வாதாம் மரமும் வாழை மரமும்

மணற் குகையிலிருந்து வெளி வந்தது ரயில். குகையைக் கடந்ததும் வரிசையாய் வாழைத் தோட்டங்கள். குளுமை நிறைந்த கடற்காற்று காணமல் போயிருந்தது. வெப்பம். புழுக்கம். ஏழ்மையை அணிந்திருந்த அந்த அம்மாவும் பெண்ணும் ரயிலின் மூன்றாம் வகுப்புப் பெட்டியிலிருந்து இறங்கினார்கள். வாதாம் மரங்கள் ஆங்காங்கே நிழலை விரித்திருந்தன. நிழலில் ஒதுங்கி ஊரைப் பார்த்தார்கள். ஊர் உறங்கிக் கொண்டிருந்தது.ஒருவரையும் தெருவில் காணோம். கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டு கனத்த திரைச்சீலைகள் இழுத்துவிடப்பட்டிருந்தன.

அம்மாவும் பெண்ணும் ஊரிலிருந்த தேவாலயத்தை நோக்கி நடந்தார்கள். பூட்டியிருந்தது. அதன் இரும்புக் கதவுகளை உலுக்கினார்கள்.சிறிது நேரம் சென்று ஒரு பெண் கதவைத் திறந்தார். பாதிரியாரைப் பார்க்க வேண்டும் என்றார் அந்தத் தாய். அவர் உறங்கப் போய்விட்டார் மாலை நான்கு மணிக்கு மேல் வாருங்கள் என்றார் அந்தப் பெண். அவசரம் என்றாள் தாய்.

சிலநாட்களுக்கு முன் திருட வந்த ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டானே அவனுடைய தாய் நான் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவள், அவன் கல்லறைக்குப் போக வேண்டும், கல்லறைத் தோட்டத்தின் சாவிகள் வேண்டும் என்றாள்.

”நீங்கள் அவனைத் திருத்த முயற்சிக்கவே இல்லையா?” என்றார் பாதிரி

”அடுத்தவர் உணவைத் ஒருபோதும் திருடாதே என்று சொல்லி வளர்த்திருக்கிறேன். அவன் ஒரு தொழில் முறை குத்துச் சண்டை வீரனாகத்தான் இருந்தான். சில சமயம் அவன் அடிவாங்கிக் கொண்டு மூன்று நாள் எழுந்திருக்க முடியாமல் கிடப்பான். அப்படி அவன் சம்பாதித்துக் கொடுத்து நாங்கள் உண்ட போது எங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்திலும் அவனது ரத்தம் படிந்திருந்தது”

இந்த விடுமுறை நாளில் வெம்மை நிறைந்த காற்று என் ஜன்னலுக்கு வெளியேயிருந்து வீசிய போது காபிரியல் கார்சியா மார்க்கசின் Tuesday Siesta  (செவ்வாயின் மதியத் தூக்கம்) கதையை நான் படித்துக் கொண்டிருந்தேன். பூடகமான செய்திகளோடும் கூர்மையான வார்த்தைகளோடும் எழுதப்பட்ட கார்சியாவின் ஆரம்ப காலக் கதைகளில் அது ஒன்று.

கார்சியாவின் கதைகளில் கண்ணுக்குத் தெரியாத ஓர் அரசியல்  நீரோட்டம் ஒளிந்திருக்கும். கொலம்பியா நாட்டுக்காரர். தொன்மையும், ஏழ்மையும் சுரண்டலும் நிறைந்த ஒரு தேசத்தில் இருந்து எழுதுகிற எந்த ஒரு மனசாட்சியுள்ள எழுத்தாளனும் ‘அரசியலை’ – அப்பட்டமாக இல்லாவிடினும் பூடகமாகவாவது- எழுதாமல் இருக்க முடியாது. (இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் இதற்கு விதி விலக்கு)

’கபோ’வின் (அப்படித்தான் லத்தீன் அமெரிக்கர்கள் அவரை அழைக்கிறார்கள், நாம் ஜெயகாந்தனை ஜெகே என அழைப்பதைப் போல) இந்தக் கதையும் அப்படித்தான். பல குறியீடுகள், சமிக்கைகள், சூட்சமங்கள். வாதாம் மரமும் வாழையைப் போல அகன்ற இலைகள் கொண்டது. ஆனால் வாழைமரத்தடியில் வெயிலுக்கு ஒதுங்க முடியாது. அவள் வந்திறங்கிய ஊர் அவள் வாழ்ந்த ஊரை விட வசதியானது. ஆனால் அவளது மகனால் அங்கு வாழத்தான் முடியவில்லை. எந்தப் பொருளையும் களவாட முன்னரே அவன் சுடப்பட்டு விடுகிறான்.

அவனைத் திருடன் என்று ஊர் சொன்னது. அவன் ஏழை எனத் தாய் சொல்கிறாள். வாழ்க்கை வாசல்களைத் திறக்காத போது ஏழைகளுக்கு வன்முறையும் ஒரு வழியாகிவிடுகிறது. வாழ்க்கையிடம் தோற்றுவிட்டாலும் நாங்களும் வீரர்கள் எனக் காட்டிக் கொள்ளத்தான் அவர்கள் அடிதடியைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். அவன்  குத்துச் சண்டைக்காரன் என்ற குறியீடு இதைத்தான் உணர்த்துகிறது.

வரி வரியாகப் பிளந்து உள்ளே உறைந்திருக்கும் சூட்சமத்தை, அதன் பின் உள்ள அரசியலை அவிழ்த்துக் கொட்ட இது இலக்கிய வகுப்புமல்ல, அதற்கு இங்கு இடமும் இல்லை. இணையத்தில் கதை கிடைக்கும். வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.

இந்தக் கதையை நான் தேடி வாசிக்கக் காரணம் இலக்கியமல்ல. அதில் நிழலிட்டிருக்கும் வாழ்க்கை. என் நினைவடுக்கில் இருந்த இந்தக் கதையை எடுத்து நீட்டியவர்கள்  இரு இளைஞர்கள். பாஸ்டன் குண்டு வெடிப்பிற்காகத் தேடப்பட்டவர்கள். இருவருமே குத்துச் சண்டை பயின்றவர்கள். தங்கள் பூர்வீக பூமியிலிருந்து இடம் பெயர்ந்து புதிய இடம் தேடி வந்தவர்கள். புதிய இடத்தில் பொருந்த முடியாமல் புழுங்கித் தவித்தவர்கள், வாழ்வின் வாசல்கள் அடைபட்டதாகக் கருதி வன்முறையைத் தேர்ந்தெடுத்தவர்கள். அடுத்தவர் உணவைத் ஒருபோதும் திருடாதே என அமெரிக்காவைப் பார்த்து அவர்களது அம்மா சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் இவர்கள் நல்லவர்கள், இது FBIயின் சூழ்ச்சி என்கிறார்.

நிழல் தராத வாழை மரங்களை விட வாதம் மரங்கள் மேல் என்று போனால் அங்கு நிற்கக் கூட முடிவதில்லை என்பதுதான் நிஜம். உண்மை சுடவும் கூடும்

உண்’மை’யைத் தொட்டு எழுதுகிற ஒவ்வொரு எழுத்துக்குள்ளும் உஷ்ணம் ஒளிந்திருக்கும். இருக்கட்டுமே. இளைப்பாற மட்டும்தானா இலக்கியம்?

புத்தகத்தை வைக்க அலமாரியைத் திறந்தேன். அங்கும் காற்று வெம்மையாகத்தான் இருந்தது- வாழ்வின் சூட்டோடு.

புதிய தலைமுறை மே 2 2013

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *