அவனுக்குள் ஒரு பார்பேரியன்

அறைக்குள் நுழையும்போது அந்தச் சீட்டு ஒரு வெயிட்டிற்குக் கீழே படபடத்துக் கொண்டிருந்தது.

       ‘ கஸ்தூரி வான்ட்ஸ் டு சீ யூ டுடே ஈவ்னிங் என்று பெரிது பெரிதாய் எழுதி கீழே சின்னதாய் இனிஷியல் போட்டிருந்தான் ரூம் மேட். சீட்டைக் கையிலெடுத்து உரக்கப் படித்துவிட்டு, மீண்டு  கீழேயே வைத்தான்.  இவனும் நேரமிருக்கிறது என்று தனக்குத்தானே  சொல்லிக் கொண்டான். குளித்து  ட்ரெஸ்  பண்ணிக் கொண்டு போகலாம்.

       தண்ணீர் சில் என்று தலையில் விழும்போது கூடவே கஸ்தூரியைப் பற்றிய ஞாபகங்கள் எழுந்தன. அவள் காந்தியடிகளால் கடவுளின் மக்கள் என்று அழைக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவள். (அவளை நினைக்கும்போது ஏன் இது மட்டும் முந்திக் கொண்டு ஞாபகம் வருகிறது ?  ஒரு வேளை அவளது அசைவின் ஒவ்வொரு துணுக்கிலும் இந்தக்  

‘ காம்ப்ளக்ஸ் வெளிச் சிதறுவதை அவன் பிடித்து இருப்பதாலா ?  அல்லது  இந்தியாவின் ‘ டிரைபல்  நாகரீகம் பாரம்பரிய தொடர்பாக தனக்குள் எங்கேயாவது நின்று கொண்டிருக்கிறதா ? )

       கஸ்தூரி எதற்கு வரச் சொல்லியிருக்கிறாள் ? சும்மா பேசிக் கொண்டிருக்கவா ? அவர்கள் இருவரும் எத்தனையோ நாள் இருட்டில் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். இருளில் முகம் தெரியாமல் ; முகம் எதற்கு ?  குரல் மட்டும் போதுமே !  குரல் சிரிக்கும், கோபிக்கும், நாணும், அழும், சந்தோஷிக்கும். அதுதான் உண்மையான முகம்.

       அந்தச் சமயங்களில் அவள் அவளது வாழ்க்கை முழுவதும் சொல்லியிருக்கிறாள். புற வாழ்க்கை முழுவதும்.

       அவளது 3 வயதில் அம்மா செத்துப் போனது, சேரியின் சாணி மெழுகிய தரையில் பாண்டி குதித்தது, காலை உதைச்சுண்டு அழுத நாட்கள், அப்புறம் ஒரு டர்பன் வைத்த ஐயர்  அவளுக்குப்  பள்ளிக்கூடத்திலே  சண்டை போட்டு இடம், புஸ்தகம், பலகை எல்லாம் வாங்கித் தந்தது, அவர் காந்தியைப் பற்றி சொல்லிய கதைகள், எஸ்.எஸ்.எல்.ஸியில் ஸ்கூலிலேயே முதலாக வந்தது, அவளுக்கு காலேஜில் இடமும், ஸ்காலர்ஷிப்பும்  வாங்கித்  தந்த கிறிஸ்துவப் பாதர், அவள் சேரியிலேயே முதல் முதலாய்  காலேஜுக்குப் போன பெருமை, இவள் ஃபர்ஸ்ட் கிளாஸ் வாங்கியதும் மெடிக்கல் அப்ளை பண்ணச் சொன்ன அதே பாதர், இவளுடைய கவிதைகள், பட்டி மன்றங்களில் பேசி தமிழை காப்பாத்தின பாசம் …  எல்லாம் …

       ஒவ்வொருத்தர்  வார்த்தையைக் கொண்டும், அவர்களை உரித்து உண்மை சொரூபம்  பார்க்கிறவன்  இவன்.

       அவள்  கதையைக்  கேட்டு, “ நீ உள் வட்டாரத்தில் ஒரு ராணி மாதிரி இருந்திருக்கே என்று சொன்னான். அவளுக்கு அவன் அதை அங்கீகரித்ததும் சந்தோஷம்தான். அவன் தொடர்ந்து  “ அதிலே உனக்கு ஒரு கர்வம் தளும்புகிறது      என்று சொன்னபோது அதிர்ந்தாள். அந்த அதிர்வை ‘எனக்கு அதற்குத் தகுதி இல்லையா ? எனக்  கேட்டு  தேற்றிக்  கொள்ள முயன்றாள். இவன் அதைச் சொன்ன இரண்டு நாளைக்கு  அந்தக்  கேள்வி  அவள்  முன்னாலேயே  நின்று  கொண்டிருந்தது.

       குளித்துவிட்டு கண்ணாடி முன் நின்றபோது, ஈரம்பட்ட மயிர்கள் சிலும்பி நிற்பது தெரிந்தது.  “ எனக்குள்  எத்தனை  பிம்பங்கள் … இந்த வரி கவிதை மாதிரி அவன் மனத்தில்  ஓடி  மறைந்தது.

       கஸ்தூரி வரச்சொல்லியிருக்கிறாள் ?  ஒருவேளை  அவள்  கதை  அல்லது கவிதை  ஏதாவது  பத்திரிகையில் பிரசுரமாகி இருக்கலாம். அவன் பத்திரிகைகள் படிப்பதை  நிறுத்தி  வருஷங்களாகியிருந்தன. எல்லாம்  ‘ ட்ராஷ்  என்று விசிறி அடிப்பவன்,  அவன்.

       தான் ஒரு முறை கூட அவள்  கதையைப்  படித்து  விட்டு  நல்ல  அபிப்ராயம் – ஒரு கங்கிராஜுலேஷன்ஸ் கூட – சொன்னது இல்லை என்பது அவனுக்கு இப்போது ஞாபகம்  வந்தது.  அப்படியிருந்தும் தன்னிடம் கதைகளைப்  படித்துக்  காட்டுவது  எதனால் … ? ஒரு வேளை, தான் நிறையப் படித்தவன் என்ற மரியாதை கலந்த வியப்பினால் இருக்கலாம் ;  இல்லை, அவள் ஹாஸ்டல் தோழிகள், கதையின்  value கள் பற்றி  லவலேசமும்  பொருட்படுத்தாமல் –  இவளுக்காக, அது இவளுக்கே தெரிகிற மாதிரி   ஒண்டர்ஃபுல்  என்பதில்  ஏற்பட்ட  எரிச்சல் …

       ஹாஸ்டலை  விட்டு வெளியே வந்தபோது, ஒரு புதிய உலகமே இருந்தது. மரங்கள், போஸ்டர்களைப் புடவையாய் சுற்றிக்கொண்டு நின்றன. போஸ்டர்களில் பத்திரிகைகளில்  மார்  திறந்து  சிரிக்கும் பெண்களின் Replica . அதே பெண்கள், அதே சிரிப்பு. இல்லையென்றால், அனுபவமோ, வெளிப்பாடோ வெளிவராமல், மார்டன் ஆர்ட் என்ற பெயரில் கிறுக்கல்கள் செயற்கையாக தொனிக்கும் Rhyme  கள், மருத்துவக் கல்லூரியில் எலெக்ஷன் ஜுரம் … !  அவன்  மனத்துக்குள்  உரக்கச்  சிரித்தான்.

       நண்பர்கள் புடைசூழ,  “ ஹலோ சார் !  எனச் சிரித்துக் கொண்டு வந்தான் அவன். காரியம் சாதிக்கும் சிரிப்பு.

       “ ஐ  ஆம்  சத்யேந்திரன்.

                ஐ நோ !  ( கஸ்தூரி அவளைச் சுற்றிக் கொண்டிருப்பதாக சொல்லும் சத்யேந்திரன்  நீதானா ?  ஸ்கௌண்ட்ரல் )

       “ நான்  ஜெனரல் செகரெட்டரிக்கு  நிற்கிறேன். எல்லாம் உங்களை நம்பித்தான் சார்.

                  இப்படி  எத்தனை  பேரிடம்  சொல்லியிருக்கீங்க  சத்யேந்திரன் ?

                இந்தக்  கேள்வியில்  அவன்  அதிர்ந்தான்.

       “ எலெக்ஷன்னாலே அப்படித்தானே சார். உங்களுக்குத் தெரியாதா சார் ? கொஞ்சதூரம் போய் அவன் நண்பன் சொன்னது எனக்கும் கேட்டது. “ இவன்ல்லாம் நமக்குப் போடமாட்டான்டா. சரியான பைத்தியக்காரன்.

                ஒவ்வொருவருக்குள்ளும் ஆளும் வெறி எவ்வளவு இருக்கிறது … ? எதையாவது ஆளும் வெறி ! எத்தனை வகை ! பெண்களை, செல்வத்தை, நாட்டை, குறைந்த பட்சம் கல்லூரியை, கிளாஸை … !  மீண்டும் ஒரு முறை மனத்துக்குள் உரக்கச் சிரித்தான்.

       லேடீஸ் ஹாஸ்டல் காரிடாரில் இவன் வருவதைப் பார்த்ததுமே “ கஸ்தூரி, விசிட்டர்  எனக்  கத்திக்  கொண்டே இவனைக் கேட்காமலேயே ஒருத்தி உள்ளே ஓடினாள்.  இவன்  போய்  நாற்காலியில்  உட்கார்ந்தான்.

       அங்கு ப்ரேம் பண்ணப்பட்டிருந்த விதிகளைப் படித்தான். இது எத்தனாம் தரம் ? அவன்  வரும்  ஒவ்வொரு  முறையும்  அதைப் படித்திருக்கிறான். எத்தனை கட்டுப்பாடுகள் ? ஏன்  இந்த  மாதிரி  ஒன்று  ஆண்கள்  ஹாஸ்டலில்  தொங்கவில்லை ?

       இந்தியப் பெண்களின் ஒழுக்கத்தைக் காப்பாற்ற கங்கணம் கட்டிக் கொண்டு ப்ரேமில் தொங்கும் விதிகள் !  அவன்  ஒருமுறை  மனத்துக்குள்  உரக்கச்  சிரித்தான்.

       “ ரொம்ப நேரமாயிடுச்சா, சாரி  என்று  கேட்டுக்  கொண்டே  கஸ்தூரி வந்தாள். புல் தரை நோக்கி நடந்தோம். மரத்தடிகளில் நிற்கும் ஜோடிகள் ; புல் தரை நோக்கி நடந்தோம். மரத்தடிகளில் நிற்கும் ஜோடிகள் ; புல் தரையில் சிதறிக் கிடந்த ஜோடிகள். அவர்கள் சிரிப்பது அந்த விதிகளின் ஒவ்வொரு எழுத்தையும் எள்ளி நகையாடுவது மாதிரிப்பட்டது.

       போலியான கோபம் பிரதிபலிக்கும் பெண் முகங்கள். அவற்றைத் தேற்ற முயலும் ஆண்கள் ; பரஸ்பரம் தேவைப்படும் உடல்களுக்காக, பரஸ்பரம் தேவைப்படும் உடல்களுக்காக, பரஸ்பரம் எத்தனை வேஷங்கள் ! கற்கால மனிதனின் சுலபச் சாத்தியமான இந்த விஷயத்தைச் சாதிக்க இவர்கள் எத்தனை அங்கிகளைப் போர்த்திக் கொண்டு நிற்கிறார்கள். நாகரிகம் மனிதனை அவனிலிருந்து ரொம்பப் பிரித்து விட்டது. இவனுக்கு ஓடிப்போய் சிரிக்கும் அந்த முகமூடிகளைக் கிழித்து, அவர்களை உலுக்க வேண்டும் போலிருந்தது …

       கான்வாஸ்  செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்துவிட்டு கஸ்தூரி கேட்டாள் :    “ எலெக் ஷனில் யார் ஜெயிப்பாங்க ?  ஐ டோன்ட் பாதர்.  அவள்  சிரித்தாள்.  “ ச்சு, சும்மா  சொலுங்களேன்.  கெஸ்  இட்.

                சத்யேந்திரன். அவனுக்கு மாணவரஞ்கமாகப் பேசத் தெரிகிறது. சுலபமாகச் சிரிக்கத் தெரிகிறது. அவன் கவிதைகள் மூலம் பாப்புலராக இருக்கிறான். எல்லாவற்றிற்கும் மேல் பணம்,  அவன்  ஜாதி …  இந்தியாவன்  Tribal   நாகரிகம் !

                சத்யேந்திரன் !  நோ !  ஐ ஹேட் ஹிம் லைக் எனிதிங்.  நான்  எரிச்சலுற்றேன்.

       “ இதைச்  சொல்வதற்காக  வரச்  சொல்லியிருக்க மாட்டாய் என நம்புகிறேன்.

                அவள் நிதானத்திற்கு வரக் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. பின்னர் புல்லிதழ்களைக்  கிள்ளிக்  கொண்டே  ஆரம்பித்தாள்.

       “ ஒரு நாவல் எழுதலாம்னு இருக்கேன். எப்படி முடிக்கலாம்ன உங்களைக் கேட்கலாம்னு பட்டது.

                சொல்லு.

                ஒரு காலேஜ் லேடீஸ் ஹாஸ்டல். அவளைப் பார்க்கறதுக்காக அவன் அடிக்கடி வர்றான்.  அவன் வருவது அவன் கவிதையைப் பற்றி தம்பட்டம் அடிக்க. அவளோ அவனை ஆழமா வெறுக்கறா. அவனது கவிதைகளையும். அது பற்றி அவங்க அடிக்கடி சண்டை போடறாங்க. அவன் அசரல. அவனை எப்படியாவது உதறனும்னு அவ முயற்சிக்கிறா.

                எத்தனை  சாப்டர்  போயிருக்கு ?

                அவள் சிரித்துக் கொண்டே, “ அதுக்குள்ள அவசரப்பட்டா எப்படி ?  ப்ளீஸ்  லிஸன் என்றாள்.

       “ நான் சொல்றேன். அவங்க ரெண்டு பேரையும் காதலிக்க வைச்சு கல்யாணம் பண்ணி வைச்சுடு. சுபம் போட்டுவிடலாம். கவனி :  முற்றும் அல்ல. கதை நிச்சயம் பிரசுரமாகிவிடும்.  அதிர்ஷடம்  இருந்தா,  தமிழ்,  ஹிந்தியில்  சினிமாவா  வரும்.

                “ I told she hates him. ”

                இல்லை. அவனை அவள் நேசிக்கிறாள். அவனை தன்னிடம் முழுமையாகச் சரணடையச் செய்யவே அவள் வெறுக்கிறாள். இது அவளுக்கே தெரியாது. அவன் சரணடைந்தால் அவள் ஈகோ நிமிர்ந்து நிற்கும்.  She wants that, Hatred is a form of love ”

                அவள் சிரித்தாள், “ நான் அப்படியே முடித்து விடுகிறேன். நீங்கள் ஒரு விளக்க உரை எழுதி விடுங்கள்.

                வேண்டியதில்லை. கதாநாயகனை சத்யேந்திரினுக்கும் கதாநாயகியை கஸ்தூரிக்கும் substitute பண்ணி விடு. உன் நாவல் உனக்கே புரியும்.

                அவள் சிரிப்பு போய்க் குரலில் கோபம் தொனித்தது.

       ‘ Shit !  What do you mean !

                ‘ I mean what do you want me to mean ’

                சே. You are very arrogant.’

                அவள் போய் விட்டாள்.

       அடுத்த சில நாட்களில் அவனுக்காக அவள் கான்வாஸ் செய்து கொண்டு இருந்ததைப் பார்த்தான். அப்படிப் பார்க்கும்போது தன் நெஞ்சு ஏன் சுடுகிறது என்று பிம்பங்களை விலக்கித் தன்னை உரித்துப் பார்த்துக் கொண்டபோது உரத்துச் சிரிக்க வேண்டும் எனத் தோன்றியது. முடியவில்லை.

( ஞானரதம் )

               

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these