கதையல்ல, நிஜம்

வாசல் பக்கம் யாரோ வருவது போல நிழலாடியது. கதவைத் திறந்தேன். கேபிள் டிவிக்காரர், மாதச் சந்தா வாங்க வந்திருந்தார். மாதம் ஒருமுறைதான் வருவார் என்றாலும் அவர் முகத்தை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. அவரது இடது காதருகே காசளவிற்குத் தேமல் போல ஒரு தழும்பு இருக்கும். தோல தீய்ந்த தழும்பு.

 அந்தக் காயத்திற்குப் பின் ஒரு கதை உணடு.

அரசியல் கொதிநிலையை அடைந்திருந்த அறுபதுகளின் மத்தியில் அவரது பயணம் ஆரம்பித்தது.இளைஞனுமல்லாத சிறுவனுமல்லாத இரண்டும் கெட்ட ஒரு பருவம். புத்தகம் படிப்பதில் இருந்த ஆர்வம் தமிழின் மீது காதலாகப் பரிணமித்தது. அந்தக் காதலின் காரணமாக, அரசியல் மேடைகளில் கேட்ட அலங்காரத் தமிழ், அவரைக் கிறங்க அடித்தது. அந்தப் பேச்சாளர்கள் மெத்தப் படித்தவர்கள், நாலும் தெரிந்த நியாயவான்கள், சமூகத்தைச் செதுக்கிச் சரிசெய்ய வந்தச் சிந்தனைச் சிற்பிகள், என அவர் நம்பினார். வாதங்களை அடுக்குகிற அவர்களின் சாதுர்யம் அந்த வாலிபரை வசப்படுத்தியது. முதலில் தமிழைக் காதலித்தவர் பின் தலைவர்கள் மீது பித்தாகிப் போனார். பத்து மைல் சுற்றளவில் எங்கு கூட்டம் நடந்தாலும் போனார். கையில் காசில்லாத போது கடன் வாங்கிப் போனார். கடன் வாங்க முடியாதபோது நடந்து போனார்.

கட்சித் தலைவரின் தலைமையில் நடக்க வேண்டும் என்பதற்காக அவரது கல்யாணம் சில மாதங்கள் காத்திருந்தது. வருவதாக வாக்களித்து, வழிச் செலவிற்குப் பணமும் வாங்கிக் கொண்டு, அவர் வராமல் போனபோது உள்ளூர் தலைவர் ஒருவரின் ஆசியோடு அந்தத் திருமணம் நடந்தது. தலைவர் வராதது அவருக்கு வருத்தம்தான். ஆனால் அவர் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையை அது அசைத்து விடவில்லை. குழந்தை பிறந்ததும் சென்னைக்குக் கூட்டிப் போய் பெயர் வைக்கச் சொன்னார். காசு வாங்கிக் கொண்டு கட்சிச் சின்னத்தையே பெயராக அறிவித்தார் தலைவர்.

வானத்தில் மேகம் கவிந்தால் தரையில் நிழல் தவழ்வது போல அவரது மொத்தக் குடும்பத்தின் மீதும் அரசியல் கவிழ்ந்தது. அவரது தம்பியையும் அரசியல் ஈர்த்தது. அவனை ஈர்த்தது தலைவரின் தமிழ் அல்ல, சினிமா. கட்சியில் இருந்த நடிகர் திரையில் நியாயம் கேட்கும் காட்சிகள் அவன் நெஞ்சில் நிழலாகப் படிந்தன. அவர் பாடும் பாடல் வரிகள் நினைவில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

வீட்டில் மாட்டப்பட்டிருந்த தாய் தந்தையர் படங்கள் பரணுக்குப் போயின. அந்த இடத்தைத் தலைவர்களின் படங்கள் எடுத்துக் கொண்டன. கட்சிக் கொடியின் வண்ணமே அவர்களின் ஆடைகளாயின.

அண்ணனும் தம்பியும் அருகில் இருந்த அத்தனை கிராமங்களிலும் ஒன்றாகச் சேர்ந்து போய் கட்சிக்காகக் கொடி நட்டார்கள். ஊர்வலங்களில் முழக்கமிட்டார்கள். போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைக்குப் போனார்கள். கடன் வாங்கிக் கட்சியை வளர்த்தார்கள். குடும்பத்தோடு கோவில் திருவிழாவிற்குப் போவது போல கட்சி மாநாடுகளில் கலந்து கொண்டார்கள். தெய்வத்தைக் கும்பிடுவது போல தலைவர்களை வணங்கினார்கள். தேர்தல் நேரங்களில் வெறும் டீயைக் குடித்துக் கொண்டுத் தெருத்தெருவாக வாக்குத் திரட்டினார்கள்.கட்சியை விமர்சிப்பவர்களோடு கைகலப்பில் இறங்கினார்கள். அதன் காரணமாக அவ்வப்போது காவல் நிலையத்தின் கம்பிக் கதவுகளுக்குப் பின் அடைபட்டார்கள்.

