆனால் ஒரு விஷயம் நிலுவையில் இருக்கிறது. தேசிய கீதம் பற்றிய முடிவுதான் அது. முன்பு அது குறித்து சபையில் விவாதித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் ஒரு தீர்மானம் மூலமாக முடிவு செய்வதற்குப் பதிலாக நான் ஓர் அறிக்கை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது. அதனால் நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். ஜனகணமன என்ற பாடலின் இசையும் சொற்களும் இந்தியாவின் தேசிய கீதமாக இருக்கும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுப் பங்களித்த வந்தேமாதரம் என்ற பாடலுக்கும் ஜனகணமனவுக்குச் சமமான அந்தஸ்து அளிக்கப்படும். (கரவொலி) இந்த அறிவிப்பு உறுப்பினர்களுக்குத் திருப்தி அளிக்கும் என்று நம்புகிறேன்.’
இதற்குப் பிறகு விவாதம் ஏதும் நடைபெறவில்லை. உதயமாகவிருந்த இந்தியக் குடியரசின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ராஜேந்திர பிரசாத்தைப் பாராட்டி உரைகள் தொடங்கின.
____________________
நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,RSS feed மற்றும் இங்கிருந்து அவரவரது facebookல் வெளியிட்டுக் கொள்ளும் வசதியளிக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்துபவர்கள் இந்த இணைய தளத்தின் முகவரியைக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
மாலன்

எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும் கவிதை மூலம் எழுத்துலகிற்கும் தனது 16ம் வயதில் அறிமுகம் ஆன மாலன், இன்று புதிய தலைமுறை வார இதழின் ஆசிரியர். முன்னர் இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம் ஆகிய முன்னணி இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
1970-80ம் ஆண்டுகளில் தமிழகத்தில் வெளியான இலக்கியச் சிற்றேடுகள் அனைத்திலும் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியவர். கணையாழி ஆசிரியர் குழுவிலும் சிறிது காலம் பங்களித்தார். சிறுகதைகளின் வடிவ நேர்த்திக்காக தி.ஜானகிராமன், சிட்டி போன்ற முன் தலைமுறைப் படைப்பாளிகளாலும், பிரபஞ்சன், பொன்னீலன்,பா.செயப்பிரகாசம் போன்ற சமகாலப் படைப்பாளிகளாலும், பல்வேறு விமர்சகர்களாலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களாலும் பாராட்டப் பெற்றவர். நெல்லை தூய சேவியர் கல்லூரி இவரது படைப்புகள் குறித்து ஆராய 2006ம் ஆண்டு ஒரு முழுநாள் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
1981ல் முழுக்க முழுக்க இளைஞர்களின் படைப்புக்களை மட்டும் தாங்கித் தமிழின் முதல் இளைஞர் இதழாக மலர்ந்த 'திசைகள்' இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றவர் மாலன். தமிழின் முதல் முழுநேர செய்தித் தொலைக்காட்சியான சன்நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியராகப் பணியாற்றியவர். யூனிகோட் குறியீட்டில் அமைந்த முதல் இணைய இதழான 'திசைகள்' இதழின் ஆசிரியர்.
தன்னுடைய இதழியல் பணிகள் அனைத்தும் தமிழ் இதழியலின் எல்லைகளை விரிவாக்குவனவாகவே அமைந்தன என்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாகக் கூறும் மாலன் அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.
கணினியில் தமிழை வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட மாலன், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆபீஸ் மென்பொருள் தமிழாக்கம் செய்யப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர்.
பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் ஆகியோருடன் அவர்களது ஊடகக் குழு உறுப்பினராக வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொணடவர். முன்பு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக மேதகு ஆளுநர் டாக்டர். சென்னாரெட்டியாலும், பின்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக மேதகு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவாலும் நியமிக்கப்பட்டவர். தற்சமயம் SRM பலகலைக்கழகத்தின் ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.

