மாறாத அடையாளம். . .

கடலோரம் நடக்கிற காலை நடை செய்தித்தாளைப் படிப்பது போலச் சிந்தனைகளைக் கிளறும் ஓர் அனுபவம். நாள்தோறும் அநேகமாக அதே நபர்களையே எதிர்கொள்வதால் அவர்களது நடைகளும் பழக்கமாகிவிட்டன. நடைகளில்தான் எத்தனை வகை. தளர்ந்த நடை, விரைந்த நடை, இடை ஒடிந்த நடை, சற்றே சரிந்த நடை, காற்றில் மிதப்பது போல் காலை நகர்த்தும் நடை, வீசி எறிந்து நடக்கும் நடை, ஓடத் தெம்பில்லாமல், நடையாக நடக்க மனமில்லாமல் குதி போட்டுப் போகும் குறு நடை, மருத்துவ நடை இப்படிப் பல நடைகளை நான் சந்திக்கிறேன். முகத்தைப் பாராமலே நடையைக் கொண்டே நபர்களை அடையாளம் சொல்லிவிடக் கூடிய அளவிற்கு அவை பழகி விட்டன. எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே ஓர் தனித்த நடை இருக்கிறது.

என்றாலும் நாம் அடையாளங்களாக முகங்களைத்தான் முதன்மைப் படுத்துகிறோம். ஆனால் அறிவியலும், வரலாறும், அவற்றின் பார்வைகளை வேர்களை நோக்கியே செலுத்துகின்றன. அப்படி அவை ஆழச் சென்று செய்யும் ஆய்வுகள் நாம் நம்பிக் கொண்டிருக்கும் அடையாளங்களை, அதன் காரணமாக நாம் கொண்டிருக்கும் பெருமிதங்களை, அர்த்தமற்றதாக்கிவிடுகின்றன.

அப்படி இரண்டு ஆய்வுகள் அண்மையில் என் கவனத்திற்கு வந்தன. (நன்றி: நண்பர் மணி.மு.மணிவண்ணன்) அவை இரண்டும் முன்மொழிகிற செய்திகள் சற்று அதிர்ச்சியளிப்பவையாக இருக்கலாம். அறிவின் வெளிச்சத்தில் அல்லாமல் உணர்வின் வெப்பத்தில் செய்திகளை அணுகுபவர்கள் அதனை வாசித்துக் கொதிக்க வேண்டாம்.

பரந்ததொரு நிலப்பரப்பை ஆண்டவர்கள் பல்லவர்கள். இன்றைய பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து இம்மூன்றையும் சேர்ந்தால் எவ்வளவு விரிந்து காணப்படுமோ அந்த அளவு அவர்கள்து அரசு விரிந்து கிடந்தது. ஆனால் பல்லவர்கள் தமிழர்கள் அல்ல, பாரசீகத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று சொல்கிறது ஈரானியன்.காம் (http://iranian.com/History/2003/May/Pallava/index.html) என்ற இணையதளம். தனது வாதத்திற்கு வலுச்சேர்க்க அது வரலாறு, மானுடவியல், மொழியியல், கட்டிடக்கலை, தொன்மம் சார்ந்த சான்றுகளை முன்னிறுத்துகிறது. பாரசீகத்தை (அதாவது இன்றைய ஈரானை) ஆண்ட பலவா (Pahlava) என்ற வம்சத்திற்கும், பல்லவ (Pallava) வம்சத்திற்கும் பெயரில் உள்ள ஒற்றுமை இந்த ஆய்வுகளுக்கு இட்டுச் சென்றன.

பாரசீகத்தின் வடபகுதியில் வாழ்ந்த சில பழங்குடிகள் பாரசீகத்திலிருந்து இந்தியா வந்தனர். அவர்களால் வட இந்தியாவில் ‘செட்டில்’ ஆக முடியவில்லை. அவர்கள் தெற்கு நோக்கி வந்து காஞ்சிபுரத்தில் குடியேறினார்கள் என்று சொல்லும் ஆய்வு அதற்குச் சான்றாக அவர்களது மகுடத்தைச் சுட்டுகிறது. யானைத் தலை போன்ற மகுடத்தை முற்காலப் பல்லவர்கள் அணிந்திருந்தார்கள் என்பதை வைகுந்தப் பெருமாள் கோயில் சிற்பங்கள் காட்டுகின்றன. அதே போன்ற மகுடங்களை கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பாரசீகத்தை ஆண்ட மன்னர்கள் அணிந்திருப்பதை அவர்கள் வெளியிட்டுள்ள நாணயங்களில் பார்க்க முடிகிறது என்கிறது ஆய்வு.

மகுடம் மட்டுமல்ல, இடையில் பெல்ட் போன்ற ஒரு துணியை அணிந்திருந்தார்கள் அதுவும் பாரசீகத்திலிருந்து வந்த வழக்கம்தானாம்.  உடைமட்டுமல்ல, உடல் வாகும் கூட சாட்சி சொல்கிறது. சிற்பங்களில் காணப்படும் பல்லவ அரசர்கள், பிரபுக்கள், பாரசீகர்களைப்போல நீண்ட முக அமைப்பைக் கொண்டிருக்கிறார்கள்.

ஆரம்ப கால பல்லவ அரசர்கள் தங்களது சாசனங்களை பிராகிருதத்திலும், சமஸ்கிருதத்திலும் வெளியிட்டார்கள், தமிழை முன்னிலைப் படுத்தவில்லை என்பது இன்னொரு வாதம். (பிராகிருதத்தில் இந்தோ ஐரோப்பியச் சொற்கள் மிகுதி) அவர்களது நிர்வாக முறை வடக்கிலிருந்த மெளரியர்களுடையதைப் போன்றிருந்தது. மெளரியர்களும் ஈரானிலிருந்து வந்தவர்கள் எனச் சொல்லும் இணையதளம் அதற்கு ஆதாரமாக மேர் என்ற ஈரானிய வேர்ச் சொல்லைச் சுட்டுகிறது.

பல்லவர் சிற்பக் கலையின் ஓர் அம்சமான தூண்கள், பாரசீக நகரமான பெர்சிபோலீசில் காணப்படும் தூண்களின் அப்பட்டமான நகல் என ஒரு குண்டைத் தூக்கிப் போடும் ஆய்வாளர்கள், பல்லவர்களின் இலச்சினையான வாலுயர்த்திய சிங்கமும் பெர்சிபோலீசில் பொறிக்கப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்கள்.

தொன்மத்திலிருந்தும் ஓர் ஆதாரம் முன் வைக்கப்படுகிறது. தமிழ் அரசர்கள் தங்களைச் சூரிய அல்லது சந்திர குலத்தவர்களாகக் குறிப்பிடுவதுண்டு. (சோழர்கள்: சூரியன். பாண்டியன்: சந்திரன்) ஆனால் பல்லவர்கள் தங்களைப் பிரம்மாவின் குலத்தில் வந்தவர்களாகக் குறிப்பிடுகிறார்கள். நம் அரசர்கள் தங்களைச் சில புராணநாயகர்களின் வழித்தோன்றல்களாக வர்ணித்துக் கொள்வது வழக்கம் (சோழர்கள்: மனு, சிபி, இஷவாகு, பாண்டியர்கள் புருரவஸ், சேரர்கள்:ராமர்). ஆனால் பல்லவர்கள் அப்படி யாரையும் குறிப்பிடுவதில்லை. அவர்கள் குறிப்பிடுவது மெளரிய அரசனான அசோகரை (அசோகவர்மன்).

பின்னாட்களில் பல்லவர்கள் இங்கிருந்த தமிழ் மக்களுடைய மதத்தையும் மொழியையும் ஏற்றுக் கொண்டார்கள்; அயலகத்திலிருந்து ஆள வந்தவர்க, போன இடத்தின் மொழியையும் மதத்தையும் ஏற்றுக் கொள்வது இயல்பானதுதான் என அதற்கும் எடுத்துக்காட்டுகளை அள்ளி இறைக்கிறது ஆய்வு.

சிங்களர்கள் பற்றியச் செய்தியைப் பேசுகிறது இன்னொரு ஆய்வு. மரபணுக்கள் வழியே அவர்களது வம்சாவளியை ஆராய்கிறது அது.கி.மு 543ல் வங்கத்திலிருந்தோ, ஒரிசாவிலிருந்தோ (அன்று கலிங்கம்) இலங்கையின் வடமேற்க்குக் கரையில் வந்திறங்கிய விஜயனில் ஆரம்பிக்கிறது சிங்கள வம்சம் என பெளத்தர்களின் மகாவம்சம் பேசுகிறது. ஆனால் சிங்களர்களின் மரபணுக்கள் தமிழகத் தமிழர்களின் மரபணுக்களை பெரிதும் (69%) ஒத்திருக்கின்றன என மரபணுச் சோதனைகள் காட்டுகின்றன. வங்காளிகள், கலிங்கத்தவர் மரபணுக்களோடு அவை 25 சதவீதம் அளவிற்கேப் பொருந்திப் போகின்றன.( The legend of Prince Vijaya — a study of Sinhalese origins –R. L. KirkAmerican Journal of Physical AnthropologyVolume 45, Issue 1, July 1976)

சுருக்கமாகச் சொன்னால் நாம் முன்னோடிகள் எனக் கொண்டாடுகிறவர்கள் வந்தேறிகள் என்கிறது வரலாறு. பகமை பாராட்டுகிறவர்கள் உதிரச் சொந்தம் என்கிறது அறிவியல். இன மொழி, அடையாளங்கள் என்ற கற்பனைகளை ஆய்வுகளும் அறிவியலும் கலைத்துப் போடலாம். ஆனால் ஐயத்திற்கு இடமில்லாத ஓர் அடையாளம் என்றும் நமக்குண்டு அதை மறவாதே எனக் உரக்கச் சொல்கிறது உள்ளம். அது-

நாம் மனிதர்கள்!

 புதிய தலைமுறை மே 16 2013

 

About the Author

maalan

Maalan, born in 1950 in Srivilliputhur, Tamil Nadu, emerged as a literary figure with a penchant for poetry. At the age of 16, he made his debut in the literary world through both poetry and prose. From 1970 to 1985, he contributed numerous short stories and poems in literary journals throughout Tamil Nadu.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may also like these