அவர்கள் உழைப்பு வீண் போகவில்லை. கட்சி ஆட்சியைப் பிடித்தது. அவர்களே நாற்காலியில் அமர்ந்ததைப் போல அண்ணனும் தம்பியும் அந்த இரவைக் கொண்டாடினார்கள். பதவியேற்பைக் காண இரயிலேறிப் பனிரெண்டு மணி நேரம் கழிவறைக்குப் பக்கத்திலேயே நின்று கொண்டு சென்னைக்கு வந்து போனார்கள்.

திடுமென ஒரு நாள் கட்சி விரிசல் கண்டது. நடிகர் வெளியேற்றப்பட்டார். தம்பி கொதித்துப் போனான். தலைவரைத் தரம் தாழ்த்தி ஏசினான். அதைக் கேட்ட அண்ணனின் ரத்தம் கொதித்தது. நீ வெறும் விசிலடிச்சான் குஞ்சு எனத் தம்பியை விமர்சித்தார். வார்த்தைகள் தடித்தன. கட்சி இரண்டானதைப் போல குடும்பம் இரண்டானது. இரண்டிற்குமிடையே வன்மம் வளர்ந்தது.

இன்னொரு தேர்தல் வந்தது. இருவரும் எதிர் எதிரணியில் வேலை செய்தனர். தம்பிக் கட்சியின் கை ஓங்குவதைப் போல ஓர் எண்ணம் ஊரில் உலவியது. அதை முறியடிக்க அண்ணன் அவரால் ஆனதைச் செய்து கொண்டிருந்தார். அண்ணனைத் தேடி வந்த தம்பி, அவரைக் காணாமல், வீட்டுக்கு வந்தால் வெட்டிக் கொன்னுருவேன்என அண்ணியையும் குழந்தையையும் மிரட்டிவிட்டுப் போனான்.மிரண்டு போன அவர்கள் ஊருக்கு வெளியே ஒரு மறைவிடத்தில் இரவு முழுக்கத் தூங்காமல் விழித்திருந்தார்கள். சுற்றிலும் பரவியிருந்த இருளைப் போல ஒரு திகில் அவர்கள் உள்ளத்தில் பரவியிருந்தது. 

அந்த இரவு நேரம். அண்ணன் அடுத்த கிராமத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தார். வரப்பில் வந்து கொண்டிருந்தபோது தண்ணீரைப் போல முகத்தில் ஏதோ தெறித்தது. நெருப்பைப் போல் எரிந்தது. அமிலம். அந்த இருளில் வீசியது யார் எனத் தெரியவில்லை. தம்பிதான் என அண்ணன் இன்றுவரை உறுதியாக நம்புகிறார்.அந்தச் சம்பவத்திற்குப் பின் உயிருக்குப் பயந்து ஊரைவிட்டு குடும்பத்தோடு வெளியேறி பக்கத்திலிருந்த பெரிய நகரில் குடிபுகுந்தார். விவசாயத்தைத் தவிர வேறு எதுவும் தெரியாததல் கூலி வேலை செய்து குடும்பம் பிழைத்தது

அன்று வெந்த தோல் ஒரு தழும்பாகத் தங்கிவிட்டது. ஆனால் அந்தத் தொண்டர்கள் கொண்டு வந்த ஆட்சிகள் இப்போதும் தொடர்கின்றன. அதன் தலைவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் இவர்கள் இன்னமும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். தலைவர் குடும்பத்துப் பிள்ளைகள் அமைச்சர்களாக அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் இன்னும் நிரந்திரமான வேலை கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளும் ஒன்றாக நெருக்கியடித்துக் கொண்டு சிரிக்கும் குரூப் ஃபோட்டோ சில நாட்களுக்கு முன் நாளிதழ்களில் வந்திருந்தது. உடைந்து போன இந்தக் குடும்பத்தில் இன்னும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளாமல், முகத்தை முறுக்கிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கின்றனர்.

நம் அரசியல்தான் எத்தனை குரூரமானது!

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *