ஈரம் கொஞ்சம் இருக்கட்டும்!

காலையிலேயே ஆரம்பித்து விட்டது காகங்களின் பாராளுமன்றம். அவை எழுப்பிய இரைச்சலில்தான் இன்று விழித்தேன். விழிப்பு என்பது மனதின் விழிப்பு.

தென்னை மரக்கிளைமேல் சிந்தனையோடோர்காகம்வன்னமுற வீற்றிருந்து வானைமுத்தமிட்டதுவேஎனக் காலைப் பொழுதைப் பற்றி கவி எழுதிப் போனான் பாரதி. சிந்தனையோ கவியோ அறியா இந்தக் காகங்கள் என் ஜன்னலுக்கு வெளியே, நம் நாடாளுமன்ற உறுப்பினர்களை போலச் சண்டையிட்டுச் சண்டையிட்டுப் பின்னும் சண்டையிட்டு என்னை எழுப்பி விட்டன. 

பார்லிமெண்ட் என்ற சொல்லே பறவைகளிடமிருந்து மனிதன் பெற்றதுதான்.ஆங்கிலத்தில் பறவைக்கூட்டம் ஒவ்வொன்றும் தனித் தனிச் சொற்களால் குறிக்கப்படுகிறது.வானம்பாடிகளின் கூட்டத்திற்கு exaltation (குதூகலம்,கொண்டாட்டம்) என்று பெயர். கோழிக் கூட்டம்  peep (கள்ளப்பார்வை) வாத்துக்களின் குழு gaggle, (கும்பல்) காக்கைக் கூட்டத்திற்கு murder. ஆந்தைகளின் கூட்டம்  parliament.

அதிர்ச்சியாக இருக்கிறதா? பறவைகளின் உலகம் பல ஆச்சரியங்களைக் கொண்டது.இன்று உள்ளங்கைக்குள் உட்கார்ந்துவிடக் கூடிய  கோழிக் குஞ்சு, பிரம்மாண்டமான டினோசர்களின் வாரிசு என்றால் நம்பத்தான் மாட்டீர்கள். அதன் முன்னோர்கள் 40 அடி நீளமும், 13 அடி உயரமும், 6800 கிலோ எடையும் கொண்ட டிரனோசரஸ்கள் (Tyrannosaurus rex)  தமிழில் சொன்னால் ராட்சதப் பல்லிகள் (tyrannosஎன்ற கிரேக்கச் சொல்லுக்கு கொடூரம் என்று பொருள். Saurosஎன்றால் பல்லி).

இதை அடிப்படையாக வைத்துத்தான், முட்டையா கோழியா முதலில் வந்தது எது என்று எத்தனையோ காலமாக எழுப்பப்படும் கேள்விக்கு நேஷனல் ஜியாகரபி பத்திரிகை, ‘முட்டை’தான் எனப் பதில் சொல்கிறது. முட்டையிடுகிற வழக்கம் பறவைகளுக்கு முன்பே பல்லிகளிடமிருந்தது.கோழியல்லாத  ஒரு பறவையிட்ட முட்டையிலிருந்துதான் கோழி வந்தது என்கிறது அந்தப் பத்திரிகை.

பறவைகளைப் பற்றிப் படிக்கும் போதும், பார்க்கும் போதும் எனக்குச் சிறகுகள் முளைக்கும். நம்பிக்கைச் சிறகுகள். கிவிப் பறவைக்குக் கண்கள் தெரியாது. வாசனையை வைத்துத்தான் இரை தேடும். பென்குவின்களால் பறக்க முடியாது. ஆனால் மனிதனைப் போல நிமிர்ந்து நடக்க முடியும். ஆந்தைகளால் விழிகளை உருட்ட முடியாது. ஆனால் தலையை முழு வட்டமாக 360 டிகிரி திருப்ப முடியும். கோழிகளால் குயில்களைப் போல இசைக்க முடியாது ஆனால் 200 விதமான ஒலிகளை எழுப்ப முடியும். எல்லாப் பறவைகளிடமும் ஏதோ ஒன்றில்லை. ஆனால் அவை மகிழ்ச்சியாகவே இருக்கின்றன.

அவை மனிதர்களோடு சேர்ந்து வாழவே விரும்புகின்றன என்பதுதான் அதிசயம். வீட்டுக்குள்ளே பறவைகளைப் ப்ரியமாக வளர்க்கிற அமெரிக்கர்கள் வெளியே போகும் போது வானொலியை ‘ஆன்’ செய்துவிட்டுப் போவதைப் பார்த்திருக்கிறேன். ஆளில்லாத் தனிமையை அவை உணரக் கூடாது என்பதுதான் நோக்கம்/

பறவைகளே அதிசயம்தான் என்றாலும் காகங்கள் பறவைகளில் ஓர் அதிசயம். பறவைகளிலேயே பெரிய மூளை கொண்டது காக்கை, அது கருவிகளை இயக்க மட்டுமல்ல, கருவிகளைச் செய்து கொள்ளவும் திறன் வாய்ந்தவை. மனிதர்களைப் போலவே என்ன எங்கு எப்போது நடந்தது என்பதை உணர்வுகளோடு நினைவில் கொள்ளும் ஆற்றல் (episodic like memory)  கொண்டவை. மனிதர்களை முகம் பார்த்து அடையாளம் வைத்துக் கொள்ளுமாம் காக்கைகள். விவகாரமான பேர்வழிகள் வரும்போது  வித்தியாசமாய்க் குரலெழுப்பி கூட்டத்திற்கு எச்சரிக்கையும் கொடுக்குமாம்.

காக்கைக்கு பாஷை உண்டு. கா என்ற ஒலியை அது எத்தனை விதமாய் ஒலிக்கிறது என இணையத்தில் பதிந்திருக்கிறார்கள். இணையம் இல்லாத காலத்திலேயே பாரதி இதற்கொரு டிக்‌ஷனரி போட்டிருக்கிறார்.

”’காஎன்றால் சோறு வேண்டும்என்றர்த்தம். கக்காஎன்றால் என்னுடையசோற்றில் நீ பங்குக்கு வராதேஎன்றர்த்தம். காக்காஎன்றால் எனக்கு ஒருமுத்தம் தாடி கண்ணேஎன்றர்த்தம். இது ஆண் காக்கை பெண் காக்கையை நோக்கிச்சொல்லுகிற வார்த்தை. காஹகாஎன்றால் சண்டை போடுவோம்என்றர்த்தம். ஹாகாஎன்றால் உதைப்பேன்என்றர்த்தம். இந்தப்படி ஏறக்குறைய மனுஷ்ய அகராதிமுழுதும் காக்கை பாஷையிலே, , ஹா, க்ஹ-முதலிய ஏழெட்டு அக்ஷரங்களைப் பலவேறுவிதமாகக் கலந்து அமைக்கப்பட்டிருக்கிறது. அதை முழுதும்மற்றவர்களுக்குச் சொல்ல இப்போது சாவகாசமில்லை.என்று நையாண்டி நடையில் அன்று பாரதி எழுதியதை இன்று அறிவியல்  மெய்ப்பித்திருக்கிறது.

எத்தனையோ இலக்கியவாதிகளை ஈர்த்த பறவை காகமாகத்தானிருக்கும். சுந்தர ராமசாமி இலக்கிய உரையாடல்களுக்காகத் தான் நடத்திய அமைப்பிற்குக் காகங்கள் என்றே பெயர் வைத்திருந்தார். தி.ஜானகிரமனின் சிறுகதைத் தொகுப்பொன்றின் முகப்பில் காக்கை ஒன்று உட்கார்ந்திருக்கக் கண்டிருக்கிறேன்.

இந்நேரம் உங்கள் வீட்டின் முகப்பிலோ, முற்றத்திலோ மொட்டைமாடியிலோ கூடக் காக்கை ஒன்று கரைந்து கொண்டிருக்கக்கூடும். காக்கைபாடினியார் எழுதியதைப் போல விருந்து வரக் கரைந்த காக்கைஅல்ல அது. பெருந் தாகமெடுத்து அது உங்களிடம் கெஞ்சுகிறது. உங்களிடம் ஈரம் உண்டா, ஒரு துளி நீர் பருகக் கிடைக்குமா என கோரிக்கை விடுக்கிறது கோடையில் பறவைகள் நீர் தேடி அலைகிற கொடுமை, நம் மனிதத் தன்மைக்கு விடுக்கப்படும் அழைப்பு

என் பள்ளிப் பருவத்தில் மதுரை நகரில் குதிரை வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கோடையில் குதிரைகள் பருகுவதற்கென்றே சாலையோரம் தண்ணிர்த் தொட்டிகள் இருந்தன. மதுரையை ஆண்டவர்களின் கருணையை மட்டுமன்றி கலை உணர்வையும் அவை சொல்லிக் கொண்டிருந்தன. குண்டோதரன் ஒருவன் கொப்பளிப்பதைப் போன்ற நீரூற்று என் பள்ளிக்கருகே அமைந்திருந்தது. கயல்விழியாளின் (மீனாட்சி) கல்யாண விருந்துண்டு தாகத்தில் தவித்த குண்டோதரனிடம் வை கை எனச் சொல்லி நதியை அனுப்பினார் கடவுள், அவன் குடிக்கக் கிடைத்ததில் கொஞ்சத்தை குதிரைகளோடும் மாடுகளோடும் பகிர்ந்து கொண்டான் என்ற கற்பனையில் மனிதம் மிளிர்ந்தது  

இன்று நதியை அனுப்ப நாம் இறைவன் அல்ல. நீர்த் தொட்டிகளைக் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் உடைந்த பிளாஸ்டிக் கிண்ணம், உதாவமல் போன ஓர் தட்டு இதெல்லாம் சாத்தியம்தான். அவற்றில் ஒரு குவளை நீர் ஊற்றி உங்கள் மொட்டை மாடியில் அல்லது கொல்லைப் புறத்தில் வையுங்கள். காக்கைகளும் குருவிகளும் பறவைகளும் பருகட்டும்.

சுயநலத்தில் சூழலைக் கெடுத்துச் சுற்றுப் புறத்தை பாழாக்கி விட்டாலும் எங்கள் இதயத்தில் ஈரம் இன்னும் இருக்கிறது என்பதை அந்த சக ஜீவிகளுக்கு வேறெப்படி நாம் சொல்ல?

புதிய தலைமுறை  மே 23 2013

One thought on “ஈரம் கொஞ்சம் இருக்கட்டும்!

  1. பனசை நடராஜன்

    அருமையான கட்டுரை சார். அவ்வளவு வறட்சியாக இருக்கா?

    Reply

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *