பிழைத்த தென்னந்தோப்பும் இடிந்து போன வீடும்

நேற்று மாலையிலிருந்து என் ஜன்னலுக்கு வெளியே காற்று சீறிக் கொண்டிருக்கிறது.அதன் சினத்தைக் கண்டு மறுபேச்சுப் பேசாமல் மரங்கள் தலையாட்டிக் கொண்டிருக்கின்றன. அதைக் குளிர்விக்கச் சிறு சிறு தூறல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது மேகம். காற்றின் மொழி புரியாத நானோ வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

குடையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறாள் ஒரு நடு வயதுப் பெண். காற்று முதலில் அவள் முந்தானையில் கை வைத்தது. கொடி போலப் பறக்கத் துவங்கிய அதை அவள் இழுத்துச் செருக முயன்றபோது குடையில் இருந்த அவளது பிடி சற்றே தளர்ந்திருக்க வேண்டும். குஷியாகி விட்டது காற்று. குடைக்குள் புகுந்து கொண்டு அதை மலர்த்த முயன்றது. வானத்தைப் போல கவிந்திருந்த குடை மலரைப் போல நிமிர்ந்தது. குவளை போலாகிவிட்ட அதனுள் வந்து அமர வான் துளிகள் அவரசம் காட்டின.

அந்தப் பெண் நிச்சியம் காற்றை வைதிருப்பாள். ஆதரவற்ற, எதிர்த்துப் போராட இயலாத தீனர்களிடம் ஏன் உன் வீரத்தைக் காட்டுகிறாய் என நானும் கூடக் காற்றைச் சினந்து கொண்டேன்.

ஆனால் காற்று ஏழைகளிடம் விளையாடுவதில்லை என்கிறார் பாரதியார். புதுச்சேரியின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்று முத்தியாலுப் பேட்டை. பாரதி வாழ்ந்த நாள்களில் அங்கு ஒரு தோப்பு இருந்தது.செந்தமிழ்த் தென் புதுவை என்னும் திரு நக்ரின் மேற்கே சிறு தொலைவில் மேவும் ஒரு மாஞ்சோலைஎனப் பாரதி அதை நமக்கு குயில் பாட்டில் அறிமுகம் செய்து வைக்கிறார்.

தனித்திருக்க விரும்பும் தவ வேளைகளில் பாரதி செல்லும் இடம் அதுதான். மனதில் கவிதையோ, கதையோ, சிந்தனையோ நெறிகட்டிக் கொண்டு விம்முகிற வேளைகளில் எழுதுகிறவனுக்குத் தனிமை தேவை..

கிருஷ்ணசாமிச் செட்டியார் என்பவருக்குச் சொந்தமான தோப்பு அது உருவத்தில் சற்றே குள்ளமாக, பழகுவதற்கு இனியவராக இருந்த அவருக்கு வெல்லச்சுச் செட்டியார் எனப் பட்டப் பெயர் சூட்டியிருந்தார் பாரதியார். சூழ்ந்திருந்த தோழ்ர்களுக்கெல்லாம் வேடிக்கையாய்ப் பெயர் சூட்டி விளையாடும் குறும்புக் குழந்தை ஒன்று அந்தக் கவி மனதில் குடியிருந்தது. அதை இன்னொரு நாள் ஆராயலாம். வெல்லச்சுச் செட்டியாருக்கு தோப்பிருந்தது என்றாலும் அவர் பெரிய பணக்காரர் அல்ல. நெசவுத் தொழில் செய்து பிழைத்து வந்தார். பாரதி வாழ்ந்த காலத்தில் அவர் 20 வயது இளைஞர். கவிஞரிடம் கதை கேட்பதில் அவருக்குக் கொள்ளைப் பிரியம்

1916ம் வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி (நள வருடம் கார்த்திகை மாதம் 8ம் தேதி) அன்று புதுச்சேரியில் புயல் வீசியது. பொல பொலவென்று மரங்கள் வீழ்ந்தன.காற்றடித்ததிலே மரங்கள் கணக்கிடத் தகுமோ? நாற்றினைப்போல  சிதறி நாடெங்கும் வீழ்ந்தனவேஎன்று  மரங்கள் வீழ்ந்து கிடந்த காட்சியை பாரதியே ‘ரிப்போர்ட்செய்கிறார். நடவு வயலில் உழவர்கள் ஆங்காங்கே வீசி எறிந்த நாற்றுக்களைப் போல மரங்கள் விழுந்து கிடக்குமென்றால் வீசியது பெருங்காற்றாகத்தானிருக்க வேண்டும்.

புயல் வீசியதற்கு மறுநாள் தன் மனதில் கிளை பரப்பிச் செழித்திருந்த தன்  செல்லத் தோப்பிற்கு என்ன ஆயிற்று எனப் பார்க்கப் புறப்பட்டார் பாரதி என்ன ஆச்சரியம்!, அவ்வளவு பெரிய காற்றில் கிருஷ்ணசாமிச் செட்டியாரின் தோப்பிற்கு அதிகம் சேதம் ஏற்பட்டுவிடவில்லை. அங்கும் மரங்கள் ஒன்றிரண்டு வீழ்ந்து கிடந்தன. ஆனால் தோப்பு அழிந்து நாசமாகிவிடவில்லை.

என்ன காரணமாக இருக்கும்? ‘ஏழையினுடையது பிழைத்துப் போகட்டும்என்று காற்றுக் கடவுள் விட்டுவிட்டதாக பாரதி எண்ணுகிறார். “வறியவன் உடைமை அதனை வாயு பொடிக்கவில்லைஎன்கிறார்.வாழ்ந்திருக்க என்றே அதை வாயு பொறுத்துவிட்டான்என்றும் சொல்கிறார். யார் வாழ்ந்திருக்க? செட்டியரா? காற்றா? மரங்கள் இல்லை என்றால் காற்று எங்கே தங்கும்? அதனால் அவர் காற்றுக் கடவுள் தான் வாழ்வதற்கு ஒரு இடம் வேண்டும் என குயில் தோப்பை விட்டு வைத்தானா? இல்லை ஏழைச் செட்டியார் பிழைத்துப் போகட்டும் என விட்டுவிட்டானா?

இப்படியெல்லாம் பார்த்தா காற்று வீசுகிறது?. ஏழை ஜனங்களைக் காற்றும் மழையும் பாடாய்ப் படுத்திப் பம்பரமாய் ஆட்டுவிப்பது பத்திரிகையாளன் பாரதிக்குத் தெரியாதா? இல்லை கவி மனம் பத்திரிகை புத்தியைக் கருமேகம் போல் மூடிக் கொண்டுவிட்டதா?

என்னைக் கேள்விகள் குடைய ஆரம்பித்தன. கொசு போல ரீங்காரமிட்டுக் கொண்டு மீண்டும் மீண்டும் மனதை மொய்த்தன. சிந்தனை வத்தியை மனதில் கொளுத்தி வைத்துவிட்டு உறங்கப் போனேன்.

நடு நிசியும் கடந்திருக்கும். திடீரெனெ முழிப்புக் கொடுத்தது. என்றோ எப்போதோ படித்தது என்னை அந்த இரவில் எழுப்பியது. என் கேள்விகளுக்கு விடையாக இருளில் ஒரு வெளிச்சம் என் மனதை நிறைத்தது. சரிதானா என புத்தி சந்தேகப்பட்டது. ஒருமுறை புத்தகத்தை எடுத்துப் பார்த்துக் கொண்டேன். சரிதான். விடை இதுதான்

புதுவையில் ஈஸ்வரன் த்ர்மராஜா கோயில் தெருவில் தெற்குப் பார்த்த ஒரு வீட்டில் முதலில் குடியிருந்த பாரதி சில ஆண்டுகளுக்குப் பிறகு அதற்கு எதிர்வரிசையில் இருந்த ஒரு வீட்டிற்குக் குடிபோனார். அவர் குடிபோன மறுநாள்தான் புயல். புயலில் அவர் முன்பிருந்த வீடடின் பின்பகுதி இடிந்து விழுந்தது! வீடு மாறாமல் பாரதி அந்த வீட்டிலேயே இருந்திருப்பாரானால்….?

பாரதிக்கும் இந்தக் கேள்வி எழுந்திருக்க வேண்டும். “நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே, இந்த நேரமிருந்தால் என் படுவோம்? காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக் காத்தது தெய்வ வலிமை அன்றோ!என பயம் கலந்த ஆச்சரியம் அவர் பாட்டில் ஒலிக்கிறது.

தம்மைக் காத்தது தெய்வம் என்று நம்பினார் பாரதி. அந்த தெய்வம்தான் செட்டியாரின் குயில் தோப்பையும் அழியாமல் காத்திருக்க வேண்டும் என்றும் எண்ணியிருக்கிறார். இரண்டு பேருக்கும் இருந்த ஒற்றுமை இருவரும் செல்வத்தில் எளியவர்கள். நல்லவே எண்ணியவர்கள். கடவுளை நம்பினார்கள். ஆனால் மனிதர்களை நேசித்தார்கள்.

மழை கொட்டும் இந்த நேரத்தில் சூடான தேநீர் போல கவிதைகள் சுகம் தரலாம். ஆனால் ஆறாகப் பெருக வேண்டியது அடுத்தவருக்கு உதவும் உள்ளம்.

திக்குகள் எட்டும் சிதற் மழை பொழியும் இது போன்ற கார்த்திகை மாதத்தில்தான் அந்த அக்னிக் குஞ்சும் பிறந்தான். அவன் பிறந்த நாளும் அவன்கவிதையும் சொல்வது ஒன்றே. அது:எளிமை கண்டு இரங்குவாய்

  

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *