சாதி என்னும் போதை

இரவை வரவேற்க இருளை விரித்துக் கொண்டிருந்தது அந்திப் பொழுது.இன்னும் கொஞ்ச நேரத்தில் குளிர ஆரம்பிக்கும். லக்னோவின் பருவ நிலை அப்படி. பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், கூடு திரும்புகிற பறவைகளைப் போலக் கூச்சலிட்டுக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டன. ஆனால் அவன் மட்டும் அழுது கொண்டிருந்தான்

அருகில் போய் பார்த்தார் அய்க்கு லால். பார்க்கிற்குப் பக்கத்தில் டீ கடை வைத்திருப்பவர். வழி தெரியாமல் அழுது கொண்டிருக்கிறான் என நினைத்தார். அவன் பெயர் அக்பர் என்பதைத் தவிர வேறெதையும் அந்த ஏழு வயதுச் சிறுவனால் சொல்ல முடியவில்லை. அவனைக் காவல் நிலையத்திற்கு அழைத்துப் போனார். எங்கள் குழந்தையைக் காணவில்லை என எவரும் புகார் செய்திருக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. அந்தச் சிறுவனைத் தன் குடிசைக்குக் கூட்டி வந்தார். அடுத்த நாள் அந்த ஊரில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு அவனையும் அழைத்துச் சென்று விசாரித்தார். யாரும் உரிமை கோரவில்லை. தனக்குத் தெரிந்த மெளல்வி ஒருவரைச் சந்தித்துத் தொழுகையின் போது அறிவிக்கக் கேட்டுக் கொண்டார். அப்போதும் அந்தச் சிறுவனின் தந்தை எனச் சொல்லிக் கொண்டு எவரும் வரவில்லை.

அந்த நேரத்தில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்தார் அய்க்கு லால். ஒன்று அந்தச் சிறுவனைத் தானே வளர்ப்பது. இரண்டு தான் இந்துவாக இருந்த போதிலும், அவன் இஸ்லாமியனாகப் பிறந்ததால், அவனை அந்த மதத்தினனாகவே, அதாவது முஸ்லீமாகவே வளர்ப்பது.

மதம் மாற்றவில்லை என்பது மட்டுமல்ல, மகனைப் போல அவனை வளர்த்தார் அய்க்கு லால். கடையில் கிளாஸ் கழுவச் சொல்லவில்லை. கல்வி முக்கியம் என பள்ளிக்கு அனுப்பினார். அவருடைய வருமானம் சொற்பம். ஒரு நாளைக்கு 100 ரூபாய் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் செய்த நாள்.ஆனாலும் படிக்க வைத்தார். பள்ளிக்கு மட்டுமல்ல, பள்ளிவாசலுக்கும் வற்புறுத்தி போகச் செய்தார்.வெள்ளிக்கிழமை நமாஸில் தவறாமல் ஆஜராகும் நபராக இருந்தான் அக்பர். அய்க்கு லால் அசைவம் சாப்பிடுவதில்லை. ஆனால் அக்பருக்காக அதையும் சமைக்கக் கற்றார்.

அதைவிட அவர் எடுத்த இன்னொரு முடிவு அதிரடியானது. மணம் செய்து கொண்டால் மனைவியாக வருகிறவள் அக்பரை மகனாக ஏற்பாளா எனச் சந்தேகம் அவருக்கு. அதனால் திருமணம் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார்.

இந்துத் தந்தையும் இஸ்லாமிய மகனுமாக இருக்கும் இந்தக் குடும்பத்தை ஊர் அதிசயமாகப் பார்த்தது. பத்திரிகைகளுக்குச் செய்தி கசிந்தது. பத்திரிகைச் செய்தியைப் பார்த்து கேமிராவை ஏந்தி தொலைக்காட்சிகள் துரத்திக் கொண்டு வந்தன

வந்தது பிரச்சினை. தொலைக்காட்சியில் அக்பரைப் பார்த்த ஒரு தம்பதியினர் அவனைத் தன் பிள்ளை என உரிமை கொண்டாடினர். அறிவியலும் ஆம் என்று சாட்சி சொன்னது. டிஎன்ஏ சோதனைகள் உரிமை கோரியவர்கள்தான் உண்மைத் தந்தை எனச் சொல்லின.

எப்படிக் காணாமல் போனான் என்று கேட்டார் நீதிபதி. மதுக் கடைக்குப் போன போது அழைத்துப் போனதாகவும் போதையில் மகனைத் தந்தை மறந்து போனதாகவும் தெரியவந்தது. ஏன் தேட முயற்சிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. நீதித் தராசின் நீண்ட முள் தங்களுக்கு எதிராகச் சாய்ந்து விடுமோ என அஞ்சிய அக்பரைப் பெற்றவர்கள் அய்க்கு லாலுக்கு எதிராக அடுத்த குண்டை வீசினர். அவரது கடையில் அக்பர், குழந்தைத் தொழிலாளியாகக் கொடுமைப்படுத்தப்படுவதாக புதிதாக புகார் எழுப்பினர். அபாண்டத்தைக் கேட்டு இடிந்து போனார் அய்க்கு லால். ஆனால் அவர் அக்பரைப் படிக்க வைத்தது, காணமல் போன போது பள்ளிவாசலில் அறிவிப்புச் செய்தது, பத்திரிகை விளம்பரம் கொடுத்தது எல்லாம் அவருக்கு ஆதரவாகச் சாட்சி சொல்லின.

நீதிபதி பரகத் அலி ஓர் உதாரணத் தீர்ப்பை வழங்கினார். “கலப்புத் திருமணங்கள் மூலம் குடும்பங்கள் உருவாவது இந்த தேசத்திற்குப் புதிதல்ல. இருவேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் இஷ்டமிருந்தால் தந்தையும் மகனுமாக ஒரு கூரையின் கீழ் வாழட்டுமே!” என்று அய்க்கு லாலுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்.

இது கற்பனைக் கதை அல்ல. வண்ணத் திரைக்கு வரவிருக்கிற சினிமா அல்ல. செய்தி. 2003ல் இந்தச் செய்தியை எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் எழுதித் தீர்த்தன. மறுபடியும் வழக்கு நடந்தபோது, 2008ல், வட இந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டன. நான் கூட அப்போதுதான் ஓசியில் கிடைத்த பத்திரிகையில் வாசித்தேன் இதை.

மதங்களை விட மனிதம் பெரிது என்ற இந்தச் சேதி மனதில் தோன்றக் காரணம், மரக்காணம்.வெறுப்பில் விளைந்த அந்த நெருப்பு ஒரு கேள்வித் தீயை என் மனதில் வீசிப் போனது.விலங்குகளாகப் பிறக்காமல்  நாம் மனிதர்களாகப் பிறந்தது இறைவன் கொடுத்த அருள் அல்லது இயற்கையின் தற்செயல்.சாதி என்பது சமூகத்தில் நேர்ந்த விபத்து. இரண்டுக்கும் accident என்பதுதான் ஆங்கிலச் சொல். ஏன் இவர்கள் மனிதத்தைத் துரத்திவிட்டு இதயத்தில் சாதீயை ஏந்தித் திரிகிறார்கள், மதுவின் போதையில் மகனைத் தொலைத்த தந்தையைப் போல, எரிதழல் ஏந்திய இவர்களுக்காகத்தான் எழுதினான் ஒரு சூபி கவிஞன்.

எரித்தே ஆக வேண்டும் என்றா துடிக்கிறாய்?

எரி.எதை வேண்டுமானலும் எரி –ஆனால்

இதயத்தை எரித்து விடாதே –அங்கே

இறைவன் இருக்கிறான்.

புதிய தலைமுறை மே 09 2013

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